ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 33

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 33

அன்று நர்சரியில் இருந்து வந்ததுமே சர்வஜித்தின் மடியில் ஏறி அமர்ந்து விட்டான் ரணதீரன்... ஆதிரையாழோ அவனுக்கு உணவு ஊட்டிக் கொண்டு இருந்தாள்.

வழக்கமாக நடப்பது தான் இது...

'இவன் இங்க வந்து தானா இருக்கணும்' என்று மனதுக்குள் வழக்கமாக புலம்புபவளோ இன்று புலம்பவில்லை...

புலம்பவும் அவளுக்கு தோன்றவே இல்லை...

சர்வஜித்தோ, ரணதீரனை அணைத்தபடி, "உனக்கு என் கூட அமெரிக்கா வர இஷ்டமா?" என்று கேட்டான்...

ரணதீரனோ, "அப்போ அம்மா, தாத்தா எல்லாரும்?" என்று அடுத்த கேள்வி கேட்க, "எல்லாரும் தான் போறோம்" என்றான் சர்வஜித்...

அவனோ சிறிது யோசித்து விட்டு, "வர்றேன் பா, ஆனா ஃப்ரெண்ட்ஸ் ஐ விட்டு வர்றது தான் கவலையா இருக்கு" என்றான்...

"வருஷா வருஷம் லீவுக்கு வரும் போது அவங்கள பார்த்துக்கலாம்... அங்கேயும் உனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைக்கும்" என்று சொல்ல, "சரி" என்று புன்னகையுடன் தலையாட்டிக் கொண்டான்...

"பேசுனது போதும், இத சாப்பிடு" என்று ஆதிரையாழ் ரணதீரனுக்கு குனிந்து ஊட்டி விட்டுக் கொண்டு இருக்க, சர்வஜித்தின் விழிகள் அவளில் படிந்தன...

மல்டி மில்லியனரின் மனைவி என்றால் யாருமே நம்பமாட்டார்கள்...

கழுத்தில் தாலி, காதில் சிறிய தோடுகள் தவிர எந்த ஆபரணங்களும் இல்லை...

ஆனால் அவனை சுண்டி இழுக்கின்றாள்...

பேரழகி அல்ல அவள்... சாதரண தோற்றம் தான்...

ஆனால் அவன் மனம் அவளிடத்தில் தான் மண்டியிட்டு கிடக்கின்றது...

அழகு ஒன்றும் தோற்றத்தில் இல்லை, நமது மனதில் தான் இருக்கின்றது...

காதலித்துப் பார், காதலி பேரழகியாக தெரிவாள் என்பது அவன் விடயத்தில் உண்மையாகி இருந்தது...

அவன் விழிகளோ அவள் விழிகளில் தொடங்கி, நாசியை தீண்டி, இதழ்களை தாண்டி, கழுத்துக்கும் இறங்கி விட்டது...

ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டான்...

அவன் விழிகள் அவளை வஞ்சனை இல்லாமல் ரசிக்க, 'ராட்சஷி, என்னை டெம்ப்ட் பண்ணிட்டு இருக்கா' என்று நினைத்தவன் அவளது புடவையூடு தெரிந்த வெற்றிடையில் நிலைத்தது...

மீண்டும் ஒரு பெருமூச்சு அவனிடம்...

ரணதீரனுக்கு ஊட்டி விட்டுக் கொண்டு இருந்த ஆதிரையாழுக்கோ சர்வஜித் தன்னை பார்க்கும் உணர்வு வர, சட்டென்று அவனை திரும்பி பார்த்தாள்.

அவனோ அவள் பார்த்ததுமே, பார்வையை வேறு எங்கோ திருப்ப, அவனை முறைத்த ஆதிரையாழோ புடவையை சரி செய்துக் கொண்டாள்.

அவனும் குரலை செருமிக் கொண்டே ரணதீரன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஆரம்பித்து விட்டான்...

ரணதீரனும் சாப்பிட்டு முடிய, தட்டை எடுத்துக் கொண்டே கழுவி விட்டு வந்த ஆதிரையாழோ சர்வஜித்தைப் ஒரு கணம் அழுத்தமாக பார்த்து விட்டு, ஹாலில் கிடந்த உடைகளை மடிக்க ஆரம்பித்து விட்டாள்.

ரணதீரனும் இப்போது விளையாடச் சென்று இருக்க, சுற்றி யாரும் இல்லை என்று உணர்ந்த சர்வஜித் எழுந்து ஆதிரையாழ் அருகே வந்தவன், "இப்போ எதுக்கு முறைச்சு முறைச்சு பார்க்கிற?" என்று கேட்டான்.

அவனை ஒரு கணம் பக்கவாட்டாக பார்த்து விட்டு, மீண்டும் உடைகளை மடித்துக் கொண்டே, "உங்க பார்வை சரி இல்ல, அது தான்" என்றாள்.

அவனோ, "தொட தான் கூடாதுனு சொன்ன, பார்க்கவும் கூடாதா? இதெல்லாம் அநியாயம் டி" என்று சொல்லிக் கொண்டே, ஒற்றைக் காலை தூக்கி வேஷ்டியை இரு கைகளாலும் பிடித்தவன், அதனை மடித்துக் கட்டிக் கொண்டே மாடியேற அவன் முதுகை ஆழ்ந்து பார்த்து விட்டு மீண்டும் உடையை மடிக்கலானாள்...

இரு நாட்கள் இப்படியே கடந்து இருக்க, சர்வஜித்துக்கு வேலை தலைக்கு மேல் குவிந்தது... பாஸ்போர்ட் எடுக்க ரணதீரனை அழைத்துக் கொண்டுச் சென்றான் சர்வஜித்...

அத்துடன் அனைவரையும் அமெரிக்கா அழைத்துச் செல்வதற்கான, ஏற்பாடுகளையும் பார்க்க தொடங்கி விட்டான்... இடையில் ரணதீரன் படிக்கும் பாடசாலையையும் கட்டி கொடுக்க ஆயத்தங்களை செய்தவனுக்கு வீட்டில் நிற்க தான் நேரமே கிடைக்கவில்லை...

ஆதிரையாழும் இப்போதெல்லாம் சர்வஜித்தை முறைத்துக் கொண்டு திரிவது இல்லை...

சினேகமாக புன்னகைப்பாள் அவ்வளவு தான்...

ஆனால் அவன் பார்வை என்னவோ அவளை விழுங்கி விடுவது போல தான் இருக்கும்...

அவனுக்கு வேலை தலைக்கு மேல் வந்தது ஒரு வகையில் நல்லது என்று அவன் நினைத்துக் கொண்டான்.

அவளை பார்த்தாலே அவன் உணர்வுகள் பேயாட்டம் ஆட தொடங்கி விடும், அவளோ தொடக் கூடாது என்று சொல்லி விட்டாள்.

அந்த தவிப்பு அவனுக்கு நரகம் தான்...

அதனாலேயே அவன் வீட்டில் நிற்பதும் அரிது...

வீட்டில் நின்றால் கூட தோட்டத்தில் தான் அதிக நேரம் செலவு செய்வான்...

முதல் எல்லாம் அங்கே வேலை செய்பவர்களுடன் பேசுவது இல்லை...

இப்போதெல்லாம் பேசுவான்... சிரிப்பான்....

மருதநாயகம் மட்டும் இல்லை என்றால் தானும் இவர்களுடன் ஒருவராக தானே இருந்து இருக்க வேண்டும் என்கின்ற எண்ணம் அவன் மனதில் வந்திருக்க, இப்போது அவர்களுடன் ஒருவராகவே ஆகி விட்டான்...

அவன் மாற்றம் அனைவர்க்கும் புதிதாக இருந்தாலும் பிடித்து இருந்தது...

மருதநாயகம் பேரனின் மாற்றத்தை ரசித்துப் பார்த்தார்...

இப்படியே அனைத்து வேலைகளும் முடிய, அவர்கள் அமெரிக்கா செல்ல இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது...

உடமைகளும் அடுக்கியாகி விட்டது...

ரணதீரனின் பாடசாலைக்குச் சென்று சொல்லி விட்டு வர வேண்டும்...

நிறைய இனிப்புகள் வாங்கிக் கொண்டே, அவன் பாடசலைக்கு சர்வஜித்தும் ஆதிரையாழும் மருதநாயகமும் ரணதீரனை அழைத்துக் கொண்டே புறப்பட்டு இருந்தார்கள்...

ரணதீரன் இனிப்புகளை நண்பர்களுக்கு கொடுத்து விட்டு, "லீவுக்கெல்லாம் வந்தா உங்கள வந்து பார்ப்பேன் டா" என்று பேசிக் கொண்டே நின்று இருக்க, மருதநாயகமும் சர்வஜித்தும் ஆதிரையாழும் அதிபருடன் பேசிக் கொண்டே நின்று இருந்தார்கள்...

அதுவரை அவன் பாடசாலை கட்டிக் கொடுக்கும் விஷயம் ஆதிரையாழுக்கு தெரியாது...

மருதநாயகத்தைப் பார்த்த அதிபரோ, "உங்க பேரன் அப்படியே உங்கள போல சார்" என்று சொன்னவரோ ஆதிரையாழிடம், "நீ ரொம்ப கொடுத்து வச்ச பொண்ணும்மா" என்றார்.

அவளுக்கு புரியவில்லை என்றாலும் தலையாட்ட, மேலும் தொடர்ந்த அதிபரோ, "நீங்க கிளம்புனா யார் சார் ஸ்கூலை திறந்து வைக்கிறது?" என்று கேட்க, சர்வஜித்தோ, "அதுக்கு நான் ஏற்பாடு பண்ணுறேன், முக்கியமான யாரையும் கூப்பிட்டு திறக்கலாம்" என்றார்.

ஆதிரையாழோ, "ஸ்கூல் கட்ட போறீங்களா? யார் கட்டி கொடுக்க போறாங்க?" என்று சந்தோஷமாக கேட்க, அதிபரோ, அவளை அதிர்ந்து பார்த்தவர், "ஹா ஹா என்னம்மா இது? சர்வஜித் சார் தான் கட்டி கொடுக்கிறேன்னு சொன்னார், அவர் உன் கிட்ட சொல்லலையா?" என்று கேட்க, அவள் சற்று தடுமாறி தான் போனாள்.

ஒரு பக்கம் பாடசாலை கட்டி கொடுப்பது சந்தோஷமாக இருந்தாலும் தன்னிடம் சொல்லவில்லை என்று ஆதங்கமும் இருந்தது...

சர்வஜித்தை ஒரு கணம் பார்த்து விட்டு, அதிபரிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் சிரித்து வைத்தாள்.

அதனை தொடர்ந்து அவளுக்கு அங்கே நிற்பது சங்கடமாக இருக்க, "நான் ஸ்கூலை சுத்தி பார்த்துட்டு வரேன்" என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து நழுவி விட்டாள்.

கையை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு மர நிழலில் நின்றபடி, வீசும் காற்றை உள்ளே இழுத்து சுவாசித்தவளுக்கு அந்த இயற்கையை பார்த்ததுமே அப்படி ஒரு இதம் மனதில்...

"ஹெலோ" என்ற சர்வஜித்தின் குரல் காதருகே கேட்க தான், சட்டென திரும்பிப் பார்த்தாள்.

அவள் விழிகளில் அனல்...

"இப்போ என்ன கோபம்?" என்றான்...

சுற்றி வளைத்து பேச அவள் விரும்பவில்லை...

"என் கிட்ட எதுவுமே சொல்ல மாட்டீங்களா?" என்று கேட்டாள்.

"அப்படினு நான் சொல்லலையே" என்று அவன் சொல்ல, "அப்போ எதுக்கு எல்லாமே மறைக்கிறீங்க? அப்போ விஷ்வா விஷயம் தொடக்கம் எல்லாமே மறைச்சீங்க, இப்போ ஸ்கூல் கட்டி கொடுக்கிறத மறைக்கிறீங்க?" என்று சொல்ல, அவளை ஆழ்ந்து பார்த்தவன், "அப்போ மறைச்சதுக்கு காரணம் ஈகோ தான்... உனக்காக நான் பண்ணுறது உனக்கு தெரிய கூடாதுனு நினைச்சேன்... இப்போ நான் மறைக்கணும்னு மறைக்கல... நான் அது பண்ணுறேன், இது பண்ணுறேன்னு சொல்ல, நான் அரசியல்வாதி இல்ல... எனக்கு அப்படி சொல்லியும் பழக்கம் இல்ல" என்றான்...

நியாயமான பேச்சு தான்...

"என் கிட்ட பெருமையா சொல்லணும்னு இல்லை, ஒரு தகவலா சொல்லலாம்ல, அவங்க முன்னாடி எவ்ளோ அவமானம்... அவங்க என்ன நினைச்சு இருப்பாங்க?" என்றாள்.

"சரி இனி சொல்றேன்டி, எல்லாத்துக்கும் இப்படி முகத்தை தூக்கி வச்சுக்காதே" என்று சொல்லிக் கொண்டே மெதுவாக நடக்க, அவனுடன் கூட நடந்தாள் பெண்ணவள்...

அன்று மாலை தோட்டத்தில் சர்வஜித்துடன் ரணதீரன் விளையாடிக் கொண்டு இருந்த தருணம் அது...

சர்வஜித்தோ நிறைய மாங்காய்களை பறித்து இருந்தான்...

அவன் விழிகளோ ஆதிரையாழினை தேட, அவளோ வீட்டினுள் உடைகளை அடுக்கிக் கொண்டு இருந்தாள்.

உடனே சர்வஜித் மாங்காய்களை அங்கே இருக்கும் பெண்ணிடம் கொடுத்து, அவளிடம் சில அறிவுறுத்தல்களையும் கொடுத்தான்.

சற்று நேரத்தில் உடைகளை அடுக்கி விட்டு, வெளியே வந்து அங்கிருந்த கட்டில் ஆதிரையாழ் அமர்ந்த சமயம், அவள் முன்னே ஒரு தட்டு நீட்டப்பட்டது...

புருவம் சுருக்கி பார்த்தாள்.

இதய வடிவில் மாங்காய்கள் வெட்டப்பட்டு மிளகாய் தூள் உப்பு தூவப்பட்டு இருக்க, அதனை வாங்கிக் கொண்டே, அதனை கொடுத்த பெண்ணை பார்த்தவள், "ஹா ஹா என்னக்கா இது? என்னை லவ் பண்ணுறீங்களா என்ன?" என்று கேட்க, அந்த பெண்ணோ வெட்கப்பட்டு சிரித்தபடி, "தம்பி தான் கொடுக்க சொன்னார்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து ஓடி விட்டாள்.

ஆதிரையாழோ சட்டென்று சர்வஜித்தைப் பார்க்க, அவனோ கழுத்தில் ரணதீரனை தூக்கிக் கொண்டே, விளையாடிக் கொண்டு இருந்தவன் தன்னை பார்த்த ஆதிரையாழை பார்த்து ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க, அவள் இதழ்களில் புன்னகை...

அதே புன்னகையுடன் அவன் கொடுத்து இருந்த மாங்காயை கடிக்க, அவன் விழிகளோ அவள் இதழ்களில் தன்னையும் மீறி நிலைக்க, தலையை இரு பக்கமும் ஆட்டி தன்னை நிலைப்படுத்திக் கொண்டே ரணதீரனுடன் விளையாட ஆரம்பித்து விட்டான்.

அன்று இரவு ஆதிரையாழ் நன்கு தூங்கிக் கொண்டு இருந்தாள்.

அவள் அருகே ரணதீரனும் படுத்து இருக்க, அதுவரை லேப்டாப்பில் வேலை செய்துக் கொண்டு இருந்த சர்வஜித்தின் விழிகள் மெல்லிய வெளிச்சத்தில் தெரிந்த ஆதிரையாழ் மீது படிந்தது...

அவள் சீரான மூச்சு அவள் தூக்கத்தை பறை சாற்ற, எழுந்து அலுமாரியை திறந்து அவளுக்காக தான் வாங்கி வைத்து இருந்த கொலுசை எடுத்தான்...

திருவிழாவில் அவள் ஆசைப்பட்ட அதே வெள்ளிக் கொலுசு... அதனை எடுத்துக் கொண்டே அவள் அருகே வந்தவன் விழிகளோ, படுத்து இருந்ததில் விலகி இருந்த அவள் புடவையில் படிந்தது...

"என்னை பார், என் அழகைப் பார்" என்று அவள் அங்க வளைவுகள் அவனுக்கு போதையேற்ற, "ச்ச" என்று சொல்லிக் கொண்டே, தலையை உலுக்கி தன்னை சமன் செய்துக் கொண்டவனோ, அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்துக் கொண்டே, அவள் காலில் கொலுசை அணிவித்து விட்டான்...

முத்தமிட வேண்டும் என்கின்ற ஏக்கம்...

ஆனால் முடியாதே...

சற்று குனிந்து கொலுசில் ஒரு முத்தம்...

அதனை தொடர்ந்து அவனும் வந்து படுத்து விட்டான்...

அடுத்த நாள் எழுந்து நிலத்தை காலில் வைத்த ஆதிரையாழோ சட்டென கொலுசு சத்தத்தை உணர்ந்ததும் குனிந்து பார்த்தாள்.

அவள் ஆசைப்பட்ட கொலுசு...

அவள் இதழ்கள் மெலிதாக விரிந்தன... சர்வஜித் தான் போட்டு விட்டு இருப்பான் என்று தெரிய, அப்படியே அமர்ந்தபடி திரும்பி சர்வஜித்தைப் பார்த்தாள்.

ஆழ்ந்து தூங்கிக் கொண்டு இருந்தான்...

அவனை பார்த்து விட்டு இருவருக்கும் நடுவே படுத்த ரணதீரனை எழுப்பினாள்...

அவனோ, "இன்னைக்கு தான் ஸ்கூல் இல்லையே, நான் தூங்க போறேன்" என்று சொல்லி விட்டு சர்வஜித்தை அணைத்துக் கொண்டே படுக்க, அவளும் மென் புன்னகையுடன் வெளியேறி விட்டாள்.

வெளியே வந்தவளுக்கோ கன்னங்கள் சிவந்து போயின...

அவனுடன் மனம் விட்டு பேசி வாரங்கள் கடந்த நிலையில், அவன் செயல்கள் அவளை ஈர்க்க ஆரம்பித்து விட்டன...

முத்தம், காமம் தாண்டிய உணர்வு...

காதல் உணர்வு...

பரவசமாக இருந்தது அவளுக்கு...

அன்று காலையில் வேலைகளை முடித்து விட்டு சமைத்துக் கொண்டு இருந்தாள் பெண்ணவள்...

அங்கே வேலை செய்துக் கொண்டு இருந்த பெண்ணோ, "என்ன யாழ் இன்னைக்கு முகம் ஒரே பூரிப்பா இருக்கு" என்று கேட்க, அவளோ, "ஒன்னும் இல்லையே" என்று சொல்லிக் கொண்டே நாக்கை கடித்துக் கொண்டே சமைத்து முடித்தாள்...

அனைவர்க்கும் தோசை தான் செய்து இருந்தாள்.

அவள் உணவை எடுத்துக் கொண்டே ஹாலுக்குள் வரவும், அங்கே மருதநாயகம், சர்வஜித் மற்றும் ரணதீரன் வந்து உட்காரவும் நேரம் சரியாக இருந்தது...

"என்ன யாழ் இன்னைக்கு தோசையா?" என்று கேட்டுக் கொண்டே, மருதநாயகம் உணவு தட்டை திருப்பி வைத்து சாப்பிட ஆயத்தமாகி விட்டார்... அவளோ, "ஆமா தாத்தா" என்று சொல்லிக் கொண்டே, அனைவர்க்கும் தட்டில் தோசையை எடுத்து வைத்தாள்.

ரணதீரனுக்கோ தோசை என்றால் உயிர்...

"தோசை தோசை" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டு முடித்தான்... சர்வஜித்தும் சாப்பிட்டு முடிந்து கையை கழுவ சமையலறைக்குள் நுழைந்தவன் கையை கழுவி விட்டு திரும்ப, அங்கே தொட்டு விடும் தூரத்தில் நின்று இருந்தாள் ஆதிரையாழ்...

"என்னடி?" என்றான்...

"தொடாம எப்படி கொலுசு போட்டீங்க?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்டாள்.

"கை பட்டிச்சு தான்... ஆனா தப்பா ஒன்னும் படல" என்று சொல்லிக் கொண்டே அவன் பின்னங்கழுத்தை வருடியபடி அவளை வழக்கமாக பார்க்கும் விழுங்கி விடும் பார்வையை பார்த்தான்...

அவளோ, அவனை நெருங்கி, அவன் மீசையை முறுக்கி விட, அவனுக்கு சுள் என்று வலித்தது...

"ஆஹ்" என்று அவன் சொல்ல, அவளோ, "ரொம்ப பிடிச்சு இருக்கு" என்றாள்.

"மீசையா கொலுசா?" என்றான் அவன்...

"ரெண்டும் தான்" என்று கண் சிமிட்டி சொன்னவளின் கழுத்தை அவன் பற்ற போக, சட்டென அவன் கையை பற்றியவள், "தொட கூடாதுனு சொன்னேன்ல" என்று சொல்ல, "போடி" என்று அவன் சொல்லிக் கொண்டே, அவள் கையில் இருந்து தனது கையை உறுவிக் கொண்டே அங்கிருந்து நகர, அவன் முதுகை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தாள் பெண்ணவள்...

இப்படியே ஒரு வாரம் கடந்த நிலையில் அவர்கள் அமெரிக்கா புறப்படும் நாளும் வந்தது...

ரணதீரனுக்கோ குதூகலம் தாங்கவே இல்லை...

"அப்பா ப்லேன்ல போறோம்" என்று பத்துக்கு மேற்பட்ட தடவையாவது சொல்லி இருப்பான்...

"இது என்ன? இது எதுக்கு?" என்று ஆயிரத்தெட்டு கேள்விகள்...

சர்வஜித்தோ சலிக்காமல் எல்லாமே சொல்லிக் கொடுக்க, அவன் பொறுமையையும் அப்பா அவதாரத்தையும் ரசித்துப் பார்த்தாள் ஆதிரையாழ்...
 

CRVS2797

Active member
உனக்குள் உறையும் அனல் நானடி...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 33)


ஆனாலும், ரொம்ப அழகா காக்கா புடிக்குறான்.அதுசரி, சர்வஜித் ஆதிராவுக்கு கொலுசு போட்டான் சரி, அதுல அவ புத்தி சொக்கிப் போனா அது நியாயம். ஆனா, இங்க ஐசுவோட நிலைமை ஏன் தடுமாறுது..?


பின்னே பாருங்களேன்..
ஆதிரா கொலுசணிந்த பாதத்தை நிலத்தில் வைச்சான்னு... இருக்கிறதுப் போய், அவ நிலத்தை பாதத்தில் வைத்தான்னு உல்ட்டாவா எழுதியிருக்காங்கனா பார்த்துக்குங்களேன்.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top