அத்தியாயம் 2
அடுத்த நாள் காலையில் பொழுதும் அழகாக புலர்ந்தது...பிரமாண்டமான வீடு...
பட தயாரிப்பாளர் குருமூர்த்தியின் வீடு என்றால் கேட்கவும் வேண்டுமா?
பல கோடிகள் செலவு செய்து கட்டப்பட்ட வீடு அது...
வாசலில் கூர்க்கா காவலுக்காக நின்று இருந்தான்...
மிகப்பெரிய வளாகத்தில் ஐந்து கார்கள் வரிசையாக அடுக்கப்பட்டு இருந்தன...
ஆளுக்கொரு கார்...
வீட்டை சுற்றி பச்சை பசேலென மரங்களும் செடிகளும் பூக்களும் நிறைந்து இருக்க, அவற்றுக்கு தோட்டக்காரன் நீர் ஊற்றிக் கொண்டு இருந்தான்...
தோட்டத்தில் பொம்மனேரியன் வகை மூன்று வெண்ணிற நாய்க்குட்டிகள் துள்ளி விளையாடிக் கொண்டு இருந்தன...
அவற்றை கவனித்துக் கொள்வதற்காக ஒருத்தன் அருகேயே நின்று இருந்தான்...
அவர்கள் வண்டிகளை ஓட்ட இரு சாரதிகள்...
ஐந்து கார்களுக்கு இரு சாரதிகள் தானா? என்று கேட்டால், அனைவரும் ஒரே நேரத்தில் வெளியே கிளம்புவது இல்லையே...
அதிகமாக வம்சி கிருஷ்ணாவும் கெளதம் கிருஷ்ணாவும் தங்கள் வண்டிகளை தாங்களே ஓட்டி செல்பவர்கள்...
அரிதாக தான் சாரதியை பயன்படுத்துவார்கள்...
குருமூர்த்திக்கு ஒரு சாரதி, வசந்தி, யாதவ் கிருஷ்ணா மற்றும் வேதவல்லிக்கு ஒரு சாரதி...
இது தான் அவர்கள் வீட்டின் நடைமுறை...
இது வெளிப்பக்க தோற்றம் என்றால், வீட்டினுள் நுழைந்தால் இனிமையான பெண்ணின் குரலில் பக்தி பாடல் ஒன்று சத்தமாக ஒலித்துக் கொண்டு இருந்தது...
வீடெல்லாம் சாம்பிராணி மணம் ஆட்களை ஈர்த்தது...
தெய்வீக உணர்வு...
குருமூர்த்தியோ ஒரு கையில் அலைபேசியில் செய்தியை பார்த்துக் கொண்டே, அடுத்த கையால் அவசரமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்...
அவர் இதழ்களில் மெல்லிய புன்னகை...
அந்த காந்த குரலில் எப்போதுமே அவருக்கு மயக்கம்...
அந்த மயக்கம் தான் அந்த குரலை அவருக்கு மொத்தமாக சொந்தமாக்கி இருந்தது...
ஆம் அந்த குரலுக்கு உரிமையானவர் வசந்தி...
வம்சி கிருஷ்ணாவின் தாய்...
சாமி அறையில் வீணை வாசித்தபடி பாடல் பாடிக் கொண்டு இருந்தவர், கடவுளை வணங்கிக் கொண்டே வெளியே வந்தார்...
வழக்கமாக யாருக்காவது திட்டிக் கொண்டு இருக்கும் வேதவல்லியோ, "புருஷன் சாப்பிடுறத கவனிக்காம, பாட்டு பாடணும்னு அவசியமா?" என்று ஆரம்பித்து விட்டார்...
வசந்திக்கு இந்த வார்த்தைகள் பழகி போய் விட்டன...
"இன்னைக்கு லேட் ஆய்டுச்சு அத்தை... மன்னிச்சுக்கோங்க" என்று சொல்லிக் கொண்டே குருமூர்த்தி அருகே வந்தவர், "சாம்பார் வைக்கட்டுமா?" என்று கேட்க, "இல்லம்மா, நான் கிளம்புறேன்... எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு" என்று சொல்லிக் கொண்டே, கையை கழுவிக் கொண்டு எழுந்தவரோ, வசந்தி நீட்டிய துணியில் கையை துடைத்தவர், "எனக்கு சாப்பாடு போடலைன்னாலும் பரவாயில்லம்மா, ஆனா அவ பாடிட்டே இருக்கணும்" என்று சொல்லிக் கொண்டே வெளியேறி செல்ல, வசந்தியின் இதழ்களில் புன்னகை அரும்பியது...
சிரித்தால் வேதவல்லிக்கு பிடிக்காது என்று வாயை இறுக மூடிக் கொண்டே, குருமூர்த்தியை வழி அனுப்ப வாசல் வரை சென்றார்...
வேதவல்லியோ, "இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை... பாடி பாடியே அவனை மயக்கி வச்சு இருக்கா இவ... இவ குரல் நல்லவா இருக்கு? என் பேரன் பாடுனா ஊரே கொண்டாடும்..." என்று திட்டிக் கொண்டே, வேலைக்காரப்பெண் பாக்கியா கொடுத்த காஃபியை அருந்த ஆரம்பித்து விட்டார்... வம்சி கிருஷ்ணாவின் இசை வளமே வசந்தியிடம் இருந்து வந்தது தான்...
ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளும் மனம் வேதவல்லிக்கு இல்லை... அவர் பேசுவதை கேட்டு வசந்தி ஒன்றும் கோபப்படவில்லை... மெல்லிய புன்னகையுடன் கடந்து விட்டார்...
வசந்தியின் குரலை தொடர்ந்து, அந்த வீட்டை இசையால் பிரகாசமாக்கிக் கொண்டு இருந்தது வம்சி கிருஷ்ணாவின் குரல்...
வெண்ணிற குர்தா அணிந்து இருந்தவன் வாய்க்குள் ஒரு பாடலை முணு முணுத்துக் கொண்டே, மாடியில் இருந்து இறங்கி வந்தான்...
வசந்தியோ ஏறிட்டு மகனைப் பார்த்தார்...
அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை...
அவனோ பிடி கொடுக்க மாட்டேன் என்று சொல்கின்றான்...
கௌதம் கிருஷ்ணா இது சம்பந்தமாக பேசி இருப்பான் என்று யூகித்தவர் வம்சி கிருஷ்ணாவிடம் இதனை பற்றி இன்று பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டே, சாப்பாட்டு மேசையில் அமர்ந்தவனிடம், "இன்னைக்கு ரெக்கார்டிங் ஆஹ் வம்சி?" என்றார்...
"ம்ம்" என்று சொல்லிக் கொண்டே சாப்பாட்டை எடுத்து தட்டில் வைத்து அவன் சாப்பிட ஆரம்பித்தான்...
அவன் சாப்பிட்டு முடியட்டும் என்று மௌனமாக நின்று இருந்தார் வசந்தி...
இதே சமயம், "பாட்டிம்மா" என்று சொல்லிக் கொண்டே, அவர்கள் வீட்டினுள் நுழைந்தாள் கல்யாணி...
வயதுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லை...
சந்தோஷ் சுப்பிரமணியம் ஹாசினி என்ற நினைப்பில் எல்லாமே செய்து கொண்டு இருப்பாள்...
சின்ன வயதில் இருந்து, "வம்சி உனக்கு தான்" என்று சொல்லி சொல்லியே அவள் மனதை கெடுத்து வைத்து இருந்தார் வேதவல்லி...
அவளை கண்டதுமே, "வாடிம்மா" என்று வேதவல்லி அழைக்க, அவர் அருகே அமர்ந்து, டி வி யை பார்த்தவள், "இன்னைக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பார்த்தீங்களா?" என்று அதனை பற்றி பேச ஆரம்பித்து விட்டாள்.
அவளுக்கு தெரிந்தது, சாப்பாடு, சீரியல், தூக்கம், வம்சி கிருஷ்ணா, அவ்வளவு தான்...
வாழ்க்கையில் வம்சி கிருஷ்ணாவை திருமணம் செய்ய வேண்டும் என்பதை தவிர எந்த குறிக்கோளும் அவளுக்கு இல்லை...
வேதவல்லிக்கும் சீரியல் என்றால் உயிர்...
"அதான் பாரேன் கல்யாணி, அதுல மூணு பொண்ணுங்க ஒரே நேரத்துல கர்ப்பம் ஆயிட்டாங்க" என்று அதனை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்...
அவருடன் பேசிக் கொண்டு இருந்தாலும் கல்யாணியின் விழிகள் என்னவோ சாப்பிட்டுக் கொண்டு இருந்த வம்சி கிருஷ்ணாவை தான் மேலிருந்து கீழ் அளந்தன...
அவர்கள் பேசுவதை கேட்டு வசந்திக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டே வம்சி கிருஷ்ணா அருகே அமர, அவனோ எதனையும் காதில் வாங்காமல் சாப்பிடுவதிலேயே குறியாக இருக்க, குரலை செருமினார் வசந்தி...
சட்டென திரும்பி பார்த்தவன், "ம்ம், சொல்லுங்க" என்றான்...
"கெளதம் பேசுனானா?" என்று மென்மையாக கேட்டார்...
அவனோ ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, "ம்ம் பேசுனான், நானும் பேசுனேன்" என்றான்...
இருவரும் குரலை தாழ்த்தி தான பேசினார்கள்...
வேதவல்லியை பற்றி தெரியும் இருவருக்கும்...
பேசுவதை கூர்ந்து கேட்டு பிரச்சனை செய்ய கூடியவர் அவர்...
அதனால் அவர்கள் இந்த விஷயத்தில் அவதானமாக இருந்தார்கள்...
"கல்யாணியை பிடிக்கலையா?" என்றார் வசந்தி...
அவனோ சாப்பிட்டுக் கொண்டே, தலையை திருப்பி டி வி யை பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்த கல்யாணியை பார்த்து விட்டு மீண்டும் திரும்பி வசந்தியை பார்த்தவன், "அப்பாவை லவ் பண்ணி தானே கல்யாணம் பண்ணுனீங்க?" என்று கேட்டான்...
"ம்ம்" என்றார் அவர்...
"உங்களுக்கு அப்பா மேல வந்த அந்த ஃபீலிங் எனக்கு இவ மேல வரல... எனக்கு அவளை பார்த்தாலே சின்ன பொண்ணுன்னு தோணும்... குழந்தைக்காக ஒருத்தி எனக்கு வேணாம்... எனக்காகன்னு ஒருத்தி வேணும்... இப்போவும் உங்கள பார்க்கும் போது அப்பா கண்ணுல அந்த காதல் தெரியும்... எப்போவுமே உங்க லவ் பார்த்து நான் அட்மயர் ஆகி இருக்கேன்... அது போல, எனக்கு வயசாகுற நேரத்துலயும் என் பொண்டாட்டியை நினச்சா என் ஹார்ட் வேகமா துடிக்கணும்... அப்படி ஒரு பொண்ண தான் தேடிட்டு இருக்கேன்" என்றான்...
வசந்தியின் இதழ்கள் மெலிதாக விரிந்து கொண்டன...
அவன் எதிர்பார்ப்பு புரிந்தது... ஆனால் நடைமுறைக்கு சரி வருமா? என்று தடுமாற்றம்...
"எனக்கு புரியுது வம்சி... ஆனா எங்கன்னு தேட போற? உனக்கு இருக்கிற ஃப்ரெண்ட்ஸ் எல்லாமே ஜென்ட்ஸ் தான்... இதுக்கப்புறம் நீ தேடுற போல ஒருத்தி கிடைப்பான்னு நினைக்கிறியா?" என்றார்...
அவர் கேட்டுக் கொண்டே இருக்கும் போது, "சார் இன்னைக்கு உங்களுக்கு வந்த லெட்டர்ஸ்" என்று வாசலில் நின்று கூர்க்கா சொல்ல, அவனோ தேதியை பார்த்தான்...
இன்னும் முதலாம் தேதி வரவில்லை...
வந்தது அவசியமான கடிதங்கள் அல்ல என்று அவனுக்கு தோன்றியது...
"பாக்கியா அத வாங்கி மேசைல வை... ரெக்கார்டிங் முடிய வந்து பார்க்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே கையை கழுவியவன் வசந்தியை பார்த்து, "ஒரு மூணு மாசம் எனக்கு டைம் கொடுங்க" என்று சொல்லிக் கொண்டே எழ, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே, அவனை அனுப்பி வைக்க வாசல் வரை வந்தார் வசந்தி...
அவர் அருகே வந்து நின்ற கல்யாணியோ, "மாமா பை" என்றாள் வெட்க சிரிப்புடன்...
அவனோ அவளை திரும்பி அழுத்தமாக பார்த்து தலையை அசைத்து விட்டு, காரில் ஏறிக் கொண்டவன் காரை செலுத்த ஆரம்பித்து இருந்தான்...
அவன் செல்லும் வரை மௌனமாக இருந்த வேதவல்லி ஆரம்பித்து விட்டார்...
"உன் மகன் என்ன சொல்றான்?" என்றார் வசந்தியிடம்...
"கல்யாணியை பார்க்க சின்ன பொண்ணா இருக்காம்" என்றார் வசந்தி...
"ஐயோ அத்தை நான் சின்ன பொண்ணு எல்லாம் இல்லை... பெரிய பொண்ணு தான்... மாமாவை விட மூணு வயசு தானே கம்மி" என்று சொன்னவளை பார்க்க அவருக்கு பாவமாக தான் இருந்தது... அவள் தலையை வருடிக் கொடுத்த வசந்தியோ பெருமூச்சுடன் நகர முற்பட, "ஏய் வாலு, பெரிய பொண்ணுன்னா புடவை கட்டணும், இப்படி சந்தோஷ் சுப்பிரமணியன் ஹாசினி நினைப்புல ட்ரெஸ் பண்ணுனா, அவன் உன்னை குட்டி பொண்ணுன்னு தான் நினைப்பான்" என்று சொல்லிக் கொண்டே அமர்ந்தான் கெளதம் கிருஷ்ணா...
"என் பேத்திக்கு என்னடா குறைச்சல், உன் அண்ணனுக்கு தான் ரசனை இல்ல" என்றார் வேதவல்லி...
கெளதம் கிருஷ்ணாவோ, "அவனுக்கு இஷ்டம் இல்லன்னா, எதுக்கு கஷ்டப்படுத்துறீங்க பாட்டி? அவளை கெடுக்கிறதே நீங்க தான்... கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சா அவ எப்படி சந்தோஷமா இருப்பா?" என்று கேட்டான்...
"போடா போடா, நான் எல்லாம் கல்யாணம் பண்ணுன அப்புறம் தான் என் புருஷன் முகத்தையே பார்த்தேன்" என்றார் அவர்...
"உங்க ஜெனரேஷன் வேற, எங்க ஜெனரேஷன் வேற" என்று சொல்லிக் கொண்டே இருக்க, "என்னடி திட்ட வச்சு ரசிச்சிட்டு இருக்கியா?" என்றார் வேதவல்லி வசந்தியிடம்...
அவருக்கோ சுருக்கென்று தைத்தது...
கெளதம் கிருஷ்ணாவுக்கும் கோபம்...
"அவங்க சொல்லி கொடுத்து பேசுறதுக்கு நான் ஒன்னும் சின்ன பையன் இல்ல" என்று அவன் ஆரம்பிக்க, சட்டென அவன் கையை பற்றிய வசந்தி, 'இல்லை' என்கிற ரீதியில் தலையாட்ட, "எல்லாம் நீங்க கொடுக்கிற இடம் தான்" என்று அவருக்கு திட்டிக் கொண்டே சாப்பிட அமர்ந்தான் கௌதம் கிருஷ்ணா...
இடையில் கல்யாணியோ, "இப்போ எதுக்கு எல்லாரும் சண்டை போடுறீங்க... நான் வம்சி மாமாவை கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வைக்கிறேன்" என்று சொல்ல, "இவ வேற புரிஞ்சுக்காம பேசுறா" என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே மௌனமாகி விட்டான் கெளதம் கிருஷ்ணா...
"டேய் உனக்கு இன்னைக்கு ரெக்கார்டிங் இல்லையா?" என்று கேட்டுக் கொண்டே, அவனுக்கு உணவை வசந்தி எடுத்து வைக்க, "இல்லம்மா, இன்னைக்கு நான் ஃப்ரீ தான்" என்றான்...
"அப்போ யாதவ்வை ஸ்கூல் ல விட்டுடுறியா?" என்றார் வசந்தி... சட்டென ஏறிட்டு அவரை பார்த்தவன் முகத்தில் மெல்லிய வலியின் சாயல், "ம்ம்" என்றான்...
"ட்ரைவர் இருக்கான் தான்பா, ஆனா வம்சி போல நீயும் அவனை அவாய்ட் பண்ணுறன்னு அவன் நினைச்சுட கூடாது ல" என்றார் வசந்தி...
"வம்சி அவாய்ட் பண்ண காரணமே, யாதவ்வை பார்க்கும் போதெல்லாம் அவனால இயல்பா இருக்க முடியலன்னு தான்... ரொம்ப டிஸ்டர்ப் ஆய்டுறான்... பாட கூட முடியலன்னு சொன்னான்... அவனுக்கு யாதவ்வை ரொம்ப பிடிக்கும் மா" என்றான் கெளதம் கிருஷ்ணா...
"எனக்கு தெரியும் டா" என்று சொன்னவரது கண்கள் கலங்க, புடவை முந்தானையால் கண்ணீரை துடைத்துக் கொண்டார்...
"சரி அவனை அழைச்சிட்டு வாங்க" என்று சொல்ல, அவரும் அவன் அறையை நோக்கி நடந்தார்...
வெளியே இத்தனை கலவரங்கள் நடுவே, தனி உலகத்தில் ஜன்னல் அருகே நின்று இருந்தான் யாதவ் கிருஷ்ணா...
பதினைந்து வயது தான் இருக்கும்...
புது உலகத்தில் வாழ்பவன்...
கோடிக் கணக்கான ரசிகர்கள் கேட்கும் வம்சி கிருஷ்ணாவின் இசையினை கேட்க முடியாதவன்...
கேட்க முடியாத காரணத்தினால் பேசவும் முடியாது அவனால்...
விஷேட கல்வி கற்பிக்கப்படும் பாடசலையில் தான் படிக்கிறான்...
அவனுக்கென்று ஒரு தனி உலகம்...
விழிகளே அவன் உலகம்...
தோட்டத்தில் விளையாடும் நாய் குட்டியை பார்த்து புன்னகைத்துக் கொண்டான்...
அவன் அப்படியே நின்று இருக்க, கதவை திறந்து கொண்டே, உள்ளே வந்த வசந்தியோ மென் புன்னகையுடன் அவன் தோளில் கையை வைத்தார்...
சட்டென திரும்பியவன் அவரை கண்டதும் இதழ் பிரித்து சிரித்துக் கொள்ள, "ஸ்கூல் போக ரெடி ஆகிட்டியா?" என்று சைகையில் கேட்டார்... அவனுக்காக சைகை மொழி கற்றுக் கொண்டார்... தனது குழந்தைகளுக்காகவே வாழும் தாய்மாரில் அவரும் ஒருவர்...
அவனும், சைகையில் பதில் சொல்ல, "இன்னைக்கு அண்ணா கூட ஸ்கூலுக்கு போ" என்றார் அவர்...
அவனிடம் இருந்து, "பெரிய அண்ணாவா? சின்ன அண்ணாவா?" என்கின்ற கேள்வி...
சற்று தயக்கத்துடன், "சின்ன அண்ணா" என்றார் வசந்தி...
அவன் முகம் சட்டென்று சுருங்கியது...
கெளதம் கிருஷ்ணாவுடன் அவன் நேரம் செலவிடுவான் தான்...
ஆனால் இது வரை வம்சி கிருஷ்ணாவுடன் நேரம் செலவு செய்தது இல்லை...
அவன் மனநிலையை அறியும் பக்குவம் யாதவ் கிருஷ்ணாவுக்கு இல்லை...
அவனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்று தான் எப்போதுமே நினைத்துக் கொள்வான்...
அவன் தலையை வருடி, அவன் கன்னத்தை தடவிக் கொடுத்தவர், "பெரிய அண்ணா ரெக்கார்டிங் போய்ட்டார்" என்றார் சைகையில்...
அவனும் சம்மதமாக தலையாட்டிக் கொண்டே அவருடன் நடந்து சென்றான்... அவன் கீழே இறங்கி வரும் போது, "பொல்லாத புள்ளய பெத்து வச்சு இருக்கா" என்று இரக்கமே இல்லாமல் வெளி வந்தது வேதவல்லியின் வார்த்தைகள்...
"பாட்டி, அவன் பாவம்ல" என்றாள் கல்யாணி...
இதே சமயம், வேதவல்லியை திரும்பி முறைத்த கெளதம் கிருஷ்ணாவோ, "நீங்க பேசுறத கேக்கிறத விட அவன் இப்படி இருந்தா சந்தோஷமா இருப்பான்" என்று சொல்லிக் கொண்டே, எழுந்து கொண்டவன், "போகலாமா?" என்று யாதவ் கிருஷ்ணாவிடம் கேட்க, அவனுக்கு கெளதம் கிருஷ்ணா பேசுவது கேட்கவில்லை என்றாலும் அவன் இதழ் அசைவை வைத்து கேட்பதை புரிந்து கொண்டவன், ஆம் என்கின்ற ரீதியில் தலையை சிரித்தபடி ஆட்டிக் கொண்டே, அவனுடன் புறப்பட்டான்...
இருவரையும் வாசல் வரை வழியனுப்ப வந்த வசந்தியோ, "யாதவ்வோட டீச்சர் கிட்ட இன்னைக்கு ஈவினிங் க்ளாஸ் க்கு வர்றதான்னு கேளுடா" என்றார்...
சட்டென திரும்பி பார்த்த கெளதம் கிருஷ்ணாவோ, "ஆஹ் யாதவ்வோட டீச்சர்ன்னா நம்ம தேன்மொழி தானே... நானே கேட்கணும்னு நினச்சேன்... ஒரு வாரமா அவ க்ளாஸுக்கு வரலைல" என்றான் அவன்...
"ம்ம் மகாலக்ஷ்மிக்கு உடம்பு சரி இல்லன்னு சொன்னா, நான் நேற்று மெசேஜ் பண்ணுனேன்... இப்போ ஓகேன்னு தான் சொன்னா... எதுக்கும் உறுதி படுத்திக்கோ" என்று சொல்ல, அவனும், "சரிம்மா" என்று சொல்லிக் கொண்டே, யாதவ் கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டே காரில் ஏறிக் கொண்டான்...
தேன்மொழி வேறு யாரும் அல்ல, வசந்தியின் தூரத்து உறவுப் பெண்... அவளுக்கு தந்தை இல்லை... சிறு வயதிலேயே ஆக்சிடென்ட் ஒன்றில் இறந்து விட்டார்...
தாய் மட்டும் தான்... தையல் தைத்து மகளை கல்வி கற்க வைத்தார்...
வசந்தியின் உறவு என்பதாலும் பணம் இல்லை என்பதாலும் குருமூர்த்தி வீட்டில் பெரிய மரியாதை அவர்களுக்கு இல்லை...
வாசல் படியால் மகாலக்ஷ்மி வீட்டிற்குள் வருவதை கூட வேதவல்லி விரும்ப மாட்டார்... ஜாதி, தராதரம் என்று நிறைய பார்ப்பார்... அவர்கள் கஷ்டப்பட்ட குடும்பம் என்பதால் வேதவல்லியின் வாயில் இருந்து ஏதாவது குத்தும் வார்த்தைகள் வந்து கொண்டே இருக்கும்...
அதில் இருந்தே அவர்கள் வீட்டுக்கு மகாலக்ஷ்மி வருவது இல்லை... ஆனால் தேன்மொழி வரவேண்டிய கட்டாயம்...
யாதவ் கிருஷ்ணாவுக்கு கற்பிக்க அவள் வருவாள்...
பாடசாலையில் அவனுக்கு நிறைய சொல்லிக் கொடுத்ததும் அவள் தான்... அதனாலேயே வீட்டுக்கும் அவளை அழைத்து, அவனுக்கு சொல்லி கொடுக்க சொன்னார்கள்...
அவளும் மறுக்கவில்லை... யாதவ் கிருஷ்ணாவுக்கு தேன்மொழி என்றால் உயிர்...
யார் சொல்லியும் கேட்காதவன் தேன்மொழி சொன்னால் கேட்பான்...
ஆனால் தேன்மொழி தனியாக அவனுக்கு கற்பித்தாலும் ஒரு ரூபாய் கூட வசந்தியிடம் இருந்து வாங்கிக் கொள்ள மாட்டாள்...
வசந்தி வறுபுறுத்தினால் கூட அவள் பணம் பெற்றுக் கொள்வது இல்லை...
வசந்தி மனம் கேட்காமல் புடவைகள், மற்றும் வேறு பொருட்கள் வாங்கி கொடுப்பார்...
அதனையும் மறுத்தால் வசந்தியின் மனம் கஷ்டப்படும் என்பதால் அதனை மட்டும் பெற்றுக் கொள்வாள்...
அவள் பெயர் தேன்மொழியாக இருந்தாலும் அவள் விழி மொழிகள் மட்டுமே பேசும்...
ஆம் அவளும் வாய் பேச முடியாதவள்...
ஆனால் காது கேட்கும்...
சின்ன வயதில் தந்தையுடன் பைக்கில் செல்லும் போது தான் அந்த விபத்து நடந்தது... பாடசாலையில் நடந்த பாடல் போட்டியில் அவள் முதல் பரிசை வாங்கிக் கொண்டே சந்தோஷமாக வீட்டுக்கு திரும்பிய தருணம் அது...
அவள் தந்தை சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்...
இவளுக்கோ கம்பி அவள் தொண்டையில் ஏறி இருந்தது...
அவள் இனிமையான பாடலை கேட்டு யார் கண் பட்டதோ, அன்றே அவளது குரல் மொத்தமாக போய் விட்டது... வைத்தியர்களால் அவள் உயிரை மட்டும் தான் காப்பற்ற முடிந்தது... குரலை தொலைத்து விட்டாள் பெண்ணவள்...
சின்ன வயதிலேயே மேடை ஏறி பாடியவள் மொத்தமாக மௌனித்து போனாள்...
பாடகி ஆக வேண்டும் என்ற கனவு அந்த இடத்திலேயே சிதைந்தது...
அவள் தாய் அவளை அழைத்துக் கொண்டு எத்தனை மருத்துவரிடம் சென்றாலும் பயன் பூச்சியம் தான்... குரல் திரும்ப வராது என்று சொல்லி விட்டார்கள்...
கையில் இருந்த பணம் இந்த போராட்டத்திலேயே கரைந்து போனது...
ஆசைகளை தனக்குள் விழுங்கிக் கொண்ட தேன்மொழியோ அன்றில் இருந்து தனது குறிக்கோளை மாற்றிக் கொண்டாள்.
அவளது தாய் மகாலக்ஷ்மி தையல் தைத்து அவளை படிக்க வைத்தார்...
ஊமை மொழியை கற்றுக் கொண்டே தேர்ச்சி பெற்றாள்...
விஷேட தேவை உடையவர்களின் பாடசாலையில் ஆசிரியராக பணியாற்ற ஆரம்பித்து விட்டாள்.
அங்கே அவள் பார்த்தவன் தான் யாதவ் கிருஷ்ணன்...