அத்தியாயம் 18
அடுத்த நாள் காலையில் எழுந்த தேன்மொழிக்கு இன்னுமே கன்னச் சிவப்பு அடங்கவில்லை...தன்னை அறியாமலே இதழின் ஓரத்தில் மெல்லிய புன்னகை படர்ந்து இருந்தது...
அவள் ஸ்கூலுக்கு கிளம்ப முன்னர் சாப்பிட அமர்ந்த நேரம், "என்னம்மா இன்னைக்கு முகம் பிரகாசமா இருக்கு?" என்று வசந்தி கேட்க, அதற்கு மெல்லிய புன்னகையை உதித்துக் கொண்டே சாப்பிட்டவள் கண்கள் அவள் அருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த வம்சி கிருஷ்ணாவில் படிந்து மீள, அவனோ அவளை கடைக்கண்ணால் பார்த்து விட்டு அடக்கப்பட்ட புன்னகையுடன் சாப்பிட ஆரம்பித்து விட்டான்.
ஸ்கூலுக்கு சென்றவளுக்கு மனம் புத்துணர்வில் திளைத்தது...
நேற்றுவரை இருந்த அந்த தடுமாற்றம் அவன் ஒற்றை முத்தத்தில் மறைந்து விட்டது...
அவன் என்னவன் என்கின்ற உரிமை உணர்வும் தோன்ற ஆரம்பித்து விட்டது...
அன்று ஸ்கூலில் இருந்து மகாலக்ஷ்மியை பார்க்க தனது வீட்டை நோக்கி நடந்து சென்றாள் தேன்மொழி...
அவள் தெரு முனையில் வரும் போதே பெரிய சத்தம்...
வாசலில் ஒருவன் நின்று சத்தம் போட்டு விட்டு தனது பைக்கில் வேகமாக புறப்பட்டு இருந்தான்...
பதறிய தேன்மொழியோ, வேகமாக வீட்டை நோக்கி நடந்து உள்ளே செல்ல, அங்கே வீட்டின் வாசலில் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே மகாலக்ஷ்மி நின்று இருக்க, அருகே நிர்மலா நின்று இருந்தார்...
தேன்மொழியோ அவர்களை கேள்வியாக பார்க்க, மாகாலக்ஷ்மியோ "அது ஒண்ணும் இல்லம்மா, நீ உள்ளே வா" என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைய, "மகா, இதுக்கு மேல எதுக்கு மறைக்கணும், அவ தான் பணக்கார மருமகள் ஆச்சே... காசு கேட்டா அவ கொடுத்துட போறா" என்று சொல்லிக் கொண்டே, அவருடன் கூட நடந்தார் நிர்மலா...
தேன்மொழியோ அவர்களை தொடர்ந்து வேகமாக உள்ளே நுழைந்து, மகாலக்ஷ்மியின் தோளில் கையை வைத்து தன்னை நோக்கி திரும்பியவள், "என்னாச்சு?" என்று சைகையில் கேட்டாள்.
மகாலக்ஷ்மியோ, "அது ஒன்னும் இல்லம்மா" என்று சொல்ல, "மகா, அவ கிட்ட எதுக்கு மறைக்கிற? நான் சொல்றேன் கேளு, உன் கல்யாணத்துக்கு உங்கம்மா கந்துவட்டிக்க கடன் வாங்கி இருக்காங்க, பத்திரிகை அடிக்கிறது தொடக்கம் எல்லாத்துக்கும் செலவு பண்ணியாச்சு... கல்யாணம் நடக்கலன்னா பந்தி போடுறவங்க, மண்டபக்காரங்க பணத்தை திரும்ப கொடுக்கணும்ல, ஆனா கொடுக்கல, அப்போ தர்றோம் இப்போ தர்றோம்னு சொன்னாங்க, ஆனா பணம் வந்த பாடு இல்லை... ஆனா இங்க வாங்குன வட்டி குட்டி போட்டு இப்போ மூணு லட்சத்துல வந்து நிக்குது... அந்த பெரிய தொகைக்கு உங்கம்மா எங்க போவா? எங்கேயோ இருந்து ஐம்பதாயிரம் கொடுத்து தான் இப்போ வந்து சத்தம் போட்டவனோட வாய அடைச்சா... உனக்கென்ன, பணக்காரனா வளைச்சு போட்டுட்டு சொகுசா இருக்கிற... உன்னால உன் அம்மாவுக்கு அவமானம்னு பார்த்தா, இப்போ நடு தெருவில நிற்க விட்டுட்ட, ஹ்ம்ம், நீ கொடுத்து வச்சது இவ்ளோ தான் மகா" என்று பெருமூச்சுடன் சொல்ல, தேன்மொழிக்கு தூக்கி வாரிப் போட்டது...
"அண்ணி வேணாம், அப்படி சொல்லாதீங்க, அவ பாவம்" என்று மகாலக்ஷ்மி மகளுக்காக பேச, "நீ தான் மெச்சிக்கணும்... எப்படி கமுக்கமா இருந்து ஓடி போனா... பார்த்த தானே" என்றார் நிர்மலா...
தேன்மொழிக்கு இதயத்தில் ஊசியால் குத்தும் உணர்வு...
கலங்கிய கண்களுடன் மகாலக்ஷ்மியை பார்த்துக் கொண்டே, அவர் கையை பிடித்தவள், அவரை இழுத்துக் கொண்டே அறையின் உள்ளே நுழைய, "எனக்கு எல்லாம் தெரியும், இங்கயே பேசலாம்" என்று நிர்மலா சத்தம் போட்டார்...
தேன்மொழி கண்டு கொள்ளவே இல்லை...
மகாலக்ஷ்மியுடன் அறைக்குள் நுழைந்து விட்டாள்.
"திமிரை பாரு" என்று முணு முணுத்தார் நிர்மலா...
உள்ளே வந்தவளோ, மகாலக்ஷ்மி முன்னே போய் நின்று, "அத்தை சொல்றது உண்மையா?" என்று சைகையால் கேட்டாள். அவரோ ஆமோதிப்பாக தலையாட்டியவர், "அன்னைக்கு வசந்தி கொடுத்துட்டு போன பணம் இருந்திச்சு... அத கொடுத்து தான் அவன் வாய அடைச்சேன்" என்றார்.
தேன்மொழிக்கு இப்போது தான் வசந்தி திருமணத்துக்காக கொடுத்துச் சென்ற பணத்தின் நினைவு வந்தது...
அதனை திரும்ப கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்தவளோ, இடையில் நடந்த கலவரங்கள் நடுவே இதனை மறந்தே விட்டாள்.
வசந்தி கொடுத்த பணத்தை மகாலக்ஷ்மி தேவைக்கு பயன்படுத்தியது அவளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை...
ஆனால் தாயிடம் இதனை கேட்க முடியாது...
அவர் இருந்த நிலைக்கு அவரால் என்ன தான் பண்ணி இருக்க முடியும்?
ஆழ்ந்த மூச்செடுத்தவள், "அத விடுங்க, ஏன் இதெல்லாம் என் கிட்ட சொல்லல்ல?" என்று சைகையில் கேட்டாள்.
அவரோ, "நீ இருந்த நிலைமைக்கு இத எப்படிம்மா சொல்லுவேன்? எப்படியாவது கடனை அடைச்சுடலாம், நீ மனச போட்டு குழப்பிக்காதே" என்று மகளுக்காக சொன்னார்.
தனக்காக தான் சொல்கின்றார் என்று அவளுக்கு தெரியாதா என்ன?
"இன்னும் எவ்வளவு கொடுக்கணும்? ரெண்டரை லட்சமா?" என்று விரல்களை அசைத்து கேட்டவளிடம், "ம்ம் இன்னும் ஒரு மாசத்துக்குள்ள கொடுக்கணும்" என்றார் அவர்...
மனதுக்குள் கணக்கு போட்டாள்.
வசந்திக்கு கொடுக்க வேண்டிய பணத்துடன் சேர்த்து மூன்று லட்சம் தேவைப்பட்டது...
எங்கே போவது? யாரிடம் கேட்பது? தலை சுற்றிக் கொண்டே வந்தது...
வம்சி கிருஷ்ணாவிடமோ அவன் வீட்டினரிடமோ கேட்க அவளுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை...
வார்த்தைக்கு வார்த்தை பணத்துக்காக தான் திருமணம் செய்ததாக எல்லாரும் பேசும் போது அவளால் எப்படி இந்த உதவியை கேட்டு விட முடியும்?
என்ன செய்வது என்று தெரியவில்லை...
ஆனால் எப்படியாவது கடனை அடைத்து விட வேண்டும்...
அவள் தான் கடனை அடைத்தாக வேண்டும்...
எப்படியோ கடனை அடைத்து விடலாம் என்று நம்பினாள்...
வேறு வழி இல்லையே... தன்னை தானே நம்பி தானே ஆக வேண்டும்...
"பார்த்துக்கலாம்மா" என்று மட்டும் சைகையால் சொன்னபடி வெளியேற, அவள் பின்னால் வந்த மகாலக்ஷ்மியோ, "சாப்பிடுறியாம்மா?" என்று கேட்டார்...
அவளும் சம்மதமாக தலையாட்ட, நிர்மலாவும், "என்ன அம்மாவும் பொண்ணும் ரகசியம் பேசி முடிச்சுட்டிங்களா?" என்று கேட்டுக் கொண்டே தேன்மொழி அருகே அமர்ந்தார்...
மகாலக்ஷ்மியும் தேன்மொழிக்கு சாப்பாடு எடுத்து வர உள்ளே செல்ல, நிர்மலாவோ, "தேனு நான் ஒன்னு கேட்கட்டுமா?" என்றார்.
அவளும் அவரை புருவம் சுருக்கி பார்க்க, "எப்படி உன் புருஷன வளைச்சு போட்ட? சும்மா சொல்ல கூடாது... புளியங்கொம்பா தான் புடிச்சு இருக்க... வயித்துல ஏதாவது புழு பூச்சி இருக்கா?" என்று கேட்டார்...
அவளுக்கோ அவர் கேள்விகள் எதனையும் சகித்துக் கொள்ள முடியவில்லை...
கடைசி கேள்விக்கு மட்டும், "இல்லை" என்று தலையாட்டிக் கொண்டு இருக்கும் போதே தட்டுடன் மகாலக்ஷ்மி வர, அதனை வாங்கி சாப்பிட்டவள், விரைவாகவே கிளம்பி விட்டாள்.
அவள் வீட்டில் நின்றால் நிர்மலா வாய்க்கு வந்தது எல்லாம் பேசுவார் என்று அவளுக்கும் தெரியும்...
வம்சி கிருஷ்ணாவின் வீட்டுக்கு வந்தவளுக்கு பணத்தின் எண்ணம் தான்... எப்படி பணத்தை புரட்டி எடுப்பது என்று தெரியவே இல்லை...
தனது அலைபேசியை எடுத்து தன்னுடன் வேலை பார்க்கும் நண்பி மீராவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
"மீரா எனக்கு அவசரமா மூணு லட்சம் வேணும்... எங்க எடுக்கலாம்?" என்று கேட்டாள்.
அவளோ, "உன் புருஷன் கிட்ட இல்லாத பணமா தேன்மொழி?" என்று பதில் அனுப்பி இருக்க, தேன்மொழிக்கு எரிச்சலாக இருந்தது...
எதனை கேட்டாலும் அவனிடத்திலேயே எல்லாரும் வந்து நின்றார்கள்...
அவள் எது வேண்டாம் என்று நினைக்கின்றாளோ அதனையே எல்லாரும் சொல்கின்றார்கள்...
"இது என் தனிப்பட்ட தேவைக்கு மீரா, அவர் கிட்ட கேட்க முடியாது" என்று பதில் அனுப்பி இருக்க, "அவ்ளோ பணத்துக்கு நான் எங்கடி போவேன்? எனக்கு தெரிஞ்ச ஒரு வட்டிக் கடைக்காரர் இருக்கார்... அவர் கிட்ட கேட்டு பார்ப்போமா?" என்று கேட்டாள்.
தேன்மொழிக்கோ, "மறுபடியும் வட்டியா?" என்று தான் தோன்றியது...
வட்டிக்கு வாங்குவது சரி, அதனை எப்படி அடைப்பது?
ஸ்கூலில் வரும் பணத்தில் அடைப்பது என்பது வாய்ப்பே இல்லை...
"யோசிச்சு சொல்றேன்" என்று பதில் அனுப்பியவளுக்கு தலை விண் விண்ணென்று வலித்தது...
நகைகளை அடகு வைக்கலாம் என்றால், அவளிடம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நகைகளும் இல்லை...
தவிப்பாக இருந்தது...
எனக்கு பிரச்சனை இல்லை, அது தாயின் பிரச்சனை என்று அவளால் மகாலக்ஷ்மியை தனித்து விட முடியாது... அவளை சின்ன வயதில் இருந்து கஷ்டத்தின் மத்தியில் படிக்க வைத்து உயர்த்தியவர் அவர்... அவள் மீது அளவு கடந்த பாசம் உள்ளவர்... அவளுக்கும் மகாலக்ஷ்மி என்றால் உயிர்... எப்படி தனது தாயை அவளால் அநாதரவாக விட்டு விட முடியும்?
அவளுக்கு என்று தனியாக சொத்தும் இல்லை...
இருப்பதும் வாடகை வீட்டில் தான்...
அவள் உழைப்பு வாடகைக்கே சரியாக போய் விடும்...
இப்படிப்பட்ட நிலையில் மூன்று லட்சத்தை அவள் எங்கனம் அடைக்க முடியும்?
யோசனையுடன் நடந்து வந்து தனது அறையுடன் ஒட்டி இருக்கும் பால்கனியில் வந்து நின்று வெளியே வெறித்துப் பார்த்தாள்.
எவ்வளவு நேரம் அப்படியே நின்றாள் என்று தெரியவில்லை, "தேன்மொழி" என்கின்ற சத்தம் கேட்டு தான் அவள் நிதானத்துக்கு வந்தாள்.
அறைக்குள் இருந்து வம்சி கிருஷ்ணா தான் அழைத்து இருந்தான்...
அவள் அறைக்குள் மீண்டும் நுழைந்த கணம், அவனோ ஷேர்ட்டை கழட்டிக் கொண்டு நின்று இருந்தான்...
அவன் வெற்று முதுகு அவளுக்கு அப்பட்டமாக தெரிந்தது... அவன் முதுகில் வாள் வடிவ டாட்டூ...
யாதவ் கிருஷ்ணா வரைந்த வாள் போலவே இருந்தது...
சட்டென்று அடுத்த பக்கம் திரும்பிக் கொண்டாள்.
அவனோ ஷேர்ட்டை மாற்றி டீ ஷேர்ட்டை போட்டுக் கொண்டே, அவளை நோக்கி திரும்பியவன், "அந்த பக்கம் யாரை பார்த்துட்டு நிக்கிற?" என்று கேட்டான்...
இப்போது சட்டென்று அவனை நோக்கி திரும்பியவள் அவன் விழிகளை நோக்க அவனோ பெருமூச்சுடன், "இன்னைக்கு நானும் யாதவ்வும் கௌதமும் டின்னருக்கு வெளிய போகலாம்னு இருக்கோம்... நீயும் வா" என்றான்.
அவள் வெளியே செல்லும் மனநிலையிலா இருக்கின்றாள்?
ஆனால் மறுக்க தோன்றவில்லை...
சம்மதமாக தலையாட்டினாள்...
அவனோ அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "ஏன் உன் முகம் இவ்ளோ டல்லா இருக்கு?" என்று கேட்க, அவளோ ஒன்றும் இல்லை என்கின்ற ரீதியில் தலையாட்ட, "என்ன பிரச்சனைன்னாலும் என் கிட்ட சொல்லு" என்று சொன்னவன் வெளியேறி விட்டான்...
அவன் வெளியேறியதும் தான் அவளுக்கு மூச்சே வந்தது...
வெளியில் சென்று சாப்பிடும் மன நிலையில் அவள் இல்லை...
ஆனால் அவன் சொன்னதற்காக குளித்து ஆயத்தமானாள்...
இருக்கும் புடவைகளில் அழகான காட்டன் புடவையை நேர்த்தியாக உடுத்துக் கொண்டாள்.
காட்டன் புடவை அணியும் போது சின்ன சுருக்கம் இருந்தால் கூட அப்பட்டமாக தெரியும்...
ஆனால் அவள் அவ்வளவு நேர்த்தியாக அணிந்து இருந்தாள்.
எப்போதுமே கை வேலைகள் அவளுக்கு நேர்த்தியாக வரும்...
அவள் புடவையில் எடுத்த மடிப்புகளை பார்க்கவே விசிறி போல அழகாக இருந்தது...
நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி, கையில் வளையல், காதில் தோடு, இவ்வளவு தான் அவளது ஆபரணங்கள்... ஆனால் எதுவும் தங்கம் இல்லை...
அப்படிப் பட்ட சாதாரண தோற்றத்திலேயே அழகியாக இருந்தாள்.
அவள் ஆயத்தமாகி முடிய, அவள் அறைக் கதவு தட்டப்பட்டது...
வழக்கமாக அறையை தாழிட்டு விட்டு தான் ஆயத்தமாவாள். அதற்கான அவகாசமும் வம்சி கிருஷ்ணா கொடுப்பான்...
அவள் அறைக் கதவை திறந்த சமயம், வாசலில் நின்ற வம்சி கிருஷ்ணாவோ அவளை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு, "ரொம்ப நீட் ஆஹ் ட்ரெஸ் பண்ணி இருக்க, ஐ லைக் தட்" என்று சொன்னபடி உள்ளே நுழைய, அவள் கன்னங்கள் மீண்டும் வெட்கத்தில் சிவந்து போயின...
அடிக்கடி இப்படி பேசி பேசியே அவளை வெட்கப்பட வைத்துக் கொண்டு இருக்கின்றானே...
"நான் ரெடி ஆகிட்டு வந்திடுறேன்" என்று சொல்லிக் கொண்டே, அவன் குளியலறைக்குள் நுழைந்து விட, கீழே இறங்கலாமா? இல்லையா? என்று தடுமாறிக் கொண்டு இருந்தாள்.
கீழே இறங்கினால் வேதவல்லி ஏதாவது பேச ஆரம்பித்து விடுவார் என்கின்ற பயத்திலேயே அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தவள், இறுதியாக யாதவ் கிருஷ்ணாவுடன் பேசியே நேரத்தைக் கடத்த ஆரம்பித்து விட்டாள்.
கெளதம் கிருஷ்ணாவும் வம்சி கிருஷ்ணாவும் ஒரே நேரத்தில் ஆயத்தமாகி வர, அவர்கள் நால்வரும் ஒன்றாக கீழே இறங்கி சென்றார்கள்...
வம்சி கிருஷ்ணா நீல நிற ஷேர்ட் அணிந்து இருந்தான்...
தேன்மொழியும் நீல நிற புடவை தான் அணிந்து இருந்தாள்.
அந்த நீல நிற ஷேர்ட்டை அவனுக்கு பொருத்தம் என்று அணிந்தானா? இல்லை அவளுக்கு பொருத்தம் என்று அணிந்தானா? என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்...
வேதவல்லிக்கு ஏற்கனவே விஷயம் காதில் விழுந்து இருக்க, "பிச்சைக்காரிக்கு வந்த வாழ்வை பார்த்தியா?" என்று அருகே அமர்ந்து இருந்த கல்யாணியிடம் சொன்னார்.
சட்டென வம்சி கிருஷ்ணா அவரை திரும்பி பார்த்து உறுத்து விழிக்க, "நாடகத்தை சொன்னேன்பா" என்று சொல்லிக் கொண்டே டி வியை பார்க்க, "சீரியலை பத்தி பேசுன போல தெரியலையே" என்று ஆரம்பித்து ஏதோ பேச வந்தவனின் கையை பற்றி இருந்தாள் தேன்மொழி...
அவளை திரும்பி பார்த்தான். கண்களால் பேச வேண்டாம் என்று இறைஞ்சினாள்...
அவனோ பெருமூச்சுடன் முன்னே செல்ல, அவளும் அவனை பற்றி இருந்த கையை விட்டுக் கொண்டே பின்னால் நடந்தாள்...
வெளியே நடந்து செல்பவர்களை வெறித்துப் பார்த்த வேதவல்லியோ, "பார்த்தியா பொண்டாட்டியை சொன்னதும் அவனுக்கு சுர்ரென்று கோபம் வருது... அவ கையை பிடிச்சதும் பேசாம விட்டுட்டான்... ஊமைச்சி நல்லா மயக்கி வச்சு இருக்கா" என்றார் கல்யாணியிடம் கடுப்பாக...
அவளோ, "ஒரே கலர்ல ட்ரெஸ் பண்ணி இருக்காங்க பாட்டி, எனக்கு வயிறு அப்படியே பத்தி எரியுது... நாம இத்தனை நாள் ஒன்னும் கிழிக்கல... லூசு போல பேசிட்டே தான் இருக்கோம்... ஏதாவது பெருசா பண்ணனும்" என்றாள்.
"பெருசா பண்ணுறது பிரச்சனை இல்லடி... நாம சிக்காம பண்ணனும்... அதான் முக்கியம்" என்று சொல்ல, கல்யாணியோ, "என் கிட்ட ஒரு நல்ல ஐடியா இருக்கு... ஆனா அதுக்கு சந்தர்ப்பம் அமையுமான்னு தெரியல" என்று மீண்டும் நிறைவேற்ற முடியாத திட்டங்களை தீட்ட ஆரம்பித்து விட்டார்கள்...
இதே சமயம் வெளியே வந்த கெளதம் கிருஷ்ணாவோ, "பாட்டி கிட்ட ரெண்டு கேள்வி கேட்டு இருக்கணும் வம்சி" என்று சொல்லிக் கொண்டே, யாதவ் கிருஷ்ணாவுடன் நடந்து வர, "எனக்கும் கேட்கணும் போல தான் இருந்திச்சு... விட்டா தானே" என்று சொல்லிக் கொண்டே, சற்று திரும்பி பின்னால் வந்த தேன்மொழியை அழுத்தமாக பார்த்துக் கொண்டே, காரில் ஏறிக் கொண்டான்...
அவன் பார்த்த பார்வையில் தலையை குனிந்து கொண்டாள் தேன்மொழி...
அவனை தொடர்ந்து மீதி மூவரும் காரில் ஏறினார்கள்...
வம்சி கிருஷ்ணா தான் வண்டி ஓட்டினான்...
அவன் அருகே தேன்மொழி...
பின்னால் யாதவ் கிருஷ்ணாவும் கெளதம் கிருஷ்ணாவும் அமர்ந்து இருந்தார்கள்...
அவர்கள் பேசிக் கொண்டே வந்தால் யாதவ் கிருஷ்ணர் தனித்து உணர்வான் என்று நினைத்த கெளதம் கிருஷ்ணாவோ அவனுடன் சைகையால் பேசிக் கொண்டே வர, அவர்களை ரியர் வியூ கண்ணாடியூடு பார்த்து விட்டு, தனக்கு அருகே அமர்ந்தபடி முன்னால் வரும் வாகனங்களை யோசனையுடன் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்த தேன்மொழியை பார்த்தான்...
அவளுக்கு பணம் மட்டுமே இப்போதைய யோசனையாக இருந்தது...
"ஆர் யூ ஓகே?" என்று கேட்டான்...
சட்டென நிதானத்துக்கு வந்தவளோ, "ஆம்" என்கின்ற ரீதியில் தலையாட்ட, "உன் மைண்ட் ல ஏதோ டிஸ்டெர்பன்ஸ் இருக்குன்னு தோணுது... அது உன் முகத்துல அப்படியே தெரியுது" என்று சொன்னான்...
அவளிடம் மௌனம்...
"உனக்கு இஷ்டம்னா என் கிட்ட சொல்லு" என்று மட்டும் சொல்லி விட்டு முடித்து விட்டான்...
அவளுக்கு சொல்ல இஷ்டம் இல்லை...
சொன்னால் பண உதவிக்கு தான் சொல்கின்றாள் என்று அவன் நினைத்து விடுவானோ என்று பயந்தாள்.
தனக்குள்ளேயே தனது கஷ்டத்தை புதைத்துக் கொண்டாள்.
அவர்கள் வண்டி ஒரு பெரிய ஹோட்டல் வளாகத்தினுள் நுழைந்தது...
ஏழு நட்சத்திர ஹோட்டல் அது...
பிரபலங்கள் மட்டுமே அதிகமாக வரும் பிரசித்தி பெற்ற ஹோட்டல்...
வம்சி கிருஷ்ணாவும் கெளதம் கிருஷ்ணாவும் அடிக்கடி வந்து இருக்கின்றார்கள்...
யாதவ் கிருஷ்ணாவும் கூட தாய் தந்தையுடன் ஓரிரெண்டு தடவைகள் வந்து இருக்கின்றான்...
ஆனால் தேன்மொழிக்கு இதெல்லாம் புதிது...
ஒரு பிரமாண்ட பார்வையுடனேயே காரில் இருந்து இறங்கிக் கொண்டாள்.
வம்சி கிருஷ்ணா முன்னே செல்ல அவனை தொடர்ந்து மூவரும் சென்றார்கள்...
வம்சி கிருஷ்ணாவை கண்டதுமே, அவனை நோக்கி வந்த ஹோட்டலின் மேனேஜர், "நீங்க சொன்ன போல ரூஃப் டாப் ரிசர்வ் பண்ணி இருக்கோம் சார்" என்றார்...
அவனும், ஒரு தலையசைப்புடன் லிஃப்ட்டில் ஏறிக் கொள்ள, அவனை தொடர்ந்து மீதி மூவரும் ஏறிக் கொண்டார்கள்...
யாதவ் கிருஷ்ணாவோ, "இந்த ஹோட்டல் சாப்பாடு சூப்பரா இருக்கும்" என்று சைகையில் தேன்மொழியிடம் சொல்ல, அவளும் மெதுவாக சிரித்துக் கொண்டே, "ஹொட்டலே பார்க்க சூப்பரா இருக்கு" என்று கையசைத்து சொன்னாள்.
அவர்கள் பேசிக் கொண்டு இருந்த தருணத்தில் அவர்கள் செல்ல வேண்டிய ஹோட்டலின் இறுதி தளமும் வந்து விட்டது...
இன்னும் மொத்தமாக இருளவில்லை...
மிதமான சூரிய வெளிச்சம் இருந்தது...
அந்த தளத்தின் அலங்காரங்களை பார்த்த தேன்மொழி பிரமித்து போனாள்.
முழுக்க முழுக்க இயற்கை ரோஜாப் பூக்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது...
மின் விளக்குகள் கண்களை கவர்ந்தன...
இங்கிருந்து பார்த்தால் அருகே இருக்கும் கடற்கரை கண்ணுக்கு தெரிந்தது...
அங்கே சூரியன் தன்னை கடலுக்குள் மறைத்துக் கொண்டு இருந்த தருணம் அது...
பார்க்கவே ரம்மியமாக இருந்தது...
கெளதம் கிருஷ்ணாவோ தொலைபேசியை எடுத்து அதனை புகைப்படம் எடுத்தவன், "செமயா இருக்குல்ல" என்று சொல்லிக் கொண்டே, ஏனையவர்களுடன் சேர்ந்து சுய புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டான்...
தேன்மொழிக்கு ஒரு வித இதமான உணர்வு...