அத்தியாயம் 28
தேன்மொழி ஆசைப்பட்ட போலவே அடுத்த வாரமே வீட்டில் வைத்து அவர்களுக்கான திருமண பதிவு நடைபெற்றது...குருமூர்த்தியின் குடும்பமும் ரதி தேவியின் குடும்பமும் வந்து இருந்தார்கள்... மகாலக்ஷ்மியும் வந்திருந்தார்...
கல்யாணி வரவில்லை...
"கோபம்னு இல்லை... ஆனா எல்லாரோட முகத்துல முழிக்கவும் எனக்கு குற்ற உணர்வா இருக்கு" என்று சொல்லி விட்டாள்.
வேதவல்லி அந்த நேரத்துக்கு வேண்டுமென்று அறைக்குள் புகுந்து கொண்டார்...
பாக்கியா சென்று அழைத்த சமயம், "என்னை அவமானப்படுத்துனவளோட நல்லதுக்கு நான் வரணுமா?" என்று கேட்டு பாக்கியாவுக்கு திட்டி இருக்க, அவளும் அதனை வசந்தியிடம் சொன்னார்...
இது அருகே நின்ற குருமூர்த்திக்கும் கேட்க, "வரலைன்னா இருக்கட்டும்" என்று கடுப்பாக சொல்லி இருந்தார்...
அந்த நிகழ்வும் சந்தோஷமாக நடந்து முடிந்து இருந்தது...
இப்படியே நாட்கள் நகர்ந்தன...
தேன்மொழியும் வம்சி கிருஷ்ணாவும் காதலில் திகட்ட திகட்ட திளைத்தார்கள்...
வேதவல்லி முதல் முறை தனிமையை உணர்ந்தார்...
யாரும் அவரை சட்டை செய்வது இல்லை...
சாப்பாடு மட்டும் நேரத்துக்கு வந்து விடும்...
குருமூர்த்தியும் மொத்தமாக ஒதுக்கி வைத்து விடுவாரோ என்று பயந்து இப்போதெல்லாம் வசந்திக்கோ தேன்மொழிக்கோ வெளிப்படையாக திட்டுவது இல்லை...
ஆனாலும் கோபம் இருந்தது... மனதுக்குள் திட்டிக் கொள்வார்...
அவ்வளவு இலகுவில் திருந்தக் கூடியவர் இல்லையே அவர்...
இதே சமயம் வசந்தியும் பாட ஆரம்பித்து விட்டார்...
அவர் பாடலை குருமூர்த்தி வீட்டில் சத்தமாக ஒலிக்க விட்டு இருக்க, வேதவல்லிக்கோ ஆத்திரம்...
பிளேயர் சற்று உயரத்தில் இருந்தது...
அவருக்கு எட்டவும் இல்லை...
அந்த வழியால் வந்த கெளதம் கிருஷ்ணாவிடம், "இத ஆஃப் பண்ணி விடு, கேட்கவே எரிச்சலா இருக்கு" என்றார்...
அவனோ பிளேயர் அருகே சென்று இன்னும் சத்தத்தை அதிகரித்து விட்டு அவரை அழுத்தமாக பார்த்து விட்டு நரக, அவருக்கோ உள்ளுக்குள் புகைச்சல்...
காட்டிக் கொள்ளவும் முடியாது...
பல்லு பிடுங்கிய பாம்பு போல அவர் நாட்கள் நகர ஆரம்பித்து இருந்தன...
கிட்டத்தட்ட இரு மாதங்கள் கடந்து இருக்கும், அன்று ஸ்கூலுக்கு செல்ல தேன்மொழி ஆயத்தமாகிக் கொண்டு இருந்தாள்.
வம்சி கிருஷ்ணா கன்செர்ட் ஒன்றுக்காக விரைவாகவே வீட்டை விட்டு கிளம்பி இருந்தான்...
தென்மொழிக்கோ உடலில் சின்ன சின்ன மாற்றங்களை உணரக் கூடியதாக இருந்தது...
சற்று குமட்டலாகவும் இருந்தது...
நாட்காட்டியை நோக்கி சென்றவள், கையை வைத்து நாட்களை கணக்கிட்டாள்...
இதழில் எதிர்பார்ப்புடன் கூடிய ஒரு பூரிப்பு...
ஆர்வத்துடன் கீழிறங்கி வந்தவளோ, சாப்பிட்டு விட்டு ஸ்கூலுக்கு புறப்பட்டு விட்டாள்.
அவள் அன்று ஸ்கூலுக்கு சென்று ஆக வேண்டிய கட்டாயம்...
மதியம் போல வீட்டுக்கு திரும்பியவள் கர்ப்பத்தை உறுதி செய்யும் உபகரணத்தையும் வாங்கி வந்தாள்.
வந்ததும் வராததுமாக பரிசோதித்தவளுக்கு சந்தோஷமான விஷயம் காத்துக் கொண்டு இருந்தது...
ஆம் சிவப்பு கோடுகள் இரண்டு தெளிவாக தெரிந்தன...
அவள் கர்ப்பமாக இருக்கின்றாள்...
வம்சி கிருஷ்ணாவின் உயிர்நீரில் உண்டான கரு அவள் கர்ப்பப்பையில் வளர ஆரம்பித்து விட்டது...
விவரிக்க முடியாத பரவசம் அவளுக்கு...
மேனி எல்லாம் சிலிர்த்து..
மனதில் இருந்த ஆசைகள் எல்லாம் நிறைவேறும் தருணத்தை வார்த்தைகளால் சொல்லி விட முடியுமா?
இல்லை தானே...
தனது கரத்தை எடுத்து அடி வயிற்றில் வைத்து மெதுவாக வருடிக் கொண்டவளது கண்ணீர் சட்டென கண்களில் இருந்து கீழே விழுந்தது...
சந்தோஷமும் நெகிழ்வும் கூடிய கண்ணீர் அது...
இதனை வம்சி கிருஷ்ணாவிடம் சொல்ல வேண்டும்... அவன் உணர்வுகளை பார்க்க வேண்டும்... அவன் சந்தோஷத்தை ரசிக்க வேண்டும்... இப்படி பலவற்றை யோசித்தவளோ, காகிதத்துடனும் பேனையுடனும் அமர்ந்து விட்டாள்.
அவர்கள் காதலுக்கு எந்த மடல் ஆணிவேராக இருந்ததோ அதே மடல் மூலம் இந்த விஷயத்தை சொல்லவும் நினைத்து விட்டாள்.
அன்புள்ள வம்சி கிருஷ்ணாவுக்கு,
நலமா? என்று கேட்க மாட்டேன்... நலமாக இருக்கின்றீர்கள் என்று அறிவேன்...
நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் என்று நினைக்க நினைக்க பூரிப்பாக இருக்கின்றது...
நீங்கள் பாடுவதில் மட்டும் தான் வல்லவர் என்று நினைத்தேன்...
ஆனால் அனைத்திலும் வல்லவராக தான் இருக்கின்றீர்கள்...
வெட்கப்படாமல் மேலும் வாசியுங்கள்...
நான் அனைத்திலும் என்று சொல்ல வந்தது, அக்கறை காதல், அன்பு... அத்துடன் நீங்கள் வெட்கப்பட்ட விஷயங்களையும் சேர்த்து தான்...
இந்நாள் வரை பாடியே என்னை மயக்கியது போதாது என்று இப்போதெல்லாம் முத்தமிட்டே மயக்கிக் கொண்டு இருக்கின்றீர்கள்...
உங்களுடன் சேர்த்து நானும் கெட்ட பெண் ஆகி விட்டேன்...
என்னையும் கெடுத்து விட்டீர்கள்...
நீங்கள் தினமும் செய்த செயல்களின் விளைவாக எனக்கு இப்போதெல்லாம் அசதியாக இருக்கின்றது...
தூக்கமாக வருகின்றது...
குமட்டல் வேறு இருக்கின்றது...
என்னானது என்று யோசிக்கின்றீர்களா?
நம் குடும்பத்துக்கு ஒருவர் வரப் போகின்றார்...
இன்னும் புரியவில்லையா?
உங்கள் கண்ணம்மா கர்ப்பமாக இருக்கின்றாள்...
உங்கள் குழந்தையை சுமந்து கொண்டு இருக்கிறாள்.
நினைக்க நினைக்க மேனி எல்லாம் எப்படி புல்லரித்துப் போகின்றது தெரியுமா?
நம் காதலின் சின்னமான நம் குழந்தை இன்னும் ஒன்பது மாதங்களின் நம் கையில் தவழ போகின்றான்(ள்)...
நினைக்கவே பிரமிப்பாக இருக்கின்றது அல்லவா?
நம் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்துக்கு சென்று விட்டோம்...
எனக்கு இதனை எழுதும் போதே சிலிர்த்து விடுகின்றது...
இதற்காக உங்களுக்கு ஆயிரம் முத்தங்கள் கொடுக்க ஆசைப்படுகின்றேன்... கடிதத்தில் மட்டும் அல்ல, நேரிலும் கூட...
உங்கள் முத்தங்களுக்காகவும் நான் காத்துக் கொண்டு இருக்கின்றேன்...
இப்படிக்கு உங்கள்
கண்ணம்மா...
என்று எழுதி முடித்தவளது இதழ்களில் இருந்து இன்னும் சிரிப்பு அடங்கவில்லை...
கடிதம் எழுதி இருந்த காகிதத்தை நான்காக மடித்து மேசையில் வைத்தவள், அவனுக்காக காத்துக் கொண்டு இருந்தாள்.
அவன் வந்து சேரவே இரவு ஏழு மணியை தாண்டி விட்டது...
வந்ததும் குளிக்க சென்று விட்டான்...
அவளோ கட்டிலில் மடலுடன் தான் அமர்ந்து இருந்தாள்.
குளித்து விட்டு தலையை துவட்டிக் கொண்டே வந்தவன், "கண்ணம்மா" என்று அழைத்துக் கொண்டே, அவள் அருகே வர, அவளும் எழுந்து நிற்க, அப்படியே அவள் முகம் நோக்கி குனிந்தான்...
முத்தமிட வந்தவனின் இதழ்களில் கையை வைத்தாள் தேன்மொழி...
அவனோ விழி விரித்து பார்க்க, தனது கையில் இருந்த மடலை அவனிடம் நீட்டினாள்.
"லெட்டர் ஆஹ்?" என்று புன்னகையுடன் கேட்டுக் கொண்டே, மடலை திறந்து வாசித்தான்...
புன்னகையுடன் ஆரம்பித்த அவன் முக உணர்வுகள் அடுத்து வெட்கத்தை தத்தெடுத்து இறுதியில் நெகிழ்வில் வந்து நின்றது...
அவளை விழி விரித்து பார்த்தவன், "நிஜமாவா?" என்று இதழ் பிரித்து கேட்க, அவளுக்கு கண்கள் கலங்கி இருக்க, புன்னகையுடன் ஆம் என்கின்ற ரீதியில் தலையாட்டினாள்...
அடுத்த கணமே, அவளை இறுக அணைத்து இருந்தவன், இரு கைகளாலும் அவள் முகத்தை தாங்கி முகம் முழுதும் அவள் ஆசைப்பட்ட போல முத்த மழை பொழிய ஆரம்பித்து விட்டான்...
அவன் முத்தத்தினால் அவள் மூச்சுக்கு திண்டாடியதும் தான் சற்று விலகியவன், "அம்மா கிட்ட சொல்லிட்டியா?" என்று கேட்க, 'இல்லை' என்று தலையாட்டியவள், "முதலாவதா உங்க கிட்ட தான் சொல்லணும்னு இருந்தேன்" என்று சைகையால் சொல்ல, அவனோ இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே, "வா எல்லார் கிட்டயும் சொல்லிடு வந்துடலாம்" என்று சொன்னபடி அவளை கை பிடித்து அழைத்து சென்றான்...
இந்த விஷயத்தை கேட்டதுமே, வீட்டில் அனைவர்க்கும் பூரிப்பு...
முகம் எல்லாம் சந்தோஷம்...
வேதவல்லி காதிலும் இந்த விஷயம் விழுந்தது...
"க்கும்" என்று சொல்லிக் கொண்டே கடந்து சென்றார்...
தேன்மொழி அலைபேசி குறுஞ்செய்தியில் மகாலக்ஷ்மிக்கும் விஷயத்தை சொல்ல, அவரோ இருப்பு கொள்ள முடியாமல் இரவிலேயே ஆட்டோ பிடித்து வந்து விட்டார்...
மகளுக்கு அறிவுரைகள் எல்லாம் வழங்கியவரை திரும்ப சாரதியுடன் காரில் அனுப்பி வைத்தார்கள்...
யாதவ் கிருஷ்ணாவுக்கு எல்லாம் ரெட்டிப்பு சந்தோஷம்... அவன் கால் தரையில் படவே இல்லை...
"எனக்கு விளையாட பாப்பா வர போகுது" என்று சைகையில் சந்தோஷமாக சொல்லிக் கொண்டே இருந்தான்...
வசந்தியோ இனிப்பு தயாரித்து அனைவர்க்கும் பகிர, அதனை வேதவல்லி வேண்டாம் என்று சொல்லி இருந்தார்...
குருமூர்த்தியோ, "இனி என்ன நல்லது கேட்டதுன்னாலும் அவங்களுக்கு சொல்லாதே... அவங்கள எதுக்கும் சேர்த்துக்காதே... மதிக்காதவங்க வாசல எதுக்கு மிதிக்கணும்" என்று வேதவல்லி காது படவே சொல்ல, அவருக்கு அப்போது தான் இதயத்தில் சுருக்கென்று தைத்தது...
மகனும் அவரை தள்ளி வைத்தே பேச, அவருக்கு மனதில் ஒரு வித அழுத்தம்...
தேன்மொழியை அவமானப்படுத்த அவர் நினைத்து இருக்க, அவமானப்பட்டு மன அழுத்தம் உண்டானது என்னவோ வேதவல்லிக்கு தான்...
இந்த ஒதுக்கத்தை ஏற்கனவே காட்டி இருந்தால் அவர் திருந்தி இருப்பாரோ என்னவோ...
அன்று இரவு வம்சி கிருஷ்ணாவை அணைத்தபடி தேன்மொழி படுத்து இருக்க, அவன் தான் யோசனையுடன் விட்டத்தை பார்த்துக் கொண்டே படுத்து இருந்தான்...
அவளோ, அவன் கன்னத்தை வருட, விழிகளை தாழ்த்தி தன்னை அணைத்தபடி படுத்து இருந்தவளை பார்த்தான்...
விழிகளை அசைத்து, "என்னாச்சு?" என்கின்ற தோரணையில் அவள் கேட்க, அவனோ பெருமூச்சுடன், "நாளைக்கு ரெண்டு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட போகணும்... லீவ் போட்ரு" என்றான்...
எப்படியும் மகப்பேற்று மருத்துவரிடம் செல்வான் என்று தெரியும்...
அடுத்தது யார் என்று அவளுக்கு தெரியாதே...
"யார்?" என்கின்ற தோரணையில் புருவம் சுருக்கினாள்...
"நாளைக்கு சொல்றேன்" என்றான் அவன்... அதனை தொடர்ந்து இருவரும் தூங்கிப் போனார்கள்...
அடுத்த நாள் காலையில் தேன்மொழி எழுந்த நேரம் வம்சி கிருஷ்ணா படுத்து இருந்த இடம் வெறுமையாக இருந்தது...
அவளோ அலைபேசியை எடுத்து அவனுக்கு, "எங்க போய்ட்டிங்க?" என்று குறுஞ்செய்தி அனுப்ப, "வெளியே நிக்கிறேன்... இன்னும் அரை மணி நேரத்துல வந்திடுவேன்... செக்கப் போக ரெடியா இரு" என்று பதில் வந்தது...
அவளும் குளித்து ஆயத்தமாகி சாப்பிட்டு விட்டு முன்னறையில் காத்துக் கொண்டு இருக்க, வம்சி கிருஷ்ணாவின் காரும் வந்து வாசலில் நின்றது...
வசந்தியிடம் சொல்லி விட்டு அவளும் புறப்பட்டு விட்டாள்.
அவள் எதிர்பார்த்தபடியே ஹாஸ்பிடலுக்கு சென்றது அவர்களின் கார்...
முகக்கவசத்தை அணிந்து கொண்டு வி ஐ பி பாதையினால் தான் தேன்மொழியை அழைத்து சென்றான் வம்சி கிருஷ்ணா...
அவனுக்கு தான் இயல்பாக நடமாட முடியாதே... பிரபலமாக இருப்பதால் இது ஒரு தலைவலி ஆயிற்றே...
வம்சி கிருஷ்ணாவை கண்ட மகப்பேற்று மருத்துவரோ, "வம்சி சார் வாங்க... வாங்க... உங்க பாட்டை கேட்டுட்டு தான் இப்போ ஒரு சிசேரியன் முடிச்சேன்" என்று சொல்ல, இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே இருக்கையில் தேன்மொழியை அமர சொன்ன வம்சி கிருஷ்ணாவோ அவனும் அமர்ந்தான்...
"இங்க அப்பாயிண்ட்மெண்ட் போட்டு வந்து இருக்கீங்கன்னா, ஏதாவது விசேஷம் போல" என்று மருத்துவர் கண் சிமிட்டி கேட்க, அவனும், "எஸ் டாக்டர்... வீ ஆர் ப்ரெக்னன்ட்" என்றான்...
"தட்ஸ் குட், கங்கிராட்ஸ்... டீடைல்ஸ் சொல்லுங்க, எல்லாமே ரெஜிஸ்டர் பண்ணிட்டு, ஸ்கான் பண்ணிடலாம்" என்று சொன்ன மருத்துவரோ அவர்களின் அனைத்து தகவல்களையும் கேட்டு எழுதி விட்டு, அவர்களை ஸ்கான் செய்யும் அறைக்குள் அழைத்து சென்றார்...
தேன்மொழியை அங்கிருந்த கட்டிலில் படுக்க வைத்து ஸ்கான் செய்தவரோ, "ரொம்ப குட்டியா இருக்காங்க பாப்பா, இன்னும் பன்னிரண்டு வாரத்துல் அடுத்த ஸ்கான் பண்ணலாம்... அப்போ இன்னும் தெளிவா பார்க்கலாம்" என்று சொல்ல, அவர்களும் மென்மையாக புன்னகைத்துக் கொண்டார்கள்...
தேன்மொழிக்கு தேவையான மாத்திரைகளை எழுதிக் கொடுத்தவரோ, "என் நம்பர் இதுல எழுதி கொடுக்கிறேன்... ஏதும் சந்தேகம் வந்தா கால் பண்ணுங்க" என்று சொல்ல, "தேங்க்ஸ் டாக்டர்" என்று சொன்ன வம்சி கிருஷ்ணாவும் தேன்மொழியை அழைத்துக் கொண்டே புறப்பட்டு விட்டான்...
தேன்மொழியோ, "அடுத்து எங்க போறோம்?" என்று சைகை மொழியில் கேட்க, அவனோ, "சொல்றேன்" என்று சொல்லிக் கொண்டே, அவளை அழைத்து சென்றது என்னவோ "லரிங்கோலஜிஸ்ட்" அறைக்குள் தான்...
குரல் வளம் சம்பந்தமான விஷேச கல்வியை முடித்த வைத்தியர்...
அவளோ அவனை பக்கவாட்டாக திரும்பி அதிர்ந்து பார்க்க, அவனோ, "நீ பேசணும்னு ஆசைப்படுறேன்" என்றான்...
அதற்காக காலையிலேயே அவளது பழைய மருத்துவ அறிக்கைகளை மகாலக்ஷ்மியிடம் வாங்கி வைத்தியரிடம் சேர்ப்பித்தும் இருந்தான்...
இருவரும் ஒன்றாக அறைக்குள் நுழைய, "வம்சி கம்" என்று சொல்லிக் கொண்டே கையில் இருந்த தேன்மொழியின் மருத்துவ அறிக்கையை தான் பார்த்துக் கொண்டு இருந்தார்... தேன்மொழிக்கு வம்சி கிருஷ்ணாவின் செயல் அதிர்ச்சியாக இருந்தது...
அவள் பேச வேண்டும் என்று ஆசைப்படவில்லை... அவன் ஆசைப்பட்டு இருக்கின்றான்...
வைத்தியரோ அவனை பார்த்துக் கொண்டே பெருமூச்சுடன், "ரிப்போர்ட்ஸ் எல்லாமே பார்த்தேன் வம்சி... எப்படி சொல்றதுன்னு தெரியல... உங்க ஆசை புரியுது... அவங்க வோகல் கோட் மொத்தமா சிதைஞ்சு இருக்கு... ரொம்ப கஷ்டப்பட்டு தான் அவங்க உயிரையே காப்பாத்தி இருக்காங்க... அவங்களுக்கு வோகல் கோட் ட்ரான்ஸ்பிளான் பண்ணலாம்... ஆனா அவங்க இப்போ கர்ப்பமா இருக்காங்கன்னு வேற சொல்லி இருக்கீங்க... அதோட சக்சஸ் ரேட்டை என்னால உறுதியா சொல்லவும் முடியாது... என்னை பொறுத்தவரை இப்போ இந்த ரிஸ்க் வேணாம்னு தான் சொல்வேன்" என்றான்...
அவன் உடைந்து விட்டான்...
ஆழ்ந்த மூச்சை எடுத்து உணர்வுகளை அடக்கிக் கொண்டே, "ஓகே டாக்டர்" என்று சொன்னவனுக்கு அதற்கு மேல் பேச வார்த்தைகள் வரவில்லை... தேன்மொழியோ அவன் முகம் இறுகி போனதை அவதானித்தாள்...
அவளுக்கு இது எல்லாம் பெரிய ஏமாற்றமாக இருக்கவில்லை...
குரல் இல்லாமலே இத்தனை வருடங்கள் வாழ்ந்து விட்டாளே...
யோசனையுடன் அவளை அழைத்துக் கொண்டே வெளியேறி வந்து காரில் ஏறினான் வம்சி கிருஷ்ணா...
ஸ்டீரிங் வீலில் கையை அழுந்த பற்றி இருந்தவனின் தோளில் கையை வைத்தாள் தேன்மொழி...
அவனோ கண்களை மூடி திறந்து கொண்டே திரும்பி பார்க்க, "இப்போ எதுக்கு இவ்ளோ கவலைப்படுறீங்க?" என்று சைகையால் கேட்டாள்.
"பயமா இருக்கு கண்ணம்மா" என்றான்...
தன்னவன் பயப்படுகிறானா? ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு...
"புரியல" என்றாள் கைகளை அசைத்து...
சட்டென அவள் முகத்தை தாங்கியவன், "உனக்கு ஏதும் பெயின் வந்தா எப்படி சொல்லுவ? சத்தம் போட கூட உன்னால முடியாதே... அத நினச்சு தான் பயமா இருக்கு... நீ பேசலன்னாலும் பரவாயில்லை... உன் கிட்ட இருந்து சின்ன சத்தம் வந்தாலே போதும்... உனக்கு எங்க வலிக்குது? என்னை தேவைன்னு எனக்கு தெரியணும்... நீயும் குழந்தையும் ரொம்ப ஆரோக்கியமா இருக்கணும்" என்று சொன்னவனை கண்ணீருடன் பார்த்து அவன் நெற்றியில் முட்டியவளோ, "எனக்கும் குழந்தைக்கும் எதுவும் ஆகாது..." என்றாள்.
"ஹேய் எதுன்னாலும் சொல்லிடும்மா... மெசேஜ்ல சொல்லிடுவ தானே" என்று கேட்டான்...
குழந்தை போல திரும்ப திரும்ப கேட்டான்...
அவளோ ஆம் என்கின்ற ரீதியில் தலையாட்ட, "பெயின் வர்ற நேரம் எப்படி மெசேஜ் பண்ணுவ? அதுக்கு டைம் இருக்குமா?" என்று நிறைய கேள்விகள் கேட்டான்...
"அப்படி எல்லாம் யோசிக்காதீங்க... வீட்ல அவ்ளோ பேர் இருக்காங்க தானே" என்றாள் சைகையில்...
அவனுக்கு மனம் ஆறவே இல்லை... யோசனையுடன் தான் வீட்டுக்கு சென்றான்....
அன்று மாலையே மாடியில் இருந்த அவர்களது அறை கீழ் தளத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது...
"எதுக்கு ரிஸ்க் எடுத்து ஸ்டெப்ஸ்ல இறங்கணும்? அது தான் கீழ ஷிஃப்ட் பண்ண சொல்லிட்டேன்" என்றான்...
அவளுக்கு கணவனின் அக்கறையை நினைத்து சந்தோஷப்படுவதா? இல்லை அவன் இப்படி எல்லாத்துக்கும் பயப்படுகிறானே என்று நினைத்து கவலைப்படுவதா? என்றும் தெரியவே இல்லை... அவன் முன்னே வந்து நின்றவள், "எதுக்கு இவ்ளோ பயம்?" என்று சிரித்தபடி கேட்டாள்...
அவனோ, "எனக்கு பயப்பட தெரியும்னு இன்னைக்கு தான்மா தெரியும்... எனக்கே தெரியுது நான் ரொம்ப ஓவரா பண்ணுறேன்னு... ஆனா முடியல கண்ணம்மா, உன்னை பத்தியே நினைச்சுட்டு இருக்கேன்" என்று நெற்றியை நீவ, அவனை சட்டென்று அணைத்தவள், அவன் மார்பில் காதை வைத்து அவன் இதயத்துடிப்பை கேட்க, அவனோ, "கண்ணம்மா கண்ணம்மான்னு துடிக்குதா?" என்று கேட்டான்...
அவளோ சிரித்துக் கொண்டே ஆம் என்று தலையாட்ட, அவனும் அவளை இறுக அணைத்து இருந்தான்...
அன்று இரவும் அவனுக்கு தூக்கம் இல்லை...
அவளோ, "என்னாச்சு?" என்று கையசைத்து கேட்கும் போதெல்லாம், "புது ரூம்... அதான் தூக்கம் வரல... நாளைக்கு ஓகே ஆய்டும்" என்று சமாளித்தான்...
அடுத்த நாள் காலையில் தேன்மொழி எழுந்த நேரம் முன்னறையில் சலசலப்பு... வம்சி கிருஷ்ணாவும் அறைக்குள் இல்லை...
பெருமூச்சுடன் எழுந்து கதவை திறக்க, அங்கே வீடு முழுக்க அலாரம் பொருத்தப்பட்டுக் கொண்டு இருந்தது...
கதவு நிலையில் சாய்ந்து நின்று நடப்பவற்றை புரியாமல் பார்த்தாள்.
வம்சி கிருஷ்ணா தான், "இங்க ஒன்னு, அங்க ஒன்னு" என்று வேலை செய்பவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க, தேன்மொழி அருகே வந்த கெளதம் கிருஷ்ணாவோ, "அண்ணி, வம்சியை இப்படியா வசியம் பண்ணி வைப்பீங்க?" என்று கேட்டாள்.