ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 16

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 16

நிச்சயதார்த்த வீட்டில் கல கலப்புடனேயே ஐயர் நிச்சய பத்திரிக்கையை வாசிக்க நிச்சயதார்த்த தாம்பூலம் மாற்றப்பட்டது. சாணக்கியன் எவ்வளவோ அழைத்தும் காயத்தை காரணம் காட்டி கெளதம் மறுத்ததால் மனதில் அவன் மேல் கோபத்துடன் உட்கார்ந்திருந்தான்.

நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வீட்டுக்கு புறப்படும் போது விஷ்வா கண்களாலேயே மித்ராவுடன் பேசினான். "இன்னும் ரெண்டு கிழமை தான்... வழியாம வாடா" என்று அவனுக்கு திட்டிய கயல் அவனை இழுத்துக் கொண்டுச் சென்றாள். வசுந்தராவை அழைத்துக் கொண்டு வெளியே வந்த சாணக்கியன், "இன்னும் கொஞ்ச நாள் தான். உன்ன அப்புறம் கூட்டி போறேன்" என்றவன் அவள் உச்சியில் இதழ் பதிக்க அனைவர் முன்னிலையிலும் சங்கடப்பட்ட வசுந்தரா ஒன்றும் பேசாமல் வேறு புறம் திரும்ப அவள் வெட்கத்தை பார்த்து சிரித்த சாணக்கியன் வண்டியில் ஏறினான்.

வீட்டுக்கு வந்ததும் அறைக்குள் சென்று கதவை அடைத்த சாணக்கியனுக்கு அடுத்த திட்டமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. கௌதமும் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தான். மகாலிங்கமோ மகனுக்கு தனது அந்தரங்க விஷயம் தெரிந்ததால் பதட்டத்துடன் இருந்தார். கௌதமை ஏன் சாணக்கியன் காப்பாற்ற வேண்டும் என்ற கேள்வியும் அவர் மனதை அரித்துக் கொண்டிருந்தது. சாணக்கியனின் சாணக்யத்தை அறிந்தவர் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்து போய் இருந்தார்.

கல்யாணம் முடியட்டும் என்று அவரும் கௌதமும் காத்திருக்க சாணக்கியனுக்கோ அதெல்லாம் ஒரு பொருட்டில்லை போல தனது அடுத்த திட்டத்துக்கு ஆட்களை ஆயத்தப் படுத்தினான்.

நாட்கள் உருண்டோட திருமணத்துக்கு ஒரு கிழமை என்ற நிலையில் திருமண பத்திரிக்கை கொடுக்கும் நிகழ்வுகள் இடம் பெற தொடங்கியது.

கயல்விழிக்கோ மனது முழுக்க கெளதம் நினைவாகவே இருந்தது.

திருமண பத்திரிக்கையில் ஒன்றை எடுத்தவள் கௌதமை பார்க்கும் சாக்கில் அதை கௌதமின் அலுவலகத்துக்கு கொண்டுச் சென்றாள். வெளியில் செல்ல ஆயத்தமாகியபடி துப்பாக்கியை எடுத்து டிஷர்டுக்கு பின்னால் சொருகி கொண்டிருந்தவன் அவள் கதவை திறந்து உள்ளே வர கண்களால் என்ன என்று கேட்டான்.

அவளோ, "கொஞ்சம் பேசணும்" என்றதும் பெருமூச்சை எடுத்து விட்டவன், "ப்ளீஸ் கொஞ்சம் பிசியா இருக்கேன்.அப்புறம் பேசலாம்" என்றபடி ப்ளூ டூத்தை காதில் சொருகியவன் தொலை பேசியை எடுத்து பாக்கெட்டுக்குள் போட்டான். அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தவள், "இல்ல இப்போவே பேசணும்" என்றாள். "ஓஹ் காட் உனக்கு சொன்னா புரியாதா?" என்று அவன் சீற, "இதுவே அந்த கிழவின்னா பல்ல இளிச்சிட்டு பின்னால போய் இருப்பீங்க" என்று கேட்க அவளை லூசா நீ என்பது போல புருவம் சுருக்கி பார்த்தவன், "அந்தளவுக்கு நான் ஒர்த் இல்லம்மா" என்றான்.

அவளின் வார்த்தை அவனை காயப்படுத்தியதை அறிந்தவள், "சாரி அன்னைக்கு ஏதோ கோபத்துல சொல்லிட்டேன்" என்றவளை உணர்ச்சி துடைத்த முகத்துடன் மார்புக்கு குறுக்கே தனது கைகளை கட்டி பார்த்துக் கொண்டு நின்றவன், "என்ன பேசணுமோ பேசு 2 மினிட்ஸ் தான்" என்றான். "2 மினிட்ஸ் ஆஹ் எனக்கு போதாதே." என்றவளை எரிச்சலாக பார்த்தவன், "அப்போ இரு நான் ஒரு மணி நேரத்துல வந்துடுறேன்" என்றபடி சன் கிளாசை எடுக்க போனவனிடம், "நானும் வரவா ?" என்று கேட்டாள்.

"டாம் இட்... உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? நான் ஒரு கேஸ் விஷயமா போறேன்... இடையில நீ வந்தா எனக்கு இடைஞ்சலா இருக்கும்" என்று சினம் கொண்டு சீறினான். அவன் சீறலில் அழுகை வந்தாலும் அதை கட்டுப்படுத்தியவள், "இதுக்கு முதல் உங்க கேஸுக்கு என்ன யூஸ் பண்ணிக்கிட்டீங்க தானே.. அப்படி ஏதும் யூஸ் ஆவேன் ஒழிய இடைஞ்சலாக இருக்க மாட்டேன்" என்று தாழ்ந்த குரலில் கூறியவளின் கண்களில் இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டும் அடக்க முடியாமல் இரு சொட்டு கண்ணீர் உருண்டு விழுந்தது.

அவள் கூற்றினால் அவன் மனதில் சொல்லொணா வேதனையும் குற்ற உணர்ச்சியும் எழ அவளை வெறித்து பார்த்தபடியே வாசல் கதவை நோக்கிச் சென்றான். அவன் செல்வதையே பரிதாபமாக அவள் பார்த்துக் கொண்டிருக்க, கதவு வரை சென்றவன் திரும்பி பார்த்து, "நீ வரலையா?" என்று கேட்க சிரித்த முகத்துடன் அவன் பின்னே போனாள். அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் கிட்டத்தட்ட பின்னால் ஓடி போனாள்.

ஜீப்பில் சாரதி பக்கத்தில் ஏறியவன் அவளை பின்னால் ஏற சொன்னான், அவளும் ஏறி உட்கார்ந்ததும் அங்கிருந்த ஒரு ரெஸ்டாரண்ட்டில் ஜீப் நின்றது. அவளோ அதனை அதிர்ச்சியாக பார்த்து, "இது தான் நீங்க சொன்ன முக்கியமன வேலையா?" என்று கேட்டாள். அவளை முன்னால் இருந்து திரும்பி பார்த்தவன், "சாப்பிடுறத விட எனக்கு வேற வேல ஒண்ணும் முக்கியமில்லை... கீழே இறங்கு" என்றபடி அவனும் இறங்கினான்.

அங்கிருந்த ஒரு மேசையில் அமர்ந்தவர்கள், "என்ன சாப்பிடுற?" என்று கேட்டான். "எனக்கு ஒண்ணும் வேணாம், நான் சாப்பிட்டு தான் வந்தேன்" என்றதும் பெருமூச்சை விட்டவன் தொலைவில் இருந்த ஒரு பேரரிடம் ரெண்டு என்று விரலை கன்னத்தில் வைத்து காட்டினான்.

அவன் காட்டுவதை பார்த்து ஆச்சரியம் அடைந்து இருவரையும் திரும்பி பார்த்தவள், "அதென்ன ரெண்டு? என்ன என்று சொல்லாமலே கொண்டு வருவாரா?" என்று கேட்க, "நான் இங்கே ரெகுலர் கஸ்டமர் நான் என்ன சாப்பிடுவேன்னு அவங்களுக்கு தெரியும்" என்றான்.

"அது சரி கட்டின பொண்டாட்டிக்கு தெரியாதது ஊர்ல இருக்குறவனுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு" என்று முணு முணுக்க அது அவன் காதில் தெளிவாக விழுந்தது. அவளை கூர்ந்து பார்த்தவன், "ஒண்ணு சத்தமா பேசு இல்லாவிட்டால் மனசுக்குள் நினை... இப்படி முணு முணுக்காதே" என்று பேசிக் கொண்டிருக்க இருவருக்கும் ரெண்டு கேக் பீசும் ரெண்டு காபியும் வந்து சேர்ந்தது.

"ஏய் இதெல்லாம் சாப்பிட்டா சுகர் கூடும்... இத தான் நீங்க எப்போவும் சாப்பிடுவீங்களா?" என்று அவள் கேட்க, 'சரியான இம்சடி' என்று மனதுக்குள் திட்டியவன், "சாப்பிடுறதுக்கு மேலாக நான் ஒர்க் அவுட் பண்ணுவேன். சோ எனக்கு எந்த பிரச்சனையும் வராது" என்றான்.

உடனே அவளோ, "உடம்ப பார்த்தாலே தெரியுது, என்ன இருந்து என்ன பயன்?" என்று கேக்கை கரண்டியில் எடுத்தவாறே விரக்தியாக கூறியவள் வாயில் அதனை வைக்க போக நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஒரு கணம் உடல் நடுங்க தொடங்கியது. கண்கள் சிவந்து சினம் தெறிக்க கதிரையில் சாய்ந்து கை கட்டி அவளையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

பயத்தில் எச்சிலை விழுங்கியவள், "ஐயையோ தேவையில்லாம பேசி மாட்டிக்கிட்டோமே" என்றபடி தலையை குனிந்து சாப்பிட தொடங்கினாள்.

அதன் பிறகு மறந்தும் நிமிர்ந்து அவனை பார்க்கவில்லை. சிறிது நேரம் கழித்தும் அவன் அப்படியே இருக்க மெதுவாக நிமிர்ந்தவள், "நீங்க சாப்பிடலயா ?" என்று நடுங்கிய குரலில் மெதுவாக கேட்டாள்.

வாயில் சுட்டு விரலை வைத்தவன் ப்ளூ டூத்தில் கை வைத்து நிதானமாக கேட்டான். கண்ணை விரித்தபடி கயலுக்கு பின்னால் எட்டி பார்த்தான். அவளும் அவன் பார்த்த திசையில் திரும்ப போக அவள் நாடியை பிடித்து திருப்பியவன் திரும்ப வேண்டாம் என்று தலையை ஆட்டி சைகை செய்தபடி, "சாப்பிடு" என்றான்.

அவளும் மேலும் ஒன்றும் கேட்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அவனோ அவள் பின்னால் அடிக்கடி எட்டி பார்த்தபடி இருந்தவன் சாப்பிடவே இல்லை. அது கயலுக்கு நெருடலாக இருக்க, "நீங்க சாப்பிடலயா?" என்று மீண்டும் கேட்டாள். அவள் கேட்டதில் கோபம் தலைக்கேற, "கொஞ்சம் வாய மூடிட்டு இருக்கியா ப்ளீஸ்?" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் எரிந்து விழுந்தவன் மீண்டும் எட்டி பார்த்தான்.

அவன் திட்டியது அவளுக்கு கோபத்தை கிளப்ப எழ போனவளை கையை பிடித்து இருக்கும் படி சைகை செய்தவன், "உன்ன கூட்டி வந்தது தப்பா போய்டுச்சு... கொஞ்ச நேரம் எனக்காக அமைதியா இரு ப்ளீஸ்" என்றான்.

அவளும் கோபத்தை அடக்கிக் கொண்டு சாப்பிட தொடங்க ப்ளூ டூத்தை ஒரு கையால் அழுத்தி பிடித்தவன், "ரவுண்ட் அப்" என்றபடி இடுப்பிலிருந்து துப்பாக்கியை எடுத்தவன் ஒரே தாவலில் மேசை மீது ஏறி நின்றபடி கயலுக்கு பின்னால் அடுத்த மேசையில் இருந்தவன் தலையை நோக்கி இரு கைகளாலும் துப்பாக்கியை தாங்கி குறி வைத்து, "ஹாண்ட்ஸ் அப்" என்றான். அவன் மேசையின் மீது ஏறி நின்றதே அந்த கடத்தல் கும்பல் எங்கு தப்பிச் சென்றாலும் இலகுவாக சுடுவதிற்காக. ஆனால் அவன் தாவி ஏறியதில் மேசை மேல் இருந்த கேக் கயல்விழி முகம் முழுதும் சிதறி இருந்தது.

அவனின் ஆக்ஷனிலேயே அதிர்ந்தவள் கேக்கும் சிதற கோபத்துடன் அவனை பார்த்தாள். அந்த ரண களத்திலயும் அவளை குனிந்து பார்த்து மெல்லிய புன்னகை சிந்தியவன் மூன்று பேரிலும் கவனத்தை செலுத்தினான். அவளும் பயந்தபடி திரும்பி பார்க்க, "கயல் என் பக்கம் வந்து இரு" என்று அவளை பார்க்காமலே சொன்னான். அவளும் நடுக்கத்துடன் அவன் பின்னால் போய் அவன் சற்று முன் இருந்த இருக்கையில் இருந்தவள் அவன் விரிக்கப்பட்ட கால்களின் இடைவெளியால் நடப்பதை அவதானித்தாள்.

மூன்று பேரை சேர்ந்த அந்த கும்பலும் கைகளை தூக்கியபடி ஓட முற்பட சற்று முன் கேக் கொண்டு வந்து தந்தவன் பரிமாறும் தட்டை தூக்கி போட்டு விட்டு அவர்கள் ஓடும் திசையில் மறித்தவாறு துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்டி இருந்தான்.

'அப்போ இவனும் போலீசா?' என்று அதிர்ந்து இருந்தாள் கயல்விழி.

மற்றைய பக்கம் போக அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் பாய்ந்து எழுந்து அவர்கள் முன் துப்பாக்கியை நீட்டி இருந்தார்.

'அட என்னடா இது எல்லா பக்கமும் போலீஸ் ஆட்களாகவே இருக்கு' என்று நினைத்தபடி கணவனின் திறமையை மனதுக்குள் மெச்சினாள். மேலும் இருவரும் அங்கிருந்த கதிரையில் இருந்து துப்பாக்கியை அவர்கள் முன் நீட்ட ஐந்து பேரின் நடுவில் கைகளை தூக்கியவாறு மூவரும் நடுங்கிக் கொண்டு இருந்தனர்.

மேசை மீது நின்றவன், "செக்" என்றதும் அங்கு இருந்த ஒருவர் அவர்களின் பெரிய பையை திறந்து பார்க்க அதில் ஆயுதங்களின் உதிரி பாகங்களும் கிலோ கணக்கில் போதை பொருட்களும் இருந்தன. துப்பாக்கியை பாக்கெட்டில் வைத்தபடி பாய்ந்து இறங்கிய கெளதம் அவர்களின் பையை நன்கு ஆராய்ந்தவன் பையை தூக்கி இன்னொரு போலீஸிடம் கொடுத்து விட்டு, "அரெஸ்ட்" என்று உத்தரவு கொடுக்க அவர்களை மற்றையவர்கள் கை விலங்கு மாட்டி அங்கு ஆயத்தமாக நின்றிருந்த போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள்.

அனைத்தையும் பார்த்த கயல்விழி அதிர்ந்து போய் அப்படியே இருக்க அவளை நோக்கி வந்தவன் அவள் முன்னே சொடக்கிட்டு நிஜ உலகுக்கு கொண்டு வந்தான்.

அதிர்ச்சியுடன் நிமிர்ந்தவளை பார்த்து, "போவோமா?" என்று கேட்க அவளோ அதிர்ச்சி விலகாமல் எழுந்து அவன் பின்னே வர ஆயத்தமானாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் பக்கத்து மேசையிலிருந்து டிஷ்யூவை எட்டி எடுத்து, "கொஞ்சம் நில்லு" என்றபடி மூச்சு காற்று படுமளவுக்கு அவளை நெருங்கி வந்து நின்றதும் படபடப்பில் தலையை குனிந்துக் கொண்டாள்.

அவனை விட குள்ளமாக இருந்தவளின் முகத்தை ஒரு கையால் பெருவிரல் காதுக்கு முன்னும் மற்றைய விரல்கள் அவள் கழுத்திலும் இருக்குமாறு பிடித்து தன் முகத்தை நோக்கி நிமிர்த்தியவன் அடுத்த கையிலிருந்த டிஷ்யூவால் மெதுவாக அவள் நெற்றியில் பட்டிருந்த கேக்கை துடைத்து விட்டான். பின் கன்னத்தையும் துடைத்தவன் கைகளிலிருந்த டிஷ்யூ இதழ்களுக்கு இடம் பெயர்ந்தது.

அவன் நெருக்கத்திலும் தொடுகையிலும் கிறங்கி நின்றவள் அவனை காதலுடன் பார்க்க அவன் விழிகளும் அவளை அதே காதலுடன் பார்த்தது. இதழிலிருந்த கேக்கை துடைத்தவன் டிஷ்யூவை போட்டு விட்டு தனது பெருவிரல்களால் இதழை வருட இருக்கும் இடம் மறந்து அவள் கண்களோ தானாக மூடிக் கொண்டது.

வருடியவனுக்கு திடீரென தன்னுணர்வு வர அவளை விட்டு விலகியவன் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி கண் மூடி நின்றவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் எதுவும் பண்ணாமல் இருக்க கண்களை திறக்க அவனோ அவளை அழுத்தமாக பார்த்து, "கனவு கண்டு முடிஞ்சா? போகலாமா?" என்று கேட்டான். அவன் கேள்வியில் அவமானமும் கோபமும் வர அவனை முறைத்த படி, 'அதானே பார்த்தேன், இவருக்கு ரொமான்ஸ் வந்துட்டாலும் ஜடம் ஜடம்' என்று மனதுக்குள் திட்டியவள், "கனவு காணும் அளவுக்கு நீங்க ஒண்ணும் பண்ண போறதில்லனு எனக்கு தெரியும். நடக்காத விஷயத்துக்காக நான் எதுக்கு கனவு காணணும்?" என்று அவனை பதிலுக்கு அவமானப் படுத்த பேசினாள்.

அவள் பேச்சில் விழி விரித்தவன், "அப்போ நான் உன்ன கிஸ் பண்ணினதே இல்லையா?" என்று உணர்ச்சி துடைத்த முகத்துடன் சாதாரணமாகவே கேட்டான். அவன் கேள்வியில் வந்த சிலிர்ப்பை அடக்கியவள், "அது தான் இப்போ வரைக்கும் எனக்கு புரியல..." என்றாள்.

அவள் கூற்றில் அவ்வளவு நேரம் இருந்த இளக்கம் மறைந்து கடினத்தன்மை குடியேற, "சும்மா தொண தொணக்காம வா" என்றபடி முன்னே நடந்தான். அவளும், 'அப்படி என்ன சொல்லிட்டேன்? உண்மையை தானே சொன்னேன்' என்று மனதுக்குள் நினைத்தபடி பின்னால் நடந்தாள். ஜீப்புக்குள் ஏறியதும் பின்னால் இருந்தவள் அவனை நோக்கி கல்யாண பத்திரிக்கையை நீட்டி, "கண்டிப்பா வாங்க" என்றாள்

பத்திரிக்கையை வாங்கி படித்தவன், "பார்க்கலாம்" என்றபடி முன்னால் இருந்த பெட்டிக்குள் அந்த கார்டை போட்டவன் அவளை திரும்பியும் பார்க்கவில்லை.

அவள் வீட்டுக்கு ஜீப் போனதும், "இறங்கு" என்றான். "நான் எதுக்கு இறங்கணும்?" என்று கேட்க திரும்பி அவளை முறைத்தவன், "உன் வீடு வந்திடுச்சு" என்றான். "சோ வாட்? என் கார் உங்க ஆபீஸ்ல நிக்குது" என்றாள். "ஷீட்... சொல்லி தொலைக்க வேண்டியது தானே?" என்று எகிற அவளும் மல்லுக்கு நின்று, "கேட்டு தொலைக்க வேண்டியது தானே?" என்றாள்.

சினம் கொண்டு முன்னால் திரும்பியவன், "ஆபீஸுக்கு விடு" என்றான் சாரதியிடம். ஜீப்பும் ஆபீஸ் நோக்கி போக கயல்விழி மனதுக்குள், 'மனசுக்குள்ள காதலை வச்சிட்டு எத்தனை நாளைக்கு இந்த நடிப்புனு நானும் பார்க்கிறேன்' என்று கௌதமுக்கு சவால் விட்டாள்.

அலுவலகம் சென்றதும் அவளோ காரை எடுத்து புறப்படாமல் அவன் பின்னாலேயே செல்ல அவள் வருவதை உணர்ந்தவன் திரும்பி பார்த்து இடுப்பில் இரு கைகளையும் குற்றி, "இப்போ என்னடி ?" என்று கேட்டான். "உங்க கூட பேசணும்" என்றவளை கூர்ந்து பார்த்தான். அவள் விழிகள் அவன் மீதுள்ள காதலை அப்பட்டமாக உணர்த்த அவளின் காதலை உணர்ந்தவன் அவள் தன்னை வெறுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தபடி, "எனக்கு தலைவலிக்குது ப்ளீஸ் அப்புறம் பேசலாம்" என்றான் அவளை அனுப்பும் பொருட்டு தலையில் கையை வைத்தவாறே

உடனே அவள் பையை திறந்து, "இந்தாங்க மாத்திரை" என்று நீட்டினாள். அவளையும் மாத்திரையையும் மாறி மாறி பார்த்தவன் முறைத்துக் கொண்டே முன்னால் சென்று தனது அறைக்குள் புகுந்தான். அவளும் சளைக்காமல் அவன் அறைக்குள் புக அங்கு கதிரையில் கவர்ச்சியாக உடை அணிந்து ஒரு அழகான பெண் மிகையான ஒப்பனையுடன் வீற்றிருந்தாள். பார்க்க சினிமா நடிகை போல இருந்தவளை பார்த்து ஒரு கணம் கயல்விழி ஸ்தம்பித்து வாசலிலேயே நின்றாள்.

அந்த பெண்ணை பார்த்து கண்ணை விரித்த கெளதம் வசீகர புன்னகையை சிந்தியவாறே, "ஓ மீரா, வாட் எ சர்ப்ரைஸ்! என்ன திடீர்னு இந்த பக்கம்?" என்றான். அவளும் அவனை நெருங்கி வந்து அவனை அணைத்து, "ஓ கெளதம் ஹவ் ஆர் யு? ஐ மிஸ் யு... ஐ நீட் எ ஹெல்ப்" என்றாள்.

இருவரின் நெருக்கத்தில் கயல்விழியின் வயிறு பற்றி எரிந்தது. "போடுற சட்டையை கொஞ்சம் ஒழுங்கா போட்டால் தான் என்ன? இவ எதுக்கு இப்படி கட்டி புடிக்குறா? வெளிய வாடி... உன்ன வச்சு செய்யணும்..." என்று ஏதேதோ திட்டியவளுக்கு மனதில் சுருக் சுருக் என்று வலி உணரப்பட்டது.

"ஐ வில் ஹெல்ப் யு வித் ப்ளெஷர்" என்றவனை விட்டு விலகி முகத்தில் கலவரத்துடன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் எட்டி வாசலில் நின்ற கயல்விழியையும் பார்த்தாள். அப்போது தான் கயல்விழியின் எண்ணம் வந்து திரும்பியவன் கண்கள் பளிச்சிட்டது. அவன் மூளைக்கு கயல்விழி தானாக ஒதுங்க ஒரு புதிய ஐடியா கிடைத்தது.

"ஆ கயல்விழி இவங்க என் கிளோஸ் பிரெண்ட் மீரா. என் கூட போலீஸ் ட்ரைனிங் வந்திட்டு அப்படியே இடையில விட்டுட்டு போய் மாடல் ஆகிட்டாங்க... அது தான் அவங்க அழகுக்கும் பொருத்தமாக இருக்கு" என்றான் மீரா முகத்தை பார்த்தபடி.

'அழகாம் அழகு பெரிய அழகு, இப்போ நல்லா முகத்தை கழுவிட்டு பார்த்தா தெரியும் எத்தனை கிலோ மேக் அப் போட்டிருக்கா னு... அத இப்படி வழிஞ்சு வேற பார்க்கிறானே பாவி பயல்' என மனதுக்குள் கௌதமுக்கு மரியாதையை இல்லாமலே திட்டியவள் பண்பாட்டின் பொருட்டு மீராவை பார்த்து, "ஹெலோ" என்றாள்.

மீராவும், "ஹெலோ" என்றபடி கௌதமிடம், "இவங்க?" என்று கேட்க, "ஆ மறந்துட்டேன் இவங்க தான் மினிஸ்டர் மகாலிங்கத்தோட பொண்ணு அப்புறம் எம்.பி சாணக்கியனோட தங்கை டாக்டர் கயல்விழி" என்றான். அவனின் அறிமுக படுத்தலில் கயல்விழிக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

தன்னுடைய மனைவி என்று அறிமுகப் படுத்தவில்லை என்று நினைக்க நினைக்க அவளால் அங்கு நிலை கொள்ள முடியவில்லை.

"இவங்க எதுக்கு இங்க?" என்று மீரா கேட்க. பெருமூச்செடுத்தவன், "அப்புறம் நம்ம பேசலாமே கயல்விழி, இப்போ நான் இவங்க கூட கொஞ்சம் பர்சனலா பேசணும்" என்றான். ஏற்கனவே மனமுடைந்து இருந்தவளுக்கு அவனின் உதாசீனம் இன்னும் வலியை கொடுக்க அவனை கலங்கிய கண்களுடன் முறைத்தவள் திரும்பி வெளி நடப்பு செய்தாள்.

வெளியில் வந்தவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவில்லை. அவள் அழுவதை அங்கிருந்தவர்கள் பார்க்க புடவை முந்தானையால் கண்ணீரை துடைத்தபடி விறு விறுவென கார் நிற்குமிடத்துக்குச் சென்று காரில் ஏறியவள் வாய் விட்டு கதறி அழுதாள்.


அவள் செல்வதை வலியுடன் பார்த்த கௌதமின் கண்களை அவதானித்த மீரா, "டூ யு லவ் ஹேர்?" என்று கேட்க அவளை பார்த்து சினேகமாக சிரித்தவன், "ஷி இஸ் மை ஓய்ப்" என்றான். "ஓ காட்...! இதை ஏன் முன்னாடியே சொல்லல? அதான் அவங்க கோவிச்சிட்டு போறாங்க போல" என்று பதறிய மீராவிடம், "அது பெரிய கதை மீரா... யு சிட்... உன் பிரச்சனையை முதலில் சொல்லு" என்றான்.
 
Top