அத்தியாயம் 14
அடுத்த நாள் திங்கட்கிழமை.நாராயணி காலேஜிக்கு சென்று விட்டாள்.
ஜனார்த்தனனும் நாராயணியின் வகுப்புக்கு பாடத்தை எடுத்து விட்டு கிளம்புவதாக இருந்தது...
திருமணம் ஆகாத லெக்சரர்ஸ் என்றாலே, பெண் மாணவிகளுக்கு குதூகலம் தானே...
அவன் வேறு பார்க்க சினிமா நடிகன் தோற்றத்தில் இருப்பவன்...
விட்டு வைப்பார்களா என்ன?
நாராயணி அவனது சொந்தம் என்னும் வரைக்கும் விஷயம் அவள் நண்பிகளுக்கு தெரியும்...
அவன் வீட்டில் இருந்து காலேஜ்ஜூக்கு வருவதை கூட அவள் யாரிடமும் சொல்லவில்லை...
அவள் நண்பியோ, "உனக்கு ஜனார்த்தனன் சேர் சொந்தம் தானே" என்று கேட்க, "ம்ம்" என்றாள்.
"ஆள் இருக்கா அவருக்கு?" என்று அடுத்த கேள்வி...
ஐயோடா என்று இருந்தது...
இத்தனை நாட்கள் கேட்காமல் இன்று கேட்டதில் அவளுக்கு கடுப்பாகவும் இருக்க, "எனக்கு என்னடி தெரியும்?" என்று எரிந்து விழுந்தாள்.
"சொந்தம் எண்டு கேட்டா சரியா தான் சீன் போடுறா" என்று சொன்னவளோ, "ஜனார்த்தனன் சேர் எனக்கு தான்" என்றாள்.
"இல்ல எனக்கு தான்" என்றாள் இன்னொருத்தி...அத்துடன், "அவர்ட கண் நல்ல வடிவு" என்று ஆரம்பித்து, ஆளாளுக்கு வர்ணிக்க வேறு ஆரம்பித்து விட்டார்கள்.
இப்படி "எனக்கு தான்" என்று மாறி மாறி சொல்ல, எல்லாரையும் பார்த்து விட்டு, அமைதியாக இருந்த ரித்விகாவை பார்த்த நாராயணியோ, "நீ மட்டும் ஏன் சும்மா இருக்கா, நீயும் சொல்றது தானே" என்றாள்.
"எனக்கு அவரை பார்த்தா அண்ணா ஃபீல் வருது டி, நான் என்ன செய்யட்டும்" என்றாள் அவள்...
நாராயணி பெருமூச்சுடன், 'உனக்காச்சும் அண்ணா ஃபீல் வருதே, அது போதும்' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே, இருக்க, ஜனார்த்தனனும் வகுப்பெடுக்க வந்து இருந்தான்...
அவன் அவளை பெரிதாக சட்டை செய்யவில்லை...
பார்த்தும் பார்க்காதது போல காட்டிக் கொண்டான்...
அவளுக்கு அவனையே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டிய கட்டாயம்...
இத்தனை நாட்கள் அவனை ரசனையாக பார்த்தது இல்லை...
இன்று நண்பிகள் சொன்ன பிறகு, அவனை உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை ஆராய நினைத்தவள், அவன் முடியில் பார்வையை செலுத்தினாள்.
அலையலையாக இருந்தது...
நேர்த்தியாக நீவி இருந்தான்...
அப்படியே இறங்கி அவன் தடித்த புருவம் தொட்டு, அவன் விழிகளை சென்றடைந்தது அவள் விழிகள்...
கூர்மையான பெரிய விழிகள்...
அந்த கண்களை முதல் பார்த்து பயந்து இருக்கின்றாள்.
இப்போது பயம் குறைந்து இருந்தது...
அப்படியே அவன் கூரிய நாசி, இதழ்கள் என்று ஆராய்ந்தவளுக்கு அதற்கு கீழ் செல்ல தயக்கம்...
மீண்டும் அவன் விழிகளை பார்க்க தொடங்கி விட்டாள்.
இதே கணம், ஜனார்த்தனன் அவள் வகுப்புக்கு பாடம் எடுத்து விட்டு, நேரத்துக்கே கிளம்பி விட்டான்...
அவனுக்கு அன்று தாலிக்கு பொன்னுருக்கும் வேலை இருந்தது...
வீட்டுக்கு சென்று கோதாவரியையும் கனகசிங்கத்தையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்...
பெரிய ஏற்பாடாக எல்லாம் அவன் செய்ய விரும்பவில்லை...
சின்னதாக ஏற்பாடு செய்ய நினைத்தவன், அதனை நாரயாணியிடம் கூடி பெரிய விஷயமாக தெரிவிக்கவில்லை...
பவித்ரனும் நேரத்துக்கே வந்திருக்க, கனகசிங்கமோ, "என்னடா, அப்பாட்ட சொல்லிட்டியா?" என்று கேட்டார்...
அவனோ, "இண்டைக்கு தான் சொல்லோணும், அதிகமா பின்னேரம் பஞ்சாயத்துக்கு வருவார் எண்டு நினைக்கிறன்" என்று சொன்னான்.
கோதாவரியோ, "நீ அப்ப தயவு செஞ்சு பவித்ரனோட விளையாட போயிடு, நாங்க கதைச்சு சரி செய்யுறோம்" என்று சொல்ல, "எதுக்கு அம்மா இவ்வளவு பயம்" என்றான் அவன்...
"உன்ட வாய் அப்படி" என்று பவித்ரன் சொல்ல, தாலிக்கு பொன் உருக்கியவரோ, "ஆம்பிளை பிள்ளை" என்று சொன்னார்.
பவித்ரனும், "மச்சான், உன்னை போல மூத்தது ஆம்பிளை பிள்ளை தான்" என்று சொல்ல, "பெத்துட்டா போச்சு" என்றான் சிரித்துக் கொண்டே...
அதனை தொடர்ந்து அவர்கள் வீட்டுக்கு வந்து விட, பவித்ரன் புருஷோத்தமனிடம் அலைபேசியில் விஷயத்தை சொன்னவன், பிரச்சனை வரக் கூடாது என்று ஜனார்த்தனனை அழைத்துக் கொண்டு பேட்மிண்டன் விளையாட கிளம்பி விட்டான்.
"நான் என்னடா கதைக்க போறேன், இப்பிடி ஏன் என்னை துரத்துறீங்க?" என்று கேட்டபடி ஜனார்த்தனனும் விளையாட சென்று இருக்க, "உன்ட வாய் உன்ட கண்ரோல் ல இருக்காது, இந்த நேரத்துல பிரச்சனை படாம சும்மா இரு" என்று சொல்லி இருந்தான் பவித்ரன்...
பவித்ரன் எதிர்பார்த்த போலவே, கனகசிங்கம் வீட்டுக்கு கோபமாக கிளம்பி வந்து இருந்தார் புருஷோத்தமன்.
உள்ளே வந்தவரை, "வாங்க மச்சான்" என்று கனகசிங்கம் அழைக்க, "ஜனார்த்தனன் மனசுல என்ன நினச்சிட்டு இருக்கான்? இண்டைக்கு தாலிக்கு பொன் உருக்க போனானாமே, நாலு நாளுல கல்யாணமாமே, ஒரு வார்த்தை என்னட்ட சொல்ல உங்களுக்கு தோணலை, அவனுக்கும் தோணலை எல்லா" என்று ஆதங்கமாக கேட்டார்.
"அண்ணன், கொஞ்சம் இருந்து கதைக்கலாமே" என்றார் கோதாவரி.
"இருந்து கதைக்க என்ன இருக்கு கோதாவரி? நான் வாழ்க்கைல தப்பு பண்ணின ஒரே காரணத்துக்காக அடங்கி போனேன்... ஆனா உன் ட மகன் அவன்ட விருப்பத்துக்கு ஆடிட்டு இருக்கான். என்ட மகளை கல்யாணம் கட்ட என்ட சம்மதம் வேணாமா?" என்று கேட்க, கனகசிங்கமோ, "மச்சான், அந்த பிள்ளை சரி எண்டு தானே சொல்லிட்டு" என்றார் மென்மையாக...
அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவர், "அவளுக்கு என்ன தெரியும் மச்சான், இவன் கதைச்சே அவளை குழப்பிட்டான்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, "என்னை ஒருத்தரும் குழப்பல, நான் நல்லா யோசிச்சு தான் முடிவு எடுத்து இருக்கேன்" என்றபடி உள்ளே வந்தாள் நாராயணி...
அவளை முறைத்துப் பார்த்த புருஷோத்தமனோ, "உனக்கு என்ன தெரியும்? அவனை கட்டி கஷ்டப்பட போறியா? உன்னட்ட என்ன எல்லாம் கதைச்சான் எண்டு மறந்துட்டியா?" என்று சீறினார்...
அவருக்கு இன்னுமே அவன் நாராயணியிடம் பேசியதையும் அவரை அவமானப்படுத்தியதையும் கொஞ்சமும் மன்னிக்க முடியவில்லை.
அவளோ, "எனக்கு பெருசா எந்த எதிர்பார்ப்பும் இல்லை, அவர் வேறு பொம்பிளைகள்ட்ட போக மாட்டார், அது எனக்கு போதும், வேற விஷயம் எல்லாம் நான் அர்ஜஸ்ட் பண்ணிடுவேன்" என்றாள்.
சுருக்கென்று தைத்தது அவருக்கு...
அவரை தான் குத்தி காட்டி பேசுகின்றாள் என்று அவருக்கு புரிய, "ஓஹோ. அவனோட சேர்ந்து நீயும் இப்பிடி கதைக்க தொடங்கிட்டியா?" என்று கேட்டபடி எழுந்தார்...
அவளோ, "நான் விரும்பி தான் கல்யாணம் கட்ட போறேன், இதுல நீங்க தலையிடாதீங்க, உங்கட குடும்பத்தை மட்டும் பாருங்க" என்று ஆணித்தரமாக சொன்னாள்.
அவரை அவள் அருகே எடுக்க கூட விரும்பவில்லை...
அவருடனான உறவை மொத்தமாக முறித்துக் கொள்ளும் எண்ணம் தான் அவளுக்கு...
அதற்கு முக்கிய காரணம் நிர்மலாவுடைய குடும்பம்...
தன்னிடம் மகளாக அவர் உரிமை எடுப்பதை அவள் கொஞ்சமும் விரும்பவில்லை...
இத்தனை நாட்கள் தடுமாறிக் கொண்டு இருந்தாள்.
இன்று ஜனார்த்தனனின் மனைவி என்கின்ற அடையாளத்தை தவிர, அவளுக்கு எந்த அடையாளமும் தேவை இல்லை என்று முடிவும் எடுத்து விட்டாள்.
"அப்பா எண்டு ஒருத்தன் உனக்கு வேணாமா?" என்று ஆதங்கமாக கேட்டார்.
"வேணாம்" என்றாள் அவரையே பார்த்துக் கொண்டு...
"சரி என்னவோ செஞ்சுக்கோ, உன்ட கல்யாணத்துக்கு நான் வரவே மாட்டேன்... எக்கேடோ கெட்டு போ" என்று திட்டி விட்டு அவர் சென்று விட, "கல்யாணம் நடக்க போற நேரம், இவர் ஏன் இப்படி கதைச்சிட்டு போறார்" என்று ஆதங்கம் கோதாவரிக்கு.
"சரி விடு, எல்லாத்துக்கும் குத்தம் சொல்லிட்டு இருந்தா நிம்மதி போயிரும்..." என்று சொன்ன கனகசிங்கமோ அங்கே கண்கள் கலங்க நின்ற நாராயணியிடம், "இதெல்லாம் யோசிக்காம, குளிச்சிட்டு வாம்மா, டீ குடிக்கலாம்" என்று சொல்ல, அவளும் பெருமூச்சுடன் உள்ளே சென்றாள்.
சற்று நேரத்தில் குளித்து விட்டு அவள் வந்து இருக்க, டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார் கோதாவரி, அவளும் அதனை ஹாலில் அமர்ந்து டி வி பார்த்துக் கொண்டே குடித்தபடி இருக்க, வீட்டினுள் நுழைந்தான் ஜனார்த்தனன்...
அவன் கையில் பேட்மிண்டன் டிராக் இருக்க, அப்படியே அவளை கடந்து செல்லும் போது தலையில் மெதுவாக தட்டி விட்டு சென்றான்.
அவளோ, பதறி திரும்பி பார்க்க, அவனோ, விசிலடித்துக் கொண்டே அறைக்குள் சென்றான்...
அவன் இப்படி நடந்து கொள்வது அவளுக்கு வித்தியாசமாக இருந்தது...
தன்னை மீறி சிரிப்பும் வந்தது...
அவன் முறைப்பையும் அதட்டலையுமே பார்த்து இருந்தவளுக்கு, இந்த சுட்டித் தனம் வித்தியாசமான உணர்வை கொடுத்தது...
அவளும் மென் சிரிப்புடன் மீண்டும் டி வி பார்க்க, குளித்து விட்டு, இடையில் லுங்கியுடன் அவள் அருகே வந்து அமர்ந்தான் ஜனார்த்தனன்...
அவன் வீட்டில் வெற்று மேனியுடன் சுத்துவான் தான்...
இன்று ஏனோ ஒரு வித நெருடலாக இருக்க, மெதுவாக தள்ளி இருந்தாள்.
கோதாவரி அவனுக்கு டீயை கொடுத்து விட்டு, செல்ல, அவனோ, அதனை வாங்கிக் கொண்டே இருவருக்கும் இடையான இடைவெளியை பார்த்தவன், "ஏதோ ஒட்டிட்டு இருந்த போல தள்ளி போற?" என்று கேட்டான்...
அவனை இந்த கோலத்தில் பார்க்கவே ஒரு மாதிரி இருக்க, முன்னால் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.
"உன்னை தான் டி" என்றான்...
அவள் பதில் சொல்லாமல் விட மாட்டான் என்று தோன்ற, இப்போது திரும்பி பார்த்தவள், "இப்போ என்ன?" என்று அவன் விழிகளை பார்த்துக் கொண்டே கேட்க, "தள்ளி தான் இருந்தேன், இப்ப எதுக்கு நீ இவ்வளவு தள்ளி போன?" என்று கேட்டான்.
"கொஞ்சம் அந்திரமா இருந்தது" என்றாள்.
"கல்யாணத்துக்கு பிறகு, என்ட ரூம்ல எனக்கு பக்கத்துல தான் படுக்கணும், நினைவிருக்கா?" என்று கேட்டான்.
"ஒரே ரூமா?" என்று அவள் அதிர, "ஓம், வீட்ல பிறகு என்ன நினைப்பாங்க?" என்று கேட்டான்.
அவன் கேட்பதும் சரி தான்.
"வாக்கு கொடுத்ததை மறக்க மாட்டிங்களே" என்றாள்.
"சத்தியமா நீ கிஸ் அடிக்காம, நான் கிஸ் அடிக்க மாட்டேன் டி" என்றான்.
"ஷ்ஷ் கேட்க போகுது, மெதுவா கதைங்க" என்றாள்.
அவனும் மெலிதாக சிரித்துக் கொண்டே, "இண்டைக்கு தாலிக்கு பொன் உருக்க போனோம்" என்றான்.
"அதுக்குள்ளயா?" என்றாள் அவள்.
"என்ன அதுக்குள்ளயா? வெள்ளிக்கிழமை கல்யாணம், நாளைக்கு கூறை சாரி எடுக்கணும், அப்பிடியே உனக்கு பிளவுஸ் தைக்கவும் குடுக்கணும். டெய்லர் அக்காட்ட கதைச்சிட்டன், ஒரே நாளுல தாறன் எண்டு சொல்லி இருக்காவு" என்றான்.
"இவ்வளவு கெதியா வந்துட்டு" என்றாள்.
"ம்ம், மூத்தது ஆம்பிளை பிள்ளை எண்டு இண்டைக்கு சொன்னாங்க" என்றான் அவளை ரசனையாக பார்த்துக் கொண்டே.
சட்டென அவனில் இருந்து பார்வையை திருப்பியவள், "இதெல்லாம் எதுக்கு என்னட்ட சொல்றீங்க?" என்று கேட்டாள்.
"ஹெலோ பெறப் போறது நீ தான், அப்ப உன்னட்ட தானே சொல்லணும்" என்று சொல்ல, அவளுக்கு ஐயோடா என்று இருந்தது...
"இதெல்லாம் இப்ப கதைக்காதீங்க" என்றாள் கெஞ்சுதலாக.
"சரி, விடு, இதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளுறேன், நாளைக்கு கூறை சாரி எடுக்க வா" என்றான்.
"நான் சாறியை பார்க்கலாமா?" என்று அவள் கேட்க, "அதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை, உடுக்க போறது நீ தான், உனக்கு பிடிச்ச போல எடுக்கணும், ஈவினிங் மூண்டு மணிக்கே வெளிக்கிடு" என்றான்.
"எனக்கு க்ளாஸ் இருக்கு நாலு மணி வரைக்கும்" என்றவளிடம், "கள்ள சைன் அடிக்க தெரியாத ஆள் பாரு நீ" என்றான்.
"ஒரு லெக்சரர் கதைக்கிற கதையா இது?" என்று சொன்னவளை ஆழ்ந்து பார்த்தவன், "இத காம்பஸ் ல வச்சு சொல்ல மாட்டேன், அங்கே தான் லெக்சரர், இங்க உன்ட அத்தான் தானே" என்றான்.
அவளுக்கு அந்த வார்த்தைகள் என்னவோ செய்ய, சட்டென எழுந்து கொண்டாள்.
"இப்ப எங்க போறா?" என்று கேட்டான்.
"குடிச்ச கப்ப கழுவ வேணாமா?" என்று கேட்டவள், அவன் கையில் இருந்த கைப்பையும் பறித்து எடுத்துக் கொண்டே செல்ல, "குடிச்சு முடிக்கல டி" என்றான்.
"அடில மண்டி தான் இருக்கு, அதையும் குடிப்பீங்களா?" என்று கேட்டுக் கொண்டே சமையலறைக்குள் சென்று விட்டாள்.
அதனை தொடர்ந்து, அங்கே வந்து அமர்ந்த கனகசிங்கமோ, அவனிடம், புருஷோத்தமன் வந்து சென்ற விஷயத்தை சொன்னார்.
"சரி அவரை விடுங்க, நாளைக்கு நான் மோர்னிங் லெக்சர் முடிச்சிட்டு வந்து, மாமிட்ட போகணும், இவர் இல்லாத நேரமா பார்த்து தான் போகணும்" என்று சொல்ல, அவரோ, "நீ நாராயணியை கூட்டி வந்த நேரம் பெருசா எனக்கு பிடிக்கல, ஆனா அவள் நல்ல பெட்டை, அவள்ட அம்மா நல்ல விதமா வளர்த்து இருக்காவு, உன்ட அம்மாவுக்கு அவளோட சரியான விருப்பம்" என்று சொல்ல, மெலிதாக சிரித்தவனோ, "எங்க செழியன்? இன்னும் வரலையா?" என்று கேட்டான்.
"அவன் இண்டைக்கு சைட் ல வேலை எண்டு வந்துட்டு திரும்ப போறான், கொங்கிறீட் போடுறாங்களாம்" என்று சொல்ல, "ம்ம், அவன்ட கல்யாணத்தை கெதியா நடத்திடனும், அப்ப தான் பவித்ரனுக்கும் கல்யாணம் பேசலாம், அவனுக்கும் என் ட வயசு எல்லா" என்று சொன்னான் ஜனார்த்தனன்.
"இண்டைக்கு நிர்மலா அத பத்தி தான் அம்மாட்ட கதைச்சு இருக்காள், ஒரு வரன் வந்து இருக்காம், நல்ல குடும்பமாம், பிள்ளை இன்னும் படிச்சு முடிக்கலையாம், உன்ட காம்பஸ் தான் போல, விசாரிக்க சொல்லி எடுத்தவள், நீ நாளைக்கு போற நேரம் அத பத்தி கதைச்சுட்டு வா" என்று சொல்ல, "ஆஹ் சரி நான் நாளைக்கு பாக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டான் ஜனார்த்தனன்.