அத்தியாயம் 2
பிரியந்த ஜெயக்கொடி அவன்.அனுராதபுரத்தை பிறப்பிடமாக கொண்டவன்...
தாய் நதீஷா மற்றும் ஒரு தங்கை இருக்கின்றாள் சசிரி.
அவனது தந்தை, ஜெயக்கொடி போக்குவரத்து அமைச்சராக இருக்கின்றார்.
அரசியல் செல்வாக்கு மிக்கவன் அவன்...
அரசியலில் ஆர்வமும் அவனுக்கு அதிகம்...
ஆனாலும் படித்து முடித்தவனுக்கு கொஞ்ச வருடங்கள் வேலை செய்வதில் ஆர்வம்...
வேலை செய்து சார்டட் எஞ்சினியரிங் முடித்து விட்டு அதன் பிறகு தந்தையை தொடர்ந்து அரசியலில் குதிக்கலாம் என்று நினைத்தவன், எஞ்சினியரின் சேர்விஸ் எக்ஸாம் எழுதி கொழும்பு நீர்பாசன திணைகளத்தில் பொறியியலாளராக மக்களோடு மக்களாக வேலை பார்க்க தொடங்கி விட்டான்...
அரசியலில் ஆர்வம் இருந்ததால் என்னவோ பெண்கள் பக்கம் அவன் நாட்டம் சென்றது இல்லை.
இப்படியான சந்தர்ப்பத்தில் தான், அவனது திணைக்களத்தில் அவனுடன் வேலை செய்வதற்காக வந்து சேர்ந்தாள் ராதிகா... மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவள்.
அவள் தந்தை மகாதேவன், பாடசாலை ஆசிரியராக இருக்கின்றார். தாய் கீதாஞ்சலி, ஒரே அண்ணன் கிரிதரன்...
கிரிதரன் திருமணமும் செய்து விட்டான்.
அவன் மனைவி விமலா சற்று கெடுபிடி ஆனவள்...
அதனால் கிரிதரன் வீட்டில் தொடர்புகளை குறைத்துக் கொண்டான்...
ராதிகாவும் படித்து முடித்து, எஞ்சினியரிங் செர்விஸ் எக்ஸாம் எழுத, அவளுக்கு கொழும்பு நீர்பாசன திணைக்களத்தில் தான் வேலை கிடைத்தது...
போக விருப்பமே இல்லை.
அவளுக்கோ சிங்களம் அரைகுறையாக தான் தெரியும்...
கொழும்பில் வேலை செய்ய வேண்டும் என்றால் சிங்களம் தெரிந்து இருந்தால் வசதியாக இருக்கும் என்று அறிவாள்...
அப்பாய்ண்ட்மென்ட் வந்ததுமே மேலிடங்களில் பேசிப் பார்த்தாள்...
கொழும்பில் வேலை செய்து விட்டு, கொஞ்ச வருடங்களில் மாற்றல் பெற முடியும் என்று கையை விரித்து விட்டார்கள்...
வேறு வழி இல்லாமல் கொழும்புக்கும் மகாதேவனுடன் வந்து சேர்ந்து விட்டாள்...
அவளது பாடசாலை நண்பி தீபிகா, வெள்ளவத்தையில் வீடெடுத்து தங்கி இருக்கின்றாள்.
வங்கியில் அவள் வேலை செய்ய, அவளுடன் சேர்ந்து கொண்டாள்...
மகாதேவனோ அவளை அங்கே விட்டு கிளம்பும் போது, "இங்க பாரு ராதி, இங்க கிறுக்கனுங்க கூட, பின்னாலயே வருவானுங்க, நீ கண்டுக்க கூடாது, விளங்குதா?" என்று கேட்டார்...
வழக்கமாக அவளிடம் சொல்லும் அறிவுரை தான்...
சலித்து விட்டது அவளுக்கு.
"அப்பா, நான் ஒண்டும் சின்ன பிள்ள இல்லை, வேலைக்கு போக போறேன், நீங்க இப்பவும் அதையே கதைச்சிட்டு இருக்கீங்க" என்று சொன்னாள்...
"இந்த காவலிகளை நினச்சா ஒரே பயம் புள்ள" என்றார் அவர்...
"என்னை நம்புங்க அப்பா, நான் அப்படி செய்வனா?" என்று கேட்டாள். அவரும், பெருமூச்சுடன், "உன்னில நம்பிக்கை இல்லாமலா?" என்று கேட்டு அவள் தலையை வருடி விட்டு கிளம்பி விட்டார்...
அவளோ அடுத்த நாள் இருந்து ஒரு வாரம் ட்ரெயினிங் செல்ல வேண்டும்...
"பஸ் ல தான் போகனும் எல்லா" என்று தீபிகாவிடம் கேட்க, "சாரி கட்டி தானே ட்ரெயினிங் போகணும் நீ?" என்று அவள் கேட்டாள்...
"ம்ம்" என்று சொன்னவளிடம், "நல்லா ஊசி குத்து, பிறகு சாரி இல்லாம நீ இறங்கனும்" என்று சிரித்தபடி தீபிகா சொல்ல, "ஏன் டி?" என்றாள் அவள்...
"சரியான நெருக்கம் டி, பஸ் ல மூச்சு எடுக்கவே ஏலாது காலைல..." என்று சொன்னாள் தீபிகா...
அவளும், "சரி தான்" என்று சொல்லிக் கொண்டே படுத்தவள், அடுத்த நாள் இருந்து ட்ரெயினிங் போக ஆயத்தமானாள்... சொன்ன போலவே நெருக்கம் தான்...
பஸ் வேறு ஆமை போல ஊர்ந்தது...
'இத விட நான் நடந்து போய் இருப்பன்' என்று வாய்க்குள் திட்டியும் கொண்டாள்...
அங்கே மதியம் கேன்டீனில் சாப்பிடுவாள்...
மீண்டும் மாலை நேரம் அடித்து பிடித்து வீட்டுக்கு வந்து சேர்வாள்...
இரவு உணவை தீபிகாவுடன் சேர்த்து தயாரித்து சாப்பிட்டு விட்டு தூங்கி விடுவாள்...
ஒரு வாரம் முடிய, அவள் நீர்பாசன அலுவலகம் செல்ல வேண்டும்...
காலையில் எழுந்தவள், எடுத்து வைத்து இருந்த கருப்பும் சிவப்பும் சேர்ந்த புடவையை உடுத்திக் கொண்டே, கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்...
"சிக் எண்டு இருக்கா ராதி" என்றாள் தீபிகா...
அவளை திரும்பி முறைத்தவள், "அட ஏன்டி?" என்று கேட்க, "உண்மையா தான் சொல்றன், உன்ட ஸ்ட்ரக்சருக்கு சாரி வடிவா இருக்கு... உன்னை கேம்பஸ் ல எப்பிடி விட்டு வச்சானுங்க?" என்று கேட்டாள்...
அவளை மேலிருந்து கீழ் பார்த்தவள், "என்ட அப்பா க்கு தெரிஞ்சா எனக்கு செருப்பால அடிப்பார்" என்று சிரித்தபடி சொல்லிக் கொண்ட, நெற்றியில் கருப்பு பொட்டை வைத்தாள்.
"மூக்குத்தி குத்தி இருக்கியே, நோகலையா?" என்று தீபிகா கேட்க, "எனக்கு மூக்குத்தி விருப்பம் தீபி, நொந்தது தான்" என்று சொன்னவளோ கைப்பையை எடுத்துக் கொண்டே, "பை, போயிட்டு வாறன்" என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.
சிறிது தூரம் நடந்து வந்தவள், அங்கே இருக்கும் பஸ் தரிப்பிடத்தில் காத்துக் கொண்டு நின்று இருந்தாள்...
பஸ்ஸும் வந்தது...
இடமே இல்லாமல் தொங்கிக் கொண்டு வந்தார்கள்...
'இண்டைக்கு என்ன இவ்வளவு நெருக்கமா இருக்கு, இதுல நானும் தொங்கோனும் போல' என்று நினைத்துக் கொண்டே, ஏற முனைய அவளை பிடித்து உள்ளே தள்ளி விட்டார்கள்...
மூச்சு முட்டியது...
ஆண் பெண் என்று பேதம் இல்லாமல் நெருக்கிக் கொண்டு நிற்க வேண்டிய நிலை...
வியர்வை மணம் வேறு...
'காலைல குளிச்சிட்டு வந்தா தான் என்னவாம்' என்று மனதுக்குள் திட்டிக் கொண்டாள்.
பிடிக்கவும் அவளுக்கு இடம் இல்லை... அப்படி இப்படி மோதி அங்கும் இங்கும் அடிபட்டு வந்தவளுக்கு ஒரு கட்டத்தில் மூச்செடுக்கவே சிரமமாகி போனது.
'இதுக்கு மேல தாங்காது, இறங்கி அடுத்த பஸ் ல போவோம், இல்ல எண்டா ஒட்டோவுல போவோம்' என்று நினைத்துக் கொண்டே இறங்கி விட்டாள்...
இப்போது தான் மூச்சே வந்தது.
அப்போது அந்த வழியால் போன ஒருத்தன், "சுது நோனா" (வெள்ளை பெண்ணே) என்று சொல்லி விட்டு கண்ணடித்து விட்டு சென்றான்.
'ச்சை பொறுக்கி' என்று அவனுக்கு மனதுக்குள் திட்டி விட்டு தன்னை குனிந்து பார்த்தவளுக்கு மயக்கமே வராத குறை தான்...
புடவை கண்ட மேனிக்கு விலகி, அவளது அங்கங்கள் எல்லாம் அப்பட்டமாக தெரிந்தது...
'நாசமா போனவன், இத தான் பார்த்துட்டு போய் இருக்கான் போல' என்று நினைத்துக் கொண்டே புடவையை சரி செய்தவள், அடுத்த பஸ்ஸுக்காக காத்துக் கொண்டு நின்றாள்...
அதுவும் நெருக்கமாக வர, "இனி நிண்டா லெட் ஆயிடும்" என்று முணுமுணுத்துக் கொண்டே, ஆட்டோவை கை காட்டி ஏறிக் கொண்டாள்...
எட்டு மணிக்கு அவள் அலுவலகத்தில் நின்று இருக்க வேண்டும்...
ஆனால் அங்கே போய் சேரவே அவளுக்கு ஒன்பது மணி ஆகி விட்டது...
தயங்கி தயங்கி உள்ளே சென்றவளைப் பார்த்த சிற்றூழியனோ, "என்ன வேணும்?" என்று சிங்களத்தில் கேட்டான்...
அவளும் கையில் இருந்த அப்பாயன்ட்மென்ட் லெட்டரை நீட்ட, அதனை பார்த்தவன், "டிரெக்டர் சேர் வெளிய போய்ட்டார்" என்று சிங்களத்தில் சொன்னான்... அவளுக்கோ எதுவும் புரியவில்லை...
"மொக்கத?" (என்ன?) என்று கேட்டாள்.
அவள் சிங்களம் பேசிய தோரணையில் ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு, "அக்டிங் சீஃப் எஞ்சினியர் கிட்ட போகலாம் வாங்க" என்று சிங்களத்தில் சொல்லிக் கொண்டே அவளை அழைத்து செல்ல, அவளும் என்னவென்று புரியாமலே கூட சென்றாள்...
அவள் சென்றது என்னவோ பிரியந்தவின் அறைக்குள் தான்...
அவனோ முக்கிய ஃபைலை பார்த்துக் கொண்டு இருக்க, "அழுத் எஞ்சினேறு சேர்" (புது எஞ்சினியர் சார்) என்றான் சிற்றூழியன்...
ஃபைலில் இருந்து கண்ணை எடுத்து அவளை ஏறிட்டுப் பார்த்தான்.
வெண்ணிற ஷேர்ட் அணிந்து இருந்தான்...
தாடி மீசை வளர்த்து இருந்தான்...
அவனைக் கண்ட ராதிகாவோ, 'இது நம்மட பிரியந்த அண்ணா தானே' என்று நினைத்துக் கொண்டே, மெலிதாக சிரித்தாள்.
"ஹிநாவேன்ன எப்பா" (சிரிக்க வேணாம்) என்றான்...
அவனது இறுக்கமான முகத்தைப் பார்த்துக் கொண்டே, வாயை கப்பென்று மூடிக் கொள்ள, நேரத்தைப் பார்த்தான்.
ஒன்பது மணி கடந்து இருந்தது.
'அஹா லேட்டா வந்ததுக்கு தான் ஏச போறார் போல' என்று நினைத்துக் கொண்டே, "அய்யா" என்று அவள் ஏதோ சொல்ல ஆரம்பிக்க முதல், "லாஸ்ட் வோர்னிங்" என்று சொல்லி விட்டு கையை நீட்டினான்...
அவளும் எதற்கு கையை நீட்டுகின்றான் என்று புரியாமல், கையை குலுக்குவதற்காக நீட்டினாள்.
அவளை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே, கையை வெடுக்கென்று இழுத்துக் கொண்டான்...
அவளோ, 'இது என்ன விளையாட்டா கிடக்கு? கை குடுக்க மாட்டார் போல' என்று நினைத்தவள், இரு கைகளையும் கூப்பி, "ஆயுபோவன் சேர்" (வணக்கம் சார்) என்றாள்...
அங்கே நின்ற சிற்றூழியனுக்கு சிரிப்பு வந்து விட்டது...
வாயில் கையை வைத்து குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்து விட, அவளை வெறித்துப் பார்த்த பிரியந்த அந்த சிற்றூழியனை முறைத்துப் பார்த்து வெளியேறும் படி கண்களை காட்ட, அவனும் வெளியேறி விட்டான்.
இப்போது பெருமூச்சுடன் இதழ் குவித்து ஊதியவனோ, "அப்பொய்ன்ட் லெட்டர்" என்றான்...
அவளும், 'ஒஹ் இதுக்கு தான் கையை நீட்டினாரா?, முதல் நாளே சரியான நோண்டி' என்று நினைத்துக் கொண்டே அப்பாய்ன்ட்மென்ட் கடிதத்தை நீட்டினாள்...
அதனை வாங்கிப் பார்த்தவன், பெல்லை அழுத்தி, அங்கே வேலை செய்யும் கிளார்க் சாந்தனை அழைத்தான்...
அவனும் உள்ளே வர, "இத டிரக்டர் ட மேசைல வைங்க, மேடத்துக்கு இருக்கிறதுக்கு இடத்தைக் காட்டுங்க, நான் இப்ப சைட்டுக்கு போறேன், வந்து பார்க்கிறேன்" என்று சிங்களத்தில் சொல்லி விட்டு ராதிகாவைப் பார்த்தவன், "ராதிகா, திங்களும் புதனும் சாரி கட்டி வந்தா போதும், மிச்ச நாளைல சைட்டுக்கு போற போல ஜீன்ஸ் போட்டு வரணும்" என்றான் சிங்களத்தில்...
அவளுக்கு எதுவுமே புரியவில்லை...
"ஹரி அய்யே"(சரி அண்ணா) என்று சும்மா தலையை ஆட்டி விட்டு, வெளியே வந்தாள்...
சாந்தனும், "என்ன மேடம்" (வாங்க மேடம்) என்று சிங்களத்தில் தான் பேசினான்...
அவளுடைய இருக்கையை காட்ட, அதில் அமர்ந்து கொண்டே, திருவிழாவில் காணமல் போன குழந்த போல விழிக்க ஆரம்பித்து விட்டாள்...
"சேர் ஸ்ட்ரிக்ட் த?" (சார் ஸ்ட்ரிக்ட் ஆஹ?) என்று சாந்தனிடம் கேட்க, ஆம் என்ற தோரணையில் அவனும் தலையை ஆட்டினான்.
"அத, பஸ் எக்க என்ன கொட்ட, அதனின் க்ரவுட் எக்க, மம கெட் டவுன், ஆட்டோ ஹம்புன்னா" (நான் பஸ்ஸில் வரும் போது, கடுமையான நெரிசல், நான் கீழிறங்கி ஆட்டோவில் வந்தேன்) என்று அரைகுறை சிங்களத்தில் அவள் உளறுவதைப் பார்த்த சாந்தனுக்கு இதழ்களுக்குள் சிரிப்பும் வந்து விட்டது.
"நான் தமிழ் தான் மேடம்" என்றான் அவன்...
அவள் இதழ்கள் விரிய, "நீங்க தமிழ் தானா? அப்பாடா" என்று நெஞ்சில் கையை வைத்து பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டவளோ, "எந்த இடம்?" என்று கேட்க, அவனோ, "நான் கொழும்பு தான், நீங்க?" என்று கேட்டு அவர்கள் நட்பாகி விட்டார்கள்...
சற்று நேரத்தில் அந்த அலுவலக டைரெக்டர் வந்து சேர, அவர் அறைக்குள் வர சொல்லி, ராதிகாவுக்கு அழைப்பு வந்தது.
"டிரெக்டர் ஒஃப் இர்ரிகேஷன், வீரகோன்" என்று இருந்த பெயர்ப் பலகையை பார்த்துக் கொண்டே பெண்ணவள் உள்ளே வர, அங்கே தான் அமர்ந்து இருந்த பிரியந்தவோ, தனக்கு அருகே இருந்த இருக்கையைக் காட்ட, அவளும் தயங்கி தயங்கி அமர்ந்து கொண்டாள்...
பிரியந்தவும் வீர்ககோனும் என்னென்னவோ பேசிக் கொண்டார்கள்...
அவளுக்கு எதுவுமே புரியவில்லை...
புரிந்த போல, அவர்கள் சிரிக்கும் போது சிரித்துக் கொண்டாள்... முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பேசும் போது அவளும் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டாள்...
'என்ன கதைக்கிறாங்க எண்டே தெரியல, சிரிச்ச மாதிரியே இருப்பம்' என்று நினைத்துக் கொண்டாள்...
எல்லாம் முடிய, "ராதிகாவை நீங்க ட்ரேயின் பண்ணுங்க" என்று சொன்னார் வீரக்கோன், அவனும் சம்மதமாக தலையாட்டிக் கொண்டே ராதிகாவைப் பார்த்தவன், "நாளைக்கு சைட்டுக்கு போவம்" என்றான் சிங்களத்தில்...
அவளுக்கு சைட் என்று சொன்னதில் இருந்து ஏதோ புரிய, சரி என்று தலையாட்டிக் கொண்டாள்...
அதனை தொடர்ந்து வெளியே வந்தவளோ, "அப்போதே பிரியந்த அண்ணா அவர்ட ரூம்ல வச்சு சாரி எண்டு ஏதோ கதைச்சாரே, என்ன எண்டு தெரியலயே, சாந்தன்ட்ட கேப்போம்" என்று முணுமுணுத்துக் கொண்டே சாந்தன் அருகே சென்றவள், "அப்போதே பிரியந்த சேர் சாரி எண்டு ஏதோ சொன்னார் தானே" என்று கேட்டாள்...
"உங்களுக்கு விளங்கலையா?" என்று கேட்க, அவளும் இல்லை என்று தலையாட்டினாள்...
"அப்ப ஏன் ஓம் எண்டு தலையாட்டுனீங்க?" என்று கேட்டான்.
"சிங்களம் தெரியாது எண்டு நினைக்க கூடாது தானே" என்றாள் அவள்...
மெலிதாக சிரித்தவனோ, "இங்க திங்களும் புதனும் சாரி உடுக்கனும்... மிச்ச நாளுல சைட்டுக்கு போறதுக்கு ஏத்த போல ஜீன்ஸ் போட்டு வர சொன்னார்" என்று சொல்ல, "ஒஹ், அதான் சொன்னவரா?" என்று கேட்டுக் கொண்டே இருக்கையில் அமர்ந்து விட்டாள்.