அத்தியாயம் 20
அடுத்த நாள் காலையில் அவள் எழுந்த சமயம் அவன் இல்லை...'விடிய சாமமே எழும்பிடுவார் போல' என்று முணுமுணுத்துக் கொண்டே குளித்து விட்டு வந்தவள், சமையலறைக்குள் நுழைந்தாள்.
அங்கே கோதாவரி சமைத்துக் கொண்டு இருக்க, "மரக்கறி நான் வெட்டி தாறன் மாமி" என்று சொல்லிக் கொண்டே, அவள் உதவி செய்ய ஆரம்பித்து விட்டாள்.
அவரும், அவள் அருகே டீயை கொண்டு வைத்தவர், "இத குடி" என்று சொல்ல, அவளும் குடித்துக் கொண்டே காய்கறிகளை வெட்டினாள்.
"காலைலயே ஓடப் போய்ட்டானா?" என்று அவர் கேட்க, "ஓம் போல, நான் எழும்பக்குள்ளேயே ஆளை காணல" என்றான்.
"நான் ஒண்டு சொல்லுவேன், ஆனா நான் தான் சொன்னன் எண்டு அவன்ட சொல்லிடாத, வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான்" என்று சொல்ல, "என்ன விஷயம் மாமி" என்று அவள் கேட்டாள்.
அவள் அருகே வந்தவரோ, ரகசியமாக, "கல்யாணம் முடிச்சது சரி, இப்ப பிள்ளை வேணாம், உனக்கு வயசு இருக்கு தானே, முதல் படிச்சு முடி, பிள்ளை வந்தா உனக்கு படிக்கவும் ஏலாம இருக்கும்... ஆறு மாசத்துக்கு பிறகு உன்ட படிப்பு முடிய, பிள்ளை பெத்துக்கிறத பத்தி யோசி, இப்ப கவனமா இரு" என்றார்.
அவளுக்கு ஒரு மாதிரி கூச்சமாக இருந்தது...
அவனுடன் அப்படியான உறவு இல்லை என்று சொல்லவும் முடியாது...
மெல்லவும் முடியாத நிலை...
ஒரு அன்னையின் ஸ்தானத்தில் இருந்து அவளுக்காக அறிவுரை வழங்குகின்றார்.
வழக்கமாக திருமணம் முடிந்து ஒரு மாதத்திலேயே குழந்தை பற்றி பேசும் மாமியார்கள் மத்தியில் இவர் வித்தியாசம் தான்...
ஆண்கள் பெண்கள் வீட்டில் இருப்பது தான் வழக்கம் இந்த ஊரில்...
நாராயணிக்கு வீடு வாசல் இல்லை என்று தான் இங்கே இருக்கின்றாள்.
இப்போது தான் அவளுக்கு உண்மையாகவே சொந்த வீடு என்கின்ற உணர்வே வந்தது...
"நான் பார்த்துக் கொள்ளுறேன் மாமி" என்றாள் மென்புன்னகையுடன்...
அவரும் மென் சிரிப்புடன், "எப்போவுமே ரெண்டும் ஆம்பிளை பிள்ளையா பெத்துட்டமே, ஒரு பொம்பிளை பிள்ளை இல்லையே நம்மளோட இருக்க எண்டு கவலைப்பட்டு இருக்கிறன், கடவுளா பார்த்து உன்னை அனுப்பி இருக்கான்" என்றார்.
அவளும் அழகாக சிரித்துக் கொண்டே, "நீங்க இன்னொரு பிள்ளை பெற யோசிக்கலயா?" என்று கேட்க, "மூண்டாவது பிள்ளை தங்கிச்சு, ஆனா கலைஞ்சு போயிட்டு... உன்ட மாமாவுக்கு பொம்பிளை பிள்ளை எண்டா சரியான விருப்பம்... இவனுகள் கல்யாணம் முடிச்சு பொண்டாட்டியோட போயிடுவானுகள் தானே... நம்மளோட இருக்க போறது பொம்பிளை பிள்ளை தானே... ஆனா அதுக்கு பிறகு எனக்கு பிள்ளையே தங்கல, சரியான கவலை தான்... பொம்பிளை பிள்ளைகள் எல்லாம் வரம், அந்த கொடுப்பனை இல்ல எண்டு எப்போவும் யோசிப்பேன்... உன்னை பார்த்த பிறகு தான் மனசு சந்தோஷமா இருக்கு... உன்ட அம்மா உன்னை நல்லா வளர்த்து இருக்காவு" என்று சொல்ல, சட்டென அவள் கண்கள் கலங்க, கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
தாய் இறந்து இன்னும் ஒரு மாதமே முடியவில்லை தானே...
அதனால் தான் கருணாவை பற்றி பேசியதும் கண்கள் கரித்துக் கொண்டு வந்தன அவளுக்கு...
"உங்கள நான் நல்லா பார்த்துக் கொள்ளுவேன்" என்று அவள் சொல்ல, "இப்ப அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு" என்று சொன்னவரோ, "ஜனாவுக்கு வாய் தான் பிள்ளை கூட, நல்ல பெடியன், நியாயஸ்தன்... வளைஞ்சு கொடுக்க மாட்டான், அதான் பிரச்சனை" என்று சொன்னார்.
"எனக்கு தெரியும் மாமி... வாயை தான் கொஞ்சம் அடக்கி வைக்கணும்" என்று சொல்ல, அவரோ, "அது அடங்காது, எல்லாத்தையும் அவ்வடத்தையே கதைச்சு போட்ருவான், யாருக்கும் பயப்பட மாட்டான். இவனை பார்த்தாலே எங்கட குடும்பத்தில எல்லாருக்கும் பயம்... பெருசு முதல் சிண்டு வரைக்கும் நடுங்குவாங்க, ஏன் உன்ட மாமாவுக்கே பயம் தான்... பார்த்து தான் கதைப்பார்" என்று சொல்ல, "ம்ம் நேத்தே பார்த்தேன், யாருமே வாய் திறக்கல" என்றாள்.
"சின்னவன் அப்படி இல்லை, கல கல எண்டு கதைப்பான், ஆனா பெரியவன் போல பொறுப்பு எல்லாம் இல்லை... நல்லா சுத்தி லவ் பண்ணி திரிவான்" என்று சொன்னார்.
"சின்ன அத்தானுக்கு எப்ப கல்யாணம்?" என்று அவள் கேட்க, "இனி தான் அத பத்தி கதைக்கோணும்... அவனும் திவ்யாவும் ஸ்கூல் படிக்கிற நேரமே லவ் பண்ண தொடங்கிட்டாங்க, எவ்வளவு காலம் தான் அப்படியே வச்சு இருக்கிறது?" என்று கேட்க, "இனி அந்த வேலையை பார்க்கலாம் தானே" என்று சொன்னவளோ மேலும், "சரி நீங்க லவ் பண்ணியா முடிச்சீங்க?" என்று கேட்டாள்.
அவரும் வெட்கமாக சிரித்தபடி, "ஓம், உன்ட மாமா எனக்கு பின்னால் திரிஞ்சு திரிஞ்சு, என்ட அப்பாட கால கையை பிடிச்சு கல்யாணம் கட்டிட்டார்" என்று சொல்ல, "நீங்க இப்பவே இவ்வளவு வடிவா இருக்கீங்க, அந்த காலத்துல ஊரையே கலக்கி இருப்பீங்க" என்று சொன்னாள்.
"அப்படி எல்லாம் இல்ல பிள்ளை" என்று அவரும் வெட்கத்துடன் சொல்லிக் கொண்டு இருக்க, "நாராயணி" என்று ஜனார்த்தனனின் குரல் கேட்டது...
"வந்துட்டான், இந்த டீயை குடு" என்று டீயை அவளிடம் கொடுத்து விட, அதனை எடுத்துக் கொண்டு தான் ஹாலுக்குள் சென்றாள் நாராயணி...
வியர்க்க விறுவிறுக்க, அங்கே இருந்த சோஃபாவில் அமர்ந்து பத்திரிகையை பார்த்துக் கொண்டு இருந்தான் ஜனார்த்தனன்.
அவனிடம் டீயை நீட்டினாள்.
விழிகளை உயர்த்தி அவளை பார்த்தான்.
பச்சை நிற சுடிதார் அணிந்து இருந்தாள்.
பார்க்கவே பேரழகியாக இருந்தவளை ரசனையாக பார்த்துக் கொண்டு, "வடிவா இருக்க" என்றான்.
அவளோ சுற்றி பார்த்து விட்டு, "இத இப்ப சொல்லனுமா?" என்று கேட்க, "ம்ம் சொல்ல தான் வேணும்" என்றான்.
"இதுக்கு தான் கூப்பிட்டிங்களா?" என்றபடி அவள் உள்ளே செல்ல முயல, "உன்னை பார்க்க தான் கூப்பிட்டனான், அதோட காலைல பதினொரு மணிக்கு நம்ம பேங்க் போய் லொக்கர் ல நகையை வச்சுட்டு வருவோம்... ரெடியா இரு" என்று சொல்ல, "ஓகே" என்று சொன்னவள், மீண்டும் சமையலறைக்குள் சென்று விட்டாள்.
அன்று சாப்பிட்டு விட்டு, ஒன்றாக வங்கிக்கு கிளம்பி இருந்தார்கள்...
அவன் அவளை அழைத்துக் கொண்டு மாடியேறி நேரே சென்றது பவித்ரனிடம் தான்...
ஜோடியாக வருபவர்களை விழி விரித்து பார்த்தவன், "என்னடா இந்த பக்கம்?" என்று கேட்க, "லொக்கர் திறக்கணும் மச்சி" என்றான்.
அவனும், "ஓகே, திறந்திடலாம், கீ எடுத்து வந்தியா?" என்று கேட்க, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டு திறப்பை நீட்டினான்.
பவித்ரனும் அதற்கான அனுமதிகளை பெற்றுக் கொண்டே, "வா" என்று சொல்ல, அவனை தொடர்ந்து ஜனார்த்தனன் செல்ல, நாராயணி பின்னே சென்றாள்.
லாக்கரை திறந்து விட்ட பவித்ரன் வெளியேறி விட, ஜனார்த்தனனோ எல்லாமே நாராயணிக்கு சொல்லி கொடுத்தான்.
அவளுக்கு இதெல்லாம் புதிதாக இருந்தாலும், எல்லாமே கற்றுக் கொண்டாள். அவன் சரிபாதி ஆயிற்றே... என்னுடைய எல்லாவற்றுக்கும் நீ உரிமையானவளும் முதன்மையானவளும் என்று செயலில் உணர்த்திக் கொண்டு இருந்தான்.
அதனை தொடர்ந்து, வெளியே வந்தார்கள்...
"எல்லாம் ஓகே தானே" என்று பவித்ரன் கேட்க, "எல்லாம் ஓகே தான், கல்யாணம் முடிச்சு இருக்கேன், சாப்பாடு தரோணும் எண்டு உனக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா என்ன?" என்று நேரடியாக கேட்டு விட்டான்.
நாராயணி மௌனமாக அமர்ந்து இருக்க, பவித்ரனோ திணறிக் கொண்டே, "டேய் அப்படி எல்லாம் இல்ல டா" என்றான்.
நாராயணிக்கு அவர்கள் நட்பு விசித்திரமாகவும் பிடித்தும் இருந்தது...
அதுவும் ஜனார்த்தனன் முகத்துக்கு நேரே எல்லாம் கேட்பதும் பவித்ரன் திணறுவதும் சிரிப்பை வரவழைக்க, கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
"இண்டைக்கு ஹாஃப் டே தானே, நான் வெய்ட் பண்ணுறன், வேலையை முடிச்சிட்டு வா, வெளிய சாப்பிடலாம்" என்று சொன்னான்.
"சரி வெய்ட் பண்ணு, வாறன்" என்று சொல்லிக் கொண்டே வேலையை செய்ய, "சீர் எண்டு தான் நீ ஒண்டும் செய்யல, சாப்பாடு கூட நான் கேட்டு தான் வாங்க வேண்டி இருக்கு" என்றான்.
எப்போதுமே அவனுடன் இப்படி தான் கிண்டலாக பேசுவான்...
ஆனால் நாராயணிக்கு சங்கடமாகி விட்டது...
சட்டென எட்டி அவன் கையை பற்றினாள்.
"என்னடி?" என்றான் ஜனார்த்தனன்.
நாராயணியோ, "எதுக்கு இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்க?" என்று கேட்டாள்.
பவித்ரனுக்கு அவள் செய்கை சிரிப்பை தான் கொடுத்தது...
அடக்கிக் கொண்டே, சிஸ்டத்தில் வேலை செய்ய, "நான் என்ன பிழையா கேட்டுட்டேன், உனக்கு அண்ணா தானே, ஏதாவது ஒண்டு எனக்கு சீதனம் தந்தானா?" என்று கேட்டான்.
அவன் விளையாட்டாக பேசுகின்றான் என்று பவித்ரனுக்கு தெரியும்...
ஆனால் நாராயணிக்கு தெரியாதே...
"அதுக்கெண்டு இப்படியா கதைப்பீங்க, அவர் என்ன நினைப்பார்?" என்று அவள் கடுப்பாகி விட்டாள்.
"டேய் என்னோட கோபப்படுறியா என்ன?" என்று ஜனார்த்தனனிடம் கேட்க, அவனோ சிரிப்பை அடக்கிக் கொண்டு, சிஸ்டத்தை பார்த்துக் கொண்டு இல்லை என்று தலையாட்டினான்.
"அவர் உங்களுக்காக சொல்லுறார், அதுக்கு எண்டு வாய்க்கு வந்தது எல்லாம் கதைப்பீங்களா?" என்று கேட்டாள்.
"ஓஹோ, அண்ணனுக்கு ஒண்டு எண்டா உனக்கு கோபம் வருதா என்ன?" என்று ஜனார்த்தனன் அடக்கப்பட்ட சிரிப்புடன் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டே கேட்டான்.
"ஓம் வருது எண்டே வச்சு கொள்ளுங்க" என்றாள்.
அவளை பார்த்து விட்டு, பவித்ரனை பார்த்தவன், "உன்னை போலவே கதைக்கிறாள் பாரேன்" என்று சொல்ல, அவனோ இதழ் பிரித்து சிரித்தபடி வேலைகளை முடித்தவன், "வேலை முடிஞ்சு, வெளிக்கிடலாமா?" என்று கேட்டுக் கொண்டே, நாராயணியை பார்த்தான்.
அவள் விழிகள் கலங்கி இருக்க, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
அவன் இப்படி தன்னுடன் பேசியது அவளுக்கு பிடிக்கவில்லை என்று புரிந்தது.
"நாராயணி" என்றான்.
முதல் முறை பெயர் சொல்லி அழைத்தான்.
ஏறிட்டு பார்த்தாள்.
"நாங்க இப்படி தான் கதைப்பம், இத எல்லாம் பெருசா எடுத்துக் கொள்ளாதே, சும்மா அவன் உன்னை சீண்ட கதைச்சிட்டு இருக்கிறான், கதைச்ச விஷயமும் சரியான விஷயம் தானே" என்று சொல்ல, நாராயணி இப்போது ஜனார்த்தனனை முறைத்துப் பார்க்க, அவன் மெலிதாக சிரித்துக் கொண்டே, "சும்மா விளையாட்டுக்கு கதைச்சேன்டி" என்றான்.
அவளோ, "நீங்க எப்ப கோபமா கதைக்கிறீங்க, எப்ப விளையாட்டுக்கு கதைக்கிறீங்க எண்டே தெரியல, உங்களோட எப்படி தான் வாழ்க்கை முழுக்க குப்பை கொட்ட போறனோ" என்று திட்டிக் கொண்டே எழ, "இவ்வளவு கதைக்க வருமா?" என்று பவித்ரன் ஆச்சரியமாக கேட்டான்.
"இதுக்கு மேலயும் கதைப்பாள், உனக்கு தெரியாது, அதுவும் கோபம் வந்தா என்னென்னவோ கதைப்பாள், நானே சில நேரம் வாயடைச்சு போயிருக்கிறன்" என்று ஜனார்த்தனன் கிண்டலாக சொல்ல, நாராயணி, "ஐயோ" என்றபடி முகத்தை வேறு பக்கம் சங்கடமாக திருப்பிக் கொண்டாள்.
பவித்ரனோ, "உனக்கு ஏத்த ஜோடி தான் அப்ப" என்று சொல்லிக் கொண்டு முன்னே நடந்தான்.
மூவரும் வங்கிக்கு அருகே இருந்த பிஸ்ஸா ஹட்டுக்கு சென்றார்கள்...
அவள் இப்படியான கடைகளுக்கு நண்பர்களுடன் அத்தி பூத்தது போல வந்து இருக்கின்றாள்.
பெரிதாக பழக்கமும் இல்லை.
சங்கடமாக இருந்தது...
ஜனார்த்தனனுக்கு அது தெரிந்து இருக்க வேண்டும்...
அவள் கையை பற்றிக் கொண்டு உள்ளே அழைத்து சென்றான்.
மூவரும் ஒரே மேசையில் அமர்ந்து கொண்டே, "என்ன சாப்பிட போறீங்க?" என்று பவித்ரன் கேட்க, ஜனார்த்தனன் நாராயணியை பார்த்தான்.
"எனக்கு எது எப்பிடி இருக்கும் எண்டு தெரியாது" என்றாள்.
ஜனார்த்தனன் அதனை பெரிதாக எடுக்கவில்லை...
அவன் எதிர்பார்த்தது தான்...
ஆனால் பவித்ரனுக்கு சுருக்கென்று தைத்தது...
அவர்கள் வளர்ந்த விதம், அவள் வளர்ந்து இருக்கும் விதம் என்ன?
"சிக்கன் பிஸ்ஸா சாப்பிடலாம்" என்று ஜனார்த்தனன் சொல்ல, அதனை ஆர்டர் செய்த பவித்ரனுக்கு மனதில் ஏதோ நெருட, "கடை ஒண்டுக்கும் போனது இல்லையா நாராயணி" என்று தட்டு தடுமாறி கேட்டான்.
ஜனார்த்தனன் இந்த உரையாடலில் எல்லாம் பங்கு கொள்ளாமல் அலைபேசியை பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.
அவன் அலைபேசியை பார்த்தாலும் அவன் காதுகள் அவர்கள் பேச்சில் தான் நிலைத்து இருந்தன...
அவளோ, "ஃப்ரெண்ட்ஸ் கூட ஒண்டு ரெண்டு தரம் கடைகளுக்கு போயிருக்கேன், அதுவும் இவ்வளவு பெருசா இருக்காது, இவரோட தோசை சாப்பிட போயிருக்கன் அவ்வளவு தான், இங்க இண்டைக்கு தான் வாறன்" என்று சொன்னாள்.
"சரி எங்க படிச்சனி?" என்று கேட்டான்.
முதல் முறை அவளை ஆழமாக அறிய ஆசைப்பட்டான்.
"ஊர்ல இருக்கிற ஸ்கூல் ல" என்று சொன்னவளோ, "என்டர் பண்ணுன பிறகு தான், டவுன் பக்கமே வந்தன்" என்றாள்.
அவற்றை கேட்க கேட்க, பவித்ரனின் தொண்டைக்குள் ஏதோ சிக்கிக் கொண்ட உணர்வு...
"சொந்தம் எண்டு யாரும் இல்லையா?" என்று கேட்டான்.
சட்டென கண்கள் கலங்கி விட்டன.
பேச்சு வர மறுத்தது...
சட்டென அவளிடம் நீரை நீட்டி இருந்தான் ஜனார்த்தனன்.
அவளை பார்க்கவில்லை.
அலைபேசியை பார்த்துக் கொண்டே நீரை நீட்டி இருக்க, அதனை வாங்கி குடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.
பவித்ரனோ, "சொல்ல விருப்பம் இல்ல எண்டா சொல்ல வேணாம்" என்றான்.
"சொல்றதுல இனி என்ன இருக்கு? கல்யாணம் முடிக்காமலே நான் பிறந்ததால இருந்த ஒண்டு ரெண்டு சொந்தமும் மொத்தமா விலக்கி வச்சுட்டாங்க" என்று தட்டு தடுமாறி சொல்லி முடிக்கவும் பிஸ்ஸா வந்து சேரவும் நேரம் சரியாக இருந்தது...
"சாப்பிடலாமா?" என்று கேட்ட ஜனார்த்தனன், அதனை பிரித்து கொடுக்க, எல்லாரும் சாப்பிட்டார்கள்...
இப்போது சாப்பிட முடியாமல் தடுமாறியது என்னவோ பவித்ரன் தான்...
புருஷோத்தமனின் தவறின் வீரியம் அவனுக்கு இப்போது தான் தெளிவாக தெரிந்தது...
இரு குடும்பங்களை மொத்தமாக சிதைத்து அல்லவா விட்டு இருக்கின்றார்.
இலகுவாக இவன் மன்னித்தாலும் மனதில் ஒரு உறுத்தல் இருந்தது...
ஜனார்த்தனன் வீணாக புருஷோத்தமன் மீது கோபப்பட்டுக் கொண்டு இருக்கின்றான் என்று இத்தனை நாட்கள் அவன் நினைத்து இருந்தான்.
ஆனால் அவன் தான் நியாயமாக நடந்து கொள்கின்றான் என்று இக்கணம் தோன்றியது...
பவித்ரனால் இப்போது சாதாரணமாக கூட சிரிக்க முடியவில்லை...
சூழ்நிலை ஒரு மாதிரி இறுக்கமாக இருப்பதை உணர்ந்த ஜனார்த்தனனோ, "அதெல்லாம் விடு, உனக்கு பொம்பிளை பார்த்து இருக்காங்க எல்லா" என்று ஆரம்பித்தான்.
"ஓம், அம்மா சொன்னவ, விசாரிக்கொணும் எண்டவ, யார் எண்டு கூட நான் கேட்கல, இனி தான் அத பார்க்கணும்" என்று சொன்னான்.
"நாராயணிட ஃபிரென்ட் தான், எப்படி பிள்ளை எண்டு அவள்ட வாயாலேயே கேட்கலாம்" என்றான்.
நாராயணிக்கு இது புது கதை...
"யாரு?" என்று யோசனையுடன் கேட்க, "உன்ட ஃபிரென்ட் ரித்விகா தான்" என்றான்.
நாராயணியோ, "அவளா? நல்ல பிள்ளை தான்" என்று ஆரம்பிக்க, "ஆனா கள்ள சைன் மட்டும் அடிப்பாள்" என்று சொன்னான் ஜனார்த்தனன்.
"கள்ள சைன் தானே, அது நானும் தான் உனக்காக அடிச்சு இருக்கேன்" என்று பவித்ரன் சொல்ல, நாராயணியோ, "இதெல்லாம் செஞ்சிட்டு தான், பெரிய உத்தமன் போல எங்களை அவ்வளவு பாடு படுத்துனீங்களா?" என்று கேட்க, ஜனார்த்தனன் சத்தமாக சிரித்துக் கொண்டே, "எல்லாரும் தான் பண்ணுவாங்க, வழக்கமா கண்டும் காணாம போவேன், அண்டைக்கு நீ வரல, பார்க்கோணும் எண்டு கூப்பிட்டேன்" என்றான் சிரித்தபடி...
அவன் இப்படி சிரித்து பேசுவது பெண்ணவளுக்கு ஆச்சரியமாக இருந்தது...
ஒவ்வொருவரிடமும் அவன் குணம் ஒவ்வொரு மாதிரி இருக்கும்... அவள் இதுவரை பழகியதில் இருந்து அவனை பற்றி கண்டு பிடித்தது இது தான்.
பவித்ரனிடம், கலகலப்பாக பழகும் ஒரு புதிய ஜனார்த்தனன் அவளுக்கு தெரிந்தான்.
"பார்க்கோணும் எண்டு கூப்பிட்டிங்களா?" என்று ஜனார்த்தனனிடம் கேட்டு விட்டு, பவித்ரனை பார்த்தவள், "கூப்பிட்டு என்ன சொன்னார் தெரியுமா?" என்று கேட்டாள்.
"ஓம் ஓம், என்னட்டையே வந்து இப்படி கதைச்சன் எண்டு அவனே சொன்னான்" என்று சொல்ல, "இப்ப ஏதோ என்னை மிஸ் பண்ணி பார்க்க கூப்பிட்ட போல மாறி கதைக்கிறார்" என்று குற்ற பத்திரிகை வாசித்தாள்.
"என்ன தப்பா கேட்டுட்டேன், பொண்டாட்டியா வச்சுக் கொள்ளவா எண்டு தானே கேட்டேன்" என்று சொல்ல, "அவ்வா" என்றபடி அவள் வாயில் கையை வைக்க, பவித்ரன் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.
"அதுக்கு இதுவா அர்த்தம்?" என்று அவள் கோபமாக கேட்க, "நான் இந்த அர்த்தத்தில் தான் கேட்டேன், நீ பிழையா விளங்குனா நான் என்ன செய்யுறது? உன்ட மனசுல அழுக்கு" என்றவன், பவித்ரனை பார்த்து கண்ணடித்து விட்டு, பிஸ்ஸாவை சாப்பிட, "என்ட மனசுல அழுக்காமே, கதைய பார்த்தீங்களா? அடுத்த நாள் என்ன எல்லாம் கேட்டீங்க, அத நான் யார்ட்டயும் சொல்லவே இல்ல" என்றாள்.
"சரி இப்ப சொல்லு, உன்ட அண்ணன்ட்டயே சொல்லு" என்றான் ஜனார்த்தனன்.
"இல்ல நான் சொல்ல மாட்டேன்" என்று அவள் சாப்பிட, "சரி நானே சொல்றேன்" என்று ஜனார்த்தனன் ஆரம்பிக்க, "இல்ல வேணாம் எண்டு சொல்றன் எல்லா" என்று சொல்லி அவன் கையை பற்றி விட்டாள்.
"சரி நம்மட பஞ்சாயத்தை பிறகு பார்ப்பம், ரித்விகாவை பத்தி சொல்லு, அவன் எவ்வளவு ஆசையா கேட்டுட்டு இருக்கான் பாரு" என்றான் ஜனார்த்தனன்.
"நான் ஆசையா கேட்டதை நீ பார்த்தியா?" என்று திட்டிய பவித்ரனோ, "அப்ப கல்யாணம் கட்டலாம் எண்டு சொல்றியா?" என்று நாரயாணியிடம் கேட்க, "தாராளமா கட்டலாம், சரியான நல்ல பிள்ளை. கோபம் வராது, வந்தா ஏசுவாள், அவ்வளவு தான்" என்று சொல்ல, "ஜனாவே இவ்வளவு ஏச்சு வாங்கக்குள்ள நான் வாங்க மாட்டனா? அதெல்லாம் வாங்கலாம்" என்று சிரித்தபடி சொன்னவன் ஜனார்த்தனனின் முறைப்பையும் பதிலாக பெற்றுக் கொண்டான்.