அத்தியாயம் 12
கெளதம் கிருஷ்ணா தனது காரில் ஏறிக் கொள்ள, வம்சி கிருஷ்ணாவும் தேன்மொழியும் அடுத்த காரில் ஏறிக் கொண்டார்கள்...இருவரும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை...
ஏதோ ஒரு உத்வேகத்தில் தேன்மொழி திருமணமும் முடித்து விட்டாள்.
ஆனால் இப்போது உதறல் எடுத்தது...
அன்னையிடம் என்ன சொல்வது என்று பயமாக இருந்தது...
காரை ஓட்டிக் கொண்டே, "உன் அம்மா வீட்ல இப்போ இருப்பாங்களா?" என்று கேட்டான்...
அவளோ நேரத்தைப் பார்த்தாள்...
இன்னும் பன்னிரண்டு மணியாகவில்லை...
இல்லை என்று தலையாட்டினாள்...
"சரி அப்போ உங்க அம்மா கிட்ட ஈவினிங் போகலாம்" என்று சொல்லிக் கொண்டே தனது வீட்டுக்கு வண்டியை விட்டான்...
இந்த சந்தர்ப்பத்தில் மகாலக்ஷ்மி கல்யாண பத்திரிகையுடன் சென்றது என்னவோ வசந்தி வீட்டுக்கு தான்...
கையில் திருமண பத்திரிகையுடன் வீட்டினுள் நுழைந்தவரை குறு குறுவென பார்த்தார் வேதவல்லி, அவர் அருகே தான் கல்யாணியும் அமர்ந்து அவருடன் சேர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
"இது எதுக்கு இங்க வந்து இருக்கு, கல்யாண பத்திரிகை கொடுக்க வந்து இருக்கு போல" என்று வேதவல்லி முணு முணுத்துக் கொள்ள, அங்கே இருந்த கல்யாணியோ, "ஆஹ் வாங்க ஆன்டி" என்றாள்.
"ம்ம் பொல்லாத ஆன்டி, சும்மா இரு" என்று அவளுக்கு கடிந்து விட, உள்ளே வந்த மகாலக்ஷ்மிக்கு தயக்கமாக இருந்தது...
வேறு வழி இல்லை, வேதவல்லியுடன் பேசி தான் ஆக வேண்டும்...
"வசந்தி இருக்காங்களாம்மா?" என்று கேட்டார்...
அவரை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு, "என்ன விஷயம்?" என்று கேட்டார்...
"பொண்ணுக்கு கல்யாணம் வச்சு இருக்கேன்" என்று அவர் சொல்ல, "ஓஹோ கேள்விப்பட்டேன்... அவளை யாரு கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சா?" என்று கேட்டார்...
அவரை உள்ளே அழைக்கவும் இல்லை, அமர சொல்லவும் இல்லை...
வாசலில் வைத்தே பேசிக் கொண்டு இருந்தார்...
"ஸ்கூல் மாஸ்டர் தான் மாப்பிள்ளை, பேர் ரஞ்சன்" என்று பதிலளித்தவரை புருவம் உயர்த்தி பார்த்தவர், "மாப்பிள்ளைக்கும் ஏதும் குறையோ?" என்று கேட்டார்...
உடனே மகாலக்ஷ்மி ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே இறுகிய முகத்துடன் இல்லை என்கின்ற ரீதியில் தலையாட்டினார்...
"அப்போ ஏதோ இடிக்குதே" என்றார் வேதவல்லி, மகாலக்ஷ்மியை அவர் விடுவதாக இல்லை...
இனி இவரிடம் மறைத்து பயன் இல்லை என்று நினைத்த மகாலக்ஷ்மியோ, "மாப்பிள்ளைக்கு ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சு குழந்தை இருக்கு, மூத்த சம்சாரம் இறந்துட்டா... தேன்மொழி இரண்டாம் தாரமா தான் போறா" என்றார்...
"அதானே பார்த்தேன்..." என்று ஒரு வித கேலி குரலில் வேதவல்லி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, "வாங்க மகா" என்று சொல்லிக் கொண்டே ஹாலுக்குள் வந்தார் வசந்தி...
வசந்தி வந்ததும் தான் மகாலக்ஷ்மிக்கு மூச்சே வந்தது...
"க்கும்" என்று வேதவல்லி முகத்தை திருப்பிக் கொண்டே தொலைக்காட்சியை பார்க்க ஆரம்பித்து விட்டார்...
வசந்தியோ மகாலக்ஷ்மியிடம் தள்ளி இருந்த இருக்கையை காட்டியவர், "இருங்க" என்று சொல்ல, அவரோ, "பொண்ணுக்கு கல்யாணம் வச்சு இருக்கேன், அது தான் பத்திரிகை வச்சுட்டு போக வந்தேன்" என்று சொல்லிக் கொண்டே, கையில் இருந்த பையில் இருந்து தட்டை எடுத்து அதில் வெற்றிலை பாக்குடன் பத்திரிகையையும் வைத்து நீட்ட, வசந்தியோ மென் புன்னகையுடன் அதனை பெற்றுக் கொண்டார்...
"உட்காருங்க, தட்டை தரேன், அப்படியே காஃபியும் குடிச்சிட்டு போங்க" என்று சொல்லிக் கொண்டே உள்ளே செல்ல முயல, "ஐயோ வேணாம்" என்றார் மகாலக்ஷ்மி...
"பச், காஃபி குடிச்சுட்டு போங்க மகா" என்று சொன்ன வசந்தி உள்ளே சென்று விட்டார்...
அவருக்கோ வேதவல்லி முன்னே அமர்ந்து இருப்பது என்னவோ போல இருந்தது...
வசந்தி உள்ளே சென்றதும், வேதவல்லி ஆரம்பித்து விட்டார்...
"விலை போகாத மண்ணை கரை சேர்த்துட்ட போல" என்றார்.
மகாலக்ஷ்மிக்கு சுருக்கென்று தைத்தது...
பதில் சொல்லாமல் தலையை குனிந்தபடி அமர்ந்து இருக்க, "ஏய் உன்னை தான் கேக்கிறேன்... ரெண்டாம் தாரமா தானே போறா உன் பொண்ணு" என்றார்.
அவரும் தலையை குனிந்து கொண்டே ஆம் என்கின்ற ரீதியில் தலையாட்ட, "அவளை ரெண்டாம் தாரமா கட்டிக்கிறதே பெரிய விஷயம்... புகுந்த வீட்ல பக்குவமா நடந்துக்க சொல்லு, அப்புறம் அறுத்து விட்டுட போறாங்க" என்றார்...
மகாலக்ஷ்மிக்கோ, உள்ளே போன வசந்தி எப்போது வருவார் என்கின்ற தவிப்பாக இருந்தது...
அதுவரை வேதவல்லியின் வார்த்தைகளை கேட்க வேண்டுமே...
அவர் முன்னே அமர்ந்து இருப்பது நெருப்பில் நிற்கும் உணர்வை கொடுத்தது...
அவர் வாய் அடங்காது போலும்...
"கல்யாணத்தை சாதரணமா தான் நடத்துற போல" என்றார்...
அவரை பார்க்காமலே ஆம் என்று மகாலக்ஷ்மி தலையாட்ட, "அது சரி உனக்கு வழி இருக்கணுமே... விரலுக்கு ஏத்த போல தானே வீக்கம் இருக்கும்... எங்க வீட்டு கல்யாணத்த பாரு, ஜாம் ஜாம்ன்னு நடக்கும், என் பேரனும் பேத்தியும் கல்யாணம் பண்ணிக்கிறத பார்த்து ஊரே வாயில கை வைக்கும்" என்று சொல்லிக் கொண்டே அவர் அருகே அமர்ந்து இருந்த கல்யாணியை பார்க்க, அவளோ, "போங்க பாட்டி" என்று வெட்கத்துடன் சொல்லிக் கொண்டாள்.
"கல்யாணம்னு சொன்னதும் வெட்கத்தை பாரு" என்று அவளை பார்த்து சிரித்தபடி சொல்லி விட்டு இப்போது மகாலக்ஷ்மியை பார்த்தார்.
அவர் வேதவல்லியை இதுவரை நிமிர்ந்து பார்க்கவே இல்லை...
மேலும் தொடர்ந்த வேதவல்லியோ, "நானும் உன் பொண்ணு அடிக்கடி வீட்டுக்கு வரும் போது முதல் எல்லாம் பயந்து இருக்கிறேன்... அப்புறம் நம்ம பேரனுங்க தான் விவரமானவங்க, இப்படி ஊமைச்சி பின்னால போக மாட்டானுங்கன்னு புரிஞ்சுது... அப்புறம் அத பத்தி நான் கண்டுக்கல... ரதியே இறங்கி வந்தாலும் அவனுங்கள அவ்ளோ சீக்கிரம் மயக்க முடியாது... அதுவும் மூத்தவன கேட்கவே வேணாம்... பொண்ணுங்கள நிமிர்ந்து கூட பார்க்க மாட்டான்... ஸ்ரீ ராமன்... ஊரே அவன கட்டிக்க போட்டி போடுது... ஆனா அவனுக்கு வர போற சீதா தேவி தான் என் பேத்தி கல்யாணி" என்று வம்சி கிருஷ்ணாவின் பெருமை பாடியவரோ பெருமூச்சுடன், "என்ன பண்ணுறது? உனக்கு இப்படி எல்லாம் பேச கொடுத்து வைக்கல... புள்ள குட்டி காரன் தான் உன் பொண்ணுக்கு மாப்பிள்ளையா வந்து இருக்கான்... போன பிறவில நீயும் உன் பொண்ணும் என்ன பாவத்தை செஞ்சு தொலைச்சீங்களோ தெரியல" என்று சொன்னதுமே சட்டென்று எழுந்து கொண்டார் மகாலக்ஷ்மி...
அவருக்கோ அதற்கு மேல் தனது மகளை இப்படி மட்டம் தட்டி பேசிக் கொண்டு இருப்பதை கேட்கவே முடியவில்லை...
"எங்க போற?" என்றார் வேதவல்லி...
"நேரமாகுதும்மா, நான் கிளம்புறேன்" என்று சொல்லிக் கொண்டே வாசலை நோக்கி செல்லவும், வம்சி கிருஷ்ணா மற்றும் கெளதம் கிருஷ்ணாவின் கார்கள் வந்து நிற்கவும் நேரம் சரியாக இருந்தது...
"இதோ என் பேரனுங்க வந்துட்டானுங்க, கொஞ்ச நேரம் நில்லு, உன் பொண்ணு கல்யாணத்துக்கு ஏதாவது பணம் கொடுப்பானுங்க, வாங்கிட்டு போ, நீ வந்ததே அதுக்கு தானே... ஊமைச்சியை பெத்தா இங்க வந்து பிச்சை தானே எடுக்கணும்... இந்த வீட்ல கட்டி கொடுக்கவா முடியும்?" என்று அவர் உதித்த வார்த்தையில் மகாலக்ஷ்மி மொத்தமாக நொறுங்கி விட்டார்...
கண்கள் வேறு கலங்கி விட்டன...
ஏதோ பேச வாயை திறந்தவர் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டே வாயை மூடிக் கொண்டார்...
"நான் கிளம்புறேன்... வசந்தி கிட்ட சொல்லிடுங்க" என்று அவரை பார்க்காமல் சொல்லிக் கொண்டே வாசலில் காலை வைக்கவும் வம்சி கிருஷ்ணா காரை திறந்து கொண்டே இறங்கவும் நேரம் சரியாக இருந்தது...
அவரை பார்த்த வம்சி கிருஷ்ணாவோ, "ஓஹ் இங்க தான் நிக்கிறீங்களா?" என்று கேட்டான்... அவரோ, அவனை புரியாமல் பார்த்து, "கல்யாண கார்ட் கொடுக்க வந்தேன்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே காரின் அடுத்த பக்க கதவு திறக்கப்பட்டது...
வம்சி கிருஷ்ணா பின்னால் திரும்பி காரில் இருந்து கழுத்தில் தாலியுடன் இறங்கிய தேன்மொழியை பார்த்தான்...
தேன்மொழி காரினுள் இருக்கும் போதே தாயை கண்டு விட்டாள்... பயத்துடன் தான் இறங்கினாள்...
இதயம் வேகமாக துடித்தது... பயத்தில் அழுது விடுவாள் போல இருந்தது...
ஆனால் இந்த கணத்தை கடந்து தானே ஆக வேண்டும்...
காரில் இருந்து இறங்கியவளை கண்டதுமே, அவள் கழுத்தில் தொங்கிய தாலியில் தான் மகாலக்ஷ்மியின் பார்வை படிந்தது...
அவர் கையில் இருந்த திருமண பத்திரிகைகள் அடங்கிய பை கீழே நழுவி விழ, அனைத்து பத்திரிகைகளும் நிலத்தில் சிதறின...
வாயில் இரு கைகளையும் அதிர்ச்சியாக வைத்துக் கொண்டார்...
அவருக்கோ உலகம் தலைகீழாக சுழல்வது போன்ற உணர்வு...
தேன்மொழியோ கால்கள் நடுங்க, நடந்து வந்து வம்சி கிருஷ்ணாவுக்கு பின்னால் நின்று கொண்டாள்.
அவரை பார்க்கும் போதே அவள் கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிய, இரு கைகளையும் கூப்பி மன்னிப்பு வேண்டினாள்...
"என்னடி பண்ணி வச்சு இருக்க?" என்று கண்ணீருடன் ஆதங்கமாக வந்தன மகாலக்ஷ்மியின் வார்த்தைகள்...
"என்ன காஃபி குடிக்காமலே கிளம்பிட்டீங்களா?" என்று கேட்டுக் கொண்டே கையில் காஃபியுடன் வாசலுக்கு வந்த வசந்தியின் கையில் இருந்த காஃபி கப் கீழே விழுந்து உடைந்து சிதறியது...
"என்னடா இது?" என்று வம்சி கிருஷ்ணாவை பார்த்து பதறி விட்டார்...