அத்தியாயம் 15
அவள் அருகே வந்து காரை நிறுத்தியவன், ஜன்னல் கண்ணாடியை இறக்கி விட்டு, "வீட்டுக்கு தான் போறேன்" என்றான்...அவளோ அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "உங்க வீடு, நீங்க போங்க" என்றாள்.
அவனுக்கு சற்று எரிச்சலாகி விட்டது...
"ஹேய் வந்து ஏறு, கொண்டு போய் விடுறேன்" என்று சொல்ல, அவளோ சுற்றி ஆபீஸ் வளாகத்தை பார்த்தவள், "இந்த நேரத்துல சரியா இங்க எப்படி வந்தீங்க?" என்று கேட்டாள்.
"ரொம்ப தான் ஷார்ப் ஆஹ் இருக்கா" என்று நினைத்த நெடுஞ்செழியனோ, "எப்படியோ வந்தேன்... அது எதுக்கு உனக்கு?" என்று கேட்டான்...
அவளுக்கும் இங்கே நிற்பது உசிதமாக படவில்லை... வேறு வழியும் இல்லை...
விறு விறுவென நடந்து வந்து, அவன் காரில் ஏறிக் கொண்டவளது தலை லேசாக நனைந்து இருக்க, தலையில் போட்டு இருந்த கிளிப்பை கழட்டியவள் ஒற்றைக் கையால் தலையினை கோதிக் கொண்டாள்.
நெடுஞ்செழியனோ குரலை செருமிக் கொண்டே, அவளை கடைக்கண்ணால் பார்த்து விட்டு காரை ஸ்டார்ட் செய்தவன், ஒற்றைக் கையால் ரேடியோவை போட்டு விட்டு காரை முன்னே செலுத்த ஆரம்பித்தான்...
மெல்லிசை, வெளியில் மழை, இதமாக இருந்தது...
அவனோ ஏ சி யை போட்டு இருக்க, அவளுக்கு சற்று நடுங்க ஆரம்பித்தும் விட்டது...
"ஏ சி யை ஆஃப் பண்ண முடியுமா?" என்று அவனை பார்த்து கேட்க, அவனோ, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே ஏ சி யை அணைத்தவனோ, "இவ்ளோ நேரம் வேலை வாங்குறானா?" என்று கேட்டான்.
"உங்க ஃபிரென்ட் தானே" என்று அவள் குத்தலாக ஒரு பதில் சொல்ல, "ஆனா நான் இப்படி எல்லாம் வேலை வாங்குறது இல்லை" என்றான்...
"ரொம்ப தான் நல்லவர்" என்று மீண்டும் குத்தலாக வந்தது அவள் வார்த்தைகள்...
பொறுமை இழந்து விட்டான் அவன்...
"இப்போ என்ன பண்ணிட்டேன்னு இப்படி பேசிட்டு இருக்க?" என்று அவளை பார்க்காமலே கேட்டான்.
"ஒரு ஃபிரென்ட் ஆஹ் பழகி ஏமாத்துறது தப்பா தோணலையா?" என்று அவள் கேட்க, அவனோ, "நான் அக்ஷயா கூட ஃபிரென்ட் ஆனதே வீராவுக்காக தான்" என்றான்...
"அப்போ அவளுக்கு உண்மையா இருக்கல்ல" என்றாள் அவள்...
"வீராவுக்கு உண்மையா இருந்தேன்" என்றான் அவன்...
"எப்போ பார்த்தாலும் வீரா தான்" என்று வாய்க்குள் முணுமுணுக்க, "உனக்கு எப்படி அக்ஷயாவோ எனக்கு வீரா... போதுமா?" என்று கேட்டான்...
"தாய் கிட்ட இருந்து குழந்தையை பிரிக்க ப்ளான் பண்ணுன ஆள் தானே நீங்க" என்று அவள் கோபத்தில் வார்த்தையை விட, "அது தான் பிரிக்கலையே" என்றான் அவன்...
அவள் என்ன பேசினாலும் பதிலை தயாராக வைத்து இருப்பவனிடம் அவளால் என்ன தான் பேசி விட முடியும்...
"உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியாது" என்று முணு முணுத்தவளை திரும்பி பார்த்துக் கொண்டே காரை ஓரமாக நிறுத்தியவன், "இங்க பாரு கீர்த்தனா... ஒரு அப்பாவா அவன் உதவி கேட்டான் செய்து கொடுத்தேன்... எனக்கு அது தப்பா தெரியல... அவன் ஒரு டிவோர்சி... அக்ஷயாவும் ஒரு டிவோர்சி... அவங்களுக்கு இந்த வாழ்க்கை குழந்தை மூலம் புதுசா அமையட்டுமே" என்றான்...
அவளும் அவன் முகத்தை பார்த்தவள், "எல்லாம் சரி, உங்க பிரென்ட் கூட மனுஷன் வாழ முடியுமா? எப்போ பார்த்தாலும் முறைச்சிட்டே இருக்கார்... அக்ஷயா ஏற்கனவே பாவம்... அவர் கிட்ட வீட்லயும் மாட்டிகிட்டு என்ன பாடு பட போறாளோ" என்று கேட்க, நெடுஞ்செழியனோ, "அவன் ஸ்ட்ரிக்ட் ஆஹ் இருந்தாலும் நல்லவன் தான்" என்றான்...
"நீங்க தான் மெச்சிக்கணும்" என்றாள் அவள்...
கண்களை மூடி திறந்தவன், " ரிலாக்ஸ் கீர்த்தனா அவங்களுக்காக நாம எதுக்கு சண்டை போடணும்?" என்று கேட்க, அவளோ ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, "ஓகே, அத பத்தி இனி ரெண்டு பேரும் பேச தேவல" என்றாள்.
"குட்" என்று சொல்லிக் கொண்டே காரை கிளப்பியவன், "அப்புறம் லைஃப் ல அடுத்த பிளான் என்ன?" என்று கேட்டான்...
அவளோ, "வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டு தான் இருக்காங்க... ஆனா எனக்கு அதுல ஆர்வம் இல்லை... முக்கியமா அக்ஷயாவோட லைஃபை பார்த்து பயமா இருக்கு..." என்றாள்.
"எல்லா ஆம்பிளைங்களும் அப்படி இல்லையே" என்றான் அவன்...
"என் விதி அப்படி ஆய்டுச்சுன்னா?" என்று அவள் சொல்ல, "அப்போ லவ் பண்ணலாமே" என்றான் அவன்...
"அக்ஷயாவும் லவ் தான் பண்ணினா" என்று சொல்ல, அவனோ, "அப்போ வாழ்க்கை முழுக்க ஒளவையார் தானா?" என்று சிரித்தபடி கேட்டான்...
"நான் என்னவோ பண்ணிட்டு போறேன்... உங்க ஐடியா என்ன?" என்று கேட்டாள் அவள்...
"இதுவரைக்கும் கல்யாணம் பத்தி ஐடியா இல்லை... ஆனா இப்போ வந்து இருக்கு..." என்று சொல்ல, "வாவ், அப்போ பண்ணிக்க வேண்டியது தானே" என்று அவள் சொல்ல, சட்டென காரை நிறுத்தியவன், "வீடு வந்திடுச்சு" என்றான்...
அவளும் வெளியே எட்டி பார்த்தவள், "ம்ம் வீடு வந்திடுச்சு தான்... நீங்க மீதி கதையை சொல்லுங்க" என்றாள் ஆர்வம் தாங்காமல்...
அவளை பார்த்துக் கொண்டே, குரலை செருமியவன், "ம்ம் கல்யாணம் பண்ணிக்க நான் ரெடி தான்" என்று ஆரம்பித்து ஒரு கணம் நிறுத்தியவன், "உனக்கு ஓகேன்னா சொல்லு, நாளைக்கே பண்ணிக்கலாம்" என்று மனதில் இருப்பதை சொல்லி விட்டான்...
பெண்ணவள் கண்களோ அதிர்ந்து விரிய, "வாட்?" என்று கேட்டாள்.
"வெளிப்படையவே சொல்றேன்... எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்... அதனால தான் உன்னை சீண்டிட்டே இருக்கிறேன்... அக்ஷயா மேல நீ வச்சு இருக்கிற அந்த சுயநலம் இல்லாத அன்பு பிடிக்கும்... உன் தைரியம் பிடிக்கும்... என் கிட்ட பயம் இல்லாம பேசுற உன்னோட துணிச்சல் பிடிக்கும்... இப்படி எல்லாமே பிடிக்கும்" என்றான் அவள் விழிகளை பார்த்துக் கொண்டே....
அவளோ, சட்டென தலையை உலுக்கி தன்னை சமன் செய்தவள், "ஆனா எனக்கு உங்கள பிடிக்கல" என்று சொல்லிக் கொண்டே காரை திறக்க, "ஒன்னும் அவசரம் இல்லை... யோசிச்சே பதில் சொல்லு" என்று சொன்னான் அவன்...
"யோசிச்சாலும் இது தான் பதில்" என்று சொன்னவளோ விறு விறுவென மாடியில் ஏற, அவனோ இரு பக்கமும் தலையாட்டி சிரித்து விட்டு, காரில் இருந்து இறங்கி வீட்டினுள் நுழைந்து கொண்டான்...
வீட்டிற்குள் வந்த கீர்த்தனாவுக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது...
கதவை தாழிட்டு விட்டு அதில் சாய்ந்து நின்றாள்.
அவனை பிடித்து இருக்கின்றது என்றும் இல்லை... பிடிக்கவில்லை என்றும் இல்லை...
சிறிது நேரம் அப்படியே நின்றவள், "ரெண்டு நாள்ல அவனே மறந்திடுவான்" என்று நினைத்துக் கொண்டே, குளிக்க சென்றாள்.
இதே சமயம் வீட்டை நோக்கி சென்று இருந்த வீரராகவன் மற்றும் அக்ஷயா நடுவே மௌனம் தான் நிலவியது... இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை...
கார் அவர்கள் வீட்டின் முன்னே நின்றதும் பதறி இறங்கியவள் வேகமாக உள்ளே செல்ல, அவள் முதுகை வெறித்துப் பார்த்து விட்டு காரை பார்க் பண்ணிய வீரராகவனும் இறங்கிக் கொண்டான்...
அக்ஷயாவோ ஹாலில் குழந்தையுடன் இருந்த மல்லிகாவை நோக்கி சென்றவள், "சாப்பிட்டாளா?" என்று கேட்க, "சாப்பிட்டு நேரம் ஆகுதும்மா, இனி பால் அடிச்சு கொடுக்கணும்" என்றாள்.
"இல்ல நானே பால் கொடுத்துகிறேன்" என்று சொன்னவளோ, "இவளை கொஞ்ச நேரம் வச்சுக்கோ, குளிச்சுட்டு வரேன்" என்று சொன்னபடி வேகமாக அறைக்குள் நுழைந்தாள்.
அவளை தொடர்ந்து ஹாலுக்குள் வந்த வீரராகவனோ, மல்லிகாவிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டே, சிறிது நேரம் விளையாடியவன், "அழுதாளா?" என்று கேட்டான்...
"கொஞ்சமா அழுதா... அப்புறம் என் கிட்ட ஓட்டிகிட்டா ஐயா" என்று சொல்ல, "ம்ம்" என்று சொன்னபடி குழந்தையை கொடுத்தவனும் அறைக்குள் நுழைந்து கொள்ள, குளித்து விட்டு வெளியே வந்து மல்லிகாவிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டே மீண்டும் அறைக்குள் நுழைந்து கொண்டாள் அக்ஷயா...
குழந்தைக்கு பால் கொடுத்து தூங்கவும் வைத்து விட்டு நேரத்தைப் பார்த்தாள், நேரம் பத்து அரையை நெருங்கி இருந்தது...
பசி வேறு வயிற்றைக் கிள்ளியது...
இந்நேரம் சாப்பாடு இருக்குமா என்று அவளுக்கு சந்தேகம் வேறு...
என்ன தான் திருமணம் செய்து வந்தாலும் அந்நியர் வீட்டில் இருப்பது போன்ற உணர்வு தான் அவளுக்கு...
எழுந்து சென்று நீரை அருந்த பாட்டிலை பார்த்தால் அது வெறுமையாக இருந்தது...
நீர் எடுக்க எப்படியும் வெளியே சென்றாக வேண்டும்...
"ஐயோடா" என்று இருந்தது அவளுக்கு...
இரவில் சுடிதார் தான் அணிவாள் அவள்... அங்கே இருந்த ஷாலை எடுத்து தோளில் போட்டுக் கொண்டே, பாட்டிலை எடுத்துக் கொண்டே வெளியேறிய சமயம், அவள் கண்ணில் பட்டது என்னவோ அறைக் கதவை திறந்து கொண்டே வந்த வீரராகவன் தான்...
ஆர்ம் கட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து இருந்தான்...
அவனை இப்படி கோலத்தில் அவள் பார்த்தது இல்லை...
சங்கடமாக இருந்தது... சட்டென பார்வையை திருப்பிக் கொண்டே சமையலறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்... அவனும் அவளை சுடிதாரில் பார்க்கின்றான்...
வழக்கமாக புடவையில் முதிர்ச்சியான தோற்றத்தில் இருப்பவளோ இப்போது சின்ன பிள்ளையாக தான் அவனுக்கு தெரிந்தாள்...
தனது எண்ணம் போகும் திசையை நினைத்து தலையை உலுக்கி தன்னை சமநிலைப்படுத்தியவன், அவளை தாண்டி சாப்பிடும் அறைக்குள் நுழைந்து இருந்தான்...
அவனது நடை தான் வேக நடை ஆயிற்றே...
இப்போது அக்ஷயாவோ, சாப்பிடும் அறையை தாண்டி தான் சமையலறைக்குள் செல்ல வேண்டி இருக்க, அவளும் அவனை பார்க்காமல் சமயலறைக்குள் நுழைய முற்பாட்டாள்...
சாப்பிட இருந்த வீரராகவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை, "சாப்பிட்டியா?" என்று கேட்டான்... அவளோ அவனை திரும்பி பார்த்தவள், "இல்லை" என்று தலையாட்ட, "அப்போ வந்து இருந்து சாப்பிடு" என்றான் அவன்...
அவன் அக்கறை அவளுக்கு அதிசயமாக இருந்தது...
அவளது அதிசய உணர்வை அவனும் புரிந்து கொண்டான் போலும்...
"உனக்காக ஒன்னும் சொல்லல, பால் கொடுக்க தெம்பு வேணாமா?" என்று கேட்டான்...
அதற்கு மேல் அவளால் மறுக்க சந்தர்ப்பமே அமையாமல் இருக்க, பசி வேறு வாட்ட, பாட்டிலை மேசையில் வைத்து விட்டு, சாப்பிட அமர்ந்து விட்டாள்...
அவனோ இரு தோசைகளை எடுத்து வைத்து சாப்பிட, அவளும் இரு தோசைகளை எடுத்தாள்...
ஆனால் அவளுக்கோ அது போதவில்லை... இன்னும் பசித்தது... மதியம் வேறு அவள் ஒழுங்காக சாப்பிடவும் இல்லை அல்லவா? தயங்கி தயங்கி மூன்றாவது தோசையை எடுத்தாள்...
அவனோ சட்டென்று நிமிர்ந்து பார்த்தான்... முகத்தில் ஒரு அதிர்ச்சி... அவள் தோற்றத்துக்கும் அவள் சாப்பிடுவதற்கும் சம்பந்தமே இல்லை...
அவளோ, "பசிக்குது" என்று மெல்லிய குரலில் சொல்ல, "சாப்பிடு" என்று மட்டும் சொன்னவனுக்கு தெரியும், தான் இருந்தால் அவளால் நிம்மதியாக சாப்பிட முடியாது என்று...
விரைவாக சாப்பிட்டு விட்டு கையை கழுவிக் கொண்டே எழுந்தவன், அங்கிருந்து வெளியேறியதும் தான் அவளுக்கு மூச்சே வந்தது...
அவன் இருக்கின்றான் என்று சட்னி மட்டுமே எடுத்து வைத்து சாப்பிட்டவள், இப்போது தாராளமாக சாம்பாரையும் எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்து இருந்தாள்.
வயிறு நிறைய சாப்பிட்டவள், நீரையும் எடுத்துக் கொண்டே அறைக்குள் சென்று இருந்தாள்.
படுத்ததும் அப்படி ஒரு தூக்கம்...
அலாரம் வைத்து விட்டு படுத்தவள், காலையில் நேரத்துக்கே எழுந்து கொண்டாள்.
முதல் நாள் அவன் எச்சரித்தது அவளுக்கு நினைவில் இருந்தது அல்லவா?
நேரத்தை பார்த்து விட்டு, குழந்தையையும் குளிக்க வைத்து ஆயமாக்கியவள், தானும் ஆயத்தமாகி சாப்பிட்டு முடித்து இருக்க, அப்போது தான் வீரராகவன் சாப்பிட வந்தான்...
அவளை பார்த்து விட்டு கையில் இருந்த ஆப்பிள் வாட்சை பார்த்தவனோ, ஒரு மெச்சுதலான பார்வையுடன் அமர்ந்து கொள்ள, அவளும், அங்கே இருந்த தனபாலனிடம், "நான் வரேன் மாமா" என்று சொல்லி விட்டு எழுந்து கொண்டாள்.
அப்படியே மல்லிகா கையில் இருந்த குழந்தையின் கன்னத்தில் முத்தம் பதித்தவள், "நைட் ஏர்லியா" என்று ஆரம்பித்தவள் ஒரு கணம் நிறுத்தி, "எப்படியும் வந்திடுவேன்" என்று தனிஷாவிடம் சொல்லி விட்டு வெளியேற அது வீரராகவனின் காதில் தெளிவாக கேட்டது...
அப்படியே பொடி நடையாக சென்று பஸ் ஸ்டான்ட்டில் நின்று விட்டாள்.
இதே சமயம், சாப்பிட்டு முடித்த வீரராகவனும் காரை எடுத்துக் கொண்டே புறப்பட்டவன், பஸ் ஸ்டாண்டை தாண்டி தான் சென்றான்...
அவன் கண்ணில் அவள் தென்பட்டாலும், அவளை ஏற்றி செல்ல அவன் யோசிக்கவே இல்லை...
அவன் காரை பார்த்துக் கொண்டே நின்று இருந்த அக்ஷயாவோ, "ஒரே இடத்துக்கு தானே போறோம்... அழைச்சிட்டு போனா என்னவாம்" என்று முணுமுணுத்துக் கொண்டு இருக்க, பஸ்ஸும் வந்து நின்று இருந்தது...
அவளும் ஏறிக் கொண்டாள்.
இன்று நேரத்துக்கே அக்ஷயா அலுவலகத்துக்கு வந்து இருக்க, கீர்த்தனாவும் நேரத்துக்கே வந்து இருந்தாலும் வீரராகவன் முன்னே இருவராலும் பேசிக் கொள்ள முடியாத நிலை தான்...
மௌனமாக வேலையை தொடர்ந்தார்கள்...