அத்தியாயம் 22
அவர்களை பார்த்துக் கொண்டே சுவரில் சாய்ந்து நின்றாள்.தலை குனியவில்லை அவள், குனிய வேண்டிய அவசியமும் இல்லை அவளுக்கு...
மகாலக்ஷ்மியோ, "உட்காருங்க" என்று சொல்ல, யாதவ் கிருஷ்ணாவும் வசந்தியும் தேன்மொழியை பார்த்துக் கொண்டே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்கள்...
மகாலக்ஷ்மியோ, "காஃபி சாப்பிடுறீங்களா?" என்று கேட்டார்...
அவர்கள் பேசுவதற்கு தடையாக அவர் இருக்க விரும்பவில்லை... அதனாலேயே வந்ததும் இந்த கேள்வியை கேட்டு விட்டு அங்கிருந்து நகர நினைத்து இருந்தார்...
வசந்தியும் ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே சம்மதமாக தலையாட்ட, மகாலக்ஷ்மியும் அவர்களுக்கு காஃபி தயாரிப்பதற்காக சமையலறைக்குள் சென்று இருந்தார்...
யாதவ் கிருஷ்ணாவும் அங்கே இருந்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டே நடக்க ஆரம்பித்து இருந்தான்...
இப்போது அவர்களுக்கு பேசுவதற்கான அவகாசம் கிடைத்து இருக்க, "தேன்மொழி, கோவில் போய்ட்டு வந்ததும் தான் எல்லாமே கேள்விப்பட்டேன்... எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு... வீட்டுக்கு வா, நாம பேசி ஒரு முடிவுக்கு வரலாம்..." என்றார் வசந்தி...
அவளோ அழுத்தமாக இல்லை என்று தலையாட்டியவள், "செய்யாத தப்புக்கு நான் பழி ஏத்துக்கிட்டு அங்கே இருக்க முடியாது" என்றாள் சைகை மொழியில்.
வசந்தியோ, "இங்க நீ வந்தா மட்டும் உன் மேல விழுந்த பழி இல்லன்னு ஆகிடுமா? அங்கே வந்து போராட வேண்டியது தானே" என்றார்...
அவளோ, "சாட்சி எல்லாம் எனக்கு எதிரா இருக்கு, ஆனா என் மனசாட்சிக்கு தெரியும் நான் தப்பு பண்ணலன்னு, வாழ்க்கைல போராடியே களைச்சு போய்ட்டேன் அத்தை" என்று சைகையால் சொன்னவளது கண்களில் இருந்து இரு சொட்டு கண்ணீர் விழ, அவளை பரிதாபமாக பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தார் வசந்தி...
கண்களை துடைத்து விட்டு மேலும் தொடர்ந்தவளோ, "உங்க பையன நான் பணத்துக்காக கல்யாணம் பண்ணிக்கல, காதலில தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..." என்று கையசைத்து சொல்லிக் கொண்டவளுக்கு விம்மலுடன் அழுகை வர கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள்.
வசந்தியோ, "எனக்கு சாட்சி எல்லாம் தாண்டி உன் மேல நம்பிக்கை இருக்கு, எல்லாரையும் விடு, யாதவ்வை பற்றி யோசிச்சு பாரு, இன்னைக்கு ஒரு நாள் நீ இல்லன்னு சொன்னதுமே என்ன பாடு பட்டான் தெரியுமா?" என்று கேட்டார்...
தேன்மொழியோ, "எனக்கு புரியுது... அவனுக்கு க்ளாஸ் எடுக்க நான் கண்டிப்பா வரேன்... எனக்கு ஒரு வாரம் மட்டும் டைம் கொடுங்க, என் மனசு கொஞ்சம் நிதானம் ஆகணும்... ஆனா இப்போ இருக்கிற மனநிலைல உங்க மருமகளா அங்க வந்து வாழ முடியுமான்னு தெரியல" என்று சைகை மொழியில் சொன்னவளோ இரு கரங்களையும் கூப்பி இறைஞ்சினாள்...
"வம்சி கிட்ட சொன்னியா?" என்று கேட்டார்...
அவள் இல்லை என்று தலையாட்டினாள்...
எழுந்து அவள் அருகே வந்து, அவள் கையை பற்றி இறக்கி விட்ட வசந்தியோ, "சரி உனக்கான டைமை நீ எடுத்துக்கோ... வம்சி வரட்டும் இது சம்பந்தமா பேசி, தீர விசாரிச்சுடலாம்... எனக்கு இப்போவும் உன் மேல நம்பிக்கை இருக்கு" என்று சொல்ல, அவளோ கலங்கிய கண்களால் நன்றி சொன்னாள்.
அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே கையில் காஃபியுடன் வந்து விட்டார் மகாலக்ஷ்மி...
உடனே வசந்தியும் யாதவ் கிருஷ்ணாவும் வந்து நாற்காலியில் அமர்ந்து கொள்ள, அவர்களுக்கு காஃபி பரிமாறப்பட்டது...
வசந்தியோ மகாலக்ஷ்மியிடம், "தேன்மொழி ஏதும் சொன்னாளா?" என்று கேட்க, அவரோ பெருமூச்சுடன் இல்லை என்று தலையாட்டியவர், "நான் வருத்தப்படுவேன்னு எதுவுமே சொல்லல, கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறா, அவளுக்கு எப்போ சொல்ல தோணுதோ சொல்லட்டும்" என்றார்...
அவர் குரலிலும் ஒரு தழுதழுப்பு...
உடனே வசந்தி தேன்மொழியை பார்க்க, அவளும் இல்லை என்கின்ற ரீதியில் தலையாட்டினாள்...
இப்போது வசந்தி மகாலக்ஷ்மியை பார்த்தவர், "சில கஷ்டங்கள் வர தான் செய்யும் மகா, அவ நல்ல மனசுக்கு எல்லாமே சீக்கிரம் சரி ஆகிடும்... வம்சி வந்துட்டா நிறய பிரச்சனை முடிஞ்சிடும்... அவனுக்கு எப்படி எத ஹாண்டில் பண்ணணும்னு தெரியும்" என்றார்.
மகாலக்ஷ்மியோ, "உங்க மேல நம்பிக்கை இருக்கு.... அதனால தான் நான் அமைதியா இருக்கேன்" என்று சொன்னவருக்கு கண்கள் கலங்கி போக, வசந்தியிடம் பெருமூச்சு மட்டுமே பதிலாக...
காஃபியை குடித்து முடித்ததுமே, "அண்ணி, நம்ம கூட வர்றாங்க தானே" என்று சைகையில் கேட்டான் யாதவ் கிருஷ்ணா...
வசந்தி பதில் சொல்ல முதலே, அவன் முன்னே போய் நின்ற தேன்மொழியோ, "எனக்கு அம்மா கூட கொஞ்ச நாள் இருக்கணும் போல இருக்கு யாதவ், சீக்கிரம் வந்திடுறேன்" என்றாள்...
வேறு ஏதும் சொன்னால் அடம்பிடித்து இருப்பான்... தாயுடன் இருக்க வேண்டும் என்று அவள் சொன்னதை புரிந்து கொண்டவனோ, "சீக்கிரம் வந்துடுங்க" என்று சைகையால் சொல்லி விட்டு புறப்பட, தேன்மொழியோ காரில் ஏறியவர்களை கதவு நிலையில் சாய்ந்து நின்று பார்த்தாள்.
அதுவரை இருந்த அழுத்தத்தில் கொஞ்சம் குறைந்த உணர்வு...
வசந்தி தன்னை நம்புகிறார் என்பதே அவளுக்கு பெரிய விடுதலையாக இருந்தது...
ஆனால் அவள் எண்ணம் முழுதும் சுற்றி வந்தது என்னவோ வம்சி கிருஷ்ணாவை தான்... மீண்டும் அறைக்குள் வந்து தனது அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.
அவன் இன்னுமே பதில் அனுப்பவில்லை...
ஒரு பெருமூச்சு மட்டுமே அவளிடம்...
மகாலக்ஷ்மியும் துருவி துருவி ஒன்றும் கேட்கவில்லை...
அவளுக்கான இடைவெளியை கொடுத்து விலகி தான் நின்றார்...
இதே சமயம் வீட்டுக்கு வந்த வசந்தியோ, அன்று இரவு குருமூர்த்தியிடம், "தேன்மொழி தப்பு பண்ணுன போல தெரியலைங்க" என்றார்.
அவரோ, "ஆனா சாட்சி எல்லாம் தேன்மொழிக்கு எதிரா தானே இருக்கு" என்றார்...
இதற்கு வசந்தியிடம் பதில் ஏது...
மௌனமாகி விட்டார்...
அடுத்த நாள் இருந்து தேன்மொழி தனது வீட்டில் இருந்தே ஸ்கூலுக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள்...
பக்கத்து வீட்டு பெண்மணி சும்மா இருப்பாரா என்ன?.
"என்ன மகா, பொண்ணு வாழா வெட்டியா வந்துட்டா போல" என்று ஆரம்பிக்க மகாலக்ஷ்மிக்கு ஆத்திரம்...
"மாப்பிள்ளை வெளிநாட்டுக்கு போய் இருக்காருன்னு கொஞ்ச நாள் தங்கிட்டு போக வந்தா, நீ சந்தோஷப்படுற அளவுக்கு ஒண்ணும் நடந்துடல" என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள் நுழைந்து கொண்டார்...
அக்கம் பக்கத்தினரின் வார்த்தைகளுக்கு பயந்து, பெண்ணை புகுந்த வீட்டிலேயே கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு வாழ சொல்லும் தாய் அல்ல மகாலக்ஷ்மி...
ஊரார் என்ன பேசினாலும் தனது மகளை அரவணைத்துக் கொள்ள அவர் தயாராக தான் இருக்கின்றார்...
நாட்களும் கடந்து ஒரு வாரம் வேகமாக முடிந்து விட்டது...
அன்று காலையில் எழுந்த தேன்மொழியோ கெலெண்டரை பார்த்தாள்.
அவன் வந்து இறங்கும் நாள்...
இதயம் வேகமாக துடித்தது...
அவன் என்ன சொல்வானோ என்கின்ற பதட்டம்...
அவன் வேறு அவளுடன் பேசுவது இல்லை...
அவள் மனம் எதிர்மறையாகவே யோசித்தது...
தலையை உலுக்கி தன்னை நிலைப்படுத்திக் கொண்டே, ஸ்கூலுக்கு செல்ல ஆயத்தமானாள்...
சாப்பிடவும் மனமில்லை, பெயருக்கு ரெண்டு இட்லிகளை வாயில் போட்டவள், விரைவாகவே கிளம்பி விட்டாள்.
இதே சமயம் விமானத்தில் பிசினஸ் க்ளாசில் பயணம் செய்து கொண்டு இருந்தான் வம்சி கிருஷ்ணா...
அவனை தேடி வந்து இருந்தான் அவனது நெருங்கிய நண்பனும், இசையமைப்பாளருமான ஜெய்...
"மச்சி எனக்கு ஒரு ஃபேவர் பண்ண முடியுமா?"; என்று கேட்டான் ஜெய்...
"சொல்லுடா" என்று வம்சி கிருஷ்ணா சொல்ல, அவனோ, "என்னோட ஆல்பம் ஒண்ணுக்கு உன் அம்மாவோட வாய்ஸ் வேணும்" என்றான்...
வம்சி கிருஷ்ணாவோ அவனை புருவம் சுருக்கி பார்த்து விட்டு அருகே அமர்ந்து இருந்த கெளதம் கிருஷ்ணாவை பார்த்தான்...
அவனும் ஜெய் பேசுவதை தான் கேட்டுக் கொண்டு இருந்தான்.
"அம்மா இப்போ வெளியில பாடுறது இல்லையே" என்றான் கெளதம் கிருஷ்ணா...
"அது நானும் கேள்விப்பட்டேன்... இவ்ளோ சூப்பரான வாய்ஸ்ஸை வச்சிட்டு ஏன் பாடுறது இல்ல? அவங்க பழைய பாட்டெல்லாம் கேட்டேன்... ப்பா, அப்படியே மெர்சல் ஆயிட்டேன்" என்றான் ஜெய்...
வம்சி கிருஷ்ணாவோ, "அது ஏன்னு எங்களுக்கும் தெரியல... கேட்டாலே இஷ்டம் இல்லன்னு சொல்லிடுவாங்க... அவங்க வெளியே பாடுறத நிறுத்தியே பல வருஷம் ஆயிடுச்சு..." என்றான்...
"ப்ளீஸ் வம்சி, எனக்காக ஒரு தடவை கேட்டு பாரேன்" என்று சொல்ல, வம்சி கிருஷ்ணாவோ சிறிது நேரம் யோசித்து விட்டு, "கேட்டு பார்க்கிறேன் ஜெய்... அதிகமா இல்லன்னு தான் சொல்வாங்க, உன் மன ஆறுதலுக்காக கேட்டு பார்க்கிறேன்" என்றான்...
ஜெய்யும், "தேங்க்ஸ் டா" என்று சொல்லி விட்டு விடை பெற்று இருந்தான்...
விமான நிலையமும் வந்து விட்டது...
இருவரும் வீட்டில் இருந்து அவர்களை ஏற்றி செல்ல வந்த காரில் ஏறிக் கொண்டார்கள்...
"என்னடா, வீட்டுக்கு போய் மறுபடியும் சண்டையா?" என்று கெளதம் கிருஷ்ணா கேட்க, "ச்ச இல்லடா, அவ பாவம்... கண்டிப்பா யோசிச்சிட்டு இருப்பா... நிதானமா பேசலாம்" என்றான் வம்சி கிருஷ்ணா...
"அன்னைக்கு பழி எல்லாம் வாங்குனியே... இன்னைக்கு இப்படி பேசுற?" என்று கெளதம் கிருஷ்ணா கேட்க, "அன்னைக்கு கோபம் இருந்திச்சு... இப்போ கம்மி ஆயிடுச்சு... நீ சொல்றதும் சரி தான்... அதே நேரம் என் மேலயும் தப்பு இருக்கு... அவ என் கிட்ட அவ பிரச்சனையை சொல்ற அளவுக்கு நான் அவ கிட்ட நடந்துக்கலன்னு தோணுது... இன்னைக்கு அவ கிட்ட நிறைய பேசணும்" என்று சொன்னவன் அறியவில்லை அவள் பேசுவதற்காக வீட்டில் இருக்கவே மாட்டாள் என்று...
வீட்டுக்கும் வந்து விட்டான்.
குருமூர்த்தி அன்று அவனிடம் பேசுவதற்காகவே வீட்டில் நின்று இருந்தார்...
கெளதம் கிருஷ்ணாவும் வம்சி கிருஷ்ணாவும் வீட்டினுள் காலடி எடுத்து வைத்த அடுத்த கணமே ஹாலினுள் இருந்த வேதவல்லியோ, "உன் பொண்டாட்டி" என்று ஆரம்பிக்க, "அம்மா" என்கின்ற அதட்டல் அங்கிருந்த குருமூர்த்தியிடம்...
வாயை கப்பென்று மூடிக் கொண்டார் வேதவல்லி...
"என்ன பொண்டாட்டி?" என்று கேள்வியாக கேட்டான் வம்சி கிருஷ்ணா...
"நீ குளிச்சிட்டு வாப்பா பேசலாம்" என்று குருமூர்த்தி சொல்ல, அவனோ, "ம்ம் தேன்மொழி ஸ்கூல் போய்ட்டாளா?" என்று அங்கே நின்று இருந்த வசந்தியை பார்த்து கேட்க, அவரோ பதில் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தார்...
அனைவரையும் புருவம் சுருக்கி யோசனையாக பார்த்த வம்சி கிருஷ்ணாவும் கெளதம் கிருஷ்ணாவுடன் மாடியேறி விட்டான்…
இருவரும் குளித்து விட்டு ஒன்றாக கீழே இறங்கினார்கள்...
குருமூர்த்தியோ, "சாப்பிட்டு வாப்பா பேசலாம்" என்றார் வம்சி கிருஷ்ணாவை பார்த்து...
"நான் ஃப்லைட்ல சாப்பிட்டேன்... சொல்லுங்க என்ன விஷயம்?" என்று கேட்டுக் கொண்டே, அவருக்கு முன்னே இருந்த சோஃபாவில் அவன் அமர்ந்து விட, "எனக்கு பசிக்குது" என்று சொன்ன கெளதம் கிருஷ்ணாவோ சாப்பிட அமர்ந்து விட்டான்.
குருமூர்த்தி வாயை திறக்க முதலே, "எத சொல்ல சொல்ற? உன் திருட்டு பொண்டாட்டி பண்ணிட்டு போன அசிங்கத்தை சொல்ல சொல்றியா?" என்று வேதவல்லி கேட்க, சட்டென அவரை திரும்பி அழுத்தமாக பார்த்தவன், "வாட்?" என்றான்...
"அவங்க சொல்றது உண்மை தான், நீ போய் அடுத்த நாள் என்னாச்சு தெரியுமா?" என்று ஆரம்பித்து குருமூர்த்தி நடந்தது எல்லாமே சொல்லி முடித்தார்...
அவனுக்கு கோபத்தில் கழுத்து நரம்புகளும் புடைத்து விட்டன...
அவர் சொல்லி முடிக்க முதல், "இனாஃப்" என்று கையை நீட்டி சொல்லிக் கொண்டே எழுந்தவனோ, இடையில் இரு கைகளையும் வைத்து இதழ் குவித்து ஊதியபடி, "ஓஹ் மை காட், உங்களுக்கு கொஞ்சம் கூட சென்ஸ் இல்லையா? இப்படி தான் ஒருத்தி என்ன சொல்ல வர்றான்னு விசாரிக்காம நடந்துப்பீங்களா? உங்க பணம் எங்க போச்சுன்னு எனக்கு தெரியல... ஆனா அவ உங்க கிட்ட கொடுத்தது அவளோட பணம்... அவளுக்கு பணம் தேவைப்பட்ட நேரத்துல கூட என் கிட்ட அவ கேட்கவே இல்லை... வட்டிக் கடைக்கு போய் வாங்கி இருக்கா... பிரதீப் தான் அந்த பணத்தை கொடுத்து விட்டான்... அவளால மாறி பேச முடியல என்கிறதுக்காக என்ன வேணும்னாலும் பேசிடுவீங்களா?" என்று சொல்லிக் கொண்டே அங்கே ஓரமாக நின்று இருந்த வசந்தியை பார்த்தான்.
அவருக்கு இது வரை இருந்த அழுத்தம் நீங்கி, மனதில் ஒரு நிம்மதி... பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டார்...
"அம்மா இதெல்லாம் நீங்க கேட்க மாட்டிங்களா? தேன்மொழியை பத்தி இவருக்கு தான் தெரில, உங்களுக்கு கூடவா தெரியாது?" என்று கேட்டான்.
வசந்தியோ, "அந்த நேரம் கோவிலுக்கு போய் இருந்தேன் வம்சி... அவ வீட்டுக்கு நானும் யாதவ்வும் அவளை திரும்ப அழைச்சு வர போனோம்... வர முடியாதுன்னு சொல்லிட்டா" என்றார்...
"அவ எப்படி வருவா? இவ்ளோ தூரம் அசிங்க படுத்தி இருக்காங்க... எனக்கு வர்ற கோபத்துக்கு" என்று சொல்லிக் கொண்டே தனது தலையை அழுந்த கோதினான்...
குருமூர்த்திக்கோ அதிர்ச்சி...
முதல் முறையாக, செய்யாத தப்புக்கு ஒரு பெண் மீது குற்றம் சுமத்தி விட்டோமோ என்கின்ற குற்ற உணர்வு...
"நான் ஒண்ணும் வேணும்னு பண்ணல, இன்ஃபாக்ட் அவளுக்கு நான் திட்ட கூட இல்லை, பணம் வேணும்னா என் கிட்ட கேட்டு இருக்கலாமேன்னு தான் சொன்னேன்... வீட்டை விட்டு போக கூட நான் சொல்லல, அம்மாவும் கல்யாணியும் அவ பணத்தை எடுத்ததை பார்த்தேன்னு சொன்னாங்க... எப்படி நம்பாம இருக்க சொல்ற?" என்று கேட்டார்...
இப்போது வேதவல்லிக்கு சிக்கிக் கொள்வோமோ என்கின்ற பயத்தில் வியர்த்து வடிந்தது...
புடவை முந்தானையால் வியர்வையை துடைத்துக் கொண்டார்...
கல்யாணி வேறு இந்நேரம் அவர் அருகே துணைக்கு இல்லை...