ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 13

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 13

அவன் சொன்ன போலவே, அந்த வாரத்தின் சனிக்கிழமை வங்கியில் அவன் போட்டு வைத்து இருந்த ஒரு பங்கு பணத்தை எடுத்து விட்டான்.

அவனுக்கென்று அவன் எதுவும் வாங்க யோசிக்கவே இல்லை.

நாராயணிக்காக மட்டுமே.

அது அவனுடைய பணம், லண்டனில் உழைத்த பணம்...

உரிமையாக வாங்கிக் கொடுக்க நினைத்து இருந்தான்.

அன்று வீட்டுக்கு வந்ததுமே, "சாஸ்திரிட்ட கதைச்சீங்களா அம்மா" என்றபடி அவன் ஹாலில் அமர்ந்தான்.

நாராயணிக்கு அன்று விடுமுறை...

கோதாவரிக்கு உதவியாக சமைத்துக் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

இவன் குரல் கேட்டதுமே, "எதுக்கு மாமி சாஸ்திரி?" என்று கேட்க, "உங்கட கல்யாணத்துக்கு தான்" என்று சொன்ன கோதாவரியும் எலுமிச்சம் சாற்றை அவனிடம் கொண்டு கொடுத்தபடி, "அடுத்த கிழமை ஒரு நாள் இருக்கு, நீ அடுத்த மாசம் தானே கேட்டனீ, அடுத்த மாச கடைசில தான் இருக்கு" என்றார்.

நாராயணி சமையலறைக்குள் நின்று கேட்டபடி வெங்காயத்தை வெட்டிக் கொண்டே, 'அடுத்த கிழமை எண்டு சொல்ல போறார்" என்று நினைத்து முடிக்க முதலே, "அடுத்த மாச கடைசி மட்டும் வெய்ட் பண்ண ஏலாது, அடுத்த கிழமையே முடிச்சிடலாம், ரெஜிஸ்டர்ட்ட இப்ப கதைச்சிட்டு தான் வந்தனான்" என்றான்...

"நினச்சேன்" என்று பெருமூச்சுடன் நாராயணி நினைத்துக் கொண்டவளுக்கு இந்த திருமணத்தை நிறுத்துவது சுலபம் அல்ல என்று தெரிந்தது...

அதற்காக அவனுடன் வாழ்க்கையை சட்டென வாழ்ந்து விடவும் முடியவில்லை...

இன்னுமே அவன் பேசிய வார்த்தைகளை சட்டென கடந்து விட முடியவில்லை...

மன்னிப்பு கேட்டு விட்டான் தான்...

அதுவும் எல்லார் முன்னிலையிலும் கேட்டான்...

அதற்கான காரணத்தையும் சொல்லி இருக்கின்றான்...

அவன் பேசிய கணம் இருந்த அளவுக்கு கோபம் இப்போது அவனிடம் இல்லை.

குறைந்து இருந்தது...

இன்னும் குறைய வாய்ப்பு இருக்கிறது...

இப்போது உடனே அவனுடன் வாழ எல்லாம் முடியாது...

திருமணம் வரையிலும் அவளுக்கும் இப்போது மனம் சம்மதம் கொடுத்தது...

மனதை ஓரளவு அதற்கு தயார் படுத்தி இருந்தாள்.

ஆனால் தாம்பத்தியம் எல்லாம் வாய்ப்பே இல்லை...

இதனை பற்றி தெளிவாக பேசி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே அதற்கான சந்தர்ப்பத்துக்கு காத்துக் கொண்டு இருந்தாள்.

அவன் சொன்ன போலவே, அடுத்த வாரம் அவன் திருமண ஏற்பாடுகளை பார்க்க தொடங்கி விட்டான்...

அன்று மாலை பவித்ரனுடன் பேட்மிண்டன் விளையாட சென்றான்...

பவித்ரனிடம், "டேய் அடுத்த கிழமை கல்யாணம்" என்று சொல்ல, அவனோ விளையாடுவதை நிறுத்தி விட்டு, "என்னடா அடுத்த கிழமையா?" என்று கேட்டான்.

அவனும், பேட்மிண்டன் ரெக்கட்டை சுழற்றிக் கொண்டே, அங்கிருந்த பெவிலியனில் அமர்ந்தவன், "ஓம்" என்றான்.

"இல்ல எனக்கு விளங்கல" என்றான்.

"என்ன விளங்கல??" என்று ஜனார்த்தனன் கேட்க, "அட்லீஸ்ட் ஒரு மாசம் ஆச்சும் ஆகும் எண்டு நினச்சேன்" என்றான்.

"அதுக்கு எல்லாம் டைம் இல்லை, பெருசா யாரையும் கூப்பிடுற ஐடியா இல்ல" என்றான்.

"என்னயாச்சும் கூப்பிடுவியா என்ன?" என்று பவித்ரன் கேட்க, "நீ வாறன் எண்டு சொன்னா கூப்பிடுவேன்" என்றான்.

"நான் வருவேன் டா" என்று பவித்ரன் சொன்னதுமே, மென்மையாக சிரித்தவன், "அப்ப திங்கட்கிழமை அம்மா அப்பாவோட போய் தாலி உருக்க போறேன், நீயும் வா" என்றான்.

"எல்லாம் சரி, அப்பாவுக்கு தெரியுமா?" என்று கேட்க, "சொல்ற எண்ணம் எனக்கு இல்ல" என்றான்.

"பிரச்சனை பண்ண போறார் டா" என்று அவன் சொல்ல, "நீ சொல்ற எண்டா சொல்லு" என்று சொன்னவனோ ஒரு கணம் நிறுத்தி, "ஆனா தாலி உருக்குன பிறகு சொல்லு" என்று முடித்து இருந்தான்.

ஜனார்த்தனனுக்கு சம்பிரதாயங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை...

கோவிலில் தாலி கட்டி வீட்டில் திருமணத்தை பதிவு செய்ய போகின்றான் அவ்வளவு தான்...

நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே...

அதிலும் புருஷோத்தமனின் குடும்பத்தை அழைப்பதா? வேண்டாமா? என்று தடுமாற்றம் அவனுக்குள் இருந்தது...

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை...

ஜனார்த்தனனுடன் தங்களது திருமணத்துக்கு பின்னரான வாழ்க்கையை பேசி விடலாம் என்று நினைத்து இருந்தாள் நாராயணி...

வெண்ணிற கவுன் தான் அணிந்து இருந்தாள்.

தலைக்கு குளித்ததால் முடியை விரித்து விட்டு இருந்தாள்.

காலையில் சாப்பிட்டு விட்டு வெளியே சென்ற ஜனார்த்தனன், இன்னும் வந்து சேரவில்லை...

அவனுக்காக காத்து இருந்து களைத்த நாராயணியோ அறைக்குள்ளேயே அடைந்து கிடைக்காமல் கொஞ்சம் வெளியே வந்து குடும்பத்தினருடன் பழக ஆரம்பித்து இருந்தாள்.

கோதாவரிக்கு அதிகம் வேலை செய்தால் கால் வலிக்க ஆரம்பித்து விடும். அவரும் நடக்க முடியாமல் ஹாலில் அமர்ந்து இருக்க, அவர் கஷ்டப்படுவதை பார்த்த நாராயணியோ எண்ணையை சூடாக்கி வந்தவள், அவர் அருகே நிலத்தில் அமர்ந்து, "நான் இத தேய்ச்சு விடுறேன் மாமி, கால் சுகமா இருக்கும்" என்று சொல்ல, "ஐயோ பிள்ளை, இதெல்லாம் வேணாம்" என்றார் அவர்...

"அதுல என்ன இருக்கு? அம்மாக்கு எப்போவும் செய்வன்" என்று சொன்னவள், அவர் காலை இழுத்து வைத்து, எண்ணையை தேய்த்து நீவி விட்டாள்.

கனகசிங்கம் வெளியே செல்ல போனவர், ஒரு புன்னகையுடன் அவளை பார்த்து விட்டு சென்றார்...

அவள் வீட்டுக்கு வந்த நேரம் அவருக்கு கொஞ்சம் தளம்பலான மனநிலை தான்...

நாராயணி மீது பரிதாபம் இருந்தாலும், மகனையே தூக்கிக் கொடுக்கும் அளவுக்கு மனம் இருக்கவில்லை...

ஆனால் ஜனார்த்தனனுக்கு பயந்து எதையும் அவர் பேசிக் கொள்ளவில்லை...

இப்போது திருப்தியாக இருந்தது...

இளஞ்செழியனும் ஹாலுக்குள் வந்தவன் நாராயணியை மென் புன்னகையுடன் பார்த்துக் கொண்டே அமர, அவளோ, "மாமிக்கு கால் பிடிச்சு விடலாம் எல்லா" என்று அவனிடம் கேட்டு விட்டாள்.

அவனோ திணறிக் கொண்டே பதில் சொல்ல முடியாமல் தடுமாற, "அவன் எங்க செய்ய போறான்? எப்ப பார்த்தாலும், ஃபோன் தான்... இவனுக்கு பதிலா ஒரு பொம்பிளை பிள்ளையை நான் பெத்து இருக்கலாம்" என்று கோதாவரி சொல்ல, "அம்மா, வேலை எண்டு தானே ஃபோன் பார்க்கிறேன்" என்று சொல்ல, "ஓம் நீ மட்டும் தான் வேலை செஞ்சு கிழிக்கிறா பாரு" என்று திட்டினார்.

நாராயணியும், "நான் உங்களுக்கு ஒவ்வொரு நாளும் மாசாஜ் பண்ணி விடுறேன்... கொஞ்சம் நல்லா இருக்கும்" என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போது காரை பார்க் செய்து விட்டு உள்ளே வந்தான் ஜனார்த்தனன்.

அவர்களை புருவம் சுருக்கி பார்த்துக் கொண்டே, "காலுக்கு என்ன நடந்த?" என்று கேட்டபடி அங்கே அமர, "எப்போவும் போல தான்டா, கூட நிண்டு வேலை செஞ்சா கால் நோகுது" என்றார்.

"உங்கள முட்டி சில்லு மாத்துற ஓப்பரேஷன் பண்ண சொல்லி எத்தனை தடவை டொக்டர் சொன்னவர்? சின்ன பிள்ளை போல என்ன பயம்? கல்யாணத்த முடிச்சிட்டு முதலில் ஓப்பரேஷன் வேலையை பார்க்கணும்" என்றவனோ, நாராயணியிடம், "நீ என்ன டொக்டரா? இல்ல ஃபிசியோதெரபிஸ்ட் ஆஹ்? இப்பிடி மசாஜ் பண்ணிட்டே இருந்தா சரி ஆகுமா? ட்ரீட்மெண்ட் எடுக்கணும்" என்றான்...

எல்லாரும் ஒரு கோணத்தில் யோசித்தால் அவன் வேறு கோணமாக அல்லவா யோசிப்பான்?

நாராயணியோ பெருமூச்சுடன், "அவங்களுக்கு கால் சுகமா இருக்கும் எண்டு தான்" என்று சொல்ல, "இப்ப எதுக்கு அந்த பிள்ளைக்கு ஏசுரா?" என்று கேட்டார் கோதாவரி.

"நான் எங்க இப்ப ஏசுனேன்? கேள்வி கேட்டாலும் ஏசுர எண்டு சொல்றீங்க? இப்ப நான் உனக்கு ஏசுனனானா?" என்று கேட்க, அவளோ, 'இத கூட சொஃப்ட் ஆஹ் கேக்க தெரியல' என்று நினைத்தவள் இல்லை என்று தலையாட்டினாள்.

உடனே கோதாவரி, "இதையாவது கொஞ்சம் மென்மையா கேக்க வேண்டியது தானே" என்றார் ஆதங்கமாக...

"எனக்கு கண்ணே மணியே எண்டு கொஞ்ச தெரியாது" என்று சொன்னவன், நாராயணியிடம், "உன்னை கொஞ்சோனும் எண்டா சொல்லு" என்றான்.

அவன் மொட்டையாக கேட்டது, அவளுக்கு என்னவோ போல ஆகி விட, அவனை பெயறைந்த போல தான் பார்த்தாள்.

அவள் பார்த்த பார்வையை பார்த்த பின்னர் தான், தனது வார்த்தைகளை ஆசை போட்டவனுக்கு கொஞ்சம் சிரிப்பும் வந்து விட, "ஐ மீன், கொஞ்சி கொஞ்சி கதைக்கணுமா எண்டு கேட்டேன்" என்றான்.

இல்லை என்று அவள் தலையாட்ட, "இளநீ ஜூஸ் வாங்கி வந்தேன் மறந்துட்டேன், கார்ல இருக்கு எடுத்து வாறன்" என்று சொல்லி அவன் வெளியே சென்று விட்டான்.

கோதாவரியோ, "போதும் நாராயணி, இப்ப நல்லா இருக்கு, நீ போய் கையை கழுவு" என்று சொல்ல, அவளும் கையை கழுவ சென்று இருக்க, ஜனார்த்தனன் வாங்கி வந்த பானத்துடன் சமையலறைக்குள் நுழைந்தான்.

அவனே அங்கே இருந்த கப்பை எடுத்தவன், "கொஞ்சம் தள்ளுனா கப்பை கழுவிட்டு விட்ருவேன்" என்றான்.

அவளும் தள்ளி நின்று இருக்க, பாத்திரத்தை கழுவி, அதற்குள் வாங்கி வந்த ஜூஸை ஊற்றினான்...

அதில் இளநீர், எலுமிச்சை மற்றும் சீனி கலக்கப்பட்டு இருந்தது...

"இளநீ விருப்பமா?" என்று கப்பை நீட்டியபடி கேட்க, "எல்லாருக்கும் குடுத்துட்டு குடுங்க" என்றாள் அவள்...

அவள் கையெல்லாம் சோப் நுரை...

அவனோ பெருமூச்சுடன், "நீ என்ன அன்னைத் தெரேசாவா? இத குடி" என்று சொல்லி மேசையில் வைத்தவனோ, "சட்டை உனக்கு வடிவா இருக்கு" என்றான்...

அவள் விழிகள் அதிர்ந்து விரிய, சட்டென மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.

அதற்கும் அவனுக்கு சுர்ரென்று கோபம் வந்தது...

"இப்ப நான் என்ன பிழையா? சொல்லிட்டேன்? சட்டை வடிவா இருக்கு எண்டு சொல்லவும் கூடாதா? ஏதோ உன்னை மோசமா பார்த்த போல நினைக்கிற... அப்படி பார்த்தாலும் என்ன தான் பிழை? பொஞ்சாதி தானே" என்றான்.

ஐயோடா என்று இருந்தது அவளுக்கு...

"இப்படி எல்லாம் கதைக்காதீங்க" என்று சொல்லிக் கொண்டே கையை கழுவ, அவளை ஒரு கணம் பார்த்து விட்டு, அவன் வெளியேறி விட்டான்...

அவளுக்கோ அவன் இப்போதெல்லாம் கொஞ்சம் நெருங்கி வரும் தோரணை தான்...

அவனுடனான வாழ்க்கையை ஆரம்பிக்க அவள் தான் தயார் இல்லையே...

பேசி விட்டால் நிம்மதியாக இருக்கும் என்று தோன்றியது...

அங்கேயே நின்று ஜூஸை குடித்து முடித்தவள், கப்பையும் கழுவி வைத்து விட்டு வெளியே வந்தாள்.

அவனோ வீட்டின் முன்னே நின்று ஜூஸை குடித்தபடி அங்கே இருந்த தென்னை மரத்தை பார்த்துக் கொண்டு நின்றவன், "அம்மா, தேங்காய் ஆயணும், வேலைக்கு யாரும் வந்தா கூப்பிட்டு ஆஞ்சிடுங்க" என்று சொன்ன கணமே, அவன் அருகே வந்து நின்ற நாராயணியோ, "உங்களோட கதைக்கணும்" என்றாள்.

அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவன், "என்ன ஃபெர்ஸ்ட் நைட் வேணாமா?" என்று கேட்டான்.

அவள் நினைப்பது எல்லாம் அவனே பேசி விடுகின்றான்.

மாயக்காரன் தான் போலும்...

ஆச்சரியமாக இருந்தது.

"ஓம்" என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

"கல்யாணம் தான் என்ட விருப்பம், ஃபெர்ஸ்ட் நைட் எல்லாம் உன்ட விருப்பம் தான், ரேப் எல்லாம் பண்ண மாட்டேன், பயப்படாதே" என்றான்...

அவன் எல்லாவற்றையும் உடைத்து பேசுவது சரியாக இருந்தாலும், அவளுக்கோ இதனை எல்லாம் அவனிடம் பேசவே கூச்சமாக இருந்தது...

"நான் எதையும் விரும்பல" என்றாள்.

"இப்ப இல்ல, பிறகு விரும்பலாம் தானே" என்றான்.

"பிறகும் விரும்ப மாட்டேன்" என்றாள்.

"பிறகு எப்படி ஏழு எட்டு பிள்ளை பெறுறது?" என்று கேட்டான்.

கேட்கும் போதே, சிரிப்பு தான் அவனுக்கு... அடக்கிக் கொண்டே பேசினான்...

"அதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன், அதான் கல்யாணத்தை நிற்பாட்ட சொன்னேன்" என்று சொன்னாள்.

"ஆஹ் சரி வருவியா? இல்லையா எண்டு நான் பிறகு செக் பண்ணி சொல்றன்" என்றான்.

"என்னத்த செக் பண்ண போறீங்க?" என்று அவள் பதற, "என்னடி எல்லாத்துக்கும் டென்சன் ஆகுற?" என்று கேட்டான்.

"உங்கட கதை அப்படி தான் இருக்கு" என்று முகத்தை திருப்பிக் கொண்டே சொல்ல, இதழ்கடையில் தேங்கிய சிரிப்புடன் அவளை பார்த்தவன், "நீ எனக்கு கிஸ் அடிக்காம நான் உனக்கு கிஸ் அடிக்க மாட்டேன்... உனக்கு வாக்கு தாரேன், பயப்படாம கல்யாணத்துக்கு ரெடி ஆகு" என்றான்.

இப்போது அவன் விழிகளை பார்த்தவள், "அப்ப வாழ்க்கை முழுக்க, கன்னி கழியாம தான் இருப்பீங்க" என்று சொல்லி விட்டு செல்ல, "நீ வெறுக்கிற அளவுக்கு கெட்டவன் இல்லை, பார்க்கவும் ஹாண்ட்ஸம் ஆஹ் தானே இருக்கேன்" என்றான்.

"ஆனா உங்கட வாய் இருக்கே, நீங்க கதைச்ச கதை எல்லாம் மறக்கும் எண்டு நினைக்கிறீங்களா? உங்கள பிடிக்கும் எண்டு எனக்கு தோணவே இல்ல" என்றான்.

"நீயா எல்லாமே முடிவு பண்ணாதே, மனசு எப்போவும் நம்ம சொல்றத கேட்காது, புருஷோத்தமன் மகளை நான் கல்யாணம் கட்டுவேன், இப்பிடி அவ மேல பைத்தியமா இருப்பன் எண்டு நானும் நினச்சு பார்க்கல, நினச்சு பார்க்காதது எல்லாம் நடக்குது எல்லா" என்றான்...

அவன் காதலை சொன்னதுமே, அதற்கு மேல் வாயடிக்க அவளுக்கு முடியவில்லை...

"சரி நான் உள்ளே போறேன், இத தான் சொல்ல வந்ததனான்" என்று சொல்லி விட்டு அவள் செல்ல, அவளை திரும்பி ஒரு கணம் பார்த்து விட்டு ஒரு மென் சிரிப்புடன் மீதி ஜூஸை குடித்தான்.
 
Top