ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 29

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 29

இப்படியே நாட்கள் நகர ஆரம்பித்தன...

அவள் தாய்மையை ரசித்தாள்...

அவனோ அவள் தாய்மையை ரசிப்பதை ரசித்தான்...

காலையில் இருவரும் தத்தமது வேலையை பார்க்க சென்று விடுவார்கள்...

மாலையானதும் கையை கோர்த்துக் கொண்டே பூங்காவில் நடை பயில்வார்கள்...

வம்சி கிருஷ்ணா அவளுக்காகவும் குழந்தைக்காகவும் பாடுவான்...

அவள் வயிற்றில் முத்தம் பதிப்பான்....

கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கடந்து இருக்கும்...

தேன்மொழியின் வயிறு இப்போது வெளியே தெரிந்தது...

அவர்களது பூங்காவில் அவன் கரம் கோர்த்தபடி அவன் மார்பில் சாய்ந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தாள் தேன்மொழி...

அவள் கேட்காமலே அவன் பாடினான்...

"கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா" என்று அவன் பாடி முடிக்க முதல், தந்தையின் குரல் கேட்டு கருவில் குதூகலித்து குழந்தை தாயின் வயிற்றை எட்டி உதைத்தது...

சட்டென விழிகளை விரித்தபடி நிமிர்ந்து அமர்ந்தாள்.

"என்னாச்சு?" என்று கேட்டான்...

அவன் கரத்தை பற்றி தனது வயிற்றில் வைத்தவள், "பாப்பா உதைச்சுது" என்று சைகையில் செய்ய, "இப்போவா?" என்று கேட்டான்...

"நீங்க பாடும் போது உதைச்சுது... ஆனா இப்போ காணோம்" என்று சைகை மொழியில் பதில் சொல்ல, அவனோ சற்று குனிந்து அவளது மேடிட்ட வயிற்றின் அருகே இதழ்களை கொண்டு வந்தவன்,



"கண்ணான கண்ணே

கண்ணான கண்ணே

என் மீது சாய வா

புண்ணான நெஞ்சை

பொன்னான கையால்

பூ போல நீவ வா"



என்று பாடிக் கொண்டு இருக்கும் போதே மீண்டும் உதைத்தது... சட்டென இரு கைகளையும் வயிற்றில் வைத்தவள் கண்கள் கலங்க, இதழ்கள் பிரித்து சிரித்துக் கொண்டே அவனை பார்த்து ஆம் என்கின்ற ரீதியில் தலையாட்ட, அவனோ அவள் வயிற்றை மெதுவாக வருடிக் கொண்டே, மீதி பாடலை குழந்தைக்காக சிரித்தபடியே பாடி முடித்தான்...

அவர்களது நாட்கள் இப்படியே இனிமையாக நகர, அந்த வீட்டில் வேதவல்லிக்கு மட்டுமே தற்போது மனவலி பெருக ஆரம்பித்து இருந்தது...

ஆரம்பத்தில் யாரும் தன்னை கண்டு கொள்ளாமல் இருப்பதை அவர் சட்டை செய்யாமல் இருந்தாலும் இத்தனை மாதங்கள் தன்னை ஒதுக்கி வைத்த உணர்வு தான் அவருக்கு...

எதற்கும் அவரை அழைப்பது இல்லை...

அழைத்தால் அவமானப்படுத்தி விடுவார் என்பதாலேயே தவித்தார்கள்...

பார்த்து பார்த்து இருந்தவருக்கோ, தன்னை எதற்கும் கூப்பிட மாட்டார்களா? என்கின்ற ஏக்கம் தோன்ற ஆரம்பித்து விட்டது...

முதுமையில் தன்னுடன் மனம் விட்டு பேச கூட யாரும் இல்லாத வெறுமை கொடுமை அல்லவா?

செய்த பாவங்களுக்கு அந்த கொடுமையை அனுபவித்தார்...

ஆனால் வெளியே தைரியமாக இருப்பது போல காட்டிக் கொண்டார்...

உண்மையில் உள்ளுக்குள் உடைந்து தான் போனார்...

மேடிட்ட வயிற்றுடன் செல்லும் தேன்மொழியை அடிக்கடி பார்த்துக் கொள்வார்...

இப்போதெல்லாம் யார் மீதும் எரிந்து விழ அவருக்கு தோன்றுவது இல்லை...

தன்னை யாரும் மதிக்கவில்லை என்னும் போது அந்த இடத்தில் அவர்களின் திமிர் அடிவாங்கி விடும் அல்லவா?

அவர் திமிரும் அடிவாங்கி இருந்தது...

ஒதுக்கத்தின் உச்சத்தில் சின்ன அங்கீகாரம் கூட கிடைக்காதா? என்று ஏங்க ஆரம்பித்து விட்டார்...

தேன்மொழி விஷயத்தில் தான் செய்ய செயல் தவறு என்று உணரவும் ஆரம்பித்து விட்டார்... ஆனால் அதனை காட்டிக் கொள்ளவோ தேன்மொழியிடம் மன்னிப்பு கேட்கவோ அவர் திமிர் இடம் கொடுக்கவில்லை...

மகன் வீட்டிலும் மதிப்பு இல்லை... மகள் வீட்டிலும் மரியாதை இல்லை...

ஒரு ஒதுக்கம் ஒரு மனிதனுக்கு எத்தனை பாடங்களை புகட்டி விடுகின்றது...

சண்டை போட்டு எல்லாம் வராத மாற்றம், சுற்றி இருப்பவர்களின் மௌனத்தால் இலகுவாக வந்து விடுகின்றதே...

வேதவல்லிக்குள்ளும் அந்த மாற்றம் வந்தது...

முதுமை வேறு...

திடமாக நடக்கவும் முடியாத நிலை...

அவர் தளர்ந்த நடையை பார்த்து அவரை விசாரித்து வர சொல்லி, வசந்தி பாக்கியாவை அனுப்புவார்...

"நான் நல்லா தான் இருக்கேன்... அவ்ளோ சீக்கிரம் செத்து போக மாட்டேன்னு உன் முதலாளி அம்மா கிட்ட சொல்லு" என்று சத்தமாகவே சொல்வார்...

வசந்தியோ பெருமூச்சுடன் அவரை கடந்து விடுவார்...

அவர் மேல் கோபம் எல்லாம் இப்போது குறைந்து விட்டாலும், அவர் அவமானப்படுத்தி விடுவாரோ என்று வசந்தி அவரிடம் பேச முயற்சிப்பது இல்லை... தேன்மொழியும் அவரை நெருங்காத காரணம் இது தான்...

இது தான் இத்தனை நாட்களாக நடந்து கொண்டு இருக்க, அவரை இன்னும் வலிக்க வைக்க வந்து சேர்ந்தது கல்யாணியின் திருமணம்...

ஆம் கல்யாணிக்கு பிரபல தொழிலதிபரின் மகன் ஷியாமை திருமணம் செய்து வைக்க நிச்சயித்து இருந்தார்கள்...

அவளுக்கும் அவனை பிடித்து இருந்தது...

அவன் காதலை உணர்ந்தவளுக்கு காதலிக்கப்படுவதன் இனிமை புரிய ஆரம்பித்தது... மனதுக்கு பிடித்தே அந்த திருமணத்துக்கு சம்மதித்துக் கொண்டாள்.

பெண் பார்க்கும் படலம் தொடக்கம் எல்லாமே நெருங்கி வந்தது...

மாப்பிள்ளை பார்த்ததை கூட வேதவல்லியிடம் சொல்லவில்லை...

நொறுங்கிப் போய் விட்டார்...

முதல் எல்லாம் ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்பார்...

இப்போது அதனை கேட்கவும் அவருக்கு தயக்கம்...

மறுமுனையில் இருந்து வரும் கூரான வார்த்தைகளை எதிர்கொள்ள தயக்கம்...

வாழ்க்கை எப்போதும் எல்லாருக்கும் ஒரே போல அமைந்து விடுவது இல்லையே...

கூரான வார்த்தைகளை இலகுவாக வீசியவர் அது தன்னை நோக்கி வரும் போது இப்போது எதிர்கொள்ள பயந்தார்...

பெண் பார்க்கும் படலத்துக்கு முதல் நாள் இரவு, வசந்தி குருமூர்த்தியிடம் இது சம்பந்தமாக பேச ஆரம்பித்தார்...

"என்னங்க, என்ன இருந்தாலும் வீட்டுக்கு பெரியவங்க" என்று ஆரம்பிக்க, "நான் என்ன வசந்தி பண்ணுறது? இது கணேஷனின் வீட்டு விசேஷம்... கூப்பிடுறதும் கூப்பிடாததும் அவங்களோட இஷ்டம்... ஏன் கூப்பிடலன்னு சண்டை போடுற அளவுக்கு எங்கம்மா நடந்துக்கலயே" என்றார்...

"ஆனாலும் நீங்க ஒரு தடவை பேசி பார்க்கலாமே" என்றார் வசந்தி...

"எப்படி பேச சொல்ற? கல்யாணியை என்ன காரியம் பண்ண வச்சு இருக்காங்க? ஒரு அப்பாவா இத மன்னிக்க முடியுமா? சத்தியமா நான் அந்த இடத்துல இருந்தாலும் இப்படி தான் இருப்பேன்... எல்லாத்துக்கும் மேல அம்மாவால கல்யாணத்துல ஏதும் பிரச்சனை வந்திடுமோன்னு பயம் வேற அவங்களுக்கு" என்று சொல்ல, வசந்தியோ, "கண்டிப்பா மனசுக்குள்ள கஷ்டப்படுவாங்கன்னு தோணுதுங்க" என்றார்...

"ம்ம், கொஞ்சம் தன்னோட இடத்துல இருந்து இறங்கி வந்து தேன்மொழியோட பேசுனா கூட எல்லாரோட மனசும் மாறும்... இன்னுமே திமிரா தானே இருக்காங்க" என்றார் குருமூர்த்தி...

"அது அவங்க இயல்பு... தவறை உணர சொல்லலாம்... ஆனா இயல்பை மாத்த சொல்ல முடியாதே" என்று வசந்தி சொல்ல குருமூர்த்தியிடம் இருந்து ஒரு பெருமூச்சு மட்டுமே...

அடுத்த நாள் பெண் பார்க்கும் படலம்... வம்சி கிருஷ்ணாவும் கெளதம் கிருஷ்ணாவும் ரெக்கார்டிங் இருப்பதால் செல்லவில்லை...

தேன்மொழியும் யாதவ் கிருஷ்ணாவும் வசந்தி மற்றும் குருமூர்த்தியுடன் கல்யாணி வீட்டுக்கு புறப்பட்டு இருந்தார்கள்...

தேன்மொழியோ, "பாட்டி வரலையா?" என்று சைகையில் வசந்தியிடம் கேட்க, "அவங்க கூப்பிடலம்மா" என்று சொன்னவருக்கும் மனவருத்தம் தான்...

அவர்களை மீறி அழைத்து செல்லவும் முடியாது...

ஒரு வித பாரத்துடனேயே அங்கிருந்து புறப்பட்டார் வசந்தி...

தேன்மொழியோ வாசலுக்கு சென்று அங்கே அவர்களையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்த வேதவல்லியை பார்த்தாள்.

முதல் இருந்த அந்த அழுதத்தை அந்த விழிகள் தொலைத்து இருந்தன... ஏக்கம் மட்டுமே... அவளுக்கு பார்க்கவே பாவமாக இருந்தது...

ஆனால் அழைத்து செல்ல முடியாத நிலையில் பெருமூச்சுடன் வெளியேறி சென்றாள்.

பெண் பார்க்கும் நிகழ்வும் கோலாகலமாக நடந்து திருமணத்துக்கு நாளும் குறிக்கப்பட்டது...

தேன்மொழியுடன் கல்யாணியை தவிர அனைவரும் இயல்பாக பேசினார்கள்...

கல்யாணிக்கு குற்ற உணர்வு... தேன்மொழியின் விழிகளை கூட பார்க்கவில்லை அவள்...

அன்றைய நாள் அப்படியே கடந்து விட, கல்யாணியின் திருமண நாளும் நெருங்கிக் கொண்டு இருந்தது...

திருமணத்துக்கு முதல் நாள் மனம் கேட்காமல், "அம்மா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடலாமுங்க" என்று ரதிதேவி சொல்ல, கணேஷனோ, "என்னவோ பண்ணு" என்று சொல்ல, அவரும் வேதவல்லியை தேடி வந்தார்...

வேதவல்லியோ அறைக்குள் அமர்ந்து இருந்தார்...

கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது...

எப்படி பட்ட நிராகரிப்பு இது...

அவர் இறுக்கமானவராக இருந்தாலும் பேரன் பேத்தி மேல் அலாதி அன்பு உடையவர் தான்...

கண்களை புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டே பெருமூச்சுடன் அமர்ந்து இருந்தவரின் கதவை திறந்து கொண்டே வந்தார் ரதிதேவி...

அவரை திரும்பி பார்த்தவர் எதுவும் பேசவில்லை... அவர் விழிகள் ஆயிரம் கதைகள் பேசின...

அவர் அருகே வந்து அமர்ந்த ரதிதேவியோ, "கல்யாணிக்கு நாளைக்கு கல்யாணம்... நம்ம கல்யாண மண்டபத்துல தான்" என்றார்...

"ரொம்ப நேரத்துக்கே சொல்லிட்டே" என்றார் தழுதழுத்த குரலில்... ரதிதேவியிடம் ஒரு பெருமூச்சு...

"நாளைக்கு வந்துடுங்க" என்று சொல்ல, பதில் சொல்லாமல் அப்படியே அமர்ந்து இருந்தார் வேதவல்லி... ரதிதேவியும் கிளம்பி விட்டார்...

வேதவல்லியோ வாசலை வெறித்துக் கொண்டே கட்டிலில் சாய்ந்து அமர்ந்தார்...

இதே சமயம் வம்சி கிருஷ்ணாவின் அறைக் கதவை தட்டினார் வசந்தி...

அவன் தான் கதவை திறந்தான்...

"கல்யாணி வீட்டுக்கு போக போறேன்டா, தேன்மொழி வர்றாளான்னு கேளு" என்றார்...

அவனோ அவளை திரும்பி பார்க்க, அவளும் சம்மதமாக தலையாட்டினாள்...

"வர்றாம்மா" என்றான்...

"சரி நான் ஹால்ல வெய்ட் பண்ணுறேன்..." என்று சொல்லிக் கொண்டே அவர் சென்று விட, தேன்மொழியும் உடையை மாற்றி விட்டு புறப்பட தயாரானாள்...

"சீக்கிரம் வந்திடு கண்ணம்மா, நேரத்துக்கே தூங்கணும்... அப்போ தான் நாளைக்கு கல்யாணத்துக்கு போறதுக்கு நேரத்துக்கு எந்திரிக்க முடியும்" என்று சொல்ல, அவளும் 'சரி' என்ற ரீதியில் மென் சிரிப்புடன் தலையாட்டி விட்டு புறப்பட்டு இருந்தாள்...

அங்கே கல்யாணிக்கு கையில் நகப்பூச்சை பூச ஆயத்தமாகிக் கொண்டு இருந்தாள் மிருதுளா...

"கல்யாணப் பொண்ணே, எப்படி இருக்க?" என்று கேட்டுக் கொண்டு தான் வசந்தியும் தேன்மொழியும் உள்ளே நுழைய, கல்யாணி அவர்களை மென் சிரிப்புடன் ஏறிட்டுப் பார்த்தாள்.

வசந்திக்கு அருகே வந்த தேன்மொழியை பார்த்து அவளுக்கு முகம் சட்டென இறுகினாலும், "வாங்க" என்று கஷ்டப்பட்டு புன்னகைத்துக் கொண்டே அழைக்க, அங்கே இருந்த கட்டிலில் தேன்மொழியுடன் அமர்ந்த வசந்தியோ அங்கிருந்த புடவைகளையும் நகைகளையும் பார்த்துக் கொண்டு இருந்தார்...

இதே சமயம் கல்யாணியின் கையில் நக பூச்சை சீராக பூச முடியாமல் மிருதுளா திண்டாட, "என்னடி பண்ணுற? இதுக்கு நான் மேக்கப் அக்கா கிட்டயே கொடுத்து போட்டு இருப்பேனே" என்று கல்யாணி சற்று கடுப்பாகி விட, அதனை பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழியோ, மிருதுளாவின் தோளில் கையை எட்டி வைக்க, அவளும் திரும்பிப் பார்த்தாள்.

"நான் போட்டு விடுறேன்" என்று சைகையில் சொன்னாள் தேன்மொழி...

மிருதுளாவோ, "நீங்களே போட்டு விடுங்க அக்கா, அப்புறம் இவ எனக்கு கண்ட மேனிக்கு திட்டுவா" என்று சொல்லிக் கொண்டே நகப் பூச்சு குப்பியை தேன்மொழியிடம் நீட்டிக் கொண்டே, அவளுக்கு இடம் கொடுப்பதற்காக நகர்ந்து அமர்ந்தாள்.

தேன்மொழியும் கல்யாணிக்கு முன்னே வந்து அமர்ந்து விட்டாள்.

இப்போது திண்டாடி போனது என்னவோ கல்யாணி தான்...

தலையை குனிந்தபடியே நீண்ட நேரம் இருந்தாள்.

தேன்மொழி அவள் விரல்களுக்கு அழகாக நகப்பூச்சை பூசி விட, அதனை பார்த்துக் கொண்டே இருந்த கல்யாணியோ, "சாரி தேன்மொழி" என்றாள் மென்மையாக...

தேன்மொழியின் கைகள் ஒரு கணம் வேலையை நிறுத்தி மீண்டும் வேலையை தொடர, இதழ்கள் மெலிதாக விரிய, தலையை குனிந்தபடி 'பரவாயில்லை' என்கின்ற ரீதியில் தலையாட்டினாள்...

வசந்திக்கும் இந்த கணம் பிடித்து இருந்தது...

எழுந்து கல்யாணி அருகே வந்தவர், அமர்ந்து இருந்தவளது தலையை வருடிக் கொண்டே, "அன்னைக்கு நானும் கொஞ்சம் கண்டிப்பா நடந்துக்கிட்டேன்... என் மேல கோபம் இல்லையே" என்றார்.

அவளோ அவர் வயிற்றில் வாகாக சாய்ந்து கொண்டே, "இல்ல அத்தை, அது என் தப்பு தானே... யோசிக்காமலே பண்ணிட்டேன்... பாட்டியோட சொல்லை கேட்டு முட்டாள் தனமா நடந்துக்கிட்டேன்... நம்மள காதலிக்காத ஒருத்தர கல்யாணம் பண்ணுனா சந்தோஷமே கிடைக்காதுன்னு எனக்கு இப்போ புரியுது... ஷியாம் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிறார்... அவரோட அக்கறை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு..." என்று சொல்ல, வசந்தி சற்று குனிந்து அவள் நெற்றியில் முத்தம் பதித்தார்...

அதனை தொடர்ந்து தேன்மொழியுடன் இயல்பாக பேச ஆரம்பித்து விட்டாள் கல்யாணி...

"இப்போ எத்தன மாசம்?" என்று கேட்டாள்...

ஆறு விரல்களை தூக்கி காட்டினாள் தேன்மொழி...

"ஈவினிங்ல நீங்க ரெண்டு பேரும் கார்டன் ல கையை கோர்த்துட்டு நடக்கிறத அடிக்கடி பார்ப்பேன்... ரொம்ப அழகா இருக்கும்... வம்சி மாமா உன்னை கெயார் பண்ணுறத பார்க்கும் போது இப்போவும் லைட்டா பொறாமை வரும்... உங்கள தூரத்துல இருந்து ஃபோட்டோ எடுத்து ஷியாம் கிட்ட அனுப்பி இப்படி என்னை பார்த்துப்பீங்களான்னு கேட்டேன்... ஆமான்னு சொல்லி இருக்கார்" என்று சிரித்து சிரித்தே பேசினாள்...

தேன்மொழிக்கோ, இவ்வளவு வெகுளியாக மனதில் பட்டதை எல்லாம் சிரித்துப் பேசும் பெண்ணா அன்று அப்படி நடந்து கொண்டது என்ற எண்ணம் தான் தோன்றியது...

சில சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் ஒருத்தரின் இயல்பை எப்படி எல்லாம் மாற்றி விடுகின்றதே என்று யோசித்துக் கொண்டவளோ, கல்யாணியை ஏறிட்டுப் பார்த்து சிரித்துக் கொண்டாள்.
 
"பிரேக்னன்சி ஃபோட்டோ ஷூட் எடுத்து வச்சுக்கோங்க, எல்லாமே நினைவுகள் தானே" என்று சொல்ல, வசந்தியோ, "நீ வேற கல்யாணி, அவ வளைகாப்பே வேணாம்னு சொல்லிட்டு இருக்கா... ரெண்டாவது குழந்தைக்கு எல்லாம் பார்த்துக்கலாம்னு சொல்றா... நானும் எத்தனையோ தடவை பேசி பார்த்துட்டேன்... வம்சி கிட்டயும் பேசி பார்த்துட்டேன்... அவ இஷ்டப்படி நடந்துக்கலாம்னு அவனும் பொண்டாட்டிக்கு தான் சப்போர்ட் பண்ணுறான்" என்று சலித்துக் கொண்டார்...

கல்யாணியோ, "ஏன் இப்படி?" என்று தேன்மொழியிடம் கேட்க, அவளோ கைகளை அசைத்து, "எனக்கு பெருசா இதுல எல்லாம் ஆர்வம் வரமாட்டேங்குது... ஏன்னு தெரில... ரெண்டாவது குழந்தைக்கு எல்லாமே பண்ணிக்கலாம்னு தோணுது... கொஞ்சம் படபடப்பா இருக்கு" என்றாள்.

கல்யாணிக்கு அவள் கையசைத்து சொன்னது புரியவில்லை... வசந்தியை பார்த்தாள்... வசந்தியும் அவள் சொன்னதை சொல்ல, "எல்லாம் நல்ல படியா நடக்கும், உன்னை கட்டாயப்படுத்தவும் விருப்பம் இல்லை... ரெண்டாவது குழந்தைக்கு இதெல்லாம் பண்ணிக்கோ.... அப்புறம் மூத்த குழந்தை எனக்கு ஏன் பண்ணலன்னு சண்டை போட்டா நீங்க ரெண்டு பேரும் பார்த்துக்கோங்க" என்று சொல்ல, தேன்மொழியும் பற்கள் தெரிய சிரித்துக் கொண்டாள்.

இவர்கள் பேசுவதை தூரத்தில் இருந்து பார்த்த மிருதுளாவுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு... கல்யாணி மிக மிக இயல்பாக தேன்மொழியுடன் பேசுவதை பார்க்க சந்தோஷமாக இருந்தது...

அதனை தொடர்ந்து வசந்தியும் தேன்மொழியும் வீட்டுக்கு புறப்பட்டு இருந்தார்கள்.

முன்னறையில் அமர்ந்து உள்ளே வருபவர்களை பார்த்துக் கொண்டே நேரத்தைப் பார்த்த வேதவல்லிக்கு இந்த நேரம் கர்ப்பமான பெண்ணை வெளியே அழைத்து சென்றதை நினைத்து மனதுக்குள் கடுப்பு, ஆனால் உரிமையாக திட்ட முடியாது...

'புள்ள தாச்சியை எந்த நேரத்தில வெளிய கூட்டி போறதுன்னு இவளுக்கு விவஸ்தை இல்லை...' என்று வசந்திக்கு மனதுக்குள் திட்டிக் கொண்டே எழுந்தவர் அறைக்குள் நுழைந்தார்... அவர்களுக்காக தான் தூங்காமல் காத்துக் கொண்டே அமர்ந்து இருந்தார்...

ஆரம்பத்தில் அவருக்கு பெரிதாக தேன்மொழி மீது இஷ்டம் இல்லை என்றாலும் இப்போது அவரை மீறி அவள் மீது அக்கறை தோன்ற ஆரம்பித்தது...

வயதானவர்களுக்கு எப்போதுமே கர்ப்பமான பெண்கள் மீது அதீத அக்கறை இயல்பாக வந்து விடும் அல்லவா? அதுவும் தனது வம்ச வாரிசை அவள் சுமந்து கொண்டு இருக்கும் போது இந்த அக்கறை வரவில்லை என்றால் தான் அதிசயம்...

இது நாள் வரை கல்யாணிக்காக அவர்களை பிரிக்க நினைத்தவர் வேதவல்லி... இப்போது கல்யாணியே வேறு திருமணத்துக்கு தயாராகி விட்ட பின்னர் அவர்களை பிரிக்கும் எண்ணம் எல்லாம் அவருக்கு வர வேண்டிய அவசியம் இல்லையே... அனைத்துக்கும் மேல் இந்த தனிமையும் நிராகரிப்பும் ஒதுக்கமும் அவருக்குள் பல மாற்றங்களை கொண்டு வந்து இருந்தன...

அறைக்குள் நுழைந்தவருக்கு மனதுக்குள் அழுத்தம்...

அவர் தூக்கி வளர்த்த பெண் கல்யாணி...

அவள் மேல் ஏனோ அவருக்கு அளவு கடந்த பாசம்...

ஆனால் அவள் திருமணத்துக்கு வேண்டா வெறுப்பாக ஒரு அழைப்பு...

போவதா இல்லையா என்ற யோசனையுடனேயே தூங்கிப் போனார்...

இதே சமயம் அறைக்குள் வந்த தேன்மொழியோ அங்கே கட்டிலில் சாய்ந்து அமர்ந்து அலைபேசியை பார்த்துக் கொண்டு இருந்த வம்சி கிருஷ்ணா அருகே வந்து அமர்ந்து அவன் தோள் சாய, அவளை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தவன், "டயர்ட் ஆஹ் இருக்கா கண்ணம்மா" என்றான்...

ஆம் என்றாள் தலையை அசைத்து...

சட்டென அலைபேசியை தள்ளி வைத்து விட்டு, "என்ன பண்ணுது?" என்று கேட்டான்...

"இடுப்பு வலிக்குது" என்று சைகையில் சொன்னாள்...

"ஒரு பக்கம் திரும்பி படு, மசாஜ் பண்ணி விடுறேன்" என்றான்... நேரத்தைப் பார்த்தாள்...

"வலியோட படுத்தா தூக்கம் வராது கண்ணம்மா" என்று சொல்ல, அவளும் வயிற்றில் தலையணையை வைத்துக் கொண்டே ஒரு பக்கம் திரும்பி படுத்தாள்...

அவன் அவளுக்காக இதனை நிபுணர் ஒருவரிடம் கற்றுக் கொண்டது தான் இது... அடிக்கடி அவளுக்கு மசாஜ் செய்து விடுவான்...

அவன் அக்கறையில் அவள் சிலிர்த்து சிலிர்த்தே இப்போதெல்லாம் சலித்து விட்டாள்.

மென் புன்னகையுடன் படுத்து இருக்க, அவனும் அவளுக்கு இதமாக முதுகில் அழுத்தத்தைக் கொடுத்தான்... அவளும் சுகமாக கண்களை மூடிக் கொண்டாள்.

அதனை தொடர்ந்து, அவள் கால்கள் அருகே வந்து அமர்ந்தவன், அவள் காலை எடுத்து மடியில் வைக்க, சட்டென கண்களை விரித்தவள், "வேண்டாம்" என்கின்ற தோரணையுடன் எழ முயன்றாள்...

"ஹேய் நீ தூங்கும்மா, நான் பார்த்துக்கிறேன்" என்றான்...

அவளுக்கு கண்கள் கலங்கி விட்டன...

எழுவதற்கு உதவி செய்யும் படி கைகளை நீட்ட, அவனும் அவள் கையை பற்றி எழுந்து அமர வைத்தான்...

தனது காலில் இருக்கும் ஒவ்வொரு விரலிலும் நெட்டி முறித்து, மசாஜ் செய்பவனை இமைக்காமல் பார்த்தாள்.

இப்படி ஒரு அக்கறையான கணவன் அனைவர்க்கும் அமைந்து விடுமா என்ன? என்று அவளுக்கு தோன்றியது...

இந்த உலகத்தில் நான் தான் இந்த கணத்தில் அதிஷ்டசாலி என்ற எண்ணம் அவளுக்கு வந்தது...

குரல் போன நேரம் 'இந்த உலகத்திலேயே துரதிஷ்டசாலி நான் தான்' என்று நினைத்து இருக்கின்றாள்.

கடவுள் குரலை எடுத்து விட்டு, அதற்கும் அதிக மதிப்புள்ள காதலை அவளுக்கு கொடுத்து இருக்கின்றார்...

இனி என்ன வேண்டும் அவளுக்கு...

அவன் கையை பற்றினாள்...

அவன் திரும்பிப் பார்த்து, "இன்னும் கொஞ்ச நேரம் பண்ணி விடுறேன்" என்றான்...

கண்களால் அருகே அழைத்தாள்... அவனும் என்றான்...

அவன் முகத்தை இரு கைகளாலும் தாங்கி நெற்றியில் முத்தம் பதித்தவள், ஒற்றைக்கையின் நடு விரலையும் மோதிர விரலையும் மடித்து, "ஐ லவ் யூ" என்று அவனுக்கு சைகை மொழியில் காதலை சொன்னாள்.

மென் புன்னகை அவனிடம்...

அவனும் சைகை மொழியிலேயே அவளுக்கு பதிலை சொல்லி விட்டு, "தூங்கு கண்ணம்மா, நேரம் ஆயிட்டே இருக்கு..." என்றான்...

அவளோ நெகிழ்வாக தலையை ஆட்டி விட்டு கட்டிலில் சரிந்து படுத்தவளுக்கு அவன் காலில் கொடுத்த அழுத்தம் சுகமாக இருக்க அப்படியே தூங்கிப் போனாள்...

எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை... சற்று நேரத்தில் அவளை அணைத்துக் கொண்டே அவளது வம்சி கிருஷ்ணாவும் படுத்து இருக்க, அவன் கரமோ அவளது மேடிட்ட வயிற்றை ஆசையுடன் வருடிக் கொடுத்தது...

வம்சி கிருஷ்ணாவுக்கோ கோடிக் கணக்கான ரசிகர்கள்... ஆனால் என்னவோ அவன் கண்ணம்மாவின் ரசிகன் தான்...

அவன் இசைக்கு எத்தனையோ பேர் அடிமையாக இருந்தாலும், அவன் அடிமையாக இருப்பது என்னவோ அவன் தென்றலின் மௌனத்துக்கு தான்...

அடடா இந்த காதல் தான் எவ்வளவு விசித்திரமானது...
 
உன் மௌனமே என்
இசையாக...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 29)


இப்பத்தான் பாட்டிக்கு நம்ம மனசு ப்யூட்டி கிடையாதுன்னு தெரியுது போல. ம்..ஆனா,
இப்பவும் கெத்தை விட்டுட்டு வலியப்போய் பேச முடியலை பாருங்களேன். சில பேர் பட்டு தெளிஞ்சப்பிறகுத்தான் திருந்தவே செய்யுறாங்க.
இனியாவது தன் மருமக, பேரன் பேத்திங்க என்கிற நினைப்பு வந்தா சரி தான்.


அதே மாதிரி கல்யாணியும் தனக்கானவன் வம்சி கிடையாதுன்னு தெரிஞ்சுக்கிட்டாளே, அதுவே போதும். இனி, அவளுக்கானவனை புரிஞ்சிக்கிட்டு சிறப்பா வாழ்ந்திடுவா.


தேன்மொழி உண்மையிலேயே வம்சி கிருஷ்ணா மாதிரி ஒரு புருசன் கிடைக்க கொடுத்து வைச்சவ தான்.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top