அத்தியாயம் 26
சற்று நேரத்தில் அவனும் நீந்துவதற்காக ஆயத்தமாகி வெளியே வந்து விட்டான்...அங்கே சுவரில் சாய்ந்து நின்றவளிடம், "போகலாமா?" என்று கேட்டான்.
அவளுக்கோ ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்து இருந்தவனை ஏறிட்டுப் பார்க்க சங்கடம்...
தலையை குனிந்து கொண்டே, "ஆம்" என்று தலையாட்டினாள்...
அவனோ அவளது சங்கடத்தை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்துக் கொண்டே முன்னால் நடக்க, அவனை பின் தொடர்ந்து நடந்தவள் தலை மெதுவாக நிமிர்ந்தது...
அவன் முதுகில் இருந்த வாள் டாட்டூவில் அவள் விழிகள் படிந்தன...
அதனை வருடிப் பார்க்க இன்னுமே அவள் கைகள் பரபரத்தன... அடக்கிக் கொண்டாள்.
உரிமை இருந்தும் வெட்கம் அவளை தடுத்துக் கொண்டு இருந்தது...
அவள் இதழ்கள் மெலிதாக விரியவும் அவன் திரும்பிப் பார்க்கவும் நேரம் சரியாக இருக்க, அவளோ சட்டென்று நடையை தளர்த்தி தலையை குனிந்து கொண்டாள்...
ஆனால் அவள் இதழில் தெரிந்த சிரிப்பை கண்டு கொண்டவனோ, "டாட்டூவையா ரசிச்சிட்டு வர்ற?" என்று நேரடியாக கேட்டு விட்டான்...
அவனது கேள்வியில் சற்று உறைந்து தான் போனாள்.
அவன் தன்னை கண்டு கொண்டானே என்று கூச்சம் ஒரு பக்கம்...
அவசரமாக 'இல்லை' என்று தலையாட்டினாள்...
அவனோ, "அப்படின்னா பக்கத்துல நடந்து வாம்மா" என்று சொல்லிக் கொண்டே, அவள் கையை எட்டிப் பிடிக்க, அவளோ மென் சிரிப்புடனேயே அவனுடன் கூட நடந்தாள்...
அவள் மேனியின் சிலிர்ப்பில் அவள் கைகளும் குளிர்ந்து போக, "என்ன கை இப்படி குளிருது?" என்று கேட்டான்...
அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை...
"தெரியாது" என்கின்ற தோரணையில் இதழ்களை பிதுக்கினாள்...
இருவரும் விழிகளால் காதல் பாஷை பேசிக் கொண்டே நீச்சல் தடாகத்தையும் அடைந்து விட்டார்கள்...
அவர்கள் ஜோடியாக செல்வதை வீட்டினுள் இருந்தபடி ஜன்னலினூடு கடுப்பாக பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தார் வேதவல்லி...
இதே சமயம், கெளதம் கிருஷ்ணாவும் யாதவ் கிருஷ்ணாவும் நீச்சல் தடாகத்தினுள் நீந்திக் கொண்டு இருக்க, வம்சி கிருஷ்ணாவோ தேன்மொழியிடம், "இங்க இரு தேன்மொழி" என்று அங்கே இருந்த இருக்கையை காட்டி விட்டு, நீச்சல் தடாகத்தினுள் டைவ் அடித்தான்...
அவன் நீச்சல் தடாகத்தினுள் பாய்வதை இமைக்காமல் பார்த்து இருந்தாள் பெண்ணவள்...
அவனில் இருந்து அவள் கண்களை அகற்றவே இல்லை...
அகற்றவும் முடியவில்லை...
அவன் நீந்துவதை இதழ்களில் மெல்லிய சிரிப்புடன் அவள் பார்த்துக் கொண்டு இருக்க, வம்சி கிருஷ்ணாவோ நீந்தி, கெளதம் கிருஷ்ணா அருகே வந்து விட்டான்.
நீரினுள் இருந்து தலையை மேலே தூக்கி, முகத்தில் வடிந்த நீரை ஒற்றைக் கையால் அகற்றியவனிடம், "என்னடா அண்ணியோட பார்வை உன் மேலயே இருக்கு" என்றான் கெளதம் கிருஷ்ணா...
வம்சி கிருஷ்ணாவோ சட்டென அவளை திரும்பிப் பார்க்க அவளோ வேகமாக பார்வையை வேறு எங்கேயோ திருப்பிக் கொண்டாள்.
வம்சி கிருஷ்ணாவுக்கு மட்டும் அல்ல, கெளதம் கிருஷ்ணாவுக்கும் சிரிப்பு வந்து விட்டது...
கெளதம் கிருஷ்ணாவோ சத்தமாக சிரித்துக் கொள்ள, தேன்மொழியோ, "இப்படியா பார்த்து வைப்ப தேன்மொழி? எப்படி மானம் போகுது பாரு" தனக்கு தானே மனத்துக்குள் திட்டிக் கொள்ள, வம்சி கிருஷ்ணாவோ, "புருஷனை சைட் அடிக்கலாம்... தப்பில்ல" என்று சத்தமாக சொன்னான்...
அவளுக்கோ வெட்கத்தில் பூமிக்குள் புதைந்து விடலாம் போல இருந்தது...
சட்டென ஒற்றைக் கையால் தனது விழிகளை வெட்கத்துடன் மூடிக் கொள்ள, வம்சி கிருஷ்ணா சத்தமாக சிரித்து விட்டு, யாதவ் கிருஷ்ணாவை பார்த்தவன், "ஸ்விம் பண்ணலாமா?" என்று சைகையால் கேட்க, அவனும் சம்மதமாக தலையாட்டினான்... அதனை தொடர்ந்து மூவரும் நீந்த ஆரம்பித்து விட்டார்கள்...
அவளும் கையை நாடியில் வைத்தபடி அவர்கள் ஒற்றுமையாக நீந்துவதை மென் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருக்க, அவள் அருகே வந்து அமர்ந்த வசந்தியோ, "இப்படி இவங்கள பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு... இவர் ஒரு பக்கம் வேலை வேலைன்னு போயிடுவார்... இவனுங்க ரெண்டு பேரும் இன்னொரு பக்கம் போயிடுவானுங்க, இன்னைக்கு நிறைய நாள் அப்புறம் மனசு ரொம்ப திருப்தியா இருக்கு தேன்மொழி" என்றார்.
அவளும் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே, அப்போது தான் கவனித்தாள் குருமூர்த்தியும் நீந்த வந்து விட்டதை...
"அப்பா போட்டிக்கு நீந்தலாமா?" என்று கெளதம் கிருஷ்ணா கேட்க, அவரோ, "ச்ச, என் கூட நீந்துனா உங்களால ஜெயிக்க முடியாது... உங்களுக்காக விட்டு தரேன்... நீங்க நீந்துங்க" என்று சொல்ல, "அட இத கேட்டியா வம்சி" என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டான் கெளதம் கிருஷ்ணா...
"அவரை பெர்ஃபோர்ம் பண்ண விடுடா" என்று வம்சி கிருஷ்ணா சொல்ல, அங்கே அவர்களின் சிரிப்புச் சத்தம் அந்த இடத்தையே நிரப்பியது...
அவர்கள் ஒன்றாக சேர்ந்து செல்ஃபீயும் எடுத்துக் கொண்டார்கள்...
அவர்களை சந்தோஷமாக பார்த்துக் கொண்டு இருந்த தேன்மொழியோ, இப்போது வசந்தியை பார்த்து, "நான் உங்க கிட்ட ஒண்ணு கேக்கலாமா?" என்று சைகையில் கேட்டாள்.
"கேளும்மா" என்றார் அவர்...
"நீங்க ஏன் வெளிய பாடுறத நிறுத்துனீங்க?" என்று கையை அசைத்து கேட்க, அவரோ பெருமூச்சுடன், "அத்தைக்கு பிடிக்காது... திட்டிட்டே இருப்பாங்க... எனக்கு என்னோட ஆசையை விட அப்போ குடும்பம் முக்கியமா பட்டிச்சு" என்றார்...
அவளோ, "நான் உங்க பாட்டெல்லாம் கேட்டு இருக்கேன்... உங்க குரல் என்னை அப்படியே மயக்கி இருக்கு... அடுத்தவங்க சொல்றாங்கன்னு நமக்கு சந்தோஷம் தர்றதை நிறுத்துறது தப்பில்லையா? நானும் உங்கள போல முடிவு எடுத்து இருக்கேன்... எனக்கு கல்யாணம் பேசுன நேரம் மாப்பிள்ளை வீட்ல சொல்றாங்கன்னு வேலையை விட யோசிச்சு இருந்தேன்... நல்ல வேலை வம்சி என்னை காப்பாத்திட்டார்... இப்போ நான் நானா இருக்கேன்... இப்படி ஒரு மகனை பெத்தத்துக்கு நீங்க ரொம்ப பெருமை படணும்" என்று மனதில் இருப்பது எல்லாம் அவரிடம் சொல்லி முடித்தவளுக்கு கண்களும் நெகிழ்வில் கலங்கி விட்டன...
அவளை மென் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்த வசந்தியோ, "உண்மையாவே எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு" என்று சொல்லிக் கொண்டே வம்சி கிருஷ்ணாவை பார்த்தவர், "உன் மாமா கூட அப்படி தான்... ஏன் பாடலன்னு கேட்டுட்டே இருப்பார்... ஆனா குடும்பம் பிரிய கூடாதுன்னு நான் எதுவும் சொல்ல மாட்டேன்... நீ நீயா இருக்க, ஆனா நான் இத்தனை நாள் நானா இல்லை... வீட்ல பாடுற கொஞ்ச நேரம் தான் மனம் இதமா இருக்கும்... அதுக்கும் அத்தை ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க, வம்சி பாடும் போதெல்லாம் எனக்கும் பாடணும் போல இருக்கும்... அடக்கிக் கொள்வேன்... ஆசையை அடக்குறது எவ்ளோ அழுத்தம் தெரியுமா? இன்னைக்கு மனசுல ஏதோ ஒரு பாரம் குறைஞ்ச போல இருக்கு... இந்த முடிவை நான் எப்போவோ எடுத்து இருக்கணும்... நமக்காக கொஞ்சம் சுயநலமா இருக்கலாம், தப்பில்லன்னு எனக்கு இப்போ தோணுது... யார் என்ன சொன்னா என்னன்னு நான் பாடி இருக்கணும்... நான் பாடுறதால யாரும் பாதிக்கப்பட போறது இல்லையே... அத ஏன் செய்யாம விட்டேன்னு இப்போ தான் யோசிக்கிறேன்... நான் முட்டாள்ல" என்று கேட்டுக் கொண்டே தேன்மொழியை பார்க்க, அவளோ இல்லை என்று தலையாட்டியவள், "அன்பான அம்மாவா, நல்ல மனைவியா, மரியாதை கொடுக்கிற மருமகளா இருந்து இருக்கீங்க... முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்... இனி உங்களுக்காக வாழுங்க... தப்பில்ல... கல்யாணம் ஆனதும் எந்த ஆம்பிளையும் தான் பண்ணிட்டு இருக்கிற வேலையையோ பிடிச்ச விஷயங்களையோ விட்டு கொடுக்கிறது இல்லை... விட்டுக் கொடுக்கிறது எல்லாமே பொண்ணுங்க தான்... அதுல எனக்கு உடன்பாடே இல்லை... நம்ம கல்யாணத்துக்கு பிறகும் சுயம் தொலைக்காம இருக்கணும்னா நமக்கு வர்ற துணை அதுக்கு துணையா இருக்கணும்... அவங்களை அவங்களா வாழ விடுறது தானே உண்மையான காதல்… அதுக்கு வம்சி போல துணை வேணும்... அது எல்லா பொண்ணுங்களுக்கு அமையுறது இல்லையே, நான் ரொம்ப கொடுத்து வச்சவ" என்று கணவனை பற்றி பெருமையாக சைகை மொழியில் பேசினாள்...
அவளை வியப்பாக பார்த்த வசந்தியோ, "உனக்கு இவ்ளோ பேச வரும்னு இன்னைக்கு தான் தெரியும் தேன்மொழி... ரொம்ப தெளிவா பேசுற... கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார் மனநிறைவுடன்...
தேன்மொழியோ, "உங்க கிட்ட நான் இன்னொன்னும் சொல்லணும்" என்று சைகை மொழியில் சொல்ல, "சொல்லும்மா" என்றார்...
"நான் உங்க பையன காதலால தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... கண்டிப்பா பணத்துக்காக இல்ல" என்று சைகையில் சொல்ல, வசந்தியோ அவள் கையை பற்றிக் கொண்டே, "அது நீ சொல்லவே வேணாம், உன் கண்ணுலயும் அவன் கண்ணுலயும் தெரியுற காதலே சொல்லுது" என்று கண் சிமிட்டி சொல்ல, அவளோ இதழ் பிரித்து சிரித்துக் கொண்டாள்.
இவர்களின் சந்தோஷத்தை ஜன்னலினூடு பார்த்து கடுப்பாக இருந்தது என்னவோ வேதவல்லி தான்...