அத்தியாயம் 24
அடுத்து நிச்சயப் பத்திரிகை வாசிக்கப்பட்டது. அடுத்த ஒரு மாதத்தில் திருமண நாளும் குறிக்கப்பட, தாம்பூல தட்டும் மாற்றப்பட்டது...வடிவேலோ, "பொண்ணும் மாப்பிள்ளையும் மோதிரத்தை மாத்திக்கலாமே" என்று சொன்னதுமே, நெடுஞ்செழியனும் கீர்த்தனாவும் எழுந்து அருகருகே நின்று கொண்டார்கள்...
நெடுஞ்செழியனின் பார்வையைத் தான் கீர்த்தனாவினால் எதிர் கொள்ளவே முடியவில்லை...
அவன் தான் அவளை விழுங்கி விடுவது போலவே பார்த்துக் கொண்டு இருக்கின்றான் அல்லவா?
கன்னங்கள் சிவக்க, தலையை குனிந்து கொண்டாள் பெண்ணவள்...
நெடுஞ்செழியனும் அவள் மென்மையான விரல்களை பற்றி, தனது கையில் இருந்த மோதிரத்தை அவளுக்கு அணிவித்து விட்டான்.
குனிந்து இருந்தவள் விழிகளோ அவனது நரம்போடிய கரங்களில் பதிய, இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டாள் பெண்ணவள்...
அப்படியே குனிந்தபடியே தன்னிடம் உறவுக்காரப் பெண் நீட்டிய மோதிரத்தை வாங்கி எடுத்தவள், நெடுஞ்செழியனின் விரல்களை பற்ற, அவனோ, "உனக்கு வெட்கப்பட தெரியுமா?" என்று நக்கல் தொனியில் கேட்டான்...
அவளோ சட்டென அவனை ஏறிட்டு பார்க்க, அவன் தாடி மீசை நடுவே மென் புன்னகை படர்ந்து இருந்தது...
அவன் விழிகளை பார்த்துக் கொண்டே, அவனுக்கு மோதிரத்தை அணிவித்து விட்டாள் கீர்த்தனா...
அனைவரும் புன்னகையுடன் நடப்பதை பார்த்துக் கொண்டு இருக்க, அடுத்து அனைவர்க்கும் விருந்து பரிமாறப்பட்டது...
அக்ஷயாவோ வீரராகவன் அருகே வந்து குழந்தையை வாங்க கையை நீட்ட, அவனோ, "நீ சாப்பிட்டு வா" என்றான்...
"இல்ல எனக்கு பசிக்கல" என்றாள் அவன் விழிகளை பார்த்துக் கொண்டே...
அவனும், "எனக்கும் தான் பசிக்கல" என்று சொல்லிக் கொண்டே இருக்க, அவர்கள் அருகே வந்த மனோகரியோ, "ரெண்டு பேரும் சாப்பிடுங்க, நான் தனிஷா குட்டியை வச்சுக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே குழந்தையை வாங்கி எடுத்தார்...
இருவரும் மௌனமாக பந்தியை நோக்கி செல்ல, அங்கே ஏற்கனவே அமர்ந்து ஒருவரை ஒருவர் விழிகளால் தீண்டிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள் நெடுஞ்செழியனும் கீர்த்தனாவும்.
அவர்களுக்கு முன்னே இரு இருக்கைகள் இருக்க, அங்கே தான் வீரராகவனும் அக்ஷயாவும் அருகருகே அமர வேண்டிய கட்டாயம்.
"பார்த்தது போதும் சாப்பிடுடா" என்று வீரராகவன் கிண்டலாக சொல்லிக் கொண்டே அமர, நெடுஞ்செழியனோ அவனை முறைக்க முயன்று தோற்று சிரித்துக் கொள்ள, அக்ஷயாவுக்கும் சிரிப்பு வந்து விட்டது...
அடக்கிக் கொண்டே வீரராகவனுக்கு அருகே அமர்ந்து விட்டாள். கீர்த்தனாவோ, "இவருக்கு கிண்டல் வேற பண்ண தெரியுமா?" என்று யோசித்துக் கொண்டே தலையை குனிந்து கொள்ள, "என்ன கீர்த்தனா ஒரு நாள் லீவ் போதுமா?" என்று அவளிடம் கேட்டான் அவன்...
அலுவலகத்தில் காலில் கொதிநீர் கொட்டியபடி இருப்பவன், இங்கோ கல கலவென பேசுவது அக்ஷயாவுக்கும் சரி கீர்த்தனாவுக்கும் சரி ஆச்சரியம் தான்...
சட்டென நிமிர்ந்த கீர்த்தனாவோ, "நீங்க தான் ஒரு வாரமா லீவ் கொடுத்தீங்களே சார்" என்று சொல்ல, இதழ் பிரித்து சிரித்துக் கொண்டான் வீரராகவன்...
உணவை பிசைந்து கொண்டே பக்கவாட்டாக திரும்பி வீரராகவன் பேசுவதை பார்த்துக் கொண்டு இருந்த அக்ஷயாவுக்கு அவன் புன்னகையை பார்த்ததுமே ஒரு வித வித்தியாசமான உணர்வு...
"சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்காரே" என்று அவள் மனம் தன்னையும் மீறி நினைத்துக் கொள்ள, தலையை உலுக்கி தன்னை சமநிலை படுத்திக் கொண்டவளோ, சாப்பாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்...
முதலில் சாப்பிட்டு முடித்த அக்ஷயா, சாப்பிட்ட இலையை மடித்து விட்டு கையை கழுவ எழுந்து சென்றாள்.
கையை அவள் கழுவும் இடத்தில் வெற்றிலையை மடித்து வாய்க்குள் போட்டுக் கொண்டு இருந்தது என்னவோ கீர்த்தனாவின் பாட்டி விசாலாட்சி தான்...
அவரை சுற்றி இன்னும் சில வயதான பெண்மணிகள் அமர்ந்து இருக்க, கையை கழுவிக் கொண்டு இருந்த அக்ஷயாவை பார்த்துக் கொண்டே இருந்தார் விசாலாட்சி...
அக்ஷயாவும் கையை கழுவிக் கொண்டே அவரை மென் புன்னகையுடன் பார்த்தவள், "என்ன பாட்டி அப்படி பார்க்கிறீங்க?" என்று கேட்க, அவரோ, "அதொன்னும் இல்லை, நீ புருஷன விட்டு வந்ததா பேத்தி முதல் சொல்லி இருக்கா... இப்போ புருஷன் கூட வந்து இருக்கியே... இது ரெண்டாவது புருஷனா?" என்று வெளிப்படையாகவே கேட்க, "என்னது ரெண்டாவது புருஷனா?" என்று அருகே இருந்த வயதான பெண்மணி அதிர்ந்து கேட்க, அக்ஷயாவுக்கோ சங்கடமாகி விட்டது...
எப்படி அவர்களிடம் சொல்வது என்று தெரியவில்லை... சொன்னாலும் புரியுமா என்றும் புரியவில்லை...
அவர்களை தவிர்க்கவும் முடியாது...
கையை பிசைந்து கொண்டே அவள் நின்று இருக்க, "என்ன புள்ள ரெண்டு கண்ணாலம் கட்டிகிட்டியா?" என்று அங்கிருந்த ஒரு வயதான பெண்மணி கேட்டார்...
அவளும் ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, "முதல் புருஷன்" என்று ஆரம்பிக்க, "முதல் புருஷன் கடைசி புருஷன் எல்லாம் நான் மட்டும் தான்" என்று ஒரு கம்பீரமான குரல் அவளுக்கு பின்னால் கேட்டது...
சட்டென திரும்பி பார்த்தாள் அக்ஷயா...
அங்கே அவளை முறைத்து விட்டு கையை கழுவிக் கொண்டு நின்று இருந்தான் வீரராகவன்...
"அப்போ விட்டு போன புருஷன் நீ தானா அப்பு" என்று விசாலாட்சி கேட்க, "ம்ம், ஏதோ ஒரு மனஸ்தாபத்துல விட்டு போய்ட்டேன்... இப்போ தான் சேர்ந்துட்டோம்ல" என்று அவருக்கு பதில் சொல்லிக் கொண்டே, தன்னையே அதிர்ந்து பார்த்துக் கொண்டு நின்று இருந்த அக்ஷயாவை அழுத்தமாக பார்த்து வைத்தான்...
அவளும் பெருமூச்சுடன் திரும்பி விசாலாட்சியை பார்க்க, அவரோ, "அது சரி, நான் என் புருஷன ஒரு நாள் கூட பிரிஞ்சு இருந்தது இல்ல தெரியுமா? இந்த காலத்து புள்ளைங்க இருக்கீங்களே... இனியாவது சேர்ந்து இருங்க... பொருத்தமான ஜோடி" என்று கையினால் நெட்டி முறித்து திருஷ்டி கழிக்க, வீரராகவன் ஒரு தலையசைப்புடன் அங்கிருந்து நகர, அக்ஷயா வலுக்கட்டாயமாக புன்னகைத்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்.
அதன் பிறகு வீரராகவன் அக்ஷயாவின் பக்கம் திரும்பவே இல்லை...
நெடுஞ்செழியனோ வடிவேலிடம், "நாளைக்கே நானும் அம்மாவும் கீர்த்தனாவை அழைச்சிட்டு போறோம் மாமா, கல்யாணத்துக்கு கார்ட் அடிச்சு கொடுக்கிற வேலை எல்லாம் அங்கேயும் இருக்கு" என்று சொல்ல, வடிவேலா சற்று தயக்கத்துடன் மனைவியை பார்த்தார்...
திருமணம் நிச்சயிக்கப்பட்டு மட்டும் தானே இருக்கின்றது...
இந்த நேரத்தில் பெண்ணை அவர்களுடன் அனுப்புவது சரியா இருக்குமா என்கின்ற தயக்கம் அவர்களுக்கு...
அவர்கள் தயக்கத்தை உணர்ந்து கொண்ட மனோகரியோ, "நான் இருக்கேன் சம்பந்தி, பயப்படாம என் கூட அனுப்புங்க, என் வீட்ல தானே இருக்க போறா அவ" என்று சொல்ல, வடிவேலுக்கு தவிர்க்கவும் முடியவில்லை, சம்மதமாக தலையாட்டினார்.
மீனாட்சியோ, "இப்போ கேக்கிறது சரியான்னு தெரியல... ஆனாலும் கேட்காம இருக்க முடியல... கல்யாணத்துக்கு அப்புறம் என்ன பண்ணுறதா உத்தேசம்?" என்று நெடுஞ்செழியனிடம் கேட்க, அவனோ, அவரை மென் புன்னகையுடன் பார்த்தவன், "இத கேட்க என்ன சங்கடம் அத்தை? எல்லாருக்கும் இருக்கிற சந்தேகம் தானே... சிங்கப்பூர்ல தான் என்னோட முக்கியமான பிசினஸ் எல்லாம் ரன் ஆகிட்டு இருக்கு, சோ அங்க போய் செட்டில் ஆய்டலாம்னு இருக்கேன்... இத்தனை நாள் அம்மாவை அழைச்சும் அவங்க வரல... அங்க பேச்சு துணைக்கு யாரும் இல்லன்னு சொல்லிட்டு இருப்பாங்க, இனி கீர்த்தனா இருக்கா தானே..." என்று சொன்னான்.
மீனாட்சியோ இதழ் பிரித்து புன்னகைத்தவர், "சரி மாப்பிள்ளை" என்று சொன்னார்.
வீரராகவன், அக்ஷயா மற்றும் தனிஷா அன்றே ஊருக்கு கிளம்புவதாக இருக்க, நெடுஞ்செழியன், கீர்த்தனா மற்றும் மனோகரி அடுத்த நாள் ஊருக்கு கிளம்புவதாக இருந்தது...
அங்கிருந்தவர்களிடம் விடை பெற்ற வீரராகவனோ, "செழியா, நாங்க வீட்டுக்கு போய் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு கிளம்புறோம்... எனக்கு நாளைக்கு ஒரு முக்கிய மீட் அப் இருக்கு... மன்டே நாம மீட் பண்ணலாம்" என்று சொல்லிக் கொண்டே கீர்த்தனாவை பார்த்தவன், "மன்டே, வேலைக்கு வந்திடு, ரெசிக்னேஷன் லெட்டர் கொடுத்த அப்புறம் நின்னுக்கலாம்" என்றான் அழுத்தமாக...
"டேய் ரொம்ப ஓவர் டா" என்று நெடுஞ்செழியன் சொல்ல, வீரராகவனோ, "உன்னோட ஆள் என்கிறதுக்காக என்னால ஆஃபீஸ் ரூல்ஸ் எல்லாம் பிரேக் பண்ண முடியாது" என்றான்...
நெடுஞ்செழியனோ, "சரி தான், பொண்டாட்டி கிட்டயே அவ்வளவு கட் அண்ட் ரைட் ஆஹ் நடந்துக்கிற உன் கிட்ட எதிர்பார்க்க முடியாது தான்..." என்று சொல்லிக் கொண்டே, அவனை அணைத்து விடை கொடுத்தவனோ மேலும், "வீட்டோட கீ, வாசல் ல இருக்கிற ஹவுஸ் கீப்பர் கிட்ட இருக்குடா" என்று சொல்ல, "நான் பார்த்துகிறேன்" என்றான் அவன்...
அதனை தொடர்ந்து, தனிஷாவை முத்தமிட்டு அக்ஷயாவிடம் கொடுத்த கீர்த்தனாவோ, "மன்டே மீட் பண்ணலாம்டி" என்று சொல்ல, அவளும் புன்னகைத்துக் கொண்டே, அங்கிருந்த அனைவரிடமும் விடை பெற்று வீரராகவனுடன் வெளியேறி சென்றாள்.
தனிஷாவை அவள் தூக்கி வைத்து இருக்க, அவன் தான் கார் கதவை அவளுக்காக திறந்து விட்டவன், அவளை பார்க்கவே இல்லை...
அவன் முகம் இறுக்கமாக இருந்தது...
அக்ஷயாவுக்கும் அவன் இறுக்கத்திற்கான காரணம் புரியவும் இல்லை. அவனுக்கு திடீரென்று என்ன ஆனது என்று அக்ஷயாவினால் யூகிக்க முடியவே இல்லை...
அவர்கள் தங்கி இருந்த வீட்டுக்கு வந்து சேரும் வரை இருவரிடத்திலும் மௌனம் தான்...
சற்று நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தவனோ, "சீக்கிரம் ஃப்ரெஷ் ஆய்டு" என்று எங்கோ பார்த்தபடி சொல்லி விட்டு, தொலைபேசியை பார்த்தவாறு ஹாலில் அமர்ந்து விட்டான்...
அக்ஷயாவும் தனிஷாவுடன் அறைக்குள் நுழைந்தவள், புடவையை மாற்றி ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்தாள்.
தனிஷாவுக்கும் பருத்தி உடை அணிந்தவள், குழந்தைக்கு நீரும் புகட்டி விட்டு வெளியேறி வர, அவர்களை பார்க்காமலே அறைக்குள் நுழைந்தான் வீரராகவன்...
சிறிது நேரத்தில் ஆர்ம் கட் ஷார்ட்ஸ் சகிதம் வெளியேறி வந்தான் அவன்...
கொண்டு வந்த பையை முதுகில் அணிந்து இருந்தவனோ அவளது உடை பெட்டியையும் கையில் தூக்கிக் கொண்டு தான் வெளியே வந்தான்...
"ஐயோ நானே தூக்கி இருப்பேன்" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவளை அழுத்தமாக பார்த்தவன், குழந்தையை கண்களால் காட்டி, "எப்படி தூக்குவ?" என்று கேட்டான்...
பதில் இல்லை அவளிடம்...
மௌனித்துப் போனாள்.
அவனை மௌனமாக பின் தொடர்ந்து சென்றவளது பார்வை அவன் முதுகுப் புற தோற்றத்தில் படிந்தது...
ஆறடி உயரம் இருப்பான் என்று யூகித்துக் கொண்டாள்.
அடர்த்தியான கேசம், ஆர்ம் கட் அணிந்து இருந்ததால் ஜிம்மினால் முறுக்கேறிய அவன் புஜங்கள் வெளியே தெரிந்தன...
தன்னையும் மீறி அவள் விழிகள் அவன் தோற்றத்தை பிரமிப்புடன் பார்க்க, சட்டென நிதானத்துக்கு வந்தவள், "இப்போ எதுக்கு இப்படி பார்த்துட்டு இருக்கேன்" என்று நினைத்தபடி தலையை உலுக்கிக் கொண்டே நடந்தாள்...
மீண்டும் நீண்ட தூர பயணம்...
ஒரு அரை மணி நேரம் தான் மௌனம் இருவரிடத்திலும் ஆட்சி செய்தது...
காரில் ஏறியதும் விழித்து இருந்த தனிஷாவோ சற்று நேரத்தில் தூங்கி விட, காரை ஓட்டிக் கொண்டே பக்கவாட்டாக திரும்பி குழந்தையை பார்த்த வீரராகவனோ பெருமூச்சுடன், குரலை செருமினான்...
அவனுக்கு அவளிடம் பேச வேண்டி இருந்தது...
அவளும் திரும்பி அவனை பார்க்க, "இன்னைக்கு கீர்த்தனாவோட பாட்டி கிட்ட என்ன சொல்லலாம்னு நினச்சு இருந்த?" என்று கேட்டான்...
அவளும் பெருமூச்சுடன், "ரெண்டு கல்யாணம்" என்று ஆரம்பிக்க, "அதெல்லாம் சொல்லி ஆகணும்னு அவசியம் இல்லை... சொன்னாலும் அவங்களுக்கு புரியாது... இப்போ கிடைச்ச மரியாதையும் கிடைக்காது... ஒரு ஆம்பிள நாலு கல்யாணம் பண்ணினாலும் அவனை தப்பா பார்க்க மாட்டாங்க... ஆனா அதுவே ஒரு பொண்ணுன்னா கண்டிப்பா தப்பா தான் பார்ப்பாங்க, சிக் ஒஃப் திஸ் சொசைட்டி" என்று ஸ்டீரிங் வீலில் இருந்த ஹார்னை அழுந்த அடித்தபடி காரை செலுத்த, அவன் கோபத்தை அவள் ஆச்சரியமாக தான் பார்த்தாள்.
"அதுக்குன்னு பொய் சொல்லலாமா?" என்று அவள் கேட்க, இப்போது அவளை திரும்பி ஆழ்ந்து பார்த்தவன், "அது ஒன்னும் தப்பே இல்லை... அவங்க அவங்க மனசுக்கு உண்மையா இருந்தா போதும்... அடுத்தவங்களை குறை சொல்லி குற்றம் சொல்லிட்டு இருக்கிறவங்களுக்கு உண்மையா இருக்கணும்னு அவசியமே இல்லை... இதுக்கப்புறம் அவங்களை நீ பார்க்கவே போறது இல்லை... அவங்களுக்கு உன்னை நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை... புரியுதா?" என்று கேட்டான்...
அவளிடம் மௌனம்...
"புரியுதா?" என்று மீண்டும் அதட்டலாக கேட்டான்...
"ம்ம்" என்று மெல்லிய தொனியில் அவளிடம் இருந்து பதில் வர, பெருமூச்சுடன், "இன்னும் கரிகாலனை புருஷன்னு சொல்ல ஆசைப்படுறியா? அப்படி ஆசைப்பட்டா சொல்லிடு, நான் இதுக்கு தடையா இருக்க மாட்டேன்" என்று சொல்லி விட்டான்...
அவளுக்கோ அந்த வார்த்தைகள் சுள்ளென்று வலித்தது...
அவனை ஏறிட்டு பார்த்தாள்...
கண்கள் கலங்கி போயின...
அவனோ அவளை ஒரு கணம் பார்த்து விட்டு பாதையில் கவனத்தை செலுத்த, "தாலியை நான் தானே கழட்டி வீசிட்டு வந்தேன்" என்றாள் தழுதழுத்த குரலில்...
அந்த குரல் அவனையும் அசைத்து பார்த்து இருக்க, ஆழ்ந்த மூச்சை எடுத்தவன், "ஐ ஆம் சாரி" என்று சொல்லிக் கொண்டே காரை ஓட்டினான்...
முதல் முறை அவளிடம் மன்னிப்பு யாசிக்கின்றான்...
ஆனாலும் அவன் பேசியது அவளுக்கு வலித்தது...
முதல் என்றால், என்ன பேசினாலும் துடைத்து எறிந்து விட்டு சென்று இருப்பாள்...
அவன் கதையை கேட்டதில் இருந்தே அவளையும் மீறிய ஈர்ப்பு அவனிடம்...
தன்னை நம்ப வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்க, அவன் நம்பிக்கை இல்லாமல் பேசியது என்னவோ போல இருந்தது...
சின்ன விஷயம் தான், கடந்து விடலாம்...
ஆனால் கடக்க முடியவில்லை...
அவளே தன்னை நினைத்து அதிர்ந்து போனாள்.
சமூகத்தில் இருந்தும், கரிகாலனிடம் இருந்தும் எத்தனையோ வசைவு வார்த்தைகளை கேட்டு இருக்கிறாள்...
அதனுடன் ஒப்பிடும் போது வீரராகவன் பேசியது ஒன்றுமே இல்லை...
ஆனால் அந்த சிறு சந்தேகம் கூட அவளை முள்ளால் குத்தியது போல வலிக்க, பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு தான் அமர்ந்து இருந்தாள்.
அவர்களது கார் நீண்ட தூரம் பயணம் செய்து அவர்கள் வீட்டை நெருங்கிய தருணம் அது...
அக்ஷயாவினால் இன்னுமே அவன் அப்படி பேசியதை ஜீரணிக்க முடியவில்லை...
பொறுத்து பொறுத்து பார்த்தாள், தன்னை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
"இனி இப்படி பேசாதீங்க" என்றாள் திடீரென்று...
வீரராகவனுக்கு இம்மையும் புரியவில்லை, மறுமையும் புரியவே இல்லை...
"எப்படி?" என்றான் அவளை கேள்வியாக பார்த்துக் கொண்டே...
அவள் அவனைப் பார்க்கவில்லை... முன்னால் பார்த்துக் கொண்டே, குழந்தையை அணைத்தபடி அமர்ந்து இருந்தாள்.
அவர்கள் காரும் அவர்கள் வீட்டு வளாகத்தில் நுழைந்து இருக்க, "எனக்கு ஒன்னும் கரிகாலனை புருஷன்னு சொல்லிக்க ஆசை இல்லை" என்றதுமே, அவன் காரை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு அவளை ஆழ்ந்து பார்த்தான்...
அவள் இப்போதும் அவனை பார்க்கவில்லை, குழந்தையை மடியில் வைத்து பற்றிப் பிடித்துக் கொண்டே, கார் கதவை ஒற்றைக் கையால் திறந்தாள். குழந்தையை தூக்கிக் கொண்டே இறங்கியவள் விறு விறுவென வீட்டினுள் நுழைய, வீரராகவனின் விழிகள் இன்னுமே அவள் முதுகை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தன...