ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 20

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 20

அன்று இரவு அக்ஷயாவின் அறைக் கதவு தட்டப்பட்டது... அவளும் அப்போது தான் தூங்க ஆயத்தமாகி கட்டிலில் சரிந்து இருந்தாள்.

கதவு தட்டும் சத்தம் கேட்டதுமே பெருமூச்சுடன் அவள் கதவை திறக்க, அங்கே நின்று இருந்தது என்னவோ வீரராகவன் தான்...

அவளோ அவனை புரியாமல் பார்க்க, "இந்த வெள்ளிக்கிழமை வெளியூர் போறோம்... ரெடியா இரு" என்றான்...

அவளுக்கோ எங்கே போகின்றோம் என்று தெரிந்து கொள்ள ஆவல் இருந்தாலும் கேட்க தைரியம் இல்லை... சரி என்று தலையாட்டினாள்...

"உனக்கு பட்டுப் புடவை, பாப்பாவுக்கு ட்ரெஸ் எல்லாம் நாளைக்கு வாங்கி தரேன்" என்றான்... அவளோ, "கல்யாணத்துக்கா போறோம்?" என்று கேட்க, அவனோ, "இல்ல நிச்சயதார்த்தம் ஒண்ணுக்கு" என்று சொல்லி விட்டு செல்ல, அவளும் கதவை தாழிட்டு விட்டு வந்து தூங்கி விட்டாள்.

அவன் சொன்ன போலவே அடுத்த நாள் காலையில் அனைத்து உடைகளும் அவளிடம் வந்து சேர்ந்தது... அவளுக்கு ஜாக்கெட் தைக்க தையல்கார பெண்ணும் வீட்டுக்கே வந்தார்...

அக்ஷயாவோ, "பொண்ணுங்க சமாச்சாரம் எல்லாம் தெரிஞ்சு இருக்கே" என்று அவனை பற்றி ஆச்சரியமாக தான் நினைத்துக் கொண்டாள்.

தையல்கார பெண்ணிடம் அளவை கொடுத்து விட்டு அலுவலகத்துக்கு அவள் புறப்பட்டு இருந்தாள்.

அன்று கீர்த்தனா விடுமுறையில் இருந்ததால் அக்ஷயாவுக்கு தான் எல்லா வேலையும் வந்து சேர்ந்தது...

"இத முடிச்சு கொடு, அத முடிச்சு கொடு" என்று அவளை ஒரு வழி பண்ணி விட்டான் வீரராகவன்.

"என்னை சிக்க வச்சிட்டு நீ தப்பிச்சுட்ட தானே" என்று கீர்த்தனாவுக்கு மனதுக்குள் திட்டிக் கொண்டே வேலையை முடித்தாள் பெண்ணவள்...

இதே சமயம் கீர்த்தனாவும் ஊருக்கு வந்து பஸ்ஸில் இருந்து இறங்கியதுமே சுற்றும் முற்றும் பார்த்தாள்...

"அப்பா வரேன்னு சொன்னாரே... எங்க காணோம்" என்று யோசித்துக் கொண்டே இருக்க, அவள் பின்னால் இருந்து, "ஹெலோ" என்று ஒரு குரல்...

பதறி திரும்பியவளுக்கு அவள் கண்களையே நம்ப முடியவில்லை...

நின்று இருந்தது என்னவோ நெடுஞ்செழியன் தான்...

"ஐயோ பார்க்கிற எல்லா இடமும் அவன் தெரியுறானே, இது என்ன புது வியாதி?" என்று நினைத்துக் கொண்டே கையில் மெதுவாக கிள்ள, ஜீன்ஸ் பாக்கெட்டில் இரு கைகளையும் விட்டுக் கொண்டே, "கனவில்லை நிஜம் தான்" என்றான்...

அவளோ சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "நீங்க எங்க இங்க?" என்று கேட்க, "உன்னை வீட்டுக்கு அழைச்சு போக தான் வந்தேன்" என்று சொல்ல, அவளோ, "என்னையா? என்ன விளையாடுறீங்களா?" என்று கேட்க, அவனும், "சீக்கிரம் வா, வீட்ல எல்லாரும் காத்துகிட்டு இருக்காங்க" என்று சொல்லிக் கொண்டே அவள் கையில் இருந்த பையை பறித்து எடுத்தவன் விறு விறுவென நடக்க, "ஹெலோ என்ன நடக்குது இங்க?" என்று கேட்டுக் கொண்டே அவன் பின்னால் ஓடிச் சென்றாள் அவள்...

அவனோ அங்கே நின்று இருந்த தனது காரில் ஏறியவன், "வா" என்று சொல்ல, "என்னோட பெட்டியை கொடுங்க" என்றபடி அவனுடன் மல்லுக்கு நின்றாள்.

"நீ மட்டும் ஏறலன்னா பெட்டியை மட்டும் தூக்கிட்டு போய்டுவேன்" என்று சொல்ல, அவளுக்கு வேறு வழியும் தெரியவில்லை...

காரில் ஏறிக் கொண்டாள்.

அவனோ மென் புன்னகையுடன் காரை எடுக்க, அவனை முறைத்தபடி தான் அவள் அமர்ந்து இருந்தாள்.

இருவரும் ஜோடியாக அவள் வீட்டை அடைந்து இருந்தார்கள்...

அவள் காரில் இருந்து இறங்கும் போதே அவள் தாய் மீனாட்சி வாசலுக்கு ஓடி வந்தவர், "வாம்மா" என்று சொல்லிக் கொண்டே, அவளை அணைத்துக் கொண்டார்.

அவரை தொடர்ந்து வடிவேலும் அவள் தம்பி கதிரவனும் வெளியே வர, அவளோ அனைவரையும் புரியாமல் பார்த்தவள், அங்கே நின்ற மனோகரியை பார்த்து அதிர்ந்து தான் போனாள்.

தாயும் மகனும் சேர்ந்து ஏதோ தில்லு முள்ளு செய்கின்றார்கள் என்று அவளுக்கு அப்பட்டமாக தெரிந்தது...

"ஆன்டி" என்று அவள் இதழ் அசைக்க, அதனை கண்டு கொண்ட அவள் பாட்டி விசாலாட்சியோ, "நல்ல மாமியார் அமைஞ்சிருக்கு புள்ள உனக்கு" என்று சொல்ல, மனோகரி இதழ் பிரித்து சிரிக்க, கீர்த்தனா அதிர்ந்து போய் நெடுஞ்செழியனை பார்க்க, அவனோ தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல எங்கோ பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்...

ஊர்க்காரர்கள் எல்லாம் அங்கே குழுமி நிற்க, கீர்த்தனாவுக்கோ மெல்லவும் முடியாத, முழுங்கவும் முடியாத நிலை தான்...

அவளோ மீனாட்சியுடன் நடந்து வீட்டினுள் நுழைய, அங்கே இருந்த இருக்கையில் எல்லாருமே அமர்ந்து கொண்டார்கள்...

வடிவேலோ, "உன்னை வேலைக்கு அனுப்பும் போது ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் வாய்ல பல்லு போட்டு பேசுனாங்க... ஆனா நீ அம்மா அப்பா சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லி இருக்க... மாப்பிள்ளையை எங்களுக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு... ஜாதகமும் பொருந்தி போச்சு... தங்கமான பையன்... இந்த சனிக்கிழமையே நிச்சயத்தார்த்தம், இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்..." என்று சொல்ல, அவளுக்கோ மயக்கமே வராத குறை தான்...

மனோகரியை சட்டென திரும்பி பார்த்தாள். அவரோ குரலை செருமிக் கொண்டே, அவள் பார்வையை தவிர்த்தவாறே அருகே இருந்த வயதான பாட்டியுடன் பேசிக் கொண்டு இருந்தார்...

அவளுக்கு இல்லை என்றும் சொல்ல முடியாது...

அனைவரையும் அவமானப்படுத்துவது போல இருக்கும்...

அவனை பிடிக்கவில்லை என்றால் தானே இல்லை என்று சொல்ல முடியும்... அவளுக்கே தெரியாமல் அவளை அவனுக்கு பிடித்து இருக்கின்றது அல்லவா?

நெடுஞ்செழியனோ அவள் பதிலுக்காக அவளையே பார்த்துக் கொண்டு இருக்க, அவள் விழிகள் அவனை ஒரு கணம் தீண்டி மீள, "சரிப்பா" என்று சொன்னாள்.

நெடுஞ்செழியன் இதழ்க் கடையில் புன்னகை... யாரும் கண்டு கொள்ள முடியாத கீற்று போன்ற புன்னகை...

அவளோ அவனை ஒரு கணம் அழுத்தமாக பார்த்து விட்டு அறைக்குள் நுழைந்தாள்...

அறையை தாழிட்டவளோ, "அம்மாவும் புள்ளையும் பக்கா ஃப்ராடு" என்று முணு முணுத்துக் கொண்டே, குளிக்க சென்றாள். அவள் குளித்து விட்டு வெளியே வந்த நேரம் அங்கே எல்லாரும் சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்...

மனோகரியோ, கண்களை அவளை அழைக்க, அவளும் சென்று அவர் அருகே அமர்ந்தவள், "ஆன்டி என்ன பித்தலாட்டம் இது?" என்று நேரடியாக கேட்டு விட்டாள் அவருக்கு மட்டும் கேட்கும் குரலில்.. அவரோ இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே, "எல்லாமே செழியன் ப்ளான் தான், கட்டுனா உன்னை தான் கட்டுவானாம், அன்னைக்கு அவனுக்கு கல்யாணம்னு சொன்னதுமே உன் முகம் போன போக்கை பார்த்தேன்..." என்றார்...

அவளுக்கோ சட்டென வெட்கம் தோன்ற, "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல ஆன்டி" என்று சொல்ல, "ஆன்டின்னு சொல்லாம அத்தைன்னு சொல்லு" என்றார்... அவளும், "சரி அத்தை" என்று சொல்லிக் கொண்டே, நெடுஞ்செழியனை தேடினாள்.

அவனோ அவளது தம்பி கதிரவனுடன் பேசிக் கொண்டு இருக்க, அவனையே பார்த்துக் கொண்டே இருந்தாள் அவள்... அவனுக்கும் தன்னை யாரோ பார்ப்பது போன்ற உணர்வு... சட்டென்று திரும்பி பார்த்தான்... கீர்த்தனா தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என்கின்ற தோரணையில் கேட்டான்... கண்களால் வீட்டின் பின் பக்கத்தை காட்டியவளோ விறு விறுவென எழுந்து செல்ல, அவனும் தலையை அழுந்த கோதிக் கொண்டே சுற்றி பார்த்தவன் எழுந்து சென்றான்...

வீட்டின் பின் பக்கம் இருந்த மாந்தோப்பில் தான் நின்று இருந்தாள் பெண்ணவள்...

ஷேர்ட்டின் கையை மடித்து விட்டுக் கொண்டே வந்தவனை முறைத்துப் பார்த்தவள், "என்ன விளையாட்டு இது?" என்று கேட்டாள்.

"பிடிக்கலைன்னா பிடிக்கலன்னு சொல்ல வேண்டியது தானே" என்றான் அவன் அடக்கப்பட்ட சிரிப்புடன்...

"அத்தைக்காக தான் ஓகே சொன்னேன்" என்றாள் அவள்...

"அத்தை" என்றான் அவன் ஒரு வித கேலி தொனியில்...

"ஹெலோ அவங்க தான் அப்படி கூப்பிட சொன்னாங்க" என்று அவள் சற்று கோபமாக சொல்ல, அவனும், "ஓகே" என்றான் சாதாரணமாக...

"என்ன ஓகே?" என்று மீண்டும் எகிறினாள் பெண்ணவள்...

"இங்க பாரு, உன்னை எனக்கு பிடிச்சு இருக்கு... கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்... நீ வழிக்கு வர மாட்டேன்னு தெரியும்... அதான் உன் அம்மா அப்பா கூட நேரடியா டீல் பண்ணிட்டேன்" என்றான்...

"பிசினஸ் மேன்னு காட்டிடீங்க" என்றாள் குத்தலாக...

சத்தமாக சிரித்தவனோ, "அப்படியும் வச்சுக்கலாம்" என்று சொல்ல, அவளோ, "என்னோட பர்மிஷன் இல்லாம இது தப்பா தெரியலையா?" என்றாள்.

"வீம்புக்கு பேசாதடி... இப்போவும் நோ சொல்றதுன்னா சொல்லு" என்றான்...

"பாவமா இருக்கீங்க" என்று அவள் சொல்ல, அவனோ சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே, அவளை நோக்கி குனிந்தவன், "உன்னால முடியாது... பிகாஸ் யூ லவ் மீ" என்று சொல்ல, அவளோ, "ஆசை தான்" என்றாள்.

"ம்ம் ஆசை தான்" என்று கரகரத்த குரலில் அவளை விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டே சொன்னவன், ஒற்றைக் கையால் அவள் நாடியை பக்கவாட்டாக திருப்பி அவள் எதிர்பாராமல் கன்னத்தில் முத்தம் பதிக்க, அவளோ அதிர்ந்து விழிகளை விரித்துக் கொண்டே அவனை பார்த்தாள்...

"அப்படி பார்க்காத, அடுத்த கிஸ் லிப்ஸ் ல அடிச்சிடுவேன்... கல்யாணம் வரைக்கும் கண்ட்ரோல் ஆஹ் இருக்க நினைக்கிறன்" என்று சொல்லிக் கொண்டே, அவளை பார்த்து கண்ணடித்தவன் தன்னுடைய முழு உயரத்துக்கு எழுந்து நின்றபடி, "ஒரு நாள் லீவ் போதும்னு சொன்னியாமே" என்று நக்கலாக கேட்டான்...

அவளோ சட்டென தலையை உலுக்கி நிதானத்துக்கு வந்தவள், "ஓஹ் நீங்களும் உங்க ஃப்ரெண்டும் கூட்டு களவாணியா?" என்று கேட்டவளோ சட்டென நிறுத்தி, "அத விடுங்க, இப்போ எதுக்கு கிஸ் பண்ணுனீங்க?" என்று கேட்டாள்.

அவனோ, "பண்ணனும் போல இருந்திச்சு" என்றான் கண்களை சிமிட்டி... அவளோ, அவனை கடுப்பாக பார்க்க, "அத விடு, ஒரு மாசம் கழிச்சு கல்யாணம் வச்சு என்னை டெம்ப்ட் பண்ணுறாங்க, எனக்கு உன்னை இப்போவே கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்கு... முடியலடி" என்றான்...

அவளுக்கு இப்போது சிரிப்பு வந்தது... அடக்கிக் கொண்டே, "அப்போ வேற பொண்ண கல்யாணம் பண்ணுங்க" என்றாள்.

அவனோ, "ம்ம் அதெல்லாம் முடியாது, ஒரு வருஷம்னாலும் ஓகே, வெய்ட் பண்ணி உன்னை தான் கட்டுவேன்..." என்று சொல்லிக் கொண்டே, அங்கிருந்து நகர, அவன் முதுகை பார்த்தவளது கன்னங்கள் வெட்கத்தில் சிவக்க, அவனுக்கும் இதழ்களில் வெட்க சிரிப்பு...

அடிக்கடி பார்வையால் பேசிக் கொண்டார்கள்...

சீண்டிக் கொண்டார்கள்...

புது காதல் ஜோடிகளுக்கு உரித்தான வெட்கம்...

இருவருக்கும் ஒருவரை ஒருவர் நன்கு தெரியும் என்பதால் எந்த அசௌகரிகமும் இருக்கவே இல்லை...

மாலை வரை அங்கே இருந்து விட்டு, மனோகரியை அழைத்துக் கொண்டே, அருகே வாடகைக்கு எடுத்து இருந்த வீட்டிற்கு நெடுஞ்செழியன் சென்று விட்டான்...

கீர்த்தனாவுக்கோ தூக்கம் தொலைந்து போனது...

அக்ஷயாவிடம் சொல்ல வேண்டும் என்று அவள் நினைத்த போதிலும், "இப்போ சொல்ல வேணாம்... அவளுக்கு சர்ப்ரைஸ் ஆஹ் இருக்கட்டும்" என்று நெடுஞ்செழியன் சொல்லி சென்றான்...

கீர்த்தனாவோ நிச்சயதார்த்தத்துக்காக புடவை, நகை என்று அலங்கார வேலைகளை பார்க்க தொடங்கி விட்டாள்.

அவர்கள் வீட்டில் கல்யாண களை கட்டி இருந்தது...

இதே சமயம் அடுத்த இரு நாட்கள் எப்படி ஓடியது என்று தெரியவில்லை...

நிச்சயதார்தத்துக்கு முதல் நாள்...

அன்று வெள்ளிக்கிழமை...

காலையிலேயே அக்ஷயாவையும் தனிஷாவையும் அழைத்துக் கொண்டே கீர்த்தனாவின் ஊரை நோக்கி புறப்பட்டு விட்டான் வீரராகவன்... எங்கே செல்கின்றோம் என்று தெரியாமலே அவள் குழந்தையுடன் காரில் அமர்ந்து இருந்தாள்.
 
Top