ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 15

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 15

வம்சி கிருஷ்ணாவின் வீட்டை நோக்கி நடந்து சென்ற தேன்மொழிக்கு வீடு நெருங்க நெருங்க இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது...

வேதவல்லி என்ன பேசுவாரோ? இது பேசுவாரோ? என்கின்ற பதட்டம் அவளிடம்...

தயக்கத்துடனேயே வீட்டினுள் காலை வைத்தாள்.

"இந்தா வந்துட்டா உன் ஆசை மருமக" என்று அவளுக்கு திட்டிக் கொண்டே கையில் இருந்த தேநீரை அருந்தினார்...

அவளோ தலையை குனிந்து கொண்டே, அவரை கடந்து செல்ல முற்பட, "வேலைக்கு போறது... சாப்பிடுறது, தூங்குறதுன்னு இருக்கலாம்னு பார்க்கிறியா? வீட்லயும் வேலை பார்க்கணும், இங்க ஓசி ல யாருக்கும் சோறு போட முடியாது" என்றார் எரிச்சல் கலந்த குரலில்...

அவர் பேசியது தனது அறைக்குள் இருந்த வசந்திக்கும் கேட்டது...

அவர் பேச்சு வசந்திக்கு பழகி போன ஒன்று தானே... சலிப்பாக தலையை இரு பக்கமும் ஆட்டி விட்டு தனது வேலையை பார்க்க தொடங்கி விட்டார்...

தேன்மொழியோ அவர் பேசியதை அசை போட்டுக் கொண்டு தான் மாடியேறி சென்றாள்.

அவளுக்கும் வீட்டில் சும்மா இருப்பதில் இஷ்டம் இல்லை...

அவர் சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் அவள் வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக இருக்க தான் தீர்மானித்து இருந்தாள்.

அப்போது தான் அவளால் வீட்டினரை நெருங்க முடியும் அல்லவா?

அறைக்குள் சென்று புடவையை மாற்றி சுடிதாரை அணிந்து கொண்டவள், கீழே இறங்கி வந்து சமயலறைக்குள் நுழைய முற்பட, "ஏய் நில்லு" என்றார் வேதவல்லி...

அவளும் திரும்பி பார்த்தாள்.

"மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்க? சுடிதார் போட்டு ஆடுறதுக்கு இது ஒண்ணும் உன் வீடு இல்லை..." என்றார்...

அவள் நின்றாலும் குற்றம் இருந்தாலும் குற்றம் என்று ஆகி விட்டது...

அதற்கு என்ன பதில் தான் சொல்வாள்?

பதில் சொல்லாமல் தலையை குனிந்தவள் சமையலறைக்குள் நுழைய, வேதவல்லிக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் உணர்வு தான்...

தேன்மொழியை பொறுத்தவரை, வீட்டு வேலைகளை சுடிதார் அணிந்து கொண்டே செய்வது அவளுக்கு இலகுவாக இருக்கும் என்று தோன்றியது... புடவை என்றால் எங்கே விலகுகின்றது என்று பார்த்து பார்த்து வேலை செய்வது அவளுக்கு கடினம்...

அதனாலேயே சுடிதாரை அணிந்து கொண்டு வந்திருந்தாள்.

"நான் பேசிட்டே இருக்கேன்... ஊமைச்சி அப்படியே போறத பாரு" என்று வாய்க்குள் முணு முணுத்த வேதவல்லிக்கு ஆத்திரம் அடங்கிய பாடு இல்லை...

இதே சமயம் சமையலறைக்குள் நுழைந்த தேன்மொழியோ, வெங்காயம் வெட்டிக் கொண்டே நின்ற பாக்கியா அருகே வந்தவள், தான் வெட்டுவதாக சைகையில் சொல்ல, "இல்லம்மா உங்களுக்கு எதுக்கு சிரமம்" என்றாள் பாக்கியா...

தேன்மொழி விடுவதாக இல்லை, வலுக்கட்டாயமாக பறித்து எடுத்து வெங்காயத்தை வெட்ட ஆரம்பித்து விட்டாள்.

பாக்கியாவும் மென்மையாக புன்னகைத்தபடி வேறு வேலைகளை செய்ய ஆரம்பித்து இருந்தாள்.

இரவு உணவுக்கான ஆயத்தங்களை இருவரும் சேர்ந்து செய்து கொண்டு இருந்தார்கள்...

பாக்கியாவோ, "மதியம் சாப்பிட்டீங்களாம்மா? நான் பார்க்கவே இல்லையே" என்று சொல்ல, அவளோ, "ஆம்" என்கின்ற ரீதியில் தலையாட்ட, பாக்கியாவும் யோசனையுடன் தனது வேலையை பார்க்க தொடங்கினாள்...

வேதவல்லி தேன்மொழிக்கு திட்டுவதை நிறுத்தவே இல்லை...

ஹாலில் இருந்து கரித்துக் கொட்டிக் கொண்டே இருந்தார்...

"இந்த காதும் கேட்காமல் இருந்து இருக்கலாமோ" என்று தேன்மொழி நினைக்கும் அளவுக்கு அவர் வசைவு வார்த்தைகள் இருந்தன...

இதே சமயம், கார் வரும் சத்தம் கேட்டது...

யார் வருகின்றார்கள் என்று தெரியவில்லை என்றாலும், வம்சி கிருஷ்ணா வருகின்றான் என்று தேன்மொழியின் உள் மனம் சொன்னது...

போய் பார்க்க ஆசையாக இருந்தது...

போய் பார்த்தால் வேதவல்லி இன்னும் வசை பாட ஆரம்பித்து விடுவார் என்பதால் ஆசையை அடக்கிக் கொண்டே நின்று இருந்தாள்.

அவள் நினைத்த போலவே வம்சி கிருஷ்ணா தான் வந்தான்...

கூடவே கெளதம் கிருஷ்ணாவும் வந்தான்...

வம்சி கிருஷ்ணா வீட்டின் வாசலில் காலை எடுத்து வைத்த அடுத்த கணமே, "உன் பொண்டாட்டி என்ன நினைச்சிட்டு இருக்கா?" என்று சீறினார் வேதவல்லி...

அவனோ அவரை புருவம் சுருக்கி பார்த்துக் கொண்டே, அவர் முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்தவன், "என்னாச்சு?" என்றான்...

கெளதம் கிருஷ்ணாவும், "முதல் நாளே தொடங்கிடுச்சு" என்று நினைத்துக் கொண்டே ஓரமாக நின்று நடப்பதை வேடிக்கை பார்த்தான்...

அவருக்கு இருந்த கோபத்தில் எல்லாத்தையும் தன் முன்னே அமர்ந்து இருந்த வம்சி கிருஷ்ணாவிடம் கொட்ட ஆரம்பித்து விட்டார்...

"வேலைக்கு காலைலயே கிளம்பி போறா... நான் கேட்டதுக்கு ஒரு மரியாதை இல்லை... பதில் ஒழுங்கா சொல்றது இல்ல, விறு விறுன்னு போறா, திமிர் பிடிச்சவ, இதெல்லாம் நீ கேட்க மாட்டியா?" என்றார்.

அவனிடம் சின்ன மௌனம்...

பெருமூச்சுடன், "அப்புறம்" என்றான்...

"அப்புறம் என்ன? வீட்ல சுடிதார் போடுறா, புடவை கட்ட மாட்டேங்குறா... நீ அவளை அடக்கி வைக்க மாட்டியா? என்ன கேட்டாலும் பதில் இல்லை... திமிர் தான்... இந்த ஊமைச்சிக்கு எவ்வளவு கொழுப்பு பார்த்தியா?" என்றார்...

அவனோ பெருமூச்சுடன், ஷேர்ட் கையை மடித்தவன், "இப்ப நான் என்ன பண்ணனும்?" என்று கேட்டான்...

"அவள கண்டிக்கணும், எப்படி நடந்துக்கணும்னு சொல்லணும்... பெரியவங்கள மதிக்க சொல்லணும்... அவ இனி வேலைக்கு போக கூடாது... வீட்ல புடவை தான் கட்டணும்... நீ இப்படி இருந்தா அவ உன்னையும் மதிக்க மாட்டா, அப்புறம் உன்னை ஆம்பிளையான்னு ஊர்ல கேப்பாங்க, சொல்லியும் கேட்கலைன்னா ஓங்கி ரெண்டு அறை விடு... அவ இஷ்டத்துக்கு ஆடுறதுக்கு இது ஒண்ணும் அவ வீடு இல்லன்னு சொல்லி வை" என்று ஆரம்பித்தவர் முடிந்தவரை அவளுக்கு திட்டி முடித்தார்...

அவளால் பேச முடியாது என்பதனை வார்த்தைக்கு வார்த்தை குத்திக் காட்டினார்...

இரு கைகளையும் உரசிக் கொண்டே, அவர் பேசுவதை கேட்டுக் கொண்டு அமர்ந்து இருந்தான் வம்சி கிருஷ்ணா...

அவர் பேசி முடித்ததும், "முடிஞ்சுதா?" என்று கேட்டான்...

"நான் முடிச்சுட்டேன், நீ ஆரம்பி" என்றார் அவர்...

"ஆரம்பிச்சா போச்சு" என்று சொல்லிக் கொண்டே, "தேன்மொழி என்று அழைத்தான்...

அவளும் சமயலறையில் நின்று அவர் பேசுவதை கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.

அவர் வார்த்தைகள் நெஞ்சில் ஊசியால் குத்துவது போல இருந்தன...

அடக்கிக் கொண்டே நின்று இருந்தாள்.

வம்சி கிருஷ்ணா அழைத்ததும் அவளுக்குள் உள்ளுக்குள் உதறல் எடுத்தது...

வம்சி கிருஷ்ணா மீது நம்பிக்கை இருந்தாலும், வேதவல்லி பேசிய பேச்சுக்கு அவன் மனம் மாறி விடுமோ என்று நினைத்தாள்...

அந்த பயம் தான் அவளுக்கு...

தயக்கத்துடன் ஹாலுக்குள் நுழைந்தாள்...

அவன் சோஃபாவில் அமர்ந்தவாறே அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்தான்...

அவளும் அவனை தான் பார்த்திருந்தாள்...

"நீ வேலைக்கு போறது, வீட்ல சுடிதார் போடுறது, அவங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லாம திமிரா இருந்ததுன்னு உன் மேல நிறய கம்பளைண்ட்ஸ் வச்சு இருக்காங்க, இதெல்லாம் திருத்திக்கணும்னு ஆசைப்படுறாங்க" என்றான்...

அவள் பதில் சொல்லவில்லை, சைகையால் பதில் சொல்லவும் முயற்சிக்கவில்லை, அவனும் அவளிடம் பதில் எல்லாம் எதிர்பார்க்கவும் இல்லை...

அவளை பார்த்துக் கொண்டே எழுந்தவன், "பட் எனக்கு இதெல்லாம் திருத்திக்கிற விஷயமா தோணல" என்று சொன்னதுமே, அது வரை அவளுக்கு அவன் திட்டுவான் என்று ஆசைப்பட்ட வேதவல்லியின் முகம் இறுகி போனது...

"வேலைக்கு போகணும்னு ஆசைப்பட்டா நீ தாராளமா போகலாம்... அதுக்காக நீ யார் கிட்டயும் பெர்மிஷன் கேட்கணும்னு இல்லை... என் கிட்ட கூட நீ கேட்க வேண்டாம்" என்று சொன்னதுமே அதுவரை சற்று கலவரமாக நின்று இருந்த தேன்மொழியின் முகத்தில் ஒரு நிம்மதி பரவியது... அதனை அவனும் அவதானித்து இருந்தான்...

"டேய் என்ன பேசுற?" என்று வேதவல்லி பதற, அவரை திரும்பி பார்த்தவன், "இன்னும் நான் முடிக்கல" என்று சொல்லிக் கொண்டே மீண்டும் தேன்மொழியை பார்த்தவன், "உனக்கு எது கன்ஃபெர்ட்டபிள் ஆஹ் இருக்கோ, அப்படி நீயே ட்ரெஸ் பண்ணிக்கலாம்... யாரு சொன்னாலும் அத நீ மாத்திக்கணும்னு அவசியம் இல்லை" என்று சொல்லிக் கொண்டே, அங்கே இருந்த வேதவல்லியை பார்க்க, அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது...

கெளதம் கிருஷ்ணாவோ சிரிப்பை அடக்கிக் கொண்டே சுவரில் சாய்ந்து நின்று இருந்தான்...

மேலும் தொடர்ந்த வம்சி கிருஷ்ணாவோ வேதவல்லியை அழுத்தமாக பார்த்துக் கொண்டே, "உன் மனசு கஷ்டப்படாம யார் பேசுறாங்களோ அவங்களுக்கு மட்டும் நீ பதில் சொன்னா போதும்... மீதி யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல" என்று சொல்லிக் கொண்டே இப்போது தேன்மொழியை திரும்பி பார்த்தவன், "புரிஞ்சுதா?" என்று கேட்டான். அவளுக்கு அப்படி ஒரு நிம்மதி...

அவன் மேல் இருக்கும் காதல் தினமும் மேலே மேலே சென்று கொண்டு இருந்தது...

சம்மதமாக தலையாட்டியவள் அவனை ரசனையுடன் பார்த்தாள்.

வேதவல்லியோ, "நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீ என்ன பேசிட்டு இருக்க?" என்று அதட்டலாக கேட்டார். அவனோ அவரை இப்போது பார்த்தவன், "பாட்டி, கல்யாணம் முடிஞ்சு ஒரு நாள் தான் ஆகுது... நீங்க சொன்னதெல்லாம் நம்பிட்டு அவ கூட நான் சண்டை பிடிப்பேன்னு நினைக்கிறது உங்களுக்கு புத்திசாலி தனம் இல்லன்னு காட்டுது... வில்லத்தனம் பண்ணுறதுன்னா கூட புத்திசாலி தனமா பண்ணனும்... அப்புறம் என்ன சொன்னீங்க? நான் ஆம்பிளையான்னு ஊர்ல கேட்பாங்கன்னு சொன்னீங்கல்ல? பொண்டாட்டியை அடக்கி வச்சா தான் ஆம்பிளைன்னு நீங்க நினைச்சிட்டு இருக்கீங்க... என்னை பொறுத்தவரை கட்டுன பொண்டாட்டியை அவளா வாழ விடணும்... அவன் தான் உண்மையான ஆம்பிளை" என்றான்...

வேதவல்லியின் முகம் மேலும் இருண்டு போனது...

இதே சமயம் வசந்தியும் சத்தம் கேட்டு ஹாலுக்குள் வந்தவர் அவன் பேசுவதை கேட்டுக் கொண்டே நின்று இருந்தார்...

மகன் பேசுவதை கேட்டவருக்கு தன்னை அறியாமல் ஒரு பெருமிதம்... அவன் மேல் எத்தனை கோபங்கள் இருந்தாலும் அவன் சிந்தனை அவரை நெகிழ வைத்து விட்டது...

அவனும் அவன் தந்தை குருமூர்த்தி போல தான்...

என்ன ஒன்று குருமூர்த்தி தாயை மீறி பேச மாட்டார்... இவன் அந்த கட்டுப்பாட்டையும் உடைத்து பேசுகின்றான்...

அவன் பேசியதை கேட்டு சந்தோஷத்தில் அவர் இதழ்கள் பிரிய முற்பட்டாலும், வேதவல்லியின் முகத்தை பார்த்தவருக்கு தனது சந்தோஷத்தை கூட வெளியே காட்ட முடியாத நிலை... இதழ்களை இறுக மூடிக் கொண்டார்...

வேதவல்லியோ, "நீ சரி இல்லை வம்சி... புது பொண்டாட்டில்ல அப்படி தான் பேசுவ" என்றார் அவனை முறைத்துக் கொண்டே...

"ஒரு சின்ன திருத்தம் பாட்டி, நான் எப்போவுமே இப்படி தான் பேசுவேன்... அண்ட் இன்னொரு விஷயம் சொல்ல விரும்புறேன்... இந்த வீட்ல உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கோ... அது அவளுக்கும் இருக்கு... உங்களுக்கும் இது புகுந்த வீடு தான்... அவளுக்கும் இது புகுந்த வீடு தான்... சோ இது என் வீடுன்னு நீங்க உரிமை கொண்டாடுற போல, அவளும் கொண்டாடலாம்..." என்றான்...

கெளதம் கிருஷ்ணாவினால் இதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியவே இல்லை...

"அட்றா அட்றா அட்றா" என்று சொல்லி அவன் கைகளை தட்ட அவனை திரும்பி அனல் தெறிக்க பார்த்தார் வேதவல்லி...

அவனோ சட்டென்று எங்கோ பார்த்துக் கொண்டே விசிலடித்தவன் அங்கிருந்து நகர, வம்சி கிருஷ்ணாவோ தேன்மொழியை பார்த்து, "உன் கூட பேசணும் மேல வா" என்று சொல்லிக் கொண்டே, மாடியேறி செல்ல, யாரையும் பார்க்காமல் தலையை குனிந்தபடி அவனை பின் தொடர்ந்து சென்றாள் தேன்மொழி...

வசந்தியும் அங்கே இருந்து நகர்ந்து விட்டார்...

வேதவல்லிக்கு உடம்பெல்லாம் எரிச்சல்...

தாங்கவே முடியவில்லை... அதுவும் அவன் பேசி விட்டு சென்றது செருப்பால் அடித்த போல இருந்தது... தேன்மொழிக்கு முன்னாலேயே அவரை அவமானப்படுத்தி விட்டான் அல்லவா?

மாடியேறி செல்லும் இருவரையும் வன்மத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தார்...

தேன்மொழியை பற்றி அவதூறு பேசியே வம்சி கிருஷ்ணாவை தேன்மொழிக்கு எதிராக திருப்பலாம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார்...

அவன் அதற்கெல்லாம் அசர மாட்டான் என்று புரிந்தது...

இதனை விட வேறு ஏதும் செய்ய வேண்டும்... பெரிதாக செய்ய வேண்டும் என்று நினைத்தவரோ அருகே இருந்த தொலைபேசியை எடுத்து அழைத்தது என்னவோ கல்யாணிக்கு தான்...

அவளோ தனது அலைபேசியை எடுத்து காதில் வைத்தவள், "என்ன இப்போ?" என்று எரிந்து விழுந்தாள்.

இன்னுமே குரலில் கோபம், அழுகை, ஆதங்கம்...

"இப்படியே எத்தனை நாள் இருக்கலாம்னு நினைக்கிற?" என்று கேட்டார் வேதவல்லி... அவளோ, "எனக்கு மனசே ஆறல, அந்த ஊமைச்சியை ஏதாவது பண்ணனும்" என்று சொன்னாள்.

வேதவல்லியோ, "சொன்னா மட்டும் போதாதுடி... செய்யணும்... நீ அழுதுட்டே இரு, இங்க அவ கொஞ்ச மாசத்துல வயித்தை தள்ளிட்டு நிற்க போறா..." என்றார்...

மறுமுனையில் மௌனம்... "ஏதாவது பேசுடி" என்று அதட்டினார் வேதவல்லி...

"அவங்களுக்கு சடங்கு எல்லாம் முடிஞ்சு இருக்கும்ல" என்றாள் ஏமாற்றமான குரலில்...

"அதெல்லாம் எனக்கு தெரியாது? நான் என்ன அவங்க அறையை எட்டியா பார்த்தேன்?" என்று கேட்டார்...

அவளிடம் மீண்டும் மௌனம்...

"அத பத்தி எல்லாம் நினச்சு மனச குழப்பிக்காதே... வம்சி உனக்கு வேணுமா வேணாமா? அத தெளிவா சொல்லு" என்றார்...

"எனக்கு வேணும்" என்றாள் பெண்ணவள்...

"அப்போ அழுதிட்டு இருக்காம, அடுத்த வேலையை பார்க்கலாம்... நாளைக்கே வீட்டுக்கு வா" என்று அவர் சொல்ல, அவளும், "ம்ம்" என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள்.

இதே சமயம் தேன்மொழி அறைக்குள் வந்ததும் கதவை தாழிட்ட வம்சி கிருஷ்ணாவோ, அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டே தன் முன்னே நின்றவளை ஏறிட்டுப் பார்த்தவன் "குங்குமம் வைக்க பிடிக்காதா?" என்று கேட்டான்...

எல்லாவற்றுக்கும் அவள் விருப்பத்தை தான் முன்னிறுத்தி பேசினான்...

"அப்படி எல்லாம் இல்லை" என்கின்ற ரீதியில் மறுப்பாக தலையாட்டியவள், "குங்குமம் இல்லை" என்று இதழ்களை பிதுக்கி சைகையில் சொன்னாள்.

அது அவனுக்கும் தெரியும்...

"அப்போ என் கிட்ட கேட்டு இருக்கலாமே, இல்லன்னா நீயே வாங்கி இருக்கலாமே" என்றான்...

அவளோ, "நாளைக்கு வாங்குறேன்" என்று சைகையால் சொன்னாள். அவனுக்கு புரியவில்லை... ஆனால் யூகித்துக் கொண்டே, "நாளைக்கு வாங்குறேன்னு சொல்றியா?" என்று கேட்டான்...
 

pommu

Administrator
Staff member
அவளும் ஆம் என்று தலையாட்ட, அவனோ, "அதுக்கு அவசியமே இல்லை..." என்று சொல்லிக் கொண்டே எழுந்தவன், பாக்கெட்டில் கையை விட்டு குங்கும சிமிழ் ஒன்றை எடுத்து தன் முன்னே நின்றவளிடம் நீட்டினான்...

அவன் நீட்டிய குங்கும சிமிழை விழி விரித்து ஆச்சரியமாக பார்த்தாள்.

தங்க நிறத்தில் மயில் வடிவ, கற்கள் பதிக்கப்பட்ட குங்கும சிமிழ்...

அழகாக இருந்தது...

அவளுக்கு ஆசையாகவும் இருந்தது... அவள் இதழ்கள் மெதுவாக விரிய, அவன் கையில் இருந்த குங்கும சிமிழை வாங்கி முகத்துக்கு நேரே கொண்டு வந்தவள், அதனை ரசித்து பார்த்தாள்.

அவன் கொடுத்த முதல் பரிசு அவளுக்கு...

அவனை இறுக அணைக்க வேண்டும் என்று அவள் கைகள் பரபரத்தன... அடக்கிக் கொண்டே, அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

"உனக்கு பிடிச்சு இருக்கா?" என்று கேட்டான்...

ஆமோதிப்பாக தலையாட்டினாள்...

"இன்னைக்கு கடை ஓப்பனிங் ஒண்ணுக்கு இன்வைட் பண்ணி இருந்தாங்க, ரெக்கார்டிங் முடிச்சிட்டு நானும் கௌதமும் போனோம்... ஏதாவது வாங்கணும்னு தோணிச்சு... இந்த குங்கும சிமிழ் ரொம்ப பிடிச்சு இருந்திச்சு... இத பார்த்ததும் உன் நினைவு தான் வந்திச்சு... வாங்கிட்டேன்... குங்குமம் எல்லாம் இதுல இருக்கு" என்று சொல்லிக் கொண்டே, பாக்கேட்டில் இருந்த குங்குமம் இருக்கும் பையை எடுத்து அவளிடம் கொடுத்தவன், துவாலையை எடுத்துக் கொண்டே குளிப்பதற்காக குளியலறைக்குள் நுழைந்து விட்டான்... அவளோ குங்குமத்தை சிமிழினுள் நிரப்பியவள், அதனை எடுத்துக் கொண்டே கண்ணாடி முன்னே போய் நின்றாள்...

நெற்றியில் சின்ன கருப்பு பொட்டு மட்டும் தான்...

காலையில் பொட்டு வைக்கும் போதே அவள் குங்குமம் வாங்க வேண்டும் என்று யோசித்தாள்.

வசந்தியிடம் கேட்கலாமா என்று கூட யோசித்தாள்.

ஆனால் அவரே முகத்தை திருப்பிக் கொண்டு செல்லும் போது எப்படி கேட்பது என்று தயக்கம் இருந்தது...

இடையே வீட்டிற்கு சென்று வந்ததில் இதனை மறந்தே விட்டாள்.

ஆனால் அவன் வாங்கிக் கொடுத்து இருந்தான்...

ஆசையாக குங்கும சிமிழை திறந்தவள், குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்தாள்.

குங்குமம் வைத்ததில் அவள் நெற்றி சிவக்க, வெட்கத்தில் அவள் கன்னங்களும் சிவந்தன...

இதழ்களில் தாராளமாக புன்னகை...

சற்று முன்னர் வேதவல்லி பேசியதில் உண்டான மன அழுத்தம் எங்கே சென்றது என்று கூட தெரியவில்லை...

குங்குமத்தை நெற்றியிலும் நெற்றி வகிட்டிலும் வைத்து விட்டு அங்கே சுவரில் மாட்டி இருந்த வம்சி கிருஷ்ணாவின் ஆளுயர புகைப்படத்தை பார்த்தாள்.

கோர்ட் ஷூட் அணிந்து இருந்தான்...

நவநாகரீக தோற்றத்தில் இருந்தான்...

அப்படியே அந்த புகைப்படத்தை நோக்கி சென்றாள்.

கையை நீட்டி, அவனை வருடினாள்... நேரில் வருட முடியாது...

புகைப்படத்தில் அவனை வருடினாள்...

எத்தனையோ ஆசைகள்...

வெளிப்படுத்தாமலே இருக்கிறாள்.

மனைவியான பின்னும் தனது உரிமையை எடுக்க தயங்கி நிற்கின்றாள்...

நேரில் முத்தமிட ஆசை... ஆனால் வாய்ப்பில்லை... சுற்றி பார்த்தாள்... குளியலறையில் நீர் சத்தம் கேட்டது...

அவன் இப்போதைக்கு வரப் போவது இல்லை என்று புரிந்தது...

அவனது காந்த விழிகள் மற்றும் கூரிய நாசியில் படிந்த அவள் விழிகள் இறுதியாக அவன் இதழ்களில் நிலைக்க, தன்னிதழை அவன் இதழில் பதித்து இருந்தாள்.

அவன் புகைப்படத்தை விட்டு விலகியவளுக்கு வெட்கம்... கன்னங்கள் மேலும் சிவந்து போயின...

ஏதோ அவனை நேரில் முத்தமிட்டு விட்ட போல உணர்வு...

இதழ்களில் இருந்து வெட்க சிரிப்பு அகலவே இல்லை...

அதே புன்னகையுடன் விலகி நின்று அவன் தோற்றத்தை ரசனையாகப் பார்த்தாள்.

அவள் குங்குமம் அவன் புகைப்படத்தின் நெற்றியில் அங்கும் இங்குமாக பூசப்பட்டு இருந்ததை அப்போது தான் கவனித்தாள்...

தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு... கண்ணாடியில் பார்த்து தனது நெற்றியில் இருக்கும் குங்குமத்தை சரி செய்தவள், அவன் புகைப்படத்தில் இருக்கும் குங்குமத்தை அழிக்க அதனை நோக்கி சென்ற நேரம், குளியலறை கதவும் திறக்கும் சத்தம் கேட்டது..

நெஞ்சில் நீர் மொத்தமாக வற்றிப் போனது அவளுக்கு...
 

CRVS2797

Active member
உன் மௌனமே என்
இசையாக...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 15)


பொண்டாட்டியை அடக்கி வைச்சா தான் ஆம்பிளைன்னு நினைக்கறிங்க, ஆனா பொண்டாட்டியை அவளா வாழ விடறது தான் உண்மையான ஆம்பிளைக்கே அழகு...


சபாஷ் டா மாப்பிள்ளை...! வேதவல்லிக்கு மட்டுமில்லை..
நிறைய பேரோட இந்த மாதிரி நினைப்புக்கு சரியான செருப்படி கொடுக்கும் வார்த்தைகள்.


முதல் பரிசு குங்குமச் சிமிழா...?
அட்றா, அட்றா மாப்பிள்ளை ஜமாய். ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன்
இஸ் பெஸ்ட் இம்ப்ரஷன்னு இதைத்தான் சொல்றாங்களோ..?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top