ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 17

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 17

அன்று மாலை பால்கனியில் தனியே நின்று நிறைய நேரம் யோசித்தான் வம்சி கிருஷ்ணா...

தென்றலை மறக்க வேண்டும் என்றால் தேன்மொழியை நெருங்க வேண்டும்...

தேன்மொழியை நன்றாக கவனித்துக் கொண்டான் தவிர, அவளை புரிந்து கொள்ளவும், காதலிக்கவும் அவன் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவே இல்லை...

கொஞ்சம் முயற்சித்தால் தானே அவனால் தேன்மொழியுடன் வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும்...

இன்று முதல் அதற்கான முயற்சியை எடுக்க நினைத்தவன், அறைக்குள் நுழைந்தான்...

தேன்மொழி சோஃபாவில் கண்களை மூடிக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.

அவளது இரு காதுகளிலும் ஹெட் செட் போடப்பட்டு இருந்தது...

காயம் பட்ட இடது உள்ளங்கையை காற்றுப்பட மடியில் விரித்து வைத்து இருந்தவளது வலது கை பாடலை ஒலிபரப்பாக்கிக் கொண்டு இருந்த அலைபேசியை பற்றி இருந்தது..

மெல்லிய தேகம்...

சுடிதார் அணிந்து இருந்தாள்.

நிர்மலமான முகம்...

இன்று தான் அவளை ஆழ்ந்து கவனிக்கிறான்...

அவள் அருகே வந்து நின்றவன், "தேன்மொழி" என்று அழைத்தான்...

அவளிடம் அசைவு இல்லை...

அப்படியே கண் மூடி மோன நிலையில் இருந்தாள்...

அவள் கேட்டுக் கொண்டு இருப்பது என்னவோ அவன் பாடல் தான்...

அவனுக்கு அது அப்போது தெரியவே இல்லை...

தான் அழைத்தது அவளுக்கு கேட்டு இருக்காது என்று தெரியும்...

சற்றே குனிந்து, அலைபேசியில் இணைக்கப்பட்டு இருந்த ஹெட் செட்டின் இணைப்பை இழுத்து விட்டான்...

அடுத்த கணமே, அலைபேசியின் ஸ்பீக்கரில் அவன் பாடல் சத்தமாக ஒலித்தது...

"தாரமே தாரமே வா…

எந்தன் சுவாசமே சுவாசமே…

நீ… உயிரே வா…"

என்று அவன் பாடிய பாடல் தான்...

அவளோ பதறி விட்டாள்.

அவனை பார்த்துக் கொண்டே, அலைபேசியில் பாடலை அணைக்க முயன்றாள்...

அவன் விழிகளில் ஆச்சரியம்...

அவன் இதழ்களுக்குள் அவள் பதட்டத்தை பார்த்து மெல்லிய கீற்று போன்ற புன்னகை...

அவளை பார்த்துக் கொண்டே, அவள் முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்தான்...

அவளுக்கோ அவசரத்துக்கு பாடலை நிறுத்த முடியவில்லை...

காயம் பட்ட கை வலித்தாலும் பரவாயில்லை என்று வலியை தாங்கிக் கொண்டே, கஷ்டப்பட்டு பாடலை அணைத்ததும் தான் அவளுக்கு மூச்சே வந்தது...

ஆனால் பாடல் தொடர்ந்து ஒலித்தது...

அவளது அலைபேசியில் அல்ல, நேரில்...

ஆம் அவன் மீதி வரிகளை அவளை பார்த்துக் கொண்டே பாடினான்...

“ஆயுள் ரேகை முழுவதுமாய்…

தேயும் முன்னாலே…

ஆளும் வரை வாழ்ந்திடலாம்…

காதலின் உள்ளே…

இந்த உலகம் தூளாய்…

உடைந்து போனாலும்…

அதன் ஒரு துகளில்…

உன்னை கரை சேர்ப்பேன்…

தாரமே தாரமே வா…

வாழ்வின் வாசமே வாசமே…

நீ… தானே… தாரமே தாரமே வா…

எந்தன்… சுவாசமே சுவாசமே…

நீ… உயிரே வா… ஆ ஆ…”

அவளை பார்த்துக் கொண்டே பாடினான்...

அவளுக்காகவே எழுதிய வரிகள் என்று அவள் உணர்ந்த தருணம் அது...

அவளுடைய பல நாள் கனவு இது...

அவன் தனக்காக மட்டும் ஒரு தடவை பாட வேண்டும் என்று...

அவள் கேட்காமலே நிறைவேற்றி விட்டான்...

அதுவரை அவனை பார்க்காமல் இருந்தவள் அவன் பாடியதும் சட்டென்று ஏறிட்டுப் பார்த்தாள்.

இமைக்காமல் பார்த்தாள்...

பாடிக் கொண்டு இருந்தவனை அணைத்து விட கைகள் பரபரத்தன...

கட்டுப்படுத்திக் கொண்டாள்.

இருவரின் பார்வைகளும் மெல்லிய உரசலுடன் முத்தமிட்டுக் கொண்டன...

அவனை பார்த்துக் கொண்டு இருந்தவளது கண்கள் நெகிழ்வில் கலங்கின...

கண்ணீர் கீழே விழுந்து விடாமல் உள்ளே இழுத்துக் கொண்டாள்.

அவனோ அவளை பார்த்துக் கொண்டே பாடலை பாடி முடித்தவன், "என் பாட்டு பிடிக்குமா?" என்று கேட்டான்...

என்ன ஒரு அபத்தமான கேள்வி இது? என்று யோசித்தவளோ, தலையை ஆம் என்கின்ற ரீதியில் வேகமாக ஆட்ட, அவனோ இதழ் பிரித்து சத்தமாக சிரித்தவன், "நான் வீட்ல இருக்கும் போது ஃபோன்ல பாட்டு கேட்கணும்னு இல்ல, என் கிட்ட கேளு, உனக்காக பாடுறேன்" என்றான்...

ஏற்கனவே அவன் மீது மயக்கத்தில் இருப்பவள், அவனது இந்த வார்த்தைகளில் மொத்தமாக விழுந்து விட, இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே சம்மதமாக தலையாட்டினாள்.

வம்சி கிருஷ்ணாவும் சிரித்துக் கொண்டே, "பதிலுக்கு நீ எனக்கு ஒன்னு பண்ணனும்" என்றான்...

புருவங்களை உயர்த்தி அவனை கேள்வியாக பார்த்தாள்...

"எனக்கு சைன் லாங்குவேஜ் சொல்லி கொடுக்கணும்" என்றான் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே... அவளும் சம்மதமாக தலையாட்ட, "அப்போ வா, யாதவ்வுடன் சேர்ந்து எனக்கு சொல்லி கொடுத்தா, கத்துப்பேன்" என்று கண் சிமிட்டி சொல்ல, அவன் ஒற்றைக் கண் சிமிட்டலில் அவள் இதயம் இன்னும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது...

இதழ் பிரித்து மூச்சை வெளியே விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே, எழுந்து கொண்டாள்.

அவன் முன்னால் வெளியேறி செல்ல, அவனை பின் தொடர்ந்து யாதவ் கிருஷ்ணாவின் அறைக்குள் நுழைந்தாள்.

அவர்களைக் கண்ட யாதவ் கிருஷ்ணாவோ, இதழ் பிரித்து புன்னகைக்க, தேன்மொழியோ தாங்கள் வந்த விஷயத்தை சைகையால் அவனிடம் சொன்னாள்.

அவனுக்கோ ரெட்டிப்பு மகிழ்ச்சி...

வம்சி கிருஷ்ணா அருகே வந்து அவன் கையை பிடித்து இழுத்து வந்து அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தவன், "தொடங்கலாமா?" என்று சைகையால் கேட்க, வம்சி கிருஷ்ணாவும் ஆம் என்கிற ரீதியில் தலையாட்டினான்...

இடது கை பழக்கம் உள்ளே தேன்மொழிக்கோ இப்போது வலது கையால் வெண்ணிற பலகையில் எழுத வேண்டிய நிலை, எழுதிக் காட்டியே நிறைய கற்றுக் கொடுத்தாள்.

அவனும் கைகளை அசைத்து கற்றுக் கொண்டான்...

மொழி என்பது நம் உணர்வுகளை வெளிபடுத்தும் ஊடகம் தானே...

உணர்வுகளை புரிந்து கொண்டாலே மொழி அவசியம் இல்லை என்று ஆகி விடுகின்றது... இப்போதெல்லாம் யாதவ் கிருஷ்ணாவின் உணர்வுகளையும் தேன்மொழியின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள தொடங்கி இருக்கின்றான் வம்சி கிருஷ்ணா...

ஆனாலும் அவர்களுக்காக சைகை மொழி கற்றுக் கொண்டான்...

கற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில், இடை நடுவே, "ஆஹ் எனக்கு யாதவ் அன்னைக்கு ஒன்னு சொல்லி கொடுத்தான்" என்று சொன்ன வம்சி கிருஷ்ணாவோ நடு விரலையும் மோதிர விரலையும் மடித்து கையை தூக்கி காட்ட, சட்டென்று தேன்மொழியின் கன்னங்கள் சிவந்து போயின...

கன்ன சிவப்பை கட்டுப்படுத்த கஷ்டப்பட்டாள்...

பெருமூச்சை எடுத்து தன்னை நிலைப்படுத்த படாத பாடு பட்டாள்.

இதனை அறியாத வம்சி கிருஷ்ணாவோ, "இதுக்கு பேர் ஐ லவ் யூ தானே" என்று கேட்க, அவளும், கஷ்டப்பட்டு இதழில் தோன்றிய புன்னகையை மறைத்துக் கொண்டே, "ஆம்" என்று தலையாட்ட, அவன், "ஓகே" என்ற வார்த்தையுடன் முடித்துக் கொண்டான்...

இப்படியே அவர்கள் நாட்களும் நகர்ந்தன...

வம்சி கிருஷ்ணா அவளுடனும் யாதவ் கிருஷ்ணாவுடனும் அடிக்கடி நேரம் செலவிடுவான்...

வேதவல்லியும் சரி கல்யாணியும் சரி திட்டங்களை மட்டுமே போட்டுக் கொண்டு இருந்தார்கள்...

அகப்படாமல் செயற்படுத்துவது அவர்களுக்கு மிகுந்த கஷ்டமான விஷயம் அல்லவா?

"பாட்டி, லேட் ஆனாலும் பரவாயில்ல, ஒரே ப்லான் ல அவ வீட்டை விட்டு போற போல பண்ணனும்" என்று கல்யாணி சொன்னாள்...

இப்படியே இருக்க, அடுத்த முதலாம் திகதியும் வந்து விட்டது... தேன்மொழி வம்சி கிருஷ்ணாவுக்கு அன்றைய மாதம் கடிதம் எழுதவில்லை...

கையில் காயம் இருந்ததால் எழுதவும் முடியவில்லை...

விட்டு விட்டாள்.

முதலாம் திகதி என்று சொன்னதும் வழக்கம் போல வம்சி கிருஷ்ணாவின் இதயம் வேகமாக துடித்தது...

அவன் அடக்க நினைத்தும், அடங்காத எதிர்பார்ப்பு...

கூர்க்கா கொண்டு வந்த கடிதங்களை வெறித்துப் பார்த்தான்...

அதனுள் தென்றலின் மடல் இருக்கின்றதா என்று தேடிப் பார்க்க மனம் சொன்னது...

கைகள் தன்னை அறியாமல் அந்த கடிதங்களை அலச தொடங்க, அவன் கண் முன்னே ஸ்கூலுக்கு கிளம்பி செல்லும் தேன்மொழி தென்பட்டாள்...

கண்களை மூடி திறந்தவனோ அதனை அலசாமல் அப்படியே வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

அன்று அவனுக்கு ஒரு தொலைக்காட்சி பேட்டி இருந்தது...

காலையிலேயே பேட்டி கொடுக்க கெளதம் கிருஷ்ணாவுடன் கிளம்பி விட்டான்...

இருவரும் போகும் வழியில், "அந்த ஆங்கெர் கொஞ்சம் தாறு மாறா கேள்வி கேட்பார்" என்றான் கௌதம் கிருஷ்ணா...

"ஐ க்னோ" என்றான் வம்சி கிருஷ்ணா...

"கண்டிப்பா தேன்மொழியை பத்தி கேட்பாருன்னு தோணுது" என்று சொல்ல, "ம்ம் பார்க்கலாம்" என்று முடித்துக் கொண்டான்.

அவர்களும் அன்று மாலை பேட்டியை முடித்து விட்டு திரும்பி விட்டார்கள்...

அதனை பற்றி வம்சி கிருஷ்ணா அலட்டிக் கொள்ளவில்லை...

ஒரு வாரம் கழித்து அந்த பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது...

அந்த நேரம் வம்சி கிருஷ்ணா வெளியே சென்று விட்டான்...

கெளதம் கிருஷ்ணா தான் வீட்டில் இருந்தான்...

அன்று மாலை வம்சி கிருஷ்ணா மற்றும் கெளதம் கிருஷ்ணாவின் பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஆரம்பித்தது...

வேதவல்லியோ, "கெளதம் சீக்கிரம் வா, உங்க ரெண்டு பேரோட பேட்டியும் தொடங்கிடுச்சு" என்று சொன்னார்...

கல்யாணியும் வசந்தியும் கூட ஆர்வமாக வந்து உட்கார்ந்து விட்டார்கள்...

சமையலறைக்குள் நின்று இருந்த தேன்மொழிக்கும் ஆர்வம்...

கட்டுப்படுத்த முடியவில்லை...

வெளியே வந்தவள், ஓரமாக தள்ளி இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

அவர்கள் நடுவே சென்று அமரும் அளவுக்கு அவள் இயல்பாகவில்லை...

வம்சி கிருஷ்ணா இருந்தால் மட்டுமே அவள் சற்று இயல்பாக உணர்வாள்.

அவள் ஓரமாக அமர்ந்து இருப்பதை பார்த்த கெளதம் கிருஷ்ணாவோ, "அண்ணி இங்க வந்து இருங்க" என்று சொல்லி அங்கே வெற்றிடமாக இருந்த இருக்கையை காட்ட, "ஆமா இவ இங்க வரலன்னு தான் எல்லாரும் அழுதாங்களாக்கும்" என்றார் வேதவல்லி...

தேன்மொழியோ தான் இங்கேயே இருப்பதாக சைகையில் சொல்ல, கெளதம் கிருஷ்ணாவும் அவளை கஷ்டப்படுத்தவில்லை...

பேட்டியும் ஆரம்பமானது...

இசை சம்பந்தமான கேள்விகளுக்கு எல்லாம் வம்சி கிருஷ்ணாவும் கெளதம் கிருஷ்ணாவும் பதில் சொல்லி முடித்து இருக்க, "வம்சி சார் உங்க கிட்ட பர்சனல் கேள்வி ஒன்னு கேக்கலாமா?" என்று கேட்டார் பேட்டி எடுப்பவர்...

"ஷோர்" என்றான் அவன்...

"நீங்க திடீர்னு யாரும் எதிர்பார்க்காம கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க... காதல் கல்யாணம்னு சொன்னீங்க, ஊமை பொண்ணு வேற... இதுல ஏதும் உள் நோக்கம் இருக்கா?" என்று கேட்டார்...

"காதல்ல என்ன உள்நோக்கம் இருந்துட போகுது?" என்று அவன் மாறி கேட்டான்...

"அதாவது, ஊமை பொண்ணுக்கு நான் வாழ்க்கை கொடுத்து இருக்கேன்... அப்படி இப்படின்னு உங்கள பற்றிய நினைப்பை உயர்த்தலாம்ல" என்று குத்தலாக கேட்டார்...

உடனே வேதவல்லி, "இவளால அவனுக்கு எவ்ளோ அவமானம் பார்த்தியா? விளக்குமாத்துக்கு பட்டு குஞ்சம் கேக்குதாம்" என்றார்...

சுர்ரென்று தைத்தது தேன்மொழிக்கு...

வசந்திக்கு அந்த பழமொழி நாராசமாக இருந்தது...

வேதவல்லியை எதிர்த்து பேச தைரியம் இல்லை... வாயை மூடிக் கொண்டார்... கல்யாணி விழுந்து விழுந்து சிரித்தாள்.

"பாட்டி என்ன பேச்சு பேசுறீங்க?" என்று அவரை அதட்டியது என்னவோ கெளதம் கிருஷ்ணா தான்...

"உண்மையை தானே டா சொன்னேன்..." என்றார் அவர்...

"உங்கள திருத்தவே முடியாது, வாயை மூடிட்டு இன்டெர்வியூவை பாருங்க... " என்று கடுப்பாக சொன்னான் கெளதம் கிருஷ்ணா...

அனைவரின் பார்வையும் இப்போது டி வியின் பக்கம் திரும்பினாலும், தேன்மொழிக்கு எதிலும் மனம் லயிக்கவே இல்லை...

வேதவல்லி பேசுவதை அவள் கண்டு கொள்ள மாட்டாள்...

ஆனால் பேட்டி எடுப்பவரும் கூட அதே தோரணையில் பேசிக் கொண்டு இருக்க, அவளுக்கு மனம் வலிக்க ஆரம்பித்து விட்டது...

அவளது தன்னம்பிக்கையை எல்லாம் சுற்றி இருப்பவர்கள் மொத்தமாக குலைத்துக் கொண்டு இருந்தார்கள்...

வாய் பேச முடியாவிட்டாலும், அதற்காக அவள் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்தது இல்லை...

"என்னால் முடியும்" என்கின்ற தன்னம்பிக்கை உடையவள் தான்...

அதனை இப்போது எல்லாரும் சேர்த்து நொறுக்கிக் கொண்டே இருக்க, "என் ஆசைக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... அவருக்கு நான் பொருத்தம் இல்லையோ, என்னை விட கல்யாணியை கல்யாணம் பண்ணி இருந்த சந்தோஷமா இருந்து இருப்பாரோ, ஊமையை கட்டிட்டோம்னு அவருக்கும் உள்ளுக்குள்ள ஏமாற்றம் இருக்குமோ" என்று எத்தனையோ கேள்விகள் அவள் மனதை போட்டு குடைந்து கொண்டு இருந்தன...

இதே சமயம், வம்சி கிருஷ்ணாவோ கேட்ட கேள்விக்கு அழகான பதில் ஒன்றை கூறி இருந்தான்...

"என்னோட முதல் கேள்வி, வாய் பேச முடியலைன்னா அத ஏன் பரிதாபமாவோ குறையாகவோ பார்க்கிறீங்க? நான் என் மனைவியை அப்படி பார்க்கிறது இல்லை... அப்படி நான் பார்க்கிறேன்னா தான் என் ஸ்டேட்டஸ் ஐ உயர்த்த கல்யாணம் பண்ணிக்கிட்ட போல இருக்கும்... அவளும் எல்லார் போலவும் சாதாரண பொண்ணு தான்... மொழி என்கிறது நம்ம உணர்வுகளை வெளிப்படுத்துற ஒரு விஷயம்... அத வார்த்தை மூலம் தான் வெளிப்படுத்தணும்னு இல்லை... எப்படி வேணும்னாலும் வெளிப்படுத்தலாம்... இந்த மொழி தாமதமா தானே உருவாச்சு... அதுக்கு முதல் எப்படி மனுஷன் பேசிட்டு இருந்தாங்க? சோ இத கண்டிப்பா குறையா பார்க்காதீங்க... அது தான் நான் இந்த பேட்டியை பார்த்துகிட்டு இருக்கிற எல்லார் கிட்டயும் கேட்கிற ஒரே வேண்டுகோள்..." என்றான்...

அப்போதும் பேட்டி எடுப்பவர் நிறுத்தவில்லை...

"அதெல்லாம் ஓகே சார், ஆனா நீங்க புகழ் பெற்ற பாடகர்... அவங்களால பேச முடியாது... ரொம்ப முரணான விஷயமா உங்களுக்கு தோணலையா? உங்களுக்கு அவங்க தகுதி இல்லன்னு தோணலையா?" என்று கேட்க, "இல்லையே தோணலையே" என்றான் அவன் சாதாரணமாக...

"வெல் அத விடுவோம்... நீங்களும் உங்க மனைவியும் எப்படி பேசிக்கிறீங்க? உங்களுக்கு சைன் லாங்க்வேஜ் தெரியுமா?" என்று கேட்டார்...

கொஞ்சம் தனி மனித வாழ்க்கை சம்பந்தமான கேள்வி தான்...

கேள்வி கேட்பவர்கள் அடுத்தவர்களது அந்தரங்கத்தை அலசுவதில் விண்ணர்கள் தானே...

வம்சி கிருஷ்ணா, நாடியை நீவிக் கொண்டே இதழ் பிரித்து சிரித்தவன், "இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை, இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை" என்று பாட்டாகவே பாடி விட்டான்...

"வாவ் பாட்டாவே பாடிட்டிங்களா?" என்று கேட்டார் பேட்டி எடுப்பவர்...

கல்யாணியோ, "இந்த பேட்டி பார்க்க தானா வேணும்?" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவள் விறு விறுவென வெளியேற, "ஏய் கல்யாணி கொஞ்சம் நில்லு" என்று வேதவல்லி கத்தியது காற்றில் கரைந்து போனது...

அவரோ, "உன் அண்ணன் ரொம்ப தான் பண்ணுறான்" என்று முணுமுணுக்க, கெளதம் கிருஷ்ணா சத்தமாக சிரித்துக் கொண்டான்...

வசந்தியோ தனது மகனை பெருமையாக தொலைக்காட்சியில் பார்த்து இருந்தார்...

தேன்மொழிக்கு அவன் பதில்கள் இதயத்தை இதமாக்கினாலும் மொத்தமாக சந்தோஷப்பட முடியவே இல்லை... "அவருக்கு நான் பொருத்தம் இல்லையோ, அவசரப்பட்டு அவர் வாழ்க்கையை என் சுயநலத்துக்காக கெடுத்துட்டேனோ?" என்று பல கேள்விகள்...

மௌனமாக எழுந்து மாடியேறி விட்டாள்.

அறைக்குள் நுழைந்த பின்னரும் அதை தான் நினைத்துக் கொண்டு இருந்தாள்.

அன்று இரவு வம்சி கிருஷ்ணாவும் குளித்து விட்டு அறைக்குள் வந்திருக்க, தேன்மொழிக்கோ அவனிடம் வெளிப்படையாக பேசினால் இதமாக இருக்கும் என்று தோன்றியது...

சோஃபாவில் அமர்ந்து அலைபேசியை பார்த்துக் கொண்டே இருந்தவன் முன்னே வந்து நின்றவள், வளையல்களை அசைத்து சத்தம் எழுப்பினாள்...
 
சட்டென்று ஏறிட்டுப் பார்த்தவன், ஒற்றை புருவத்தை உயர்த்த, அவளோ, "நான் ஒன்னு கேக்கவா?" என்று சைகையில் கேட்டாள்.

வம்சி கிருஷ்ணாவும் இப்போது சைகை மொழி நன்கு படித்து இருந்தான்...

அதனால் அவனுக்கு அவள் பேசியது புரிந்தது...

"கேளு" என்றான்...

"எனக்கு தெரியும் நான் உங்களுக்கு பொருத்தம் இல்லன்னு, என்னை கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு வருத்தப்படுறீங்களா?" என்று சைகையில் கேட்டான்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன், "இன்டெர்வியூ பார்த்து குழம்பிட்டியா??? யார் என்ன பேசுனா என்ன? இது நம்ம வாழ்க்கை, நாம தான் வாழணும், அடுத்தவங்க யாருமே நமக்காக வாழ போறது இல்லை... அவங்க பேசிட்டு அவங்க வேலையை பார்க்க போயிடுவாங்க... இதெல்லாம் காதுல போட்டுக்க கூடாது... புரியுதா?" என்றான்...

வெகு நிதானமாக அவளுக்கு பதில் சொன்னான்...

அவளுக்கு இன்னுமே மனசு ஆறவில்லை...

"யாதவ்வுக்காக தானே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க... அதனால தான் மனசு குழப்பமாவே இருக்கு, உங்க வாழ்க்கையை நான் கெடுத்துட்டேனா?" என்று சைகை மொழியில் கேட்டாள். அவள் கண்கள் வேறு கலங்கி இருந்தன...

அவனோ அவளை பார்த்துக் கொண்டே எழுந்தவன், அவளை நோக்கி இரு அடிகள் வைத்து நெருங்கி நின்று கொண்டான்...

அவனுக்கு அவள் மேல் முழுமையான காதல் எல்லாம் இன்னும் தோன்றவில்லை...

ஆனால் மனைவி என்கின்ற உரிமை உணர்வு இப்போது தான் தோன்றி இருந்தது...

அவளுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டிய நிலையில் அவன்...

அவள் குழப்பங்களை தீர்க்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு...

அவள் கேள்விக்கு அவன் வார்த்தைகளால் பதில் சொல்லவில்லை... கைகள் இரண்டையும் அணிந்து இருந்த ஷார்ட்ஸின் பாக்கெட்டில் வைத்துக் கொண்டே, ஒரு அடி வைத்து அவளை நெருங்கியவன், சட்டென அவள் கன்னத்தை பார்த்துக் கொண்டே குனிந்தான்...

அவன் நிமிர்ந்த கணம், அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து இருக்க, அவள் கன்னம் சிவந்து போய் இருந்தது...

வெட்கத்தினாலா? அல்லது அவன் மீசை முடி கொடுத்த காயத்தினாலா என்று தான் தெரியவில்லை...

அவனோ இப்போது அதிர்ந்து விழி விரித்தபடி நின்று இருந்தவளை பார்த்தவன், "மனச போட்டு குழப்பிக்காம தூங்கு" என்று சொல்லிக் கொண்டே நகர, சட்டென வளையல்களை அசைத்து அவனை அழைத்தாள்.

அவனும் திரும்பி பார்த்தான்...

"இனி எப்படி தூங்குறது?" என்று சைகையால் கேட்டாள்.

அவனோ இதழ்களுக்குள் சிரித்தபடி, "அது உன் பிரச்சனை" என்று சொல்லிக் கொண்டே சென்று, அவளுக்கு முதுகு காட்டி படுத்து விட, அவளுக்கோ மூச்சு விடவே சிரமமாக இருந்தது...

ஒற்றை இதழ் ஒற்றலில் அவளை இம்சித்தே விட்டான் அல்லவா?

கையை உயர்த்தி தனது கன்னத்தை மெதுவாக வருடினாள்.

இதழ்களுக்குள் வெட்க புன்னகை...

கண்களை மூடி திறந்தவளுக்கு அடி வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்தது...

அதே உணர்வுடன் வந்து கட்டிலில் படுத்தவளுக்கு தூக்கம் தான் வர மறுத்து விட்டது...

அவனை பக்கவாட்டாக திரும்பி பார்க்க, அவனோ தூங்கி இருந்தான்...

பெண்ணவள் தான் வெட்கம் தாங்க முடியாமல் முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டாள்.

கன்னத்தில் இதழ் பதித்து காரிகையின் மனதை கலைத்தே விட்டான் காளையவன்...
 
Top