அத்தியாயம் 3
இதே சமயம் ரெக்கார்டிங் முடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பிக் கொண்டு இருந்தான் வம்சி கிருஷ்ணா.வசந்தியிடம் மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டு இருக்கின்றான்...
அதற்குள் அவன் தென்றலை கண்டு பிடித்தாக வேண்டும்...
சிறிது நேரம் யோசித்துக் கொண்டே காரை செலுத்தியவனோ, ஒரு கட்டத்தில் காரை ஓரமாக நிறுத்தி விட்டு தனது மேனேஜருக்கு அழைத்தான்...
அவனும் அலைபேசியை காதில் வைத்துக் கொண்டே, "சொல்லுங்க சார்" என்று சொல்ல, "வினோத், நான் சொல்ற போஸ்ட் ஆஃபீஸுக்கு போய், நான் கேட்க சொல்றத கேளு" என்று ஆரம்பித்தவன் விடயத்தையும் சொல்லி விட்டு வைத்து விட்டான்...
'தென்றல் உன்னை சீக்கிரம் கண்டு பிடிக்கிறேன்' என்று அவன் இதழ்கள் முணுமுணுக்க காரை செலுத்த ஆரம்பித்து விட்டான்...
இதே சமயம் வம்சி கிருஷ்ணா சொன்ன செயலை முடிப்பதற்காக தபால் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்து இருந்தான் வினோத்...
நேரே போஸ்ட் மாஸ்டரிடம் சென்றவன், "குட் மார்னிங் சார், நான் சிங்கர் வம்சி கிருஷ்ணா சாரோட மேனேஜர்" என்று தன்னை அறிமுகப்படுத்த, அவரும், "உட்காருங்க சார்" என்று அவனை அமர வைத்தார்...
வினோத்தோ ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, "வம்சி கிருஷ்ணா சாருக்கு ஃப்ரொம் அட்ரெஸ் போடாம லெட்டர்ஸ் வருது" என்று ஆரம்பித்தான்...
"போஸ்ட் மெயில் ரிட்டர்ன் அட்ரெஸ் இல்லன்னா கூட டிலிவர் பண்ணுவோம், இனி ரிட்டர்ன் அட்ரெஸ் இல்லாத லெட்டர்ஸ் அனுப்ப வேணாம்னா சொல்லுங்க, அத நான் பார்க்க சொல்றேன்" என்றார் அவர்...
"ஐயோ லெட்டர் அனுப்புறது பிரச்சனை இல்ல சார், அந்த லெட்டர் போடுறவங்க யாருன்னு கண்டு பிடிக்கணும்" என்று சொன்னான்...
சிறிது நேரம் யோசித்துக் கொண்டே வினோத்தை பார்த்த போஸ்ட் மாஸ்டர், "ஏற்கனவே ஸ்டாம்ப் ஒட்டி லெட்டர் பாக்ஸ் ல போட்டுட்டு போய்ட்டாங்கன்னா கண்டு பிடிக்க முடியாது சார்" என்றார்.
அவனோ அலைபேசியை எடுத்து அதில் வம்சி கிருஷ்ணா அனுப்பிய, கடித உறையின் புகைப்படத்தை காட்டியவன், "இது தான் அனுப்புறவங்களோட ஹாண்ட் ரைட்டிங், உங்க நம்பர் கொடுங்க, இத நான் வாட்ஸ் அப் க்கு அனுப்புறேன், ஒவ்வொரு மாசமும் முதலாம் தேதி லெட்டர் வரும்" என்றான்...
போஸ்ட் மாஸ்டருக்கு மறுக்கவும் முடியவில்லை...
பெரிய இடம் அல்லவா?
"சரி சார், கொடுங்க பார்க்கிறேன்" என்று சொல்லி அதனை வாங்கிக் கொண்டவருக்கு இதனை கண்டு பிடிக்க முடியும் என்று நம்பிக்கை இல்லை...
வினோத்துக்கும் இல்லை...
ஏன் வம்சி கிருஷ்ணாவுக்கு கூட நம்பிக்கை இல்லை...
ஆனால் இதனை விட்டால் அவனுக்கு முயற்சி செய்ய வழி இல்லை...
அதனால் தென்றலை கண்டு பிடிக்கும் முயற்சியை இதில் இருந்து ஆரம்பித்து விட்டான்...
அதனை தொடர்ந்து வினோத்தும் வம்சி கிருஷ்ணாவுக்கு அழைத்து நடந்ததை சொல்ல, "ம்ம்" என்ற பதிலுடன் அழைப்பை துண்டித்து இருந்தான் அவன்...
வீட்டுக்கு வந்தவனோ, நேரே தனது பிரத்தியேக ஸ்டூடியோவினுள் நுழைந்து விட்டான்...
அவன் வீட்டில் இருக்கும் போதெல்லாம் அதிக நேரம் செலவிடுவது அங்கே தான்...
இசையுடன் லயித்து விடுவான்...
இதே சமயம், அன்று மாலை யாதவ் கிருஷ்ணாவுக்காக டியூஷன் எடுக்க அவர்கள் வீட்டுக்கு வந்து இருந்தாள் தேன்மொழி...
அவர்கள் வீட்டுக்கு எப்போது வரும் போதும் ஒரு தயக்கம் இருக்கும்...
வேதவல்லி மகாலக்ஷ்மியை பார்த்து சொல்லிய வார்த்தைகள் இன்னும் அவள் மனதில் ஆணியடித்த போல பதிந்து இருந்தன...
அன்று இரவு அவள் தாய் அழுத அழுகை அவள் அறிவாள்...
ஆனாலும் தவிர்க்க முடியாத நிலையில் தினமும் அவர்களது வீட்டுக்கு வர வேண்டிய கட்டாயம் அவளுக்கு...
இன்றும் வந்து விட்டாள்.
வாசலில் காலெடுத்து வைத்து வீட்டினுள் அவள் நுழையும் போதே, "இந்த வசந்திக்கு தராதரம் பார்த்து பழக தெரியல, ஒரு வாரம் நிம்மதியா இருந்தேன்... இப்போ மறுபடி வந்து சேர்ந்திடுச்சு" என்று ஒரு குத்தல் வார்த்தைகளை வேதவல்லி சொல்ல, தேன்மொழியோ மௌனமாக அவரை கடந்து சென்றாள்...
குனிந்த தலை நிமிரவில்லை...
அவரை பார்க்கவும் இல்லை...
"கேட்டும் கேட்காத போல போறத பாரு" என்று அதற்கும் ஒரு திட்டு...
தேன்மொழியோ ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்க்க, அங்கே வந்த வசந்தியோ, "அவனோட ஸ்டடி ரூம்ல இருக்கான்மா, உனக்காக தான் பார்த்துட்டு இருக்கான்" என்று சொல்ல, அவளும், சரியென்ற தோரணையில் தலையாட்டி விட்டு அடி மேல் அடி வைத்து மாடியேறினாள்...
யாதவ் கிருஷ்ணா கல்வி கற்பதற்கு என்று ஒரு அறையை குருமூர்த்தி அமைத்து கொடுத்து இருந்தார்...
எண்ணற்ற சித்திரங்கள் உள்ளே இருக்கும் சுவரில் வரையப்பட்டு இருந்தன...
அந்த சித்திரங்களை ரசிப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும்... ரசிப்பது மட்டும் அல்ல, வரைவதும் பிடிக்கும்...
தேன்மொழி உள்ளே நுழைந்த சமயம், அவன் சித்திரங்களை பார்த்துக் கொண்டே இருக்கையில் அமர்ந்து இருந்தான்...
தேன்மொழியோ அவன் முன்னே சென்று நின்றவள், கையை புன்னகையுடன் அசைக்க, அதுவரை இறுக மூடி இருந்த அவன் இதழ்கள் அழகாக விரிந்தன...
கண்களால் முன்னே இருந்த இருக்கையில் அமர சொன்னான்...
அவளும் அமர்ந்தாள்...
மனதால் அழகான இரு ஜீவன்களின் கண்களும் விரல் அசைவுகளும் பேசின...
அவளுடன் பேசும் போது அவனுக்கு சந்தோஷமாக இருக்கும்...
தன்னுடைய குறையை அவன் உணர்வது இல்லை... நிறைவாக உணர்வான்...
அவன் எதிர்கொண்ட பார்வைகள் இரண்டு தான்...
ஒன்று பரிதாபம், அடுத்தது ஒதுக்கம்...
இவை இரண்டையும் தாண்டி ஸ்நேகமான பார்வையை அவன் மீது வீசி இருந்தாள் தேன்மொழி...
அவனுக்கு அவளும் கற்பிக்க ஆரம்பித்து விட்டாள்.
நிறைய கற்றுக் கொடுத்தாள்...
நிறைய தெரிந்து கொண்டான்...
அவள் சொல்லி கொடுத்த பயிற்சியை அவன் செய்து கொண்டு இருக்கும் போது, அவள் விழிகளோ சுற்றி இருந்த சித்திரங்களில் படிந்தன...
மெதுவாக எழுந்து சென்று அதனை வருடினாள்...
விதம் விதமான கண்ணுக்கு குளிர்ச்சியான சித்திரங்கள்...
ஏற்கனவே பார்த்து இருக்கின்றாள் தான்...
இன்று ஆழமாக ரசித்துப் பார்த்தாள்...
அழகான வாள் சித்திரம்...
நெருப்பின் நடுவே ஜொலிக்கும் தங்க வாள் அது...
ஆனால் எங்கேயோ பார்த்த நினைவு...
கண்களை மூடி யோசித்தாள்...
சட்டென நினைவு வந்தது...
ஆம் அதனை வரைந்து சித்திர போட்டியில் பரிசு பெற்றது யாதவ் கிருஷ்ணா தான்...
அதே வாள்...
சட்டென அவனை திரும்பி பார்த்தவள், அவன் அருகே சென்று எழுதி கொண்டு இருந்தவனது பேனாவை பிடித்தாள்... சட்டென்று ஏறிட்டுப் பார்த்தான் அவன்...
வாள் சித்திரத்தை காட்டினாள்...
அவனோ, "என்னோடது தான், பெயிண்டர் கூட நானும் சேர்ந்தே வரைஞ்சேன்..." என்றான் சைகை மொழியில்...
"அழகாக இருக்கிறது" என்று கண் சிமிட்டி சைகை மொழியில் அவள் சொல்ல, அவனோ, "அந்த வாள் சித்திரம் எங்கே பார்த்து வரைஞ்சேன் தெரியுமா?" என்று சைகை மொழியில் கேட்டான்...
அவளும் தலையை அசைத்து, 'எங்கே' என்கின்ற தோரணையில் கேட்க, அவனோ, "என் பெரிய அண்ணா முதுகுல இதே போல பெரிய டாட்டூ இருக்கு... அத பார்த்து தான் வரைஞ்சேன், டாட்டூ பச்சை நிறத்துல இருக்கு, அதுக்கு நான் கலர் கொடுத்தேன் அவ்வளவு தான்... " என்றான் கைகளை அசைத்து...
சட்டென அவள் இதழ்கள் இப்போது தாரளமாக விரிந்து கொண்டன...
சிரித்து முடிய, இதழ்களை பிதுக்கி அவனை மெச்சிக் கொள்ள, அவனும் சிரித்தபடி பயிற்சியை செய்ய ஆரம்பித்து விட்டான்...
அவன் பயிற்சி செய்வதை பார்த்துக் கொண்டே நாடியில் ஒற்றைக் கையை குற்றியபடி அமர்ந்து இருந்த தேன்மொழியின் இதயத்தில் ஒரு இதமான உணர்வு...
அவன் குரல்...
வம்சி கிருஷ்ணாவின் குரல்...
வெளியே மிக அருகில் கேட்டது...
பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி அந்த வழியால் நடந்து சென்றான்...
அவன் இசை அவளை வாரி சுருட்டிக் கொண்டது...
மகுடிக்கு மயங்கும் பாம்பு போல மயங்கி விட்டாள்.
தன்னை கட்டுப்படுத்த நினைக்கிறாள்...
முடியவில்லை...
இசையில் மயங்கி தனது விழிகளை மூட கூடாது என்று நினைக்கின்றாள்...
அதுவும் முடியவில்லை...
கண்களை தன்னை மீறி மூடியவள், அவன் குரலை இன்னும் ஆழ்ந்த கேட்ட சமயம் மேசையில் தட்டும் சத்தம் கேட்டது...
சட்டென விழிகளை திறந்து தன்னிலை அடைய முயன்றாள்...
அவளை பார்த்து சிரித்த யாதவ் கிருஷ்ணாவோ, "தூங்கிட்டிங்களா?" என்று கையை அசைத்து கேட்டான்...
"இல்லை" என்ற தோரணையில் சிரித்துக் கொண்டே, அவள் பதில் சொல்ல, அவனும் சிரித்துக் கொண்டே மீண்டும் பயிற்சியை செய்ய ஆரம்பித்து விட்டான்...
அவனுக்கு கற்பித்து முடித்து விட்டு வெளியே வந்தாள் தேன்மொழி...
யாரையும் பார்க்காமல் குனிந்தபடி படியிறங்கி வந்தாள்.
இதே சமயம் தொலைபேசியில் பேசிக் கொண்டே மாடியேறினான் வம்சி கிருஷ்ணா...
அவன் வருகின்றான் என்று சொன்னதுமே அவளுக்கு இதயத்தில் படபடப்பு...
குனிந்த தலை நிமிரவில்லை...
அவளை நெருங்கி வரும் அவன் பாதம் அவளுக்கு தெளிவாக தெரிந்தது...
அவன் அவளை ஏன் என்றும் கவனிக்கவில்லை...
தாண்டி நடந்து சென்றான்...
அவன் தாண்டி செல்லும் போது அவனது பெர்ஃபியூம் வாசனை அவள் நாசியை துளைத்தது...
ஆழ்ந்த மூச்செடுத்து அதனை நுரையீரலில் நிரப்பிக் கொண்டே நடந்து சென்றவளது இதழ்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததுமே மெதுவாக புன்னகைத்துக் கொண்டன...
அவனை அவள் பார்ப்பது மிக அரிதாக தான்...
இன்று பார்த்து விட்டாள். ஒரு இதமான சந்தோஷம் அவளுக்கு...
அதே சந்தோஷத்துடன் வீட்டுக்கு சென்று விட்டாள்.
இதே சமயம், கல்யாணிக்கு திட்டிக் கொண்டு இருந்தாள் மிருதுளா...
கல்யாணியோ, "அம்மா இங்க பாருங்க, இவ திட்டிட்டே இருக்கா" என்று சிணுங்க, "திட்டாம என்ன பண்ண சொல்ற? வம்சியை விட்டா உலகத்துல ஆம்பிளையே இல்லாத போல நடக்கிற, அவனே திமிர் பிடிச்சவன்" என்று கரித்துக் கொட்டினாள்...
"அவன் இவன்னு பேசாதடி" என்றாள் கல்யாணி...
"சரிடி பேசல" என்று பதில் சொன்ன மிருதுளாவோ, "அம்மா இவ லூசு போல உளர்றான்னா அதுக்கு நீங்களும் சப்போர்ட் பண்ணுறீங்க... வம்சி மாமா தான் பிடிக்கலன்னு சொல்றார்ல, நமக்குன்னு ஒரு செல்ஃப் ரெஸ்பெக்ட் வேணாமாம்மா?" என்று ரதிதேவியிடம் கேட்டாள்.
ரதிதேவியோ, "இங்க பாரு மிருதுளா, அவன் யாரையும் லவ் பண்ணல, கல்யாணியை பிடிக்கலன்னு மட்டும் தான் சொல்றான்... கல்யாணம் பண்ணுனா அவனுக்கு கண்டிப்பா பிடிச்சிடும்... வம்சி போல ஒருத்தன் தேடுனாலும் கிடைக்க மாட்டான்... அவனை கல்யாணம் பண்ணிக்க எத்தனையோ பொண்ணுங்க கனவு காணுறாங்க... நம்ம கல்யாணிக்கு வாய்ப்பு அமைஞ்சு இருக்கு... விட சொல்றியா?" என்று கேட்க, அவரை முறைத்த மிருதுளாவோ, "உங்களால தான் அவ இப்படி இருக்கா, ஒரு நாள் இல்ல ஒரு நாள் வம்சி மாமா யாரையும் கல்யாணம் பண்ணிட்டு மாலையும் கழுத்துமா வருவார், அப்போ தெரியும் இவளுக்கு" என்றாள்.
கல்யாணியோ, "அப்படி பேசாதே மிருதுளா, அப்படி மட்டும் நடந்திச்சு, மாமா கல்யாணம் பண்ணிட்டு வர்றவள போட்டு தள்ளிடுவேன்" என்று சொல்லிக் கொண்டே விறு விறுவென தனது அறைக்குள் நுழைய, "அடிப்பாவி" என்று வாயில் கையை வைத்துக் கொண்டாள் மிருதுளா...
இப்படியே அவர்கள் நாட்களும் நகர்ந்தன...
முதலாம் திகதியும் வந்து விட்டது...
வம்சி கிருஷ்ணா எதிர்பார்த்த பதில் தான் போஸ்ட் ஆஃபீஸில் இருந்து வந்தது...
"கடிதத்தை கொண்டு வந்து போட்டது யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் கடிதம் வந்து விட்டது... வீட்டுக்கு அனுப்பி விட்டோம்" என்று சொல்லி இருந்தார்கள்...
சற்று ஏமாற்றமாக இருந்தாலும், கடிதத்தை வாசிக்க போகும் ஆர்வம் அவனது ஏமாற்றத்தை மறக்க செய்து விட்டது...
காலையிலேயே அறைக்குள் இருந்து நேரத்துக்கே வெளியே வந்து விட்டான் வம்சி கிருஷ்ணா...
முன்னறையில் அமர்ந்து இருந்த கெளதம் கிருஷ்ணாவோ, "குட் மார்னிங் டா' என்று சொல்ல, அவனோ பதில் சொல்லாமல் வெளியேறி சென்றான்...
"இவனுக்கு என்னாச்சு? நான் இருக்கிறது தெரியுதா இல்லையா?" என்று கெளதம் கிருஷ்ணா யோசித்துக் கொண்டே இருக்க, கையில் கடிதங்களுடன் மீண்டும் உள்ளே நுழைந்தான்...
மற்றைய நாட்களில் கூர்க்கா கொண்டு வந்து கொடுக்கும் கடிதங்களை, அவன் பொறுமை இன்றி இன்று எடுத்து வந்தான்...
தென்றல் வேறு போன கடிதத்தில் காதலை சொல்லி விட்டாள்.
அதனால் அவனுக்கு இன்று அவள் கடிதத்தை படிக்கும் வரை நிதானம் இல்லை...