ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 11

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 11

மித்ரா- விஷ்வா திருமணம் இன்னும் ஒரு மாதத்தில் என்று நிச்சயிக்கப்பட்டிருந்தது. விஷ்வா பல முறை அழைத்தும் மித்ராவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு கிழமையாக அவள் வேலைக்கும் வராததால் பொறுமை இழந்தவன் நேரே அவள் வீட்டுக்குச் சென்று விட்டான்.

ஹாலில் யாரும் இல்லாததால் நேரடியாக அவள் அறையை நோக்கிச் சென்றவன் அவள் அறையை நெருங்க அங்கே லட்சுமியும் மித்ராவும் பேசுவது தெளிவாக கேட்டது.

"என்ன விடும்மா என்னால முடியாது." என்று அவள் சிணுங்க, அவரோ, "இங்க பாரு மித்ரா காய்ச்சல் எப்படி கொதிக்குது... ஒரு கிழமையாக போகுது இன்னும் குறையல... வா ஹாஸ்பிடல் போவோம்... அடம்பிடிக்காதடி." என்று திட்டிக் கொண்டிருந்தார்.

"அம்மா ஊசி போடுவாங்கம்மா... பயமா இருக்கும்மா" என்று சின்ன குழந்தை போல சிணுங்க வெளியில் இருந்த விஷ்வாவுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

'நம்ம விஜயசாந்திக்கு ஊசின்னா பயமா?' என்று யோசித்தவன், "அத்தை நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்" என்றபடி உள்ளே வந்தான்.

அவன் வந்தது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அவன் மேல் கோபத்தை காட்ட கூட அவள் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. முகம் சோர்ந்து இதழ்கள் காய்ந்து குளிரில் போர்த்தியபடி நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளை பாவமாக பார்த்துக் கொண்டிருந்த அவனை நிமிர்ந்து பார்த்தவள், 'இவன் எதுக்கு வந்தான்?' என்று யோசித்துக் கொண்டிருக்க லட்சுமி வெளியேச் சென்று விட்டார். அவர் சென்றதும் அவள் நெற்றியில் கை வைத்து பார்க்க அது உலையாக கொதித்தது.

"லூசாடி நீ? இப்படி கொதிக்குது..." என்றவன் போர்வையை விலக்கி அவள் உடலில் ஏதும் செந்நிற புள்ளிகள் இருக்கிறதா என்று உடையை விலக்கி ஆராய்ந்தான்.

"என்னடா பண்ற??" என்று திமிறியவளை முறைத்தவன், "இப்போ டெங்கு அது இது என்று எவ்வளவோ இருக்கு. அது தான் பயந்துட்டேன். உனக்கு வைரல் பீவர் தான்" என்று சொல்ல "அதுக்கு இப்படி பண்ணுவியா?" என்று எரிச்சலாக கேட்டவளை விழுங்கி விடுவது போல பார்த்தவன், "உன்னை நான் அப்படி பார்த்ததே இல்லையா?" என்று கேட்டுவிட்டு விறு விறு வென வெளியேறினான்.

அவன் கேட்ட கேள்வியில் வெட்கம் பிடிங்கி தின்றாலும் அவன் செல்வதை வெறித்து பார்த்தவள், "இப்போ எதுக்கு வந்தான்? எங்க போறான் என்றே தெரியலையேப்பா?" என்றபடி மீண்டும் போர்வையை போர்த்திக் கொண்டு தூங்க தொடங்கினாள்.

சிறிது நேரம் கழித்து அவள் அறையின் உள்ளே மருந்துகளுடன் வந்தவன் சில மாத்திரைகளை அவளிடம் நீட்டினான்.

"நான் போடமாட்டேன்" என்றவளை முறைத்தவன், "இப்போ எதுக்குடி அடம் பிடிக்கிற?" என்று கேட்க அவளோ, "நீ எதுக்குடா அப்பா கிட்ட எல்லாம் சொன்ன?" என்று கேட்டாள்.

"இப்போ அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் நீ முழங்காலுக்கும் தலைக்கும் முடிச்சு போடுற?" என்று கேட்க, "சொன்னா தான் சாப்பிடுவேன்" என்றாள்.

அருகிலிருந்த கதிரையை இழுத்து போட்டவன், "உன்ன எப்படியாச்சும் கல்யாணம் பண்ணிக்கணும்னு தான்... இதுக்கு மேல பேசாம சாப்பிடு" என்று மருந்தையும் நீரையும் கொடுக்க அவளும் மறு பேச்சு பேசாமல் போட்டாள்.

போட்டதும் போர்வையை பறித்தவன், "இப்படி போர்த்திட்டு இருக்காதடி, காய்ச்சல் குறையட்டும்" என்றபடி மருந்து பெட்டியிலிருந்து ஊசியை எடுக்க அவளோ கட்டிலில் இருந்து துள்ளி எழும்பினாள். "என்னாச்சு? நீ தான் தைரியமான போலீஸ் ஆஃபீசர் போயும் போயும் ஊசிக்கு பயப்படுறியே" என்றதும் பின்னால் நகர்ந்தவளை நோக்கி அவனும் நடந்தான்.

"சொன்னா கேளு கிட்ட வராத" என்றவள் மேசை மேல் இருந்த பூவாசை எடுத்து எறிவது போல் நின்றவள், "கிட்ட வந்தா எறிஞ்சிருவேன்" என்றாள்.

அவனோ சத்தமாக சிரித்தபடி கிட்ட வந்து பூவாசை வாங்கி இருந்த இடத்தில வைத்தவன், "நீ எறியமாட்டனு நல்லா தெரியும்... ஊசி எல்லாம் போடல சும்மா விளையாடினேன்" என்று கண்ணடித்து விட்டு திரும்பியவன் முதுகில் ஓங்கி குத்தினாள்.

"ஏய்..." என்று திரும்பியவன், "காய்ச்சல் வந்த பொண்ணு என்கிறதால தப்பிச்ச...வா வந்து படு" என்று அவள் கையை பிடித்து படுக்க வைத்தவன் அவளருகிலேயே இருந்தான். காய்ச்சல் இறங்க இடையிடையே தண்ணீரால் அவளை துடைத்து விட்டான். தூங்கிய அவள் காய்ச்சல் சற்று இறங்கியதும் லட்சுமியிடம் சென்றவன், "அத்தை இந்த மாத்திரைகளை இதுல எழுதி இருக்கிற போல நேரத்துக்கு கொடுங்க" என்றபடி தன் வீட்டை நோக்கிச் சென்றான்.

அடுத்த நாள் காலையில் மகாலிங்கம் பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருக்க அவருக்கு முன்னால் இருந்த சோபாவில் சாணக்கியன் தொலைபேசியில் நோண்டிக் கொண்டிருந்தான்.

அப்போது மகாலிங்கம் பெயரில் ஒரு பார்சல் வந்ததை காவலாளி அவரிடம் கொடுத்தான். அதை பிரித்தவருக்கு வியர்த்து வழிய தொடங்கியது.

படபடப்பானவர் எல்லாரும் என்ன செய்கிறார்கள் என்று நோட்டமிட்டப்படி விறு விறுவென தனது அறைக்குள் சென்று அடைத்துக் கொண்டார். சாணக்கியனின் கை தொலைபேசியில் இருந்தாலும் கண் மகாலிங்கத்திலேயே இருந்தது.

அறைக்குள் வந்தவர் தொலைபேசியில் அழைத்து, "நான் தான் நீ சொல்றதெல்லாம் செய்றேனே... இப்போ எதுக்கு இந்த போட்டோஸ் எல்லாம் வீட்டுக்கு அனுப்புன?" என்று எகிற மறு முனையிலிருந்த கெளதம் அதிர்ச்சியடைந்தான்.

"நான் ஒண்ணும் அப்படி அனுப்பலையே..." என்று நெற்றியை வருடியவனுக்கு அப்போது தான் அது யாரின் வேலை என்று சந்தேகம் வலுப்பெற்றது.

"அவனே தான்..." என்று வாய் தவறி சொல்ல மகாலிங்கத்தின் இதயம் நின்று துடித்தது. "எவன் டா அது...இன்னொருத்தன்?" என்று பதட்டத்தில் கேட்டார். வாய் தவறி சொன்னதுக்காக தன்னை தானே மனசுக்குள் கடிந்தவன், "நான் பார்த்துக்கிறேன் மாமா" என்றான்.

"என்னத்தடா பார்த்துக்க போற? இப்போ நான் என்ன பண்றது? இது மீடியாவுக்கு போனா என் நிலைமையை யோசிச்சு பார்த்தியா?" என்றவரிடம், "அதான் நான் பார்த்துக்கிறேன்னு சொல்றேனே... நீங்க பதட்டப்படாதீங்க" என்றபடி தொலைபேசியை கட் பண்ணியவன், 'ஏன் டா நான் சும்மா இருந்தாலும் நீங்களே உசுப்பேத்தி விடுறீங்க...' என்று மனசுக்குள் நினைத்தபடி பென் ட்ரைவை தேடினான் அது அவன் நினைத்த போலவே காணாமல் போய் இருந்தது. "டாம் இட்" என்று கர்ஜித்தபடி மேசையிலிருந்த பிஸ்டலை டிஷர்டை கிளப்பி முதுகில் சொருகியவன் வெளியே புறப்பட்டான்.

நேரே அவன் சென்றது மகாலிங்கம் வீட்டுக்கு தான்... பார்ஸலை கொடுத்த காவலாளியிடம் சிறிது நேரம் விசாரித்தவன் தாடையை தடவியவாறே வீட்டினுள்ளே நுழைந்தான்.

அவன் வருவதை பார்த்த மகாலிங்கம், 'இவன் வேற எப்போ பார்த்தாலும் நம்மள பாடாய் படுத்துறான்' என்று யோசித்தபடி இருக்க அவனோ, "ஹாய் மாமா" என்று சிரித்தபடி உள்ளே நுழைந்தான்.

அவன் வருவதை அறிந்த சாணக்கியன் ஒரு கணம் நிமிர்ந்து அவனை பார்த்து விட்டு மீண்டும் தொலைபேசியை பார்க்க தொடங்கினான்.

மகாலிங்கமோ சங்கடத்துடன் அவனை பார்த்து புன்னகைத்தார். கௌதமோ மகாலிங்கம் அருகில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து அவர் தோள் மேல் கை போட அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர் சாணக்கியனையும் சேர்த்து.

சாப்பிட்டுக் கொண்டிருந்த விஷ்வாவின் கண்கள் கோபத்தில் சிவக்க சித்ராவோ மனசுக்குள், 'இந்த பையன் செய்றதுக்கெல்லாம் ஏன் இந்த மனுஷன் மண்டைய மண்டைய ஆட்டுறாரோ தெரியல... கன்னத்தை பொத்தி ரெண்டு விடாம சும்மா இருக்காரே...' என்று மனதுக்குள் திட்டினார்.

சாணக்கியனோ கௌதமை கூர்ந்து பார்க்க அவன் சாணக்கியனை பார்த்து கண்ணடித்து விட்டு, "சாப்பிட்டீங்களா மாமா?" என்று கேட்டான்.

அவன் கண்ணடித்ததை அலட்சியம் செய்தவன் தலைக்கு பின்னால் இரு கைகளையும் கட்டி கால் மேல் கால் போட்டு இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்தான். சாணக்கியனின் அழுத்தமான பார்வை மகாலிங்கத்துக்கு பதட்டத்தை கொடுத்தாலும் அதை கஷ்டப்பட்டு மறைத்தவருக்கு கௌதமின் செயல் கோபத்தை மூட்டினாலும் பல்லு பிடுங்கிய பாம்பு போல அவனிடம் சரணடைந்தார்.

ஆம் என்று அவன் கேட்ட கேள்விக்கு தலையை ஆட்டியவர், கடைக்கண்ணால் சாணக்கியனை பார்க்க அவனும் அவரை தான் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்நேரம் வேலைக்குச் செல்ல கிளம்பி கீழே வந்த கயலுக்கு கௌதமின் செயல் எரிச்சலாக இருக்க இருவர் முன்னே வந்து நின்றவள், "ஒரு மட்டு மரியாதை இல்லையா? அவர் பதவி என்ன? நீங்க இருக்கிற நிலைமை என்ன?" என்று திட்ட அவளை உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம்.

அந்நேரம் பார்த்து விஷ்வாவும், "நல்லா கேளு கயல்... கேக்கிறதுக்கு ஆளில்ல என்ற தைரியத்துல ரொம்ப தான் ஆடுறாங்க... வீட்டுக்கு மூத்தவங்க சும்மா இருந்தாலும் நான் சும்மா இருக்க மாட்டேன்" என்று சாணக்கியனை பார்த்தபடி சொல்ல அதுவரை விஷ்வா பேசியதை பார்த்துக் கொண்டிருந்த சாணக்கியன் தோளை உலுக்கியபடி தனது வேலையை பார்க்க எழுந்து உள்ளேச் சென்றான்.

அவனின் செயல் விஷ்வாவுக்கு ஆத்திரத்தை கிளப்பினாலும் அதை அடக்கியபடி கௌதமை நோக்கி திரும்ப கௌதமோ மகாலிங்கத்தை பார்த்தான்.

கௌதமின் பார்வையை உணர்ந்த மகாலிங்கம், "விடும்மா மாப்பிள தானே... நாங்க நண்பர்கள்" என்று கூற முன்னேச் சென்ற சாணக்கியன் திரும்பி புருவம் தூக்கி இருவரையும் ஒரு கணம் பார்த்துவிட்டு தன் அறைக்குள் புகுந்துக் கொண்டான்.

தந்தையின் கூற்றால் மற்றைய இருவரின் முகமும் அஷ்ட கோணலாக எரிச்சலுடன் அவ்விடத்தை விட்டு வேலைக்கு நகர்ந்தனர்.

சத்தமாக சிரித்த கெளதம், "அத்தை பசிக்குது" என்றபடி சாப்பிட உட்கார அவரோ முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளேச் சென்றார்.

அவரை பார்த்து சிரித்தபடி எழ போனவனை ஒரு கை தோளில் கைவைத்து உட்கார வைத்தது. திரும்பி பார்க்க அங்கு நின்றது சாணக்கியன் தான்... அவனே மேசையிலிருந்த சாப்பாட்டை எடுத்து அவனுக்கு பரிமாறினான்.

எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்த கெளதம் கையை கழுவி விட்டு அங்கிருந்த துணியை எடுத்து துடைத்தபடியே சாணக்கியன் முன்னால் வந்து நின்று, "எதிரி வீட்டில் சாப்பிடுற சுகமே தனி தான்" என்றான்.

அதை கேட்டு சிரித்தவன், "எதிரிக்கு பரிமாறிய சுகமும் தனி தான்" என்று அவன் பதிலடி கொடுக்க, சிரித்த கெளதம், "என்ன மச்சான் ஹோட்டலுக்கு கூட்டி போயி கிஸ் எல்லாம் அடிக்கிறீங்க போல" என்றான் கண்ணடித்தபடி. முதலில் அதிர்ந்த சாணக்கியன் பின் சுதாரித்துக் கொண்டு, "என் பொண்டாட்டிக்கு தானே அடிச்சேன் அடுத்தவன் பொண்டாட்டிக்கு இல்லையே" என்று கம்பீரமாக மொழிந்தவன், "பொண்டாட்டி கையால் லத்தியால் அடிவாங்கிறவங்க எல்லாம் நம்மள கிண்டல் பண்ணுறாங்கப்பா" என்றான்.

இப்போது அதிர்வது கெளதம் முறை ஆயிற்று. பெரு மூச்சு விட்டவன், "விஷ்வா-மித்ரா கல்யாணத்துக்காக பொறுமையா இருக்கேன்" என்றான் அவன் முன்னால் நெஞ்சை நிமிர்த்தியபடி.

"அந்த பொறுமை என்கிட்டே இல்ல மச்சான். நீ என் கையை வெட்ட நினைச்சாலே அந்த கணம் உன் தலை வெட்டப்பட்டிருக்கும்" என்றவனை புருவம் உயர்த்தி பார்த்தவன், "அப்போ ஆட்டத்துக்கு நானும் ரெடி" என்றபடி விறு விறுவென வெளியேறினான்.

அன்று மாலை வேலை விட்டு வந்த விஷ்வா முன்னால் நின்ற மித்ராவை பார்த்து, "என்னம்மா காய்ச்சல் சுகமா?" என்று அவள் நெற்றியில் கை வைத்து விசாரிக்க, வீட்டில் அடியாட்கள் காவல்காரர்களுக்கு முன்னால் அவன் செய்த செய்கையால் நெளிந்தவள், 'என்னை காப்பாற்று' என்ற தோரணையில் கயல்விழியை பார்க்க.

அவள் விழியசைவை புரிந்த கயல்விழி, விஷ்வாவின் தலையில் கொட்டி, "வாடா உள்ள" என்று அழைக்க, "என் பொண்டாட்டியோட என்னை பேச விடமாட்டியா?" என்று அவளை பார்த்து எகிறியவன், "நீ சொல்லுடா செல்லம்" என்றான்.

மித்ராவோ அவனை முறைத்தபடி, "எனக்கு இப்போ ஒண்ணுமில்ல" என்று சொன்னாள். 'இதுக்கு மேல நாம இங்க எதுக்கு?' என்று யோசித்த கயல்விழி மெல்ல நழுவ, அதை கவனித்த விஷ்வா, "காலைல உன் புருஷன் வந்தான் தானே..? அவன் கூட ரொமான்ஸ் பண்ண வேண்டியது தானே?" என்றான் தங்கையின் மனதை அறிந்துக் கொள்ளும் பொருட்டு... அவளோ திரும்பி பார்த்து விரக்தி புன்னகை சிந்த அவள் மனம் அதில் அவனுக்கு அப்பட்டமாய் தெரிந்தது. மனசு கேட்காமல் அவளை நோக்கிச் சென்று அவன் தோளில் கை போட்டவன் அவளுடன் சேர்ந்து வீட்டுக்குள் நடந்தபடியே, "அவனை டிவோர்ஸ் பண்ணு. நான் உனக்கு ஒரு நல்லவனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்று சொன்னான் ஒரு கடமை விலகாத அண்ணனாக.

"அவருக்கு டிவோர்ஸ் வேணாமாம்" என்றாள் கலங்கிய கண்களுடன். அந்த பதிலில் அவனுக்கு சந்தோசம் வர, "குடும்பத்தை பற்றி யோசிக்காதே, அவனுடன் சேர்ந்து வாழு" என்றவனிடம், "அவருக்கு சேர்ந்து வாழவும் இஷ்டமில்லையாம்." என்றதும் அவன் கண்கள் கோபத்தில் சிவந்தது.

"அப்போ அவனுக்கு என்ன தான் டி வேணுமாம்?" என்று சீறியவனிடம், "எனக்கும் தெரியலண்ணா" என்று கண்ணீர் வடிய கூறியவள் தன்னறைக்குள் சென்றாள். அவனுக்கோ தங்கை வாழ்க்கையை நினைத்து மனசு உலையாய் கொதித்தது.

அவளை பின் தொடர்ந்துச் சென்றவன் அவளின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு, "வா என் கூட" என்றபடி அவளை காரில் ஏற்றியவன் அவன் அலுவலகத்துக்குச் சென்றான். அங்கு அவன் குவார்ட்டர்ஸுக்கு சென்றிருப்பதாக கூற அவளை அழைத்துக் கொண்டு அவன் இடத்துக்கு விரைந்தான். "அண்ணா வேணாம் அண்ணா" என்று கூறிய கயலை பார்வையால் அடக்கியவன் கார் அவன் குவார்ட்டர்ஸ் முன்னால் நின்றது.

வாசலில் இருந்து அவன் வீட்டு கதவை தட்ட அப்போது தான் தூங்கி எழுந்த கெளதம் கதவை திறந்து இருவரையும் அதிர்ச்சியுடன் பார்த்தான். "உள்ளே வாங்க" என்றவன் கதிரையில் கிடந்த டிஷர்டை மாட்டியபடி சோபாவில் இருந்து, "உட்காருங்க" என்று சோபாவை காட்ட அவன் முன்னால் போய் நின்ற விஷ்வா, "உன் கூட இருந்து பேச வரல" என்றான்.

"ஓகே அப்போ நின்னு கிட்டே பேசுங்க" என்றவன் மேல் கொலை வெறி எழும்ப கயல்விழி வாழ்க்கைக்காக அதை அடக்கியவன், "இவளுக்கு என்ன பதில்?" என்று கயல்விழியை காட்டி கேட்டான்.

அவன் பின்னால் தலையை குனிந்தபடி நின்றவளை எட்டி பார்த்த கெளதம் அவனை கூர்மையாக பார்த்து, "மனம் நலம் பாதிக்க பட்டவனை கட்டும் போது அப்பாக்கு பயந்து வாயை மூடி நின்றவங்களுக்கு இப்போ நீதி தேவையா?" என்றான். அந்த கேள்வியில் அவமானத்தில் விஷ்வாவின் முகம் சிவந்தது.

உடனே சுதாரித்தவன், "அது உனக்கு தேவையில்லாதது. இப்போ என் தங்கச்சிக்கு பதில் சொல்லு... ஒண்ணு டிவோர்ஸ் கொடு இல்ல சேர்ந்து வாழு" என்றான் சினம் தெறிக்க.

கௌதமோ நிதானமாக கால் மேல் கால் போட்டு இருந்தபடி, "ரெண்டும் முடியாது என்றால்?" என புருவம் தூக்கி கேட்டான். அவன் அலட்சியத்தில் பொறுமை காற்றில் பறக்க டிஷர்ட் காலரில் இரு கைகளையும் வைத்து கௌதமை, "யு ராஸ்கல்" என்றபடி எழுப்பியவன் அவன் சுதாரிக்க முதல் அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான்.

அவ்வளவு நேரமும் பொறுமையாக இருந்த கெளதம் தன் பலம் முழுவதையும் சேர்த்து விஷ்வா முகத்தில் மாறி குத்த இருவர் வாயிலும் ரத்தம் வடிந்தது. இவர்களின் சண்டையால் பதட்டமடைந்த கயல் நடுவில் போய் நின்று அடுத்த அடி அடிக்க வந்த இருவரையும் கையெடுத்து கும்பிட்டபடி, "போவோம் அண்ணா ப்ளீஸ்" என்று கெஞ்சியவளின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து, "வா போவோம்" என்றபடி அவள் கையை பிடித்துக் கொண்டு வெளியேறியவனை நிறுத்தியவள் அவன் வாயிலிருந்த ரத்தத்தை புடவை தலைப்பால் துடைத்தாள்.


அந்த கரிசனத்தால் விஷ்வாவின் கண்கள் கலங்க கௌதமின் நெஞ்சம் உலையாக கொதித்தது. அவள் இடையில் வந்ததால் தன்னை கட்டுப்படுத்தியவன், "ஷீட்" என்று சோபாவில் குத்தினான்.
 
Top