அத்தியாயம் 4
அடுத்த நாளே, கல்யாணியையும் மிருதுளாவையும் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான் கெளதம் கிருஷ்ணா...ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே, முன்னறையில் இருந்த சோஃபாவில் இருவரும் அமர்ந்து இருந்தார்கள்...
அங்கே இருந்த ஒரு இருக்கையில் வம்சி கிருஷ்ணா கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்க, அவன் அருகே இருந்த இருக்கையில் கெளதம் கிருஷ்ணா அமர்ந்து இருந்தான்...
சற்று தள்ளி அமர்ந்து இருந்த வேதவல்லியோ, 'ஏதோ சம்பவம் போல, என்னன்னு பார்ப்போம்' என்று நினைத்தபடி அவர்களை பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தார்...
'எவ்வளவு நேரத்துக்கு தான் முகத்தை முகத்தை பார்த்துட்டு இருக்கிறது' என்று நினைத்த மிருதுளாவோ, "என்ன மாமா வரச் சொன்னீங்க?" என்று கெளதம் கிருஷ்ணாவை பார்த்து கேட்டாள்.
"வம்சி தான் வரச் சொன்னான், உங்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கணுமாம்" என்றான்...
"டாஸ்க் ல வின் பண்ணுனா கல்யாணமா?" என்று கேட்டாள் கல்யாணி...
உடனே மிருதுளா, கெளதம் கிருஷ்ணா, வம்சி கிருஷ்ணா என மூவரும் அவளை ஒரே நேரத்தில் முறைத்துப் பார்க்க, 'ஐயோ, எல்லாரும் சேர்ந்து முறைக்குறாங்க, கம்முன்னு இருப்போம்' என்று நினைத்துக் கொண்டே, "ஹி ஹி காமெடி பண்ணுனேன்" என்று சமாளித்துக் கொண்டாள்.
வம்சி கிருஷ்ணாவோ ஆழ்ந்த மூச்செடுத்தபடி தனது கையில் இருந்த இரு காகிதங்களையும் இரு பேனாக்களையும் கல்யாணியிடமும் மிருதுளாவிடமும் கொடுத்தான்...
அவர்களும் யோசனையுடன் வாங்கிக் கொண்டார்கள்...
அங்கே டீ பாயில் இருந்த இரு புத்தகங்களை கண்களால் காட்டியவன், "அதுல வச்சு நான் சொல்றத தமிழ்ல எழுதுங்க" என்றான்...
அவன் சொன்னபடி புத்தகத்தை எடுத்து காகிதத்தை அதன் மேல் இருவரும் வைத்துக் கொண்டே, "சொல்லுங்க மாமா" என்றார்கள்...
"வயதான காலத்திலும் எனக்காக பாடிக் கொண்டு இருக்கின்றீர்கள்... நான் உங்கள் தோளில் சாய்ந்து அதனை கேட்டுக் கொண்டு இருக்கின்றேன்... நினைக்கவே இனிமையாக இருக்கின்றது அல்லவா?" என்றபடி இருவரையும் உன்னிப்பாக பார்த்தான்...
கெளதம் கிருஷ்ணாவும் அவர்களது முக பாவனைகளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்...
கல்யாணியோ, "இதையா எழுதணும்?" என்று கேட்டாள்.
ஆம் என்கின்ற ரீதியில் தலையாட்டினான்...
இருவரும் திரு திருவென விழித்துக் கொண்டே எழுதினார்கள்...
முதலில் எழுதி முடித்த மிருதுளாவோ, "எழுதிட்டேன் மாமா" என்று சொல்லிக் கொண்டே கையில் இருந்த காகிதத்தை வம்சி கிருஷ்ணாவிடம் நீட்டினாள்...
அதனை பார்த்தவன் முகம் இறுக, "என்ன மிருதுளா இது?" என்று சற்று அழுத்தமாகவே கேட்டான்...
"என்னாச்சு?" என்றாள் அவள்...
"நானா தமிழ்ல எழுத சொன்னேன், தங்கிலீஷ் ல எழுத சொல்லல்ல" என்றான்...
"ஐயோ மாமா, நான் இங்கிலிஷ் மீடியம், எனக்கு தமிழ் எழுத வராது..." என்று சொல்ல, "மேய்க்கிறது எருமை, இதுல என்ன பெருமை" என்று கெளதம் கிருஷ்ணா வெளிப்படையாகவே திட்டி விட, அவனை முறைத்துக் கொண்டே, விறு விறுவென வெளியேறி விட்டாள் அவள்.
"சரியான திமிர் பிடிச்சவ" என்றான் கெளதம் கிருஷ்ணா...
"சரி அவளை விடு" என்று சொல்லிக் கொண்டே கல்யாணியை பார்க்க, அவளோ இன்னும் சொன்னதை எழுதி முடியவே இல்லை...
"எழுதுனது போதும் தாயே கொஞ்சம் கொடு" என்று சொல்லிக் கொண்டே, எழுந்த கெளதம் கிருஷ்ணா, அவள் கையில் இருந்த காகிதத்தை பறித்து எடுத்தான்...
"ஐயோ மாமா எழுதி முடிக்கல" என்றாள் அவள்...
"இது போதும்" என்று சொல்லிக் கொண்டே காகிதத்தை பார்த்தவன், "நீயே பாரு" என்று வம்சி கிருஷ்ணாவிடம் கொடுத்தான்...
மேலே அவளும் மிருதுளா போல தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதி இருந்தாள்...
மிருதுளாவுக்கு திட்டு விழுந்ததும் அதனை வெட்டி இருந்தாள்.
அதன் கீழே தனக்கு தெரிந்த தமிழில் கிறுக்கி இருந்தாள்.
வம்சி கிருஷ்ணா அதனை வாசிக்க முயன்றான்...
"வதன களத்திலும் எனக்கு படிக் கெண்டு" என்று புருவம் சுருக்கி வாசித்து விட்டு நிறுத்தியவன், அவன் முன்னே நின்று கையை பிசைந்து நின்றவளை விழி விரித்து, இதழ் குவித்து ஊதிக் கொண்டே பார்த்தபடி, "என்ன தமிழ் இது?" என்றான்...
"எனக்கும் தமிழ் எழுத தெரியாது, உங்களுக்காக கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன்" என்று அவள் பதில் அளிக்க, அவள் கையில் அந்த காகிதத்தை வைத்தவன், "முதல் தமிழ் எழுத கத்துக்கோ, தமிழ் தெரியாதுன்னு சொல்றது பெருமைன்னு நிறைய பேர் நினச்சுட்டு இருக்காங்க, தமிழ் பொண்ணா இருந்துட்டு தமிழ் எழுத தெரியாதுன்னு சொல்றது அசிங்கம்... புரிஞ்சுதா?" என்றான்...
அவளோ, நான்கு பக்கமும் தலையாட்டிக் கொண்டே, அங்கிருந்து நகர, இப்போது கெளதம் கிருஷ்ணாவை திரும்பிப் பார்த்தவன், "தமிழே எழுத தெரியலடா ரெண்டு பேருக்கும்" என்றான்...
கெளதம் கிருஷ்ணாவோ, "எதுக்கும் ஒரு தடவை பாக்கியாவை எழுத வச்சுடலாம்டா" என்று சொல்ல, அவனை முறைத்த வம்சி கிருஷ்ணாவோ, "என் கிட்ட உதை வாங்க போற" என்றபடி எழ முற்பட, "ட்ரை தானே... எல்லாரையும் எழுத வச்சுடலாம், நமக்கும் டைம் பாஸ் ஆகும்" என்று சொல்ல, "என்னவோ பண்ணி தொலைடா" என்று சொன்னான் வம்சி கிருஷ்ணா...
அடுத்த கணமே கெளதம் கிருஷ்ணா அனைவரின் கையிலும் காகிதத்தை கொடுத்து இருந்தான்...
கூர்க்காவை கூட விட்டு வைக்கவில்லை...
"நான் நலம், நீங்கள் நலமா?" என்று கெளதம் கிருஷ்ணா அனைவரையும் எழுத சொன்னான்...
கூர்க்காவுக்கு தமிழ் எழுத தெரிந்தால் தானே...
அவனது மொழியில் ஏதோ எழுதி கொடுத்து இருக்க, அதனை பார்த்து வம்சி கிருஷ்ணாவும் கெளதம் கிருஷ்ணாவும் சத்தமாக சிரித்துக் கொண்டு இருந்தார்கள்...
அவர்களை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு இருந்த வேதவல்லியோ, "எல்லாருக்கும் ஏதோ எழுத கொடுக்கிறீங்க போல, எனக்கும் கொடுங்கடா" என்றார்...
அவரிடம் ஒரு காகிதத்தை நீட்டிய கெளதம் கிருஷ்ணாவோ, "ஒழுங்கா எழுத தெரியுமா பாட்டி" என்று கேட்டான்...
"நான் அஞ்சாம் க்ளாஸ் பாஸ்டா" என்று சொல்ல, "க்கும் ரொம்ப தான்" என்று சொல்ல, அவரும் எழுதி அதனை நீட்டி இருந்தார்...
அன்று கெளதம் கிருஷ்ணாவுக்கும் வம்சி கிருஷ்ணாவுக்கும் நேரம் நன்றாகவே கழிந்தது...
அனைவரையும் எழுத வைத்து, அதனை வாசித்து, சிரித்து களைத்து போனார்கள்...
சற்று நேரத்தில் வம்சி கிருஷ்ணா அருகே வந்து கெளதம் கிருஷ்ணா அமர, அவனோ பெருமூச்சுடன் எழ முற்பட்டான்...
"வம்சி" என்று கெளதம் கிருஷ்ணா அழைக்க, "ம்ம் சொல்லு" என்று சொல்லிக் கொண்டே, அவனை பார்த்தான் வம்சி கிருஷ்ணா...
"தென்றல் கிடைப்பான்னு நினைக்கிறியா?" என்று கேட்டான்...
"என் பக்கத்துல தான் இருக்கா... ஆனா என்னால கண்டு பிடிக்க முடியல" என்று சொல்லும் போதே அவன் குரலில் ஒரு ஏமாற்றம்...
"கண்டே பிடிக்க முடியலைன்னா என்ன பண்ணுவ?" என்று கெளதம் கிருஷ்ணா கேட்க, வம்சி கிருஷ்ணாவோ, "அம்மா கிட்ட மூணு மாசம் டைம் கேட்டு இருக்கேன்... பார்க்கலாம்" என்றான்...
"வம்சி, நான் அத கேட்கல, கண்டு பிடிக்க முடியலன்னா என்ன பண்ணுவ" என்று மீண்டும் கேட்டான்...
அந்த கேள்விக்கு பதிலை வேண்டுமென்றே தவிர்த்து இருந்த வம்சி கிருஷ்ணாவோ, "என்ன பண்ணலாம்னு சொல்ற?" என்று கேட்டான்...
"கல்யாணம் தான்" என்று பதில் வந்தது...
இதழ்களை பிதுக்கிய வம்சி கிருஷ்ணாவோ, "வாய்ப்பில்லைன்னு சொல்ல மாட்டேன்... எப்படியும் கல்யாணம் பண்ணிக்க தானே வேணும்... மனசு மாறுற நேரம் பண்ணிக்க யோசிப்பேன்..." என்றான்...
எதார்த்தமாக பேசினான்...
ஆனால் அந்த வார்த்தைகளில் ஒரு வித பயம் இருந்தது...
அப்படி நடந்து விடவே கூடாது என்கின்ற பயம்...
"போஸ்ட் ஆஃபீஸ்ல என்ன சொன்னாங்க?" என்று கெளதம் கிருஷ்ணா கேட்ட அடுத்த கேள்விக்கு இதழ்களை பிதுக்கிக் கொண்டே எழுந்து மாடியேறி செல்ல, அவனை யோசனையுடன் பார்த்தான் கௌதம் கிருஷ்ணா...
இதே சமயம் யாதவ் கிருஷ்ணாவிற்கு டியூஷன் எடுக்க ஆயத்தமாகிக் கொண்டு இருந்தாள் தேன்மொழி...
மகாலக்ஷ்மியோ அதுவரை ஏதோ யோசனையில் இருந்தவர், "தேன்மொழி" என்று அழைக்க, அவளும் சற்று நேரத்தில் சமயலறைக்குள் சென்றவள், அங்கிருந்த சுவரில் வளையலால் சத்தம் போட்டு, "என்ன" என்கின்ற தோரணையில் கேட்டாள்.
அவளை திரும்பி பார்த்த மகாலக்ஷ்மியோ, "நம்ம தரகர் வந்திருந்தார்" என்றார்...
அவளிடம் பெருமூச்சு...
அவளுக்கும் இத்தனை வருடங்களாக திருமணம் செய்து வைக்க மகாலக்ஷ்மி ஓடாத இடம் இல்லை...
அழகாக இருந்தாலும் வாய் பேச முடியாது என்று சொன்னதுமே அவளை திருமணம் செய்து கொள்ள தயக்கம் காட்டி விடுவார்கள்...
இல்லை என்றால் ஊரையே சீதனம் கேட்பார்கள்...
இது தான் நடந்து கொண்டு இருக்கிறது...
விசேஷ தேவையுடைய மணமகனாக இருந்தால் கூட இதே எதிர்பார்ப்பு தான்...
அங்கவீனத்தில் கூட ஆண்களுக்கு ஒரு சட்டம் பெண்களுக்கு ஒரு சட்டமா என்று மகாலக்ஷ்மியால் நினைக்காமல் இருக்க முடியவே இல்லை...
ஆனாலும் மகளுக்காக வரன் தேடுவதை அவர் நிறுத்தவில்லை...
இன்றும் அது சம்பந்தமாக தான் கல்யாண தரகர் வந்து சென்றார்...
அவளை ஆழ்ந்து திரும்பி பார்த்தவர், "அடுத்த வெள்ளிக்கிழமை பொண்ணு பார்க்க வர்றாங்க, க்ளாஸுக்கு வரமாட்டேன்னு சொல்லிடு" என்றார்...
அவளால் என்ன பதில் தான் சொல்ல முடியும்?
'இது எத்தனையாவது தடவை, எப்படியும் பிடிக்கலன்னு தான் சொல்ல போறாங்க' என்று மனதிற்குள் சலித்துக் கொண்டவளோ, தலையை சம்மதமாக ஆட்டி விட்டு கைப்பையை எடுத்து தோளில் போட்டவள், யாதவ் கிருஷ்ணாவின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள்.
பெரிய தூரம் இல்லை...
பதினைந்து நிமிட நடை தான்...
அவர்கள் வீட்டையும் அவள் அடைந்த சமயம், அவளை தாண்டி வேகமாக உள்ளே நுழைந்தாள் கல்யாணி...
இன்று புடவை கட்டி இருந்தாள்.
வம்சி கிருஷ்ணாவுக்காக கட்டி இருந்தாள்.
முன்னறையில் தான் வேதவல்லி இருந்தார்...
உள்ளே நுழைந்த கல்யாணியை கண்டதுமே, "அட மகாலக்ஷ்மி போல இருக்கியே, என் கண்ணே பட்டுடும் போல" என்று சொன்னபடி கையால் காற்றில் திருஷ்டி சுற்றி நெட்டி முறித்துக் கொண்டார்...
வசந்தியும், "புடவைல அழகா இருக்கேம்மா" என்று சொல்லிக் கொண்டே, அவள் பின்னால் நடந்து வந்த தேன்மொழியை பார்த்தவர், "நீ எப்போவும் புடவை தானே கட்டுவ... உனக்கும் புடவை ரொம்ப அழகு" என்று சொல்லிக் கொண்டார்...
இருவரையும் அவர் ஒரே தராசில் வைக்க முயன்றார்...
வேதவல்லிக்கு அது பிடிக்குமா?
"என் பேத்தியை இந்த ஊமைச்சி கூட ஒப்பிடுறியா?" என்று கேட்டார்...
வசந்திக்கு என்னவோ போல ஆகி விட்டது...
"ஐயோ அப்படி இல்ல அத்தை" என்று அவர் அவசரமாக மறுக்க, "எலும்பும் தோலுமா இருக்கிற அவளுக்கு புடவை நல்லவா இருக்கு?" என்று அடுத்த கேள்வி கேட்டார்...
வீட்டினுள் நுழைந்த தேன்மொழிக்கு சட்டென்று முகம் சுருங்கி விட்டது...
மனதில் அவர் வார்த்தைகள் என்னவோ செய்தது...
அவள் என்ன ஜடமா உணர்வுகளை தொலைத்து இருக்க?
அவளுக்கும் வலித்தது...
தலையை குனிந்து கொண்டே, அவரை கடந்து சென்று மாடியில் ஏறிக் கொண்டாள்.
கல்யாணிக்கு அதனை பற்றி எல்லாம் யோசிக்கும் அளவுக்கு பக்குவம் இல்லை...
தன்னை அழகு என்று சொல்லி விட்டார்கள் என்கின்ற சந்தோஷம் மட்டுமே மனதில் நிறைந்து இருக்க, "வம்சி மாமா எங்க அத்தை?" என்று கேட்டாள்.
"ஸ்டூடியோ உள்ளே இருக்கான் மா" என்றார் அவர்...
"அவருக்கு தான் உள்ளே போனா பிடிக்காதே" என்று அவள் சொல்ல, "வெய்ட் பண்ணும்மா வந்திடுவான்" என்று சொல்லி விட்டு அவர் வேலையை பார்க்க சென்று விட்டார்...
அவளும் வேதவல்லி அருகே அமர்ந்து கொள்ள, கெளதம் கிருஷ்ணாவோ அங்கே வந்தவன், "அட என்ன இன்னைக்கு புடவை எல்லாம்?" என்று கேட்டான்...
"அன்னைக்கு சொன்னீங்க தானே" என்று சொன்னபடி எழுந்து நின்ற கல்யாணியோ, "நல்லா இருக்கா?" என்று அப்படியும் இப்படியும் திரும்பி காட்டினாள்.
"ம்ம் நல்லா இருக்கு" என்றான்...
"வம்சி மாமாவுக்கு பிடிக்குமா?" என்று கேட்டாள்.
இதழ்களை பிதுக்கியவன், "தெரியலையே" என்று சொல்லிக் கொண்டே, அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டான்...
இதே சமயம் யாதவ் கிருஷ்ணாவுக்கு டியூஷன் எடுத்துக் கொண்டு இருந்த தேன்மொழிக்கு இன்னுமே வேதவல்லியின் வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டு இருந்தன...
சின்ன வயதில் இருந்து எத்தனையோ வார்த்தைகளை அவள் கடந்து வந்தாலும், காயப்படுத்தும் வார்த்தைகள் வலிக்கவில்லை என்று கூறி விட முடியாது அல்லவா?
யாதவ் கிருஷ்ணாவே, "ஏன் சோகமா இருக்கீங்க?" என்று சைகையால் கேட்டான்...
ஒன்றும் இல்லை என்று தலையாட்டி விட்டு கவனத்தை வேறு இடம் செலுத்த முயன்றாள்.
இந்த சமயத்தில் ஸ்டூடியோவில் இருந்து வெளியே வந்தான் வம்சி கிருஷ்ணா...
அவனுக்காக தான் கல்யாணி முன்னறையில் காத்துக் கொண்டு இருந்தாள்.
அவன் மாடியில் இருந்து இறங்கி வருவதை ரசனையாக பார்த்துக் கொண்டே எழுந்து நின்றாள் கல்யாணி...
அவனோ தொலைபேசியை பார்த்துக் கொண்டே வந்தவன், "டேய் கெளதம், நாளைக்கு சாங் ப்ராக்டிஸுக்கு போகணும், மார்னிங் ரெடியா இரு" என்று சொல்லிக் கொண்டே, அங்கு வேலை செய்து கொண்டு இருந்த பாக்கியாவிடம், "பாக்கியா எனக்கு ஒரு காஃபி, கார்டன் ல இருக்கேன், அங்கே கொண்டு வந்திடு" என்று சொல்லிக் கொண்டே நகர முற்பட, "மாமா" என்றாள் கல்யாணி...
அவளை அவன் பார்க்கவே இல்லை அல்லவா? சட்டென்று திரும்பி என்ன என்கின்ற தோரணையில் புருவத்தை ஏற்றி இறக்கினான்...
"எப்படி இருக்கேன்?" என்று கேட்டாள்.
"அப்படியே தான் இருக்க" என்றான்...
அவளோ, "ஐயோ" என்று சலிப்பாக சொல்லிக் கொண்டே, "புடவை கட்டி இருக்கேன்" என்றாள்.
"சோ வாட்?" என்று கேட்டுக் கொண்டே, அவன் வெளியேற, அவள் முகம் தொங்கி போய் விட்டது...
கெளதம் கிருஷ்ணாவோ, "இப்போவும் சொல்றேன், வீணா மனசுல ஆசைய வளர்த்துக்காதே" என்று சொல்லிக் கொண்டே அவனும் வெளியேற, வேதவல்லியோ, "அவன் கிடக்குறான்... உனக்கு தான் வம்சி... நான் இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்... அவன் வேற ஒருத்தி கழுத்துல தாலி கட்டுனான்னா இந்த முடியை நான் வெட்டி எறியுறேன்" என்று சபதம் வேறு செய்தார்...
அவளோ வேதவல்லியை பெருமூச்சுடன் பார்த்தவளோ, "நிஜமா என் கல்யாணத்தை மாமா கூட நடத்தி வச்சிடுவீங்களா?" என்று கேட்க, "கண்டிப்பாம்மா" என்று அவர் சொல்லிக் கொண்டார்...
இதே சமயம், பூங்காவில் இருக்கும் லவ் பேர்ட்ஸை பார்த்துக் கொண்டே மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டே நின்று இருந்தான் வம்சி கிருஷ்ணா...
அவன் அருகே வந்து நின்ற கெளதம் கிருஷ்ணாவோ, "கல்யாணி லிமிட் தாண்டி போற போலவே தோணுது" என்றான்...
வம்சி கிருஷ்ணாவோ, "எல்லாம் பாட்டியால வர்றது... அவ மனச அவங்க தான் கெடுத்து வச்சு இருக்காங்க" என்று கடுப்பாக சொல்லிக் கொண்டவன் விழிகள் லவ் பேர்ட்ஸில் படிந்தன...
அவை முத்தமிடுவதை இதழ் பிரித்து ரசித்துக் கொண்டே பார்த்தவனோ, "லவ் பேர்ட்ஸ் லவ் பண்ணுறது அழகா இருக்குல்ல" என்றான்...
அவனை பக்கவாட்டாக திரும்பி விசித்திரமாக பார்த்த கெளதம் கிருஷ்ணாவோ, "உனக்கு ஏதோ ஆயிடுச்சு" என்று சொல்லிக் கொண்டே, சுற்றி பார்க்க, அங்கே யாதவ் கிருஷ்ணாவுக்கு வகுப்பை முடித்து விட்டு பூங்காவை தாண்டி நடந்து சென்ற தேன்மொழி கண்ணில் பட்டாள்...
சட்டென அவனுக்கு ஏதோ தோன்ற, "தேன்மொழி" என்று சத்தமாக அழைத்தான்...
அவளோ அவனை திரும்பி பார்க்க, வம்சி கிருஷ்ணாவும் அவளை பார்த்து விட்டு கெளதம் கிருஷ்ணாவை பார்த்தவன், "இப்போ எதுக்கு அந்த பொண்ண கூப்பிடுற?" என்று கேட்டான்...
உடனே கெளதம் கிருஷ்ணா, "அவ கிட்ட மட்டும் நாம லெட்டர் எழுத சொல்லலையே" என்றான்...
உடனே வம்சி கிருஷ்ணாவோ, 'ஹேய் கெளதம், கொஞ்சம் கூட சென்ஸ் ஆஹ் யோசிக்க மாட்டியா? அந்த பொண்ண பார்த்தா லெட்டர் எழுதுற போலவா இருக்கு?" என்று கேட்டான்...
அவனை புருவம் சுருக்கி பார்த்த கெளதம் கிருஷ்ணாவோ, "ஏன் அவ லெட்டர் எழுத மாட்டாளா? இல்ல லவ் பண்ண தான் மாட்டாளா?" என்று கேட்டான்.
"அந்த லெட்டரை பார்த்த தானே... எப்படி துறு துறுன்னு இருக்கு... இந்த பொண்ணு தலை நிமிர்ந்து நான் பார்த்ததே இல்லை" என்றான் அவன்...
"ஏன்னா அவளால பேச முடியாது, சோ அமைதியா இருக்கிற போல தோணலாம், எதுக்கு நாம சந்தேகத்தை விட்டு வைக்கணும்?" என்று கேட்டுக் கொண்டே இருக்கும் போது அவளும் பூங்காவினுள் நுழைந்தாள்...
அவள் விழிகள் கெளதம் கிருஷ்ணாவை பார்த்தாலும் தன்னையும் மீறி அருகே நின்ற வம்சி கிருஷ்ணாவில் ஒரு கணம் படிந்து மீண்டது...
அவன் அவளை பார்க்கவில்லை...
லவ் பேர்ட்ஸை பார்த்துக் கொண்டே நின்று இருந்தான்...
"பேப்பர் பேனா இருக்கா?" என்று கேட்டான் கெளதம் கிருஷ்ணா...
ஆம் என்கின்ற ரீதியில் தலையாட்டினாள்...
"நான் சொல்றத கொஞ்சம் எழுதி காட்டுறீங்களா?" என்று கேட்டான்...
அவள் புரியாமல் பார்க்க, "சும்மா தான், ஜஸ்ட் எல்லாரையும் எழுத வச்சு தமிழ் தெரியுதான்னு டெஸ்ட் பண்ணுறோம்... கொஞ்சம் எங்களுக்கும் என்டெர்டெய்ன்மெண்ட் ஆஹ் இருக்கு" என்று சொல்ல, அவளும் கைப்பையில் இருந்த நோட் புக் மற்றும் பேனாவை எடுத்தவள், பூங்காவில் அமைக்கப்பட்டு இருந்த கல்லினால் வடிவமைக்கப்பட்ட மேசையில் அவற்றை வைத்துக் கொண்டு எழுத ஆயத்தமானபடி, கெளதம் கிருஷ்ணாவை ஏறிட்டுப் பார்த்தாள்.
அவனோ, "நான் நலம், அது போல் நீங்களும் நலமா?" என்று சொன்னான்...
அவளும் வலது கையில் பேனாவை பிடித்து எழுதினாள்...
முத்து முத்தான எழுத்து என்று சொல்ல முடியாது... ஓரளவு படிக்க கூடிய எழுத்து தான்...
எழுதி முடிய அதனை கெளதம் கிருஷ்ணாவிடம் நீட்டினாள்...
அதுவரை அவளை பார்க்காமல் இருந்த வம்சி கிருஷ்ணாவின் விழிகள் இப்போது அவள் கொடுத்த நோட் புக்கில் படிய, அவன் முகத்தில் ஒரு ஏமாற்றம்...
அவன் தேடிய தென்றலின் கையெழுத்து அல்ல அது...