ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 16

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 16

அவளை ஜாக்கெட் தைக்க அளவு எடுக்க அழைத்து சென்றான்...

ஜாக்கெட் தைக்கும் பெண்ணான விமலாவும் நாராயணிக்கு அளவை எடுக்க அறையின் உள்ளே அழைத்து சென்றாள்.

நாராயணி மட்டும் விமலாவுடன் உள்ளே செல்ல, வீட்டுக்கு வெளியே தான் நின்று இருந்தான் ஜனார்த்தனன்.

விமலாவோ, "சல்வாரை கழட்டுங்க"என்று சொல்ல, நாராயணி பயந்து விட்டாள்.

"எதுக்கு?" என்று அவள் கேட்க, "அப்ப தானே அளவு எடுக்கலாம்" என்றாள் அவள்...

"இல்ல இப்பிடியே எடுங்க" என்றாள்.

"இப்படி எல்லாம் எடுத்தா, பிளவுஸ் வடிவா வராது, கழட்டுங்க" என்றாள்.

விமலா கொஞ்சம் கறார் பார்ட்டி தான்...

நாராயணிக்கு கூச்சம்.

"இல்ல இப்பிடியே எடுங்க" என்றாள்.

விமலாவுக்கு சற்று கடுப்பாகி விட, ஒரு பெருமூச்சுடன் வெளியே வந்தவள், அங்கே பைக்கில் சாய்ந்து நின்ற ஜனார்த்தனனிடம், "அந்த பிள்ளை அளவு எடுக்க விடுது இல்ல" என்றாள்.

நாராயணியும் வெளியே வர, "என்ன பிரச்சனை?" என்று கேட்டான்.

"நாம வேற இடத்தை போவம்" என்றாள் அவள்...

அவனோ, "விமலா அக்கா போல கெதியா யாரும் தச்சு தர மாட்டாங்க, எல்லாரும் இப்ப பிசி, என்ன தான் பிரச்சனை" என்று கேட்க, அவனை நெருங்கி வந்தவள், அவன் விழிகளை பார்த்துக் கொண்டே, "அவங்க சல்வாரை கழட்ட சொல்றாங்க" என்றாள் மெதுவாக.

அவனோ தலையை உலுக்கிக் கொண்டே, "சரியான அளவு எடுக்கணும் எண்டு தானே சொல்லி இருப்பாங்க" என்றான்.

"எனக்கு ஏலாது" என்றாள் பிடிவாதமாக.

"அவங்க பொம்பிளை தானே" என்றான்.

"எனக்கு ஏலாது எண்டா ஏலாது தான்" என்றாள்.

அவள் பிடிவாதத்தை ஆச்சரியமாக பார்த்து விட்டு, "மேலால அளவு எடுங்க அக்கா" என்றான்.

"சொன்ன கேளுங்க தம்பி, பிளவுஸ் நீட்டா வராது" என்றாள் அவள்...

"அது பரவாயில்லை, நாங்க ஒண்டும் சொல்ல மாட்டம், மேலால அளவு எடுங்க" என்றான்.

அவரும், ஒரு பெருமூச்சுடன் "உள்ளே வாங்க" என்று நாராயணியை அழைக்க, அவளும் உள்ளே சென்றாள்.

விமலாவுக்கு சற்று கடுப்பு தான்...

அளவை எடுத்துக் கொண்டே, "இவ்வளவு வெட்கப்பட்டா என்ன அர்த்தம்? கல்யாணம் கட்டி புருஷனுக்கு எல்லாம் காட்டி தானே புள்ள பெருவீங்க... பிள்ளை பெருற நேரம் ஹொஸ்பிடலுக்கு தானே போவீங்க, அப்ப எல்லாரும் பார்ப்பங்களே, அப்ப என்ன செய்வீங்க" என்று கேட்க, நாராயணியிடம் மௌனம்...

தனது தனிப்பட்ட வாழ்க்கையை விமலா விமர்சித்ததை எண்ணி கோபமாகவும் இருந்தது...

அடக்கிக் கொண்டே வெளியே வந்து விட்டாள்.

"நாளைக்கு தந்துரோனும்" என்று சொல்லி விட்டு ஜனார்த்தனன் பைக்கில் ஏற நாராயணியும் ஏறிக் கொண்டாள்.

பைக்கை ஓட்டிக் கொண்டு, சைட் மிர்ரர் ஊடக அவளைப் பார்த்தான்.

முகம் வாடிப் போய் இருந்தது...

அப்படியே சாப்பாட்டு கடை ஒன்றில் நிறுத்த, "இங்க எதுக்கு?" என்று கேட்டாள்.

"இண்டைக்கு வெளியே சாப்பிடுவம் வா" என்று அழைத்து செல்ல, அவள் மறுக்காமல் அவனுடன் சென்றாலும், மௌனம் தான் அவளிடம்.

"என்ன சாப்பிட போறா?" என்று கேட்டான்.

"என்ன எண்டாலும்" என்றாள்.

"சொல்லுடி" என்றாள் அதட்டலாக.

"தோசை" என்றாள்.

அப்போதும் முகத்தில் இதம் இல்லை.

கடுகடுவென இருந்தாள்.

"ரெண்டு நெய் தோசை" என்று அவன் ஆர்டரை போட்டு விட்டு, "இப்ப எதுக்கு மூஞ்சை தூக்கி வச்சிட்டு இருக்கிற?" என்று கேட்டான். அவளுக்கு இருந்த கோபத்துக்கு யாரிடமாவது சொல்லி புலம்பி விட்டால் மனம் ஆறிவிடும் என்று தோன்றியது.

"அவங்க என்ன கேட்டாங்க தெரியுமா?" என்றாள்.

"சொன்னா தானே தெரியும்" என்றான்.

" கல்யாணம் கட்டி புருஷனுக்கு எல்லாம் காட்டி தானே புள்ள பெறுவீங்க, பிள்ளை பெறுற நேரம் ஹொஸ்பிடல் போவீங்க தானே, அப்ப என்ன செய்வீங்க? எண்டு கேக்கிறாங்க" என்றாள்.

அவனுக்கு ஐயோடா என்று இருந்தது...

பெண்களின் மென் உணர்வுகளை புரிந்து கொள்வது கஷ்டமாக தான் இருந்தது...

அவனுக்கு சாதாரணமாக தெரிவது எல்லாம் அவளுக்கு பூதாகரமாக தெரிந்தது.

"சரி அதுல என்ன இருக்கு?" என்று கேட்டான்.

"அதுல என்ன இருக்கா? நான் கல்யாணம் கட்டுறது, புருசனோட இருக்கிறது, பிள்ளை பெறுறது எல்லாம் இவங்கள யாரு கணக்கு பார்க்க சொன்னது?" என்று பொறிந்து தள்ளி விட்டாள்.

அவளது தனிப்பட்ட அந்தரங்கமான விஷயத்தை பேசிய கோபம் அவளுக்கு...

அவன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டே, நாடியை நீவிக் கொண்டு அவளையே பார்த்து இருந்தான்.

அவளுக்கு இவ்வளவு கோபம் வரும், இப்படி எல்லாம் பேச தெரியும் என்று இப்போது தான் அவனுக்கே தெரியும்...

அவள் பேசிய விஷயத்தை நினைத்து சிரிப்பும் வந்தது...

அவன் சம்பந்தப்பட்ட விஷயம் ஆயிற்றே...

அவள் கோபத்தில் அதனை எல்லாம் உணரவில்லை...

ஆனால் அவன் சம்பந்தப்படுத்திக் கொண்டான்...

சிரித்தால் இன்னும் கடுப்பாகி விடுவாள் என்று புரிய, "சரி விடு" என்றான்.

"எப்பிடி விடுறது? எனக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா? அளவு எடுக்கிறது தானே அவங்கட வேலை... அதுக்கு மேல இது என்ன கதை?" என்று கேட்டாள்.

"சரி ஏதோ கோபத்தில கதைச்சு இருப்பாங்க விடேன்டி" என்றான்.

"அது எப்பிடி விடுறது? நீங்க எல்லாத்துக்கும் சண்டைக்கு போவீங்களே, இதுக்கு ஒரு வார்த்தை கதைக்க வரலையா?" என்று கேட்டாள்.

"கதைக்கிறதுல ஒண்டும் இல்லை, என்ட வேலை முடியோனும், நீ பிறகு சாரி பிளவுஸ் இல்லாம தான் சாரி கட்ட வேண்டி கிடக்கும், எல்லாத்துக்கும் மேல தெரிஞ்ச அக்கா, இப்படி தான் அவங்க கதையே இருக்கும்... நம்மட வேலை முடியணும் எண்டா சில விஷயங்களில அர்ஜஸ்ட் பண்ணி தான் போகணும் " என்றான்.

"அதுக்காக என்ன கதைச்சாலும் கேட்டுட்டு இருக்கனுமா?" என்று கடுப்பாகி விட்டாள்.

"நீ சல்வாரை கழட்டல எண்ட கோபத்துல கதைச்சிட்டாங்க, பிளவுஸ் அளவு சரியா வரணும் எண்டு நினச்சு இருப்பாங்க" என்றான்.

அவனும் விமலாவுக்கு சார்பாக பேச, அவளுக்கு கோபம் தான் வந்தது...

ஆத்திரத்தில் நிதானம் இழந்து விட்டாள்.

"நீங்க என்ன அவங்களுக்கே சப்போர்ட் பண்ணி கதைக்கிறீங்க? அப்ப அவங்க கதைச்சது பிழை இல்லையா? அவங்களுக்கு காட்டல எண்டா என்ட புருஷனுக்கு காட்ட மாட்டனா? நான் காட்டுவேன், ஒண்டுக்கு பத்து பிள்ளை கூட பெறுவேன், அதுல இவங்களுக்கு என்ன வந்திச்சு..." என்று கேட்க, அவனோ சுற்றி பார்த்து விட்டு, "மெதுவா கதைடி" என்று சொன்னவன் முகத்தை இரு கைகளாலும் அழுந்த தேய்த்துக் கொண்டான்.

அவள் பேச்சில் அவனுக்கு சிரிப்பும் வெட்கமும் சேர்ந்தே வந்தது...

அவள் கோபத்தில் வாய்க்கு வந்தது எல்லாம் பேசினாள்.

கணவன் என்கின்ற இடத்தில் அவனை கொஞ்சமும் இணைத்து பார்க்கவில்லை...

அவன் இணைத்து பார்க்க போய் சிரிப்பு வந்தது தான் மிச்சம்...

அவள் இணைத்து பார்க்கவில்லை என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்தது...

சும்மாவே பேசும் போது கூச்சப்பட்டு முகத்தை திருப்புபவள் வாயில் இத்தனை வார்த்தைகள் வருகின்றது என்றால் அது கோபத்தின் வெளிப்பாடு மட்டுமே...

திட்டி முடித்தவளோ, "சொல்லுங்க, அவங்க கதைச்சது பிழை தானே" என்று கேட்டாள்.

குரலை செருமிக் கொண்டே, நீரை அவளை நோக்கி நகர்த்தியவன், "தண்ணிய குடி" என்றான்.

அவளும் நீரை அருந்த, "அவங்க கதைச்சது இருக்கட்டும், நீ என்ன கதைச்சிட்டு இருக்கா எண்டு விளங்குதா?" என்று கேட்டவன், ஒரு கணம் நிறுத்தி, "புருஷன் எண்டா நான் தானே" என்றான்.

சட்டென அவளுக்கு புரையேற, தலையில் தட்டிக் கொண்டே, தான் பேசிய வார்த்தைகளை அசை போட்டவளுக்கு விழிகள் அதிர்ந்து விரிந்து கொண்டன.

'என்ன எல்லாம் கதைச்சு வச்சு இருக்கன்' என்று தனக்கு தானே திட்டிக் கொண்டே, அவனை பார்த்தவள், எச்சிலை கூட்டி விழுங்க, அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

"நான் உங்கள நினச்சு சொல்லல்ல, பொதுவா சொன்னேன்" என்றாள் தட்டு தடுமாறி...

"என்னை நினச்சு சொன்னியோ இல்லையோ, அந்த வார்த்தைக்கு உரியவன் நான் தானே" என்றான்.

ஐயோடா என்று இருந்தது அவளுக்கு...

அவளுக்கு கோபம் வருவது குறைவு...

வந்தால் இப்படி தான் கண்ட மேனிக்கு வரும்...

நிலை மறந்து இடம் மறந்து வார்த்தைகளை விட்டு விடுவாள்.

இப்போது நினைக்கும் போது அவளுக்கு மயக்கமே வந்தது...

அவள் தடுமாற்றத்தை ரசனையாக பார்த்துக் கொண்டே, "சாப்பிடு" என்று அங்கே வைக்கப்பட்ட தோசையை அவள் பக்கம் தள்ளி வைக்க, அவளுக்கு சாப்பாடு இறங்குமா என்ன?

அவன் பேசியதை விட அதிகமாகவே பேசி விட்டாளே...

என்னவோ போல இருந்தது...

கஷ்டப்பட்டு உணவை வாய்க்குள் வைத்து மெல்ல முயன்றாள்.

அவன் இயல்பாக சாப்பிட ஆரம்பித்து விட்டான்...

சாப்பிட்டுக் கொண்டே, "என்னையே வெட்கப்பட வச்சுட்ட நீ" என்றானே பார்க்கலாம்.

தொண்டைக்குள் இருந்த உணவு இறங்க மறுத்தது...

"சத்தியமா நான் உங்கள நினச்சு சொல்லவே இல்ல" என்று சிணுங்கலுடன் சொன்னவள் தலையை தாழ்த்திக் கொண்டாள்.

அவளால் அவனை பார்க்கவே முடியவில்லை...

"சொன்னதோட நிப்பாட்டாம செஞ்சு காட்டு, அதுக்கு தான் நானும் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்" என்றான் இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டே...

தோசையை சாப்பிட்டுக் கொண்டு இருந்தவளது விழிகள் விரிய, "இப்படி எல்லாம் கதைக்காதீங்க" என்றாள்.

"யாரு? நான் கதைச்சது உனக்கு இப்ப பிழையா தெரியுதா?" என்று கிண்டல் செய்தான்...

அவளுக்கு நிலத்துக்குள் புதைந்து விடலாம் போல உணர்வு தான்...

"சரி விடுங்க" என்றாள் அவனை பார்க்காமலே.

"நான் கூட டெய்லர் அக்காட நிலைமை தான் எனக்கும் வருமோ எண்டு பயந்துட்டு இருந்தேன், இப்ப என்ட வாழ்க்கை பிரகாசமா இருக்கும் எண்டு நம்பிக்கை வந்திருக்கு" என்றான்.

'வாயை வச்சுட்டு சும்மா இருக்காம என்னத்தை எல்லாம் கதைச்சு வச்சு இருக்கன்?' என்று தனக்கு தானே திட்டிக் கொண்டே, அவனை மெதுவாக ஏறிட்டுப் பார்த்தவள், "இத மறக்க மாட்டிங்களா?" என்று கேட்க, "சாகும் வரைக்கும் நினைவு இருக்கும்" என்றான் இரு கண்களையும் சிமிட்டி...

மீண்டும் தலையை குனிந்து கொண்டவளுக்கு தோசையை சாப்பிடவே முடியவில்லை...

அவன் நிறுத்தாமல், "ஹேய்" என்று ஏதோ ஆரம்பிக்க, "இன்னொரு வார்த்தை கதைச்சீங்க என்டா நான் சாப்பிடாம எழும்பிடுவேன்" என்றாள்.

அவன் பேசுவதை கேட்கும் அளவுக்கு அவளிடம் தெம்பு இல்லையே.

"கதை கதை எண்டு கதைச்சு என்னையே வெட்கப்பட வச்சுட்டு, இப்ப புதுசா சீன் போடுறியா?" என்று கேட்டான்.

"ஐயோ நான் பொதுவா சொன்னது" என்றாள்.

"நான் என்ன தான் நினச்சு பார்த்தேன்" என்றான்.

கையில் எடுத்த உணவை அவள் மீண்டும் வைத்து விடு, "ஹையோ" என்றபடி எழ முயல, சட்டென கையை நீட்டி, அவள் கையை பற்றியவன், "இருந்து சாப்பிடு, நான் ஒண்டும் கதைக்கல" என்றான்.

அவளும் மௌனமாக சாப்பிட்டாள்.

இதனை பற்றி பேசியதில் விமலா மேல் இருந்த கோபம் எல்லாம் மறைந்தும் போய் விட்டது நாராயணிக்கு.

சாப்பிட்டு முடிய, பில்லையும் கொடுத்தவன், "உனக்கு இவ்வளவு கோபம் வருமா?" என்று கேட்டபடி எழ, "இருந்து போட்டு வரும், அநியாயத்தை கண்டா வரும்..." என்றாள்.

"சரியான ரோஷக்காரி தான்" என்று சொல்லிக் கொண்டே வண்டியில் ஏற அவளும் ஏறப் போனாள்.

"தேங்க்ஸ் டி" என்றான்.

"எதுக்கு?" என்று அவள் கேட்க, "நீ கதைச்சதை கேட்ட நேரம், ஒரு மாதிரி வித்தியாசமான ஃபீல் வந்தது" என்றான்.

"இப்படியே கதைச்சிட்டு இருந்தீங்க என்டா நான் நடந்தே போயிருவேன்" என்றாள்.

"சரி அப்ப பைக்கை வச்சுட்டு நடந்து போகலாமா?" என்று கேட்க, "ஐயோ வேணாம், பிறகு நிறைய கதைப்பீங்க" என்று சொல்லிக் கொண்டே பைக்கில் ஏறிக் கொள்ள, அவன் வண்டியும் புறப்பட்டது...

அவன் இதழில் புன்னகை...

அவள் பேசியதை நினைத்து வெட்கம் கலந்த புன்னகை...

அவளுக்கோ சங்கடம்...

அதுவும் தான் பேசியதை நினைத்து தோன்றிய சங்கடம் தான்... வீட்டுக்கு வந்ததுமே, கோதாவரியிடம், "வெளிய சாப்பிட்டம் மாமி" என்று சொன்னவள் அறைக்குள் நுழைந்ததுமே தலையணைக்குள் முகத்தை கூச்சமும் சங்கடமுமாக புதைத்துக் கொண்டாள்.

அவள் நிலை இப்படி என்றால் அவனுக்கோ அன்று இரவு அவள் பேசியதை நினைத்து பார்த்தே உணர்வுகளின் மேலீட்டால் தூக்கம் தொலைந்தது தான் மிச்சம்...
 
Top