ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 22

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 22

கயல்விழியை நோக்கி வந்த கெளதம் அவளிடம் இருந்து புத்தகத்தை இழுத்து எடுத்துக் கொண்டு, "என்ன பழக்கம் இது கயல்? நந்தி போல நடுவுல?" என்று திட்ட அவனின் திடீர் உரிமையான பேச்சில் திகைத்தவள், 'இவன் எப்போ எப்படி இருப்பான் என்றே தெரியலப்பா' என்று மனதுக்குள் சலித்தபடி, "அவங்க ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டாங்க" என்றாள்.

"சரி வெளியே வா" என்று அவன் சொல்ல அவளோ, "இல்ல வரமாட்டேன்" என்று கையை கட்டியபடி மற்றைய பக்கம் முகத்தை திருப்பினாள். பொறுமை இழந்தவன், "வாடி" என்று கையை பிடித்து இழுக்க கையை உதறியவள், "முடியாது" என்றாள். உடனே மித்ரா, "பரவாயில்லை இருக்கட்டும்" என்றாள்.

விஷ்வாவோ அனைத்தையும் கை கட்டி பார்வையாளராகவே நின்றான்.

"உன் கிருஷ்ணா வந்திருக்கான்... வா..." என்றான். அதில் அதிர்ந்தவள், 'கிருஷ்ணாவா?' என்றபடி யோசிக்க, "நீ தான் சொன்ன உன்ன கட்டிக்க ஆசைப்பட்ட கிருஷ்ணா இப்போ வெளிநாட்டுல இருந்து வந்திருக்கான்" என்று சொல்ல, ஒரு கணம் அதிர்ந்தவள், 'உண்மையாக இருக்குமோ?' என்று யோசித்தபடி பயந்து எழுந்தாள்.

வாசல் வரை நடந்தவன், "என்ன வரலையா?" என்று கேட்க பயத்துடன் எழுந்தவள் மெதுவாக அவனுடன் சென்றாள். விஷ்வாவோ அனைத்தையும் புருவம் சுருக்கி பார்த்துக் கொண்டு இருந்தான்.

வெளியில் வந்தவள், "எங்கே கிருஷ்ணா?" என்று கேட்க சத்தமாக சிரித்தவன், "உன் முன்னாடியே நிக்கிறேனே உன் புருஷன்... கெளதம் கிருஷ்ணா" என்று சொல்ல அவனை முறைத்தவள், "போடா" என்று திட்டி விட்டு முன்னே சென்றவளின் பின்னால் சென்றவன் அவள் வெளியில் ஒரு கதிரையில் இருக்க அவள் அருகில் இருந்தான்.

"இப்போ எதுக்கு என் பின்னாடி வர்றீங்க?" என்று கேட்க அதே கேள்வி தான் அவனிடத்திலும் இருந்தது.

அவனால் அவளை தள்ளி வைக்க முடியவில்லை. "உனக்கு உண்மையாவே கிருஷ்ணாவை பிடிக்குமா?" என்று கேட்க அவளோ சற்றும் தாமதிக்காது, "எஸ்... ரொம்ப பிடிக்கும்" என்றாள்.

"அவன் திரும்ப வந்தா என்ன பண்ணுவ?" என்று அவளை கூர்ந்து பார்த்தபடி கேட்க, 'ஆஹா இவனுக்கு பொறாமை தொடங்கிடுச்சு' என்று தவறாக கணித்தவள் சுவாரசியமாக, "உங்கள டிவோர்ஸ் பண்ணிட்டு அவனை கல்யாணம் பண்ணுவேன்" என்றாள்.

"அப்போ உனக்கு என்ன பிடிக்கலையா?" என்று நெகிழ்ந்த குரலில் அவள் மீது கண்ணை எடுக்காமல் கேட்க அவளோ ஆடி போனாள். இல்லை என்று பொய் சொல்லவும் முடியாமல் ஆம் என்று உண்மையை சொல்லவும் முடியாமல் தவித்தவள், "எதுக்கு வெட்டி பேச்சு?" என்றபடி எழுந்து அவ்விடத்தில் இருந்து போக அவளின் தடுமாற்றத்தை சுவாரசியமாக ரசித்தவன் பின்னால் எழுந்து அவள் கையை பிடித்தவன், "சொல்லிட்டு போ" என்றான்.

உண்மையை சொல்ல முடியாமல் அவஸ்தை பட்டவள் அவனை பார்த்து தைரியமாக, "காதலை மனசுக்குள்ள வச்சிட்டு நடிக்கிற இந்த கௌதமை விட சின்ன வயசிலேயே தைரியமாக காதலை சொல்லி என் மேல அன்பு வச்ச கிருஷ்ணாவை எனக்கு பிடிக்கும்" என்றாள் அவன் முன் தான் காதலை அவனிடம் யாசித்து அவமானப்பட கூடாது என்ற ஒரே காரணத்துக்காக.

அவள் கூறிய பதிலில் உடனே அவள் கையிலிருந்து தனது கையை எடுத்தவன் கைகளை தனது மார்புக்கு குறுக்காக கட்டி அவளை பார்த்துக் கொண்டு நிற்க அவளோ கனத்த மனதுடன் மெதுவாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

அவளின் நடை அவனுக்கும் மனப்பாரத்தை கூட்ட, 'நீ என்ன பதில் சொன்னாலும் எனக்கு உன் மேல காதல் கூடுதுடி... நீ உண்மையா காதலிக்கிற கௌதமும் நீ காதலிக்கிற போல நடிக்கிற கிருஷ்ணாவும் ஒன்று தான் டி... என்னால உன்ன தள்ளி வைக்க முடியல... ஆனா நான் உன் அப்பாவை கொல்ல போறது தெரிஞ்சா நீ என்ன தள்ளி வச்சுருவ என்று பயமா இருக்கு. உன் அப்பாவை பத்தி உன் கிட்ட சொல்லி உன்ன கூனி குறுக வைக்கவும் மனசில்லை.' என்று மானசீகமாக அவளுடன் பேசியவன் பெருமூச்சை எடுத்து இனி அவளுடன் நெருக்கமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என முடிவெடுத்தான்.

ஆனால் விதி யாரை விட்டது?

நிகழ்ச்சி தொடங்கியதும் மித்ரா வெள்ளையும் சிவப்பும் சேர்ந்த லெஹங்காவில் தேவதை போல வர அவளருகில் அதுக்கு பொருத்தமான வெள்ளை பாண்ட் வெள்ளை கோர்ட் சிவப்பு ஷர்ட் என விஷ்வாவும் அருகில் வந்து சேர்ந்தான்.

பாடல் ஒலிக்க தொடங்க விஷ்வாவும் மித்ராவும் ஜோடியாக ஆட தொடங்கினர். சாணக்கியனோ வசுந்தராவை பார்க்க, 'ஐயோ இவர் பார்வையே சரி இல்லையே... ஆட கூப்பிடுவாரோ' என்று யோசித்து முடிக்க முதல் அவன் கை அவளை நோக்கி நீண்டது. அவளோ கண்களை விரித்து அதிர்ச்சியாக பார்க்க அவளை அவன் கைகளை தர சொல்லி முறைத்தான்.

பயத்தில் மெதுவாக தனது கையை அவன் கை மீது வைத்தாள். கர்ப்பமான பெண் என்பதால் மெல்லிய அசைவுகளுடன் அவளுடன் ஆட கௌதமோ உணர்ச்சிவசப்பட்டு, "கம் ஆன் மச்சி" என்று விசிலடித்தான்.

எல்லாரும் அவனை திரும்பி பார்க்க, 'ஐயோ அவசரப்பட்டு விட்டேனே' என்று யோசித்தவன் எல்லாரையும் பார்த்து சிரித்து வைத்தான். மகாலிங்கமோ சித்ராவிடம் கைகளை நீட்ட கௌதம் மனதுக்குள், 'உனக்கெல்லாம் டான்ஸ் தான் ஒரு கேடு' என்று திட்டிக் கொண்டிருந்தான்.

கயலோ ஆட யாரும் இல்லாமல் தனித்து இருக்க அங்கு இருந்தவர்கள், "உன் புருஷனோட ஆடலயா?" என்று கேட்க அவளோ மனதுக்குள், 'ஆட வந்துட்டாலும்' என்று சொன்னவள், "அவருக்கு ஆட தெரியாது" என்றாள்.

சொல்லி விட்டு தான் நிமிர்ந்தாள் அவளுக்கு மிக அருகில் அவன் நின்று முறைத்துக் கொண்டிருந்தான். அவள் காதுக்கருகில் மீசை ரோமம் உரச குனிந்தவன், "நான் எனக்கு ஆட தெரியாதுனு உன் கிட்ட சொன்னேனா? உன் அப்பாவே அப்படி இப்படி கையை ஆட்டி ஆடும் போது எனக்கு என்ன குறைச்சல்?“ என்று கேட்க அவனை நிமிர்ந்து பார்த்தவள், "அவங்கள சமாளிக்க தான் அப்படி சொன்னேன்" என்றாள் தன்மையாக.

"அப்போ உனக்கு ஆட தெரியாதுனு சொல்ல வேண்டியது தானே?" என்றான் சிரிப்பை அடக்கி அவளை சீண்டும் பொருட்டு.

"இதெல்லாம் ஒரு பிரச்சனையா ?" என்று சலித்த படி கேட்டாள். "அது சரி எனக்கு உன் கிருஷ்ணா போல ஆட வராது தான்." என்றான். அவளோ மனதுக்குள், 'கிருஷ்ணா ஆடுவானா ? அவன் கையை இரு தடவை அசைக்கவே பாட்டு முடிஞ்சிரும்' என்று நினைத்தவள் அவனை வெற்று பார்வை பார்த்தாள்.

அனைவரும் ஆடி முடிய களைப்புடன் சிறிது ஓய்வு எடுத்தனர்.

நிகழ்ச்சி தொடங்க அனைவரும் ஜோடி ஜோடியாக இருக்க வேறு வழி இல்லாமல் கயலும் கௌதமும் ஒன்றாக இருந்தனர். அனைவர்க்கும் மருதாணி இடப்பட கயல் அருகில் வந்த மருதாணி இடும் பெண்ணிடம் கயல் ஒரு டிசைனை காட்டினாள்.

உடனே கெளதம், "அதெல்லாம் தேவையில்லை" என்றவன் வேறு டிசைனை சொல்ல கடுப்பான கயல், "என் கைக்கு நான் பிடிச்சதைத்தான் போடுவேன்" என்றாள். அவள் பேசியதை சட்டை செய்யாதவன், "நான் சொல்றத போடுங்க" என்று சொல்ல, "இல்ல வேணாம்" என்ற கயலிடம் போட வந்தவர், "அவருக்கு பிடிச்சதை போடுங்க... அது தான் நல்லா இருக்கு" என்று கூற கௌதமோ, "அவமானப்படாதே" என்று கூறி அன்று அவள் செய்தது பொலவே செய்தான்.

அவனை முறைத்தபடி, "எதையாச்சும் போட்டு தொலைங்க" என்று கடுப்புடன் கூற அந்த பெண்ணும் அவளுக்கு மருதாணி போட தொடங்கினாள்.

மருதாணி போட்டுக் கொண்டிருக்கும் போது இடையில் அந்த பெண்ணை நெருங்கி கெளதம் அவள் காதுக்குள் ஏதோ ஓத அவளும் வெட்கப்பட்டபடி சரி என்று தலை ஆட்டினாள். இதை பார்த்து கயலின் வயிறு பற்றி எரிந்தது . மனதுக்குள், 'அதென்ன அப்படி ஒரு ரகசியம்? அதுக்கு இவ வெட்கப்படுறா வேற... ச்ச' என்று நினைத்தவளின் முகத்தில் வெளிப்படையாகவே எள்ளும் கொள்ளும் வெடித்தது.

அவளின் முக மாற்றத்தை கவனித்தவன் கண்டும் காணாமல் அவள் என்ன யோசித்து இருப்பாள் என்று யூகித்து சிரித்தபடி இருந்தான். மருதாணி போட்டு முடிந்ததும் முதலில் எழுந்தவளுக்கு எழ முடியாமல் புடவை தடுக்க அவளை பிடித்து தூக்கி விட்டான் கெளதம்.

அவன் உதவியுடன் எழுந்தவளுக்கு அவனை கொஞ்சம் வெறுப்பேற்ற சந்தர்ப்பம் கிடைத்தது என்று மனம் குதூகலிக்க, நடந்துச் சென்று ஒரு கதிரையில் இருந்தவள், "எனக்கு தண்ணீர் வேணும்" என்றாள் இரு கைகளையும் மருதாணி அழியாமல் உயர்த்தியபடி.

அவள் திட்டத்தை சரியாக கணித்தவன் அவளை முறைத்தபடி தண்ணீரை எடுத்து நீட்ட, "கொஞ்சமும் மூளை இல்லையா? நான் எப்படி குடிக்கிறது" என்று கேட்க வேறு வழி இல்லாமல் தண்ணீரை அவள் வாயில் வைத்து குடிக்க வைத்தான். குடித்தவள் உடனே, "எனக்கு பசிக்குது" என்றாள். "வாட் ? பசிக்குதா? இப்போ நேரம் என்ன? இன்னும் யாரும் மருதாணி போட்டு கூட முடியல" என்று சொல்ல அவளோ, "அதெல்லாம் தெரியாது எனக்கு பசிக்குது" என்றாள் குழந்தை போல.

"எல்லாம் என் விதி" என்று வெளிப்படையாக நொந்தவன் சாப்பாடு எடுத்து ஊட்ட போக அவன் மனதுக்குள் அவள் ஊட்டி விட்ட நினைவு வந்து போனது. அதை நினைத்து முகத்தில் புன்னகை தவழ சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாகவே சாப்பாட்டை ஊட்டி விட்டான். அதை பார்த்த கயல் மனதுக்குள், 'இவன் கடுப்பாவான் என்று பார்த்தால் சிரிக்கிறானே... கயல் விடாதே அடுத்த பிளான் போடு' என்று யோசித்தவள் சாப்பிட்டு முடிய, "தண்ணீர்" என்றாள்.

தண்ணீர் குடிக்கும் போது வேணும் என்றே அவனில் ஊற்று படட்டும் என்று அதை முழங்கையால் தவறுதலாக தட்டுப்படுவது போல் தட்டி விட அது அவளின் புடவையிலேயே ஊற்று பட்டது. உடனே அவன் சிரித்தபடி, "உன் பிளான் எப்போவும் சொதப்பல் தான்" என்றான்.

அது அவளுக்கு கோபம் வர, "கொஞ்சமும் அறிவில்லையா?" என்று கேட்க புன் சிரிப்புடன், "சாரிமா இதோ துடைக்கிறேன்" என்று கண்ணடித்தபடி அவளை டிஷ்யூ உடன் நெருங்க அவளோ, "ஐயோ" என்றபடி மற்றைய பக்கம் திரும்பி நின்றாள்.

"என்ன துடைக்க வேணாமா?" என்று கேட்க, "இல்ல வேணாம்" என்றவள் அவனை நோக்கி திரும்பவில்லை.

அவனோ சுற்றி வந்து, "இல்ல பரவாயில்ல துடைத்து விடுறேன்" என்றதும், "அந்த அக்கா கிட்ட கொடுங்க" என்றவள், "அக்கா கொஞ்சம் துடைத்து விடுங்க" என்றாள் அவசர அவசரமாக.

டிஷ்யூவை அங்கு நின்ற பெண்ணிடம் கொடுத்தவன், "இதுக்கு மட்டும் அடுத்தவங்க தேவையா? நான் கொடுத்து வச்சது அவ்வளவு தான்" என்று உதட்டை சுளித்து அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் மூச்சு காற்று படுமளவுக்கு நெருங்கி நின்று கூறியவன் அவ்விடத்தில் இருந்து அகன்றான். அவன் நெருக்கத்தில் மூச்சடைக்க நின்றவள் அவன் சென்றதும் தான் ஆழ்ந்த மூச்செடுத்து விட்டாள்.

அவனாக அவளை விட்டு விலக நினைத்தாலும் சந்தர்ப்பங்கள் இருவரையும் நெருங்கவே செய்தன. அவள் நெருக்கத்தில் கெளதம் தன்னிலை மறந்து அவளுடன் சேட்டை, கிண்டல், சீண்டல் என அவளுடன் ஒன்றி விடுவான் பிறகு நிதானமானதும் விலக யோசிப்பான் என அவன் நடத்தை கண்ணாமூச்சி ஆட்டமாகவே இருந்தது.

பழி எடுத்தலுக்கும் காதலுக்கும் இடையில் தத்தளித்துக் கொண்டிருந்தான் கெளதம்.

மெஹந்தி போட்ட வசுந்தராவை அணைவாக தூக்கிய சாணக்கியன், "எப்போ வீட்டுக்கு வர்ற ?" என்று கேட்க அவனை கூர்ந்து பார்த்தவள் அவன் மாற்றத்தில் சந்தோஷப்பட்டு அவனை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல், "இப்போனாலும் எனக்கு ஓகே" என்றாள் சிரித்தபடி.

அதை கேட்டு அவளை பார்த்து கண் சிமிட்டியவன் அழகாக சிரித்தபடி, "மித்ரா கல்யாணம் முடியட்டும்" என்றான். அதுக்கு அவனை பார்த்து சம்மதமாக தலை ஆட்டியவளிடம், "பசிக்குதா?" என்று கேட்க, "இல்லை... எல்லாம் முடியட்டும்" என்றாள்.

இருவரும் சந்தோஷமான மன நிலையில் அருகருகே இருந்து நாட்டு நடப்பு பற்றியும் தொகுதி வேலை பற்றியும் பேசினர். அந்நேரம் அவர்களை தாண்டி மித்ராவுடன் சென்ற விஷ்வாவுக்கு அவர்கள் பேச்சு காதில் விழ மித்ராவை அழைத்துக் கொண்டு அவர்கள் அருகே சென்றவன், "நல்லா சேர்ந்திருக்காங்க ஜோடியா... காதலிக்கிறவங்க பேசுற பேச்சை பார்த்தியா மித்ரா? நாட்டு நடப்பு... நீங்க எல்லாம் காதலுக்கே சாப கேடு" என்று சொல்லி சிரிக்க அவன் முதுகில் செல்லமாக ஓரு அடி போட்ட சாணக்கியன் அவனுடன் சேர்ந்து சிரித்தான்.

கௌதமோ வெளியில் புகைக்கச் சென்று விட அந்நேரம் தனியாக இருந்த கயல் அனைவரும் ஒன்று கூடியதை பார்த்து அவ்விடத்துக்கு விரைந்தபடி, "என்ன இங்கு ஒரே சத்தம் என்னை விட்டுட்டு?" என்றாள். உடனே விஷ்வா, "நீங்க பண்ணின அலப்பறைய பற்றி தான் பேசிக்கிட்டு இருக்கோம்" என்று சொல்ல, "அப்படி நான் என்ன பண்ணிட்டேன்?" என்றபடி அங்கு அமர்ந்தாள்.

உடனே மித்ரா, "சாப்பாடு ஊட்டுறதென்ன? தண்ணீர் கொடுக்கிறது என்ன?ஆ... அத துடைச்சு விட வர்றது என்ன? ஒரே ரொமான்ஸ் தான்." என்று சொல்ல அதை கேட்டு அனைவரும் சிரிக்க, "இது ஒண்ணும் பெரிய ஜோக் இல்லயே இப்படி சிரிக்கிறதுக்கு..." என்றாள் கயல், மித்ராவை முறைத்தபடி.

அந்நேரம் கெளதம் உள்ளே வர, அதை பார்த்த சாணக்கியன், "அங்க பாரும்மா உன் ஹீரோ வந்துட்டார்" என்று சொல்ல திரும்பி பார்த்தவள் எழும்பி நின்று, "என்னை எல்லாரும் துரத்தி விடுறதுலேயே இருங்க" என்று சலித்தாள். "நாங்க ஒண்ணும் உன்ன போக சொல்லலையே... வந்துட்டார் என்று மட்டும் தானே சொன்னோம்..." என்று சாணக்கியன் கேட்க, 'ஐயையோ எப்படி சமாளிப்பேன்?' என்று யோசித்த கயல் அவர்களை கண்டுக்காமல் முகத்தை வெட்டியபடி கௌதமை நோக்கிச் சென்றாள். அவளுக்கு அவர்களின் சிரிப்பு சத்தம் நன்றாக காதில் விழ, "ச்ச எப்போ பாரு அவமானப்பட்டுக் கிட்டு... கயல் உன் நிலைமையை பாருடி..." என்று தனக்கு தானே புலம்பியவள் கௌதமருகில் வந்தாள்.

அவளை கூர்ந்து பார்த்த கெளதம், "இப்போ என்ன செய்யணும்?" என்று கேட்க "ஒண்ணும் தேவையில்லை" என்றவள், "ரொம்ப நாறுது சிகெரட்" என்று முகத்தை சுளித்த படி முன்னால் சென்றாள். அவள் செல்லும் போது அவள் புடவை முந்தானை நிலத்தில் அரைய கால்களில் மிதி பட்டது.

அதை கண்டவன், "கயல் நில்லு" என்றபடி அதை எடுத்து அவளை சுற்றி அவள் இடையில் சொருகி விட்டான். அவன் நெருக்கத்திலும் ஸ்பரிசத்திலும் சிலிர்த்தவள் உணர்ச்சிகளை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு அவனை பார்த்தபடி நின்றாள்.

அதை அவதானித்தவன், "உன் அண்ணன்மார் நம்மள தான் பார்க்கிறாங்க. இப்படி வச்ச கண் வாங்காம என்ன பார்த்து திரும்ப அவமானப்படாதே" என்றவன் கேலியாக அவளை பார்த்து சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தான். அவளோ மனதுக்குள், 'கயல் தொடந்து அவமானப்படுறியே...கன்ட்ரோல் பண்ணு கன்ட்ரோல் பண்ணு' என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள். மருதாணி வைத்த மனைவிமாருக்கு கணவன் மார் ஊட்டி விட அழகான காட்சிகளுடன் அந்த நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.

வீடு திரும்பும் போது சித்ரா மகாலிங்கம் வாகனத்தில் ஏறி விட சாவகாசமாக கயலும் கௌதமும் இருந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.


அடுத்த நாள் காலையில் "கிருஷ்ணா..." என்ற சித்ராவின் பெரிய சத்தத்தில் எல்லாரும் ஹாலுக்குள் ஓடிச் செல்ல அவரை அணைத்தபடி நல்ல குண்டாக தொப்பையுடன் வெள்ளை நிறத்தில் ஒருத்தன் நின்றிருந்தான். அவனை பார்த்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான அதிர்ச்சியுடன் நின்றிருந்தனர்.
 
Top