ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 24

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 24

மாடியேறி வந்த வம்சி கிருஷ்ணாவுக்கு நிலை கொள்ள முடியவில்லை...

தன்னை கட்டுப்படுத்த முடியாமல் ஸ்டூடியோவினுள் நுழைந்து விட்டான்...

இதே சமயம் கெளதம் கிருஷ்ணா வெளியே சென்று விட்டு அப்போது தான் வீடு திரும்பி இருந்தான்...

முன்னறையில் பூ வாஸ் சிதறிக் கிடந்தது...

குருமூர்த்தி பெருமூச்சுடன் தனது அறைக்குள் நுழைவதை கண்டவன், "என்னாச்சும்மா?" என்று அங்கே நின்ற வசந்தியிடம் கேட்டான்.

வேதவல்லியோ, "உன் அண்ணாவுக்கு பைத்தியம் பிடிச்சு போச்சு... அந்த ஊமைச்சி மேல பைத்தியம்" என்று ஆரம்பித்து தேன்மொழிக்கு திட்டிக் கொண்டே தனது அறைக்குள் நுழைந்தார்...

வசந்தியோ, "வம்சி தான் அத்தை மேல இருக்கிற கோபத்துல இப்படி பண்ணிட்டான்" என்றார்.

"அவன் அவ்ளோ சீக்கிரம் இப்படி ரியாக்ட் பண்ணுற ஆள் இல்லையே... இந்த பாட்டி ஏதோ பண்ணி இருக்கு" என்று சொல்லிக் கொண்டே மாடியேறியவனுக்கு தெரியும் வம்சி கிருஷ்ணா ஸ்டூடியோவில் தான் இருப்பான் என்று...

ஸ்டூடியோவின் கதவை தட்டினான்...

"யாரு?" என்ற கேள்வி உள்ளே இருந்து...

"நான் தான்டா" என்று கெளதம் கிருஷ்ணா வெளியே இருந்து பதில் கொடுக்க, "உள்ளே வா" என்றான் அவன்...

கெளதம் கிருஷ்ணாவும் கதவை திறந்து கொண்டே உள்ளே சென்றான்.

வம்சி கிருஷ்ணாவின் கையில் கிட்டார் இருந்தது...

"என் வேலையை நீ பார்த்தா அப்புறம் நான் என்ன பண்ணுறது?" என்று கேட்டுக் கொண்டே அவனிடம் இருந்து கிட்டாரை வாங்கியவன், அவன் அருகே அமர்ந்தபடி, "என்னடா ஆச்சு?" என்று கேட்டான்...

"அந்த பணத்தை எடுத்தது பாட்டி தான் டா" என்றான் வம்சி கிருஷ்ணா...

"அது தெரிஞ்ச விஷயம் தானே" என்றான் கெளதம் கிருஷ்ணா...

"யார் பணம் எடுத்ததுன்னு ப்ரூஃப் பண்ணாம தேன்மொழி வீட்டுக்கு வர மாட்டேன்னு நிக்குறா" என்று சொல்ல, "அண்ணி சொல்றதும் நியாயம் தானே" என்றான் கெளதம் கிருஷ்ணா...

"எப்படி டா ப்ரூஃப் பண்ணுறது? இந்த பாட்டி பொய் சத்தியம் எல்லாம் பண்ணுறாங்க... செம கடுப்பாயிட்டேன்" என்று சொல்லிக் கொண்டே ஆழ்ந்த மூச்சை எடுத்து விட, "சரி அத விடு, அண்ணி கூட ஓகே ஆயிடுச்சா?" என்று கெளதம் கிருஷ்ணா கேட்டதுமே, வம்சி கிருஷ்ணாவின் இதழில் புன்னகை...

"என்னடா சிரிக்கிற... கொஞ்ச நேரம் முன்னாடி உர்ருன்னு இருந்த?" என்று கெளதம் கிருஷ்ணா கேட்க, வம்சி கிருஷ்ணாவோ, பாக்கெட்டில் இருந்த கடிதத்தை எடுத்து கெளதம் கிருஷ்ணாவிடம் நீட்டினான்... அவனோ, "மறுபடியும் தென்றலோட லெட்டர் ஆஹ்? இன்னைக்கு முதலாம் தேதி இல்லையே" என்று சொல்லிக் கொண்டே, அதனை பிரிக்க, சட்டென்று கையை வைத்து அவள் எழுதியதை மறைத்தவன், "கீழ பேரை மட்டும் பாரு" என்றான்...

கெளதம் கிருஷ்ணாவோ, "அடப்பாவி, முதல் எல்லாம் வாசிக்க தருவியே டா" என்றான்...

அதனைக் கேட்டு சத்தமாக சிரித்த வம்சி கிருஷ்ணா, "அது அப்போ... இப்போ பேரை பாரு ஏன் தர மாட்டேன்னு சொல்றேன்னு புரியும்" என்றான்...

"சரி பிழைச்சு போ" என்று சொல்லிக் கொண்டே பெயரைப் பார்த்த கெளதம் கிருஷ்ணாவின் விழிகள் விரிய, "டேய் என்னடா, தேன்மொழி வம்சி கிருஷ்ணான்னு இருக்கு... ரெண்டு பேரும் ஒரு ஆளா?" என்று அதிர்ந்து கேட்டான்...

வம்சி கிருஷ்ணாவோ ஆமோதிப்பாக கண்களை மூடி திறக்க, "டேய், எனக்கே செம ஹாப்பியா இருக்கு... உனக்கு வேற லெவல் சந்தோஷமா இருக்குமே…. ஆனா அன்னைக்கு நாம எழுதி காட்டி சொல்ல கேட்டோம் தானே" என்று கேட்டான்கெளதம் கிருஷ்ணா... வம்சி கிருஷ்ணாவோ, "அன்னைக்கு அவ இடது கைல அடிபட்டு இருந்திச்சுல்ல, அவ லெஃப்ட் ஹாண்டேட் டா" என்றான்...

"அடடா, கடவுள் உன் விஷயத்தில எப்படி எல்லாம் விளையாடி இருக்கார் பாரேன்" என்று கெளதம் கிருஷ்ணா சொல்ல, வம்சி கிருஷ்ணாவோ, "கடைசியா என் கிட்டயே சேர்த்துட்டார்ல" என்றான்... கெளதம் கிருஷ்ணாவோ சிரித்தபடி அவனை எட்டி அணைத்து விடுவித்தவன், "நீ அண்ணியை தேடுனது எல்லாம் சொல்லிட்டியா?" என்று கேட்டான்...

"எல்லாமே சொல்லிட்டேன்... இப்போ எங்களுக்கு வில்லியா இருக்கிறது இந்த வேதவல்லி பாட்டி தான்" என்றான் வம்சி கிருஷ்ணா கடுப்பாக...

"வில்லி, வல்லி செம்ம ரைமிங்" என்று சொல்லி சிரித்த கெளதம் கிருஷ்ணாவோ மேலும், "எத்தனை நாளைக்கு பொய்யை மறைக்க முடியும்? எப்படியும் ஒரு நாள் வெளிய வந்து தானே ஆகும்" என்றான்.

வம்சி கிருஷ்ணாவோ, "அதுக்குள்ள எனக்கும் வயசாகி தேன்மொழிக்கும் வயசாகிடும்" என்று சொல்ல, சத்தமாக சிரித்துக் கொண்டான் கெளதம் கிருஷ்ணா...

இதே சமயம் தனது அறைக்குள் அமர்ந்து இருந்த தேன்மொழிக்கு மேனியில் ஒரு சிலிர்ப்பு... அடி வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்து கொண்டு இருந்தது...

அவன் தன்னை காதலித்து இருக்கின்றான் என்ற விஷயத்தை இன்னுமே அவளால் நம்ப முடியவில்லை...

இன்று அவளுக்கு முகமெல்லாம் முத்தமிட்டு மூச்சடைக்க செய்து விட்டானே...

கொஞ்சம் விட்டு இருந்தால் இதழ்களையும் தீண்டி இருப்பான்...

நல்ல வேளையாக தடுத்து விட்டாள்.

அவள் கரமோ தன்னிதழ்களை வருட, 'அவசரப்பட்டு நிறுத்திட்டோமோ' என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டவளோ, 'ச்ச, என்ன இது இப்படி யோசிச்சிட்டு இருக்கேன்' என்று தன்னையே கடிந்து கொண்டபடி தலையணையை அணைத்துக் கொண்டே படுத்தாள். அவனுடனான நெருக்கத்தை நினைக்க நினைக்க அவளுக்கு வெட்கம் மேலிட்டது...

தலையணைக்குள் முகத்தை வெட்கத்துடன் புதைத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் யாதவ் கிருஷ்ணாவுக்கு வகுப்பெடுக்க செல்ல வேண்டும்...

வம்சி கிருஷ்ணா வேறு வீட்டில் இருப்பதாக சொல்லி இருக்கின்றான்...

அவன் நினைவு தான் மனமெல்லாம்...

நாளை அவனை காணப் போகும் ஆவலுடன் தூங்கிப் போனாள்.

அடுத்த நாள் வம்சி கிருஷ்ணா ரெக்கார்டிங் போய் விட்டு நேரத்துக்கே வீட்டுக்கு வந்து விட்டான்...

அவனுக்கு தேன்மொழியை பார்க்க வேண்டும்... அதற்காக வீட்டில் இருந்தான்...

தேன்மொழியும் சொல்லி வைத்த போல சரியாக மூன்று மணிக்கு அவர்கள் வீட்டை அடைந்து விட்டாள்.

அவள் எதற்கும் பயப்படவில்லை... தவறு செய்தால் தானே அவள் பயப்பட வேண்டும்...

வலது காலை வைத்து வீட்டினுள் நுழைந்தாள்.

அங்கே நின்ற வசந்தியோ, "வாம்மா" என்று அழைக்க, வேதவல்லியோ, "திருடிக்கு வரவேற்பு ஒன்னு தான் குறை" என்று திட்ட, அவளோ வசந்தியை மட்டும் பார்த்து புன்னகைத்து விட்டு விறு விறுவென மாடியேறி விட்டாள்.

வேதவல்லிக்கு இருப்பு கொள்ளவில்லை...

உடனே கல்யாணிக்கு அழைத்தவர், "இந்த பக்கம் நீ வரவே மாட்டியா?" என்று திட்ட, அவளோ, "ஐயோ பாட்டி, மாமா வேற கோபமா இருக்காருன்னு சொல்றீங்க, இந்த விஷயம் நாம தான் பண்ணுனோம்னு தெரிஞ்சா என்னத்துக்கு ஆகுறது? எனக்கு பயமா இருக்கு" என்றாள்.

"ஏய், நான் இருக்கேன்ல, இப்போ எதுக்கு பயப்படுற? மரியாதையா இப்போ கிளம்பி வா" என்று மிரட்டலாக சொல்ல, அவளோ அலைபேசியை வைத்தவள், "இந்த பாட்டி என்னை சிக்க வைக்காம விட மாட்டாங்க போலவே... இப்போ போகலன்னா வீட்டுக்கே கிளம்பி வந்திடுவாங்க" என்று நினைத்துக் கொண்டே, சலிப்புடன் வம்சி கிருஷ்ணாவின் வீட்டை நோக்கி வந்தாள்.

வீட்டினுள் நுழையும் கல்யாணியை கண்டதுமே, "இங்க வா" என்று அழைத்தார் வேதவல்லி...

அவளும் சுற்றிப் பார்த்து யாரும் இல்லை என்று உறுதி செய்து கொண்டே, அவர் அருகே சென்று அமர்ந்தவள், "என்ன பாட்டி?" என்று கேட்க, அவரோ, "அந்த ஊமைச்சி யாதவ்வுக்கு டியூஷன் எடுக்க வந்து இருக்கா, இன்னைக்கு நாம பேசுற பேச்சுல அவ இந்த பக்கமே வர கூடாது" என்றார்.

"அவ இன்னுமா இந்த வீட்டுக்கு வர்றா? பேசுறது ஒன்னும் பிரச்சனை இல்லை... மாமா இருந்தா நாம பேச முடியாதே" என்றாள்.

"அவன் முன்னாடியே நான் பேசுறேன் பாரு" என்று வேதவல்லி சொல்ல, அவரை மேலிருந்து கீழ் பார்த்தவள், "நீங்க வயசுல பெரியவங்க, சோ மாமா கை வைக்க மாட்டார்... ஆனா எனக்கு ஓங்கி ஒன்னு விட்டா என்ன பண்ணுறது?" என்று கேட்டாள்.

"என் முன்னாடி உன் மேல கையை வைக்க நான் விட்ருவேனா? இங்க பாரு பயந்தா வேலைக்கு ஆகாது... உனக்கு வம்சி வேணுமா வேணாமா?" என்று கேட்டார்...

அவளோ யோசனையுடன், "வேணும் தான்... ஆனா" என்று இழுக்க, "என்ன ஆனா ஆவன்னா, வேணும்னா எந்த எல்லைக்கும் போகலாம் தப்பில்லை" என்று சொல்ல, கல்யாணியோ, "நீலாம்பரி போலவே பேசுறீங்க பாட்டி" என்று சொல்லிக் கொண்டாள்.

இதே சமயம் யாதவ் கிருஷ்ணாவின் அறைக்குள் தேன்மொழியை நுழைய விடாமல் மறித்துக் கொண்டு நின்று இருந்தான் வம்சி கிருஷ்ணா...

அவளோ விழிகளை உருட்டி வழியை விட சொல்ல, அவனோ இல்லை என்கின்ற ரீதியில் தலையாட்டினான்...

அவன் பார்வை வீச்சை தாங்க முடியாமல் சட்டென அவள் விழிகளை தாழ்த்திக் கொள்ள, சட்டென யாதவ் கிருஷ்ணாவின் அறைக் கதவு திறக்கப்பட்டது...

யாதவ் கிருஷ்ணா தான் திறந்து இருந்தான்... வாசலில் நின்ற இருவரையும் அவன் மாறி மாறிப் பார்க்க, குரலை செருமிய வம்சி கிருஷ்ணா தேன்மொழிக்கு இடைவெளி விட்டு தள்ளி நிற்க, சட்டென அவள் தலையை குனிந்து கொண்டே உள்ளே நுழைந்தாள்...

அவனோ அவளை சீண்டுவதற்காகவே பின்னால் நுழைந்தான்...

சட்டென திரும்பிப் பார்த்து, புருவத்தை அவள் உயர்த்த, "நீ டீச் பண்ணுறத சூப்பர்வைஸ் பண்ண வந்தேன்" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்லிக் கொண்டே அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து விட, அவன் பேச பேச அவளுக்கு மூச்சடைத்தது...

இதழ்களுக்கும் வெட்க சிரிப்பு...

கட்டுப்படுத்திக் கொண்டே யாதவ் கிருஷ்ணா அமர்ந்து இருந்த மேசையில் அமர்ந்து விட்டாள்.

யாதவ் கிருஷ்ணாவுக்கு நேரே அவனைப் பார்த்தவாறு அவள் அமர்ந்து இருக்க, யாதவ் கிருஷ்ணாவுக்கு பின்னால் இருந்த சோஃபாவில் தான் வம்சி கிருஷ்ணா அமர்ந்து இருந்தான்...

தேன்மொழியும் வம்சி கிருஷ்ணாவும் ஒருவரை ஒருவர் இலகுவாக பார்க்கக் கூடியவாறு தான் அமர்ந்து இருந்தார்கள்... வம்சி கிருஷ்ணாவின் விழிகளோ அவளிடம் இருந்து அகலவில்லை...

தேன்மொழி கஷ்டப்பட்டு அவனை நோக்கி சென்ற பார்வையை இழுத்து எடுத்தவள் யாதவ் கிருஷ்ணாவுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.

வம்சி கிருஷ்ணா தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கின்றான் என்று தெரிந்தது... யாதவ் கிருஷ்ணாவுக்கு பயிற்சியை கொடுத்து விட்டு, சட்டென ஏறிட்டு அவனைப் பார்க்க, அவனோ தனது கரத்தின் நடு இரண்டு விரல்களை மடித்து அவளை நோக்கி காட்டினான்... சைகை மொழியில் "ஐ லவ் யூ" என்று சொன்னான்...

யாதவ் கிருஷ்ணா அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து இருந்ததால் வம்சி கிருஷ்ணா செய்யும் சில்மிஷங்கள் அவனுக்கு தெரியவில்லை...

தேன்மொழிக்கு அதனை பார்த்ததுமே மூச்சடைத்தது...

அவளை இம்சித்துக் கொண்டே இருக்கின்றான்... சட்டென அவனிடம் இருந்து பார்வையை திருப்பியவளது இதழ்களில் வெட்க புன்னகை மீதம் இருக்க, அப்படியே எழுந்து சென்று யாதவ் கிருஷ்ணா வரைந்த ஓவியங்களை பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவளுக்கு அவனிடம் இருந்து கவனத்தை திருப்ப வேறு வழி தெரியவே இல்லை... அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் எழுந்து, அவள் பின்னால் சிறிய இடைவெளி விட்டு வந்து நின்றவன் பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டே, "பதிலுக்கு ஐ லவ் யூ சொல்ல மாட்டியா?" என்று சற்று குனிந்து கேட்க, அவளோ பதறி அவனை திரும்பி பார்த்தவள், இதழ் குவித்து ஊதிக் கொண்டாள்.

அவனோ, அவளை ரசனையாக பார்க்க, அவளுக்கு தான் சங்கடமாக போனது...

அவனிடம் இருந்து பார்வையை திருப்பி மீண்டும் ஓவியங்களை பார்க்க, இருவரின் விழிகளும் ஒருங்கே அந்த வாளில் நிலைத்தது...

சட்டென வம்சி கிருஷ்ணாவுக்கு ஏதோ நினைவு வர, "ஆஹ் லெட்டர் ல என் வாள் டாட்டூ பத்தி எழுதி இருந்த தானே... எப்படி தெரியும்?" என்று கேட்டான்...

அவளோ தலையை பின்னால் திருப்பியவள் கண்களால் அங்கே பயிற்சி செய்து கொண்டு இருந்த யாதவ் கிருஷ்ணாவைக் காட்டினாள்.

"யாதவ் சொன்னானா?" என்று வம்சி கிருஷ்ணா கேட்க, "ஆம்" என்று தலையாட்டினாள்.

அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் அந்த வாள் ஓவியத்தைப் பார்த்தவன், "தொட்டு பாரக்க ஆசைப்பட்ட தானே" என்று கேட்க, அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...

கள்வன் எதனை எல்லாம் நினைவு வைத்து இருக்கின்றான் என்று தோன்ற, சட்டென தலையை குனிய, அவள் காது நோக்கி பின்னால் நின்றபடியே சற்று குனிந்தவன், "இப்போ கூட நான் ரெடி" என்றான்... அவளோ அவனை பார்க்காமல் விறு விறுவென நடந்து யாதவ் கிருஷ்ணா முன்னே அமர்ந்து விட்டாள்.

அவள் இதயம் வேகமாக துடித்தது... என்னவெல்லாம் பேசி விடுகின்றான்...

கன்னக் கதுப்புகள் சிவந்து வேறு போயின...

அருகே இருந்த நீரை அருந்தி பதட்டத்தை தணிக்க முயல, வம்சி கிருஷ்ணாவோ சத்தமாக சிரித்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறி இருக்க, அவளுக்கோ வெட்கத்தில் புதைந்து விடலாம் போல இருந்தது...

இதே சமயம் சமையலறைக்குள் வேலை செய்தபடி முன்னறையில் நடக்கும் அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்த பாக்கியாவுக்கு மனம் கேட்கவே இல்லை...

'அநியாயம் பண்ணிட்டு எப்படி எல்லாம் நடிக்கிறாங்க' என்று மனதுக்குள் வேதவல்லிக்கு திட்டிக் கொண்டே வேலை செய்தாள்.

வசந்தியும் அங்கே தான் நின்று இருந்தார்...

அவர் முகத்தில் கவலையின் சாயல்...

பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டார்...

பாக்கியாவோ அவரை கவனித்து விட்டு, "என்னம்மா ஆச்சு?" என்று கேட்க, அவரோ, "உனக்கு இந்த வீட்ல என்ன நடக்குதுன்னு தெரியும் தானே... இந்த குடும்பம் சிதைய கூடாதுன்னு தான் நான் பாடுறத கூட விட்டேன்... ஆனா இப்போ மருமக ஒரு பக்கம், அத்தை இன்னொரு பக்கம், வம்சி ஒரு பக்கம்னு இருக்காங்க... ரொம்ப கஷ்டமா இருக்கு... தேன்மொழி ரொம்ப பிடிவாதமா இருக்கா, அவ வீட்டுக்கு வரலன்னு சொன்னதும் வம்சிக்கு கண்ட மேனிக்கு கோபம் வருது... நேத்து அவன் எப்படி நடந்துகிட்டான்னு பார்த்த தானே" என்றார்...

பாக்கியாவோ, "தேன்மொழியம்மா பிடிவாதம் பிடிக்கிறது தப்பில்லையே, தப்பு பண்ணாம பழியை சுமந்தவங்களுக்கு அந்த ஆதங்கம் இருக்க தானே செய்யும்" என்றாள்.

அவளை மெதுவாக திரும்பிப் பார்த்தவர், "இப்போ யார் பணத்தை எடுத்தாங்கன்னு எப்படி கண்டு பிடிக்கிறது? அவங்களா சொன்னா தான் உண்டு... இல்லன்னா சாட்சி வேணும்... சும்மா ஒருத்தங்க மேல பழியை எப்படி தூக்கி போடுறது?" என்று கேட்டார்...

'சாட்சி' என்று சொன்னதுமே பாக்கியாவோ புருவம் சுருக்கி யோசித்தாள்.

அவள் தானே சாட்சியாக இருக்கிறாள்.

'இது பெரிய இடத்து சமாச்சாரம் ஆச்சே, நாம வாயை துறந்து பிரச்சனை ஆய்டுச்சுன்னா என்ன பண்ணுறது' என்று அவள் நினைத்துக் கொண்டவளுக்கு உண்மை தெரிந்தும் மறைப்பது மனதில் உறுத்த ஆரம்பித்தது...

நீண்ட நேரம் யோசித்துக் கொண்டே வேலை செய்தாள். வசந்தியும் தனது வேலையை முடித்து விட்டு வெளியேறி விட்டார்...

நீண்ட நேரம் யோசித்து விட்டு, இறுதியாக சொல்லி விடலாம் என்று நினைத்த பாக்கியாவோ, வசந்திக்காக சமையலறைக்குள் காத்துக் கொண்டு இருக்க, வசந்தியும் உள்ளே நுழைந்தார்...

அவர் முன்னே போய் நின்றவள், "அம்மா, உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்" என்று இழுக்க, அவரும், "என்ன பாக்கியா?" என்று கேட்டார்...

"அன்னைக்கு நடந்ததுக்கு சாட்சி கேட்டீங்க தானே... நான் இருக்கேன்மா" என்றாள்.

சட்டென வசந்தியின் விழிகள் விரிய, "நீ என்ன பார்த்த?" என்று கேட்டார்...

அவளோ தயங்கி தயங்கி நடந்ததை சொல்லி முடிக்க, வசந்திக்கோ அதிர்ச்சியின் உச்சக்கட்டம்...

ஒவ்வொருவரும் வேதவல்லியை சந்தேகப்படும் போது, சாட்சி இல்லாமல் அவர் நம்ப தயாராக இருக்கவில்லை...

மேலும் அப்படி ஒரு விஷயம் நடந்து இருக்க கூடாது என்று இறைவனை வேண்டி இருக்கின்றார்...

ஆனால் அவர் வேண்டுதல் பலிக்காவில்லை போலும்... எது நடந்து இருக்க கூடாது என்று நினைத்தாரோ, அது நடந்து விட்டது...

வேதவல்லியின் ஏச்சு பேச்சுக்களை கூட தாங்கிக் கொள்வார், ஆனால் இந்த இழி செயலை தாங்கிக் கொள்ள முடியவில்லை...

மனம் உலையாக கொதித்தது...

வாய் பேச முடியாத பெண் மீது இரக்கமே இல்லாமல் எப்படி பெரிய பழியை தூக்கி போட்டு இருக்கின்றார்கள்.

இவர்கள் மனிதர்கள் தானா? என்று தோன்றியது...

வேதவல்லிக்காக வெளியில் பாடுவதையே நிறுத்தியவர் அவர்...

குடும்பம் குடும்பம் என்று தனது ஆசைகளை புதைத்தவர் அவர்...

ஆனால் குடும்பத்தில் மூத்தவராக இருக்கும் வேதவல்லி குடும்பத்துக்காக எதுவுமே பண்ணவில்லையே... இருக்கும் ஒற்றுமையை குலைத்துக் கொண்டல்லவா இருக்கின்றார்...

பாசமான தாயினால் தனது மகனின் குடும்பம் பிரிவதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்ன?

கல்யாணி மீதும் ஆத்திரம்...

வம்சி கிருஷ்ணா திருமணம் செய்த பின்னர் விலகிப் போகாமல் இன்னுமே அவன் பின்னால் சுற்றிக் கொண்டு இருப்பதை நினைக்க அருவருப்பாக இருந்தது...

அவர் விழிகள் கோபத்தில் சிவந்து இருக்க, பாக்கியாவை பார்த்தவர், "நீ சொல்றது சத்தியமா?" என்றார்...

"என் ரெண்டு பிள்ளைங்க மேல சத்தியம் அம்மா" என்றாள் பாக்கியா...

"எல்லாருக்கும் முன்னால சாட்சி சொல்வியா?" என்று அடுத்த கேள்வி கேட்டார்...

"கண்டிப்பா சொல்வேன்மா" என்று பாக்கியா சொன்னதும், "அப்போ என் கூட வா" என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் இருந்து வெளியேறி முன்னறைக்கு வந்தார்...
 
அதே சமயம் தேன்மொழி யாதவ் கிருஷ்ணாவுக்கு வகுப்பை முடித்து விட்டு கீழிறங்க, அவளுடன் சேர்ந்து இறங்கினான் வம்சி கிருஷ்ணா...

ஆஃபீஸ் விஷயமாக வெளிய போய் விட்டு அந்த கணம் தான் குருமூர்த்தியும் கெளதம் கிருஷ்ணாவும் ஒன்றாக வீட்டினுள் நுழைந்தார்கள்...

கிட்டத்தட்ட அனைவரும் வீட்டில் இருந்த சந்தர்ப்பம்...

வசந்தி சற்றும் தயங்கவில்லை... நேரே கல்யாணி மற்றும் வேதவல்லி முன்னே போய் நின்றவர், வேதவல்லியை ஒரு கணம் பார்த்து விட்டு கல்யாணியை பார்த்து, "பணம் எங்க?" என்று கேட்டார்...

வேதவல்லியோ, "என்ன பணம்?" என்று கேட்க, கல்யாணிக்கு வியர்த்து வடிந்தது...

சற்று பதட்டத்துடன் எழுந்து நின்றவள், "எந்த பணம் அத்தை?" என்று கேட்டாள்.

வசந்தியை இவ்வளவு இறுகிய தோற்றத்தில் வம்சி கிருஷ்ணா கூட பார்த்தது இல்லை...

அனைவரும் ஸ்தம்பித்துப் போய் வசந்தியை தான் பார்த்துக் கொண்டு நின்றார்கள்...

அவரோ கல்யாணியை உறுத்து விழித்தவர், "அன்னைக்கு தேன்மொழி மேல பழி போடணும்னே ஒளிச்சு வச்ச பணம்" என்றார் அழுத்தமாக... பாக்கியாவை அவர் சாட்சிக்கு உடனே அழைக்கவும் விரும்பவில்லை... அது அவளுக்கு ஏதும் பாதிப்பை உண்டாக்கி விடும் என்று நினைத்தவர், முடிந்தவரை அவர்கள் வாயினாலேயே உண்மையை வரவழைக்க போராடினார்...

அவர் சொன்னதைக் கேட்டு வேதவல்லிக்கு உதறல் எடுத்தாலும், அதனை மறைத்துக் கொண்டே, "என்ன பேசிட்டு இருக்கிற, குளிர் விட்டு போச்சா உனக்கு? நாங்க என்ன உன்னை போலவும் உன் மருமக போலவும் பிச்சைக்கார குடும்பம்னு நினைச்சியா? அந்த ஊமைச்சிக்கு நீயும் ஒத்து ஊதுறியா?" என்று கேட்க, அவரையே பார்த்துக் கொண்டு இருந்த வசந்தியின் கரங்கள் இடியாக இறங்கியது என்னவோ கல்யாணியின் கன்னத்தில் தான்...
 
Top