அத்தியாயம் 11
அன்று கல்லூரியில் நாராயணிக்கு தலை நிமிர கூட முடியாதளவு வேலை இருந்தது...எல்லா நோட்ஸும் ஃபோட்டோ காப்பி எடுத்தாள்.
எழுதி முடிக்க தான் நேரம் இருக்காதே...
விட்ட அசைன்மென்ட் எல்லாமே செய்து கொண்டு இருந்தவளுக்கு வீட்டுக்கு கிளம்பவே ஆறு மணி கடந்து விட்டது...
இடையில் அவள் எண்ணுக்கு ஜனார்த்தனன் அழைத்து இருந்தான்...
எப்படியோ அவள் அலைபேசி எண்ணை தேடி எடுத்து விட்டான்...
அவளுக்கு புது எண் தானே...
எடுத்து காதில் வைத்ததுமே, "என்ன இவ்ளோ நேரம் ஆயிட்டு?" என்று கேட்டான்.
"நீங்க யாரு?" என்று அவள் கேட்க, "நான் ஜனார்த்தனன் நம்பரை சேவ் பண்ணி வை" என்றான்.
அவளும், "ஓஹ் நீங்களா? இன்னும் வேலை முடியல, அசைன்மென்ட் செஞ்சிட்டு இருக்கிறன், வெளிக்கிட ஆறு மணி ஆயிடும் போல, வந்திடுவேன்" என்று சொல்லி விட்டு வைத்தவளுக்கு அவனுடன் கடினமாக பேசவும் முடியவில்லை...
அவள் மீது இந்தளவு அக்கறை காட்டுபவனிடம் எப்படி கடினமாக பேச வரும்?
அவன் பேசிய பேச்சுக்கள் இன்னும் மனதில் இருக்கின்றன தான்...
ஆனால் அந்த கோபத்தை இப்போது காட்டினால் அவள் நன்றி இல்லாதவள் ஆகி விடுவாளே.
தாயின் இறப்பு நேரம் அவன் செய்தது எல்லாமே பார்த்தாள் தானே...
அதனாலேயே அந்த கோபங்களை விழுங்கிக் கொள்ள வேண்டிய நிலை அவளுக்கு...
எல்லாம் முடிய அவள் கல்லூரி வாசலுக்கு வந்த நேரம், அங்கே நின்று இருந்தது ஜனார்த்தனனின் கார்...
நல்ல வேளை அங்கே யாரும் இருக்கவில்லை...
யோசனையுடன் கார் அருகே அவள் வர, கார் ஜன்னலை இறக்கியவன், "உள்ளே ஏறு" என்றான்.
அவளோ, "நானே வந்திருப்பேனே" என்று கேட்டுக் கொண்டு ஏறிக் கொள்ள, "உன்ட அப்பா, கதைக்கணும் எண்டு சொல்லிட்டு வீட்ல வந்து நிக்கிறார், நீ பஸ் ல வந்து சேர லேட் ஆயிடும், அதான் வந்தன்" என்றபடி காரை செலுத்தினான்...
ஒரு வார்த்தை அவளிடம் அவன் பேசவில்லை...
ரேடியோவில் பாட்டை ஓட விட்டு இருந்தான்...
அவளும் அதனை கேட்டுக் கொண்டே, வெளியே பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்.
வாழ்க்கையில் அடுத்து என்ன என்று அவளுக்கு தெரியாது...
ஒரு மாதிரி வெறுமையாக இருந்தது...
வீடும் வந்து விட்டது...
புருஷோத்தமன் தனியே வந்திருக்கவில்லை...
பவித்ரனுடன் தான் வந்திருந்தார்...
நாராயணிக்கு மயக்கம் வராத குறை தான்...
என்ன பேசுவார்கள், என்ன பிரச்சனை என்று எதுவுமே தெரியாது...
யோசிக்கும் மனநிலை கொஞ்சமும் இல்லை...
கல்லூரியில் வேலைகளை முடித்த அழுத்தமும் களைப்பும் இன்னுமே தீரவில்லை...
யோசனையுடன் தான் வீட்டினுள் நுழைய, "நீ எதுக்கு நேத்து இவனோட வந்தனீ?" என்று முதல் கேள்வி புருஷோத்தமனிடம் இருந்து வந்தது...
அவள் பாதுகாப்பு தேடி ஓடி வந்திருக்கின்றாள்...
ஆனால் அவருக்கோ தனது ஈகோ ஜனார்த்தனன் முன்னால் அடி வாங்கிய உணர்வு...
அவளும், "தனியா இருக்க பயமா இருந்தது" என்று சொல்ல, "அப்ப என்னட்ட சொல்ல வேண்டியது தானே... எவன் கூப்பிட்டாலும் வந்திடுவியா? இவன் உனக்கு என்ன எல்லாம் கதைச்சவன் எண்டு மறந்துட்டியா?" என்று கேட்டார்...
ஜனார்த்தனனுக்கு மாறி பேச வார்த்தைகள் வந்தன...
பேசி பிரச்சனையை பெரிது படுத்த விரும்பாமல், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டே பவித்ரன் அருகே அமர்ந்து கொள்ள, "உங்க ரெண்டு பேரோடயும் முடியல" என்று பவித்ரன் தனியாக புலம்பிக் கொண்டான்.
"இப்ப மாறி கதைக்கிற மூட் ல நான் இல்ல, உன்ட அப்பவே கதைக்கட்டும்" என்றான் ஜனார்த்தனன் பிடரியை வருடிக் கொண்டே...
நாராயணிக்கு அவர் கேள்வி கேட்க கேட்க கோபம் தான் வந்தது...
தனியாவும் விட்டு வந்து இருக்கின்றார்.
பாதுகாப்புக்கும் யாருடனும் வர கூடாது என்கின்றார்...
ஏற்கனவே கருணா விஷயத்தில் அவர் மீது அப்படி ஒரு வெறுப்பு...
இப்போது அவளை அவர் கட்டுப்படுத்த வெறுப்பு கூடியது தான் தவிர, கொஞ்சமும் குறையவில்லை...
"இப்ப நான் என்ன செய்யோணும்?" என்று கேட்டாள்.
"இங்க இருக்கிறது நல்லா இல்லை... நீ வீட்டுக்கு போ, நானே கொண்டு விடுறேன்" என்று சொல்ல, ஜனார்த்தனனுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை...
"இங்க இருந்தா என்ன ஆக போகுது?" என்று கேட்டான்.
"குமர் பெட்டையை எப்படி இங்க வச்சு இருக்கிறது? இரண்டு ஆம்பிளைங்கள் இருக்கீங்க எல்லா" என்றார்.
அந்த வார்த்தை ஜனார்த்தனனுக்கு மட்டும் அல்ல, இளஞ்செழியனுக்கும் கோபத்தை கொடுத்தது...
ஏதோ அவனில் நம்பிக்கை இல்லாதது போல பேசி விட்டாரே...
"தான் திருடன் பிறரை நம்பான் எண்டு சொல்வாங்களே, அது போல இருக்கு, நான் அவளை கல்யாணம் கட்டுறேன் எண்டு தான் சொல்றேன், வச்சு கொள்ளுறேன் எண்டு சொல்லவே இல்ல" என்று சொல்லி விட்டான்.
கனகசிங்கமோ, "ஜனா, கொஞ்சம் பார்த்து கதை" என்று கடுப்பாக சொல்ல, புருஷோத்தமனோ, "நீ என்ன பத்தி எவ்வளவு கேவலமா வேணும் எண்டாலும் கதை, என்ட பிள்ளையை உனக்கு கட்டி தரவே மாட்டேன்" என்றார் ஆக்ரோஷமாக.
கோதாவரியோ, "நீங்களே மாறி மாறி கதைச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்? அந்த பிள்ளைட்ட கேளுங்களேன்" என்று சொன்னார்.
கனகசிங்கமும், "நாராயணி, ஜனார்த்தனன்ட கல்யாணம் அவன்ட முடிவு தான்... நாங்க எதுவும் சொல்ல போறது இல்ல, சொன்னாலும் கேட்க மாட்டான், உனக்கு அவனை கல்யாணம் கட்ட சம்மதம் எண்டா இங்க இருக்கலாம், இல்ல எண்டா உன்ட அப்பா சொல்ற போல, அங்கே போய் இரு, இங்க இருக்கிறது நல்லா இருக்காது, நாளைக்கு கல்யாணம் உனக்கு பேசக்குள்ள யாரும் தேவை இல்லாம கதைப்பாங்க" என்று சொன்னார்.
திணறி போனாள்.
ஜனார்த்தனன் எதுவும் பேசவில்லை...
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்...
நாடியை நீவிக் கொண்டே, கால் மேல் கால் போட்டு தான் அமர்ந்து இருந்தான்...
"அவள் ஏன் ஓம் எண்டு சொல்ல போறாள்? அண்டைக்கு பயத்துல தான் வந்து இருப்பாள், இப்படி கேவலமா கதைக்கிறவனோட அவள் வாழ விரும்புவாளா என்ன?" என்று புருஷோத்தமன் சொல்ல, ஜனார்த்தனனோ, "அத அவள் சொல்லட்டுமே, நீங்க ஏன் சொல்றீங்க?" என்று கேட்டவன், "நாராயணி" என்றான்...
அவனை பதட்டத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள்.
தனியாக வந்த போது அவன் ஒரு வார்த்தை கூட நாராயணியிடம் பேசவில்லை...
ஆனால் அவ்வளவு பேர் முன்னிலையில் பேசினான்...
தனது காதலை முகத்தில் அடித்த போலவே சொன்னான்...
"நான் உன்னை பாவம் பார்த்து கல்யாணம் கட்ட நினைக்கவே இல்லை... எனக்கு உன்னை பிடிச்சு இருக்கு, நீ இவர்ட மகள் எண்டு தெரிய முதலே எனக்கு உன்னோட விருப்பம், இவர்ட மகளா இருந்த கோபத்தில் தான் தேவை இல்லாம கதைச்சேன், அதுக்கு மன்னிச்சு கொள்ளு, இப்ப கூட நான் உன்னை கல்யாணம் கட்ட தான் விரும்புறேன், உனக்கான அங்கீகாரம் என்னட்ட இருந்து கிடைக்கும்... என்ட வீட்ல யாருமே உன்னை தேவை இல்லாம ஒரு வார்த்தை கதைக்க மாட்டாங்க, சந்தோஷமா இருக்கலாம், நிறைய சொந்தம் கிடைக்கும்... அப்படி என்ன கல்யாணம் கட்ட விருப்பம் இல்ல எண்டா உன்ட அப்பாவோட போ, அவர்ட தயவில் வாழு, இப்பிடி தான் நடு இரவில விட்டுட்டு போயிடுவார், எல்லாத்துக்கும் மேல என்ட மாமி இவர்ட வேலையால நிறைய நாளா மனசு கஷ்டத்துல இருக்காவு, உன் மேல அவர் உரிமை எடுத்து கொள்றது அவவுக்கு விருப்பம் இல்லை. எல்லாரையும் யோசிச்சு பார்த்து முடிவு செய். சொல்லுறத சொல்லிட்டேன், இதுக்கு பிறகு அது உன்ட விருப்பம்..." என்று சொன்னான்...
அவளுக்கு எதனை சொன்னால் அவள் வழிக்கு வருவாள் என்று அவனுக்கு தெரியாதா? அவன் மனநிலை பற்றி தான் அவன் மொத்தமாக ஆராய்ந்து வைத்து இருக்கின்றானே.
அவன் சொன்ன வார்த்தைகள் புருஷோத்தமனுக்கு கடுப்பை கொடுத்தன.
"என்னை பத்தி நீ கதைக்காதே சரியா? எனக்கு என்ட பிள்ளைய எப்படி பார்த்துக் கொள்ளணும் எண்டு தெரியும்" என்று அவர் சொல்ல, அவரை ஆழ்ந்து பார்த்து விட்டு பவித்ரனை பார்த்த ஜனார்த்தனனோ, "மாமியை நீ கூட்டி வந்து இருக்கோணும், இப்பிடி வீரா தீர கதை வாயில் இருந்து வந்திருக்குமா எண்டு பார்த்து இருக்கலாம்" என்றான் கிண்டலாக...
பவித்ரனும், "சும்மா இருடா" என்று வாய்க்குள் திட்ட, புருஷோத்தமனோ, நாராயணியிடம், "இவன்ட கதையை விடு, கல்யாணம் கட்ட ஏலா எண்டு சொல்லிட்டு வெளிக்கிடு, இதுக்கு பிறகு அவன் ஏதும் உன்னை தொந்தரவு பண்ணுனா போலீஸ் ல கொடுக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவர், நாராயணி அருகே வந்து அவள் கையினை பற்றப் போக, சட்டென விலகி நின்றவளோ, "எனக்கு கல்யாணம் கட்ட சம்மதம்" என்றாள் தலையை தாழ்த்திக் கொண்டே...
எல்லாருக்கும் அதிர்ச்சி என்றால் ஜனார்த்தனனுக்கு அதிர்ச்சியுடன் சிரிப்பும் வந்தது...
"உன்ட அப்பா, என்ட வேலையை ஈஸியா முடிச்சு தந்துட்டார்" என்று பவித்ரனிடன் முணுமுணுக்க, "நீ மண்டகாய் தான்... எப்படி கதைச்சா எப்படி சரி வரும் எண்டு நல்லா தெரிஞ்சு இருக்கு உனக்கு" என்று சொன்னான் அவன்.
புருஷோத்தமன் அதிர்ந்து விட்டார்.
"என்ன கதைச்சிட்டு இருக்கா? அவனை கல்யாணம் கட்ட போறியா என்ன?" என்று கேட்க, அவரை ஏறிட்டு பார்த்தவளோ, "அவர் என்னை கல்யாணம் கட்டுறேன் எண்டு தான் சொல்றார், எனக்கு மரியாதையான வாழ்க்கை கிடைக்கும், அம்மா போல நான் சீரழிய வேண்டி இருக்காது" என்றாள்.
எவ்வளவு பாதிக்கப்பட்டு இருந்தால் இப்படி ஒரு வார்த்தை அவள் வாயில் இருந்து வந்து இருக்கும்?
புருஷோத்தமன் வாயடைத்து போய் விட, "இனியும் விளக்கம் வேணுமா என்ன?" என்று கிண்டலாக கேட்டுக் கொண்டே, ஜனார்த்தனன் எழுந்து கொள்ள, அவனை முறைத்த புருஷோத்தமனோ, "இவன் உன்னை கஷ்டப்படுத்த தான் போறான், சொன்னா கேளு" என்றார்.
"இது என்ட வாழ்க்கை, நான் முடிவு பண்ணுறேன்" என்றாள் அவள் அழுத்தமாக அவர் கண்களை பார்த்துக் கொண்டே.
புருஷோத்தமனோ அவளை முறைத்து விட்டு, பவித்ரனை பார்த்தவர், "நீ வா, எக்கேடோ கெட்டு போகட்டும்" என்று சொல்லி விட்டு வெளியேற பவித்ரனும் இதழ் குவித்து ஊதிக் கொண்டே தலையசைப்புடன் அங்கிருந்து விடைபெற்று சென்றான்.
நாராயணிக்கு அங்கே நிற்கவே முடியவில்லை...
விறு விறுவென அறைக்குள் சென்று விட்டாள்.
கோதாவரிக்கு மகனை பற்றி புருஷோத்தமன் மோசமாக பேசிக் கொண்டே இருந்த ஆதங்கம் தேங்கி நிற்க, "அவர் ஏன் ஜனாவை பத்தி அப்படி கதைச்சிட்டே இருந்தார்" என்று கனகசிங்கத்திடம் கேட்க, "உன்ட பிள்ள மட்டும் என்னவாம்? ரெண்டு பேருக்கும் வாய் சரி இல்ல" என்றார்.
ஜனார்த்தனனோ, "அம்மா, அடுத்த மாசம் முகூர்த்தம் இருக்கா எண்டு சாஸ்திரியார்ட்ட கேளுங்க" என்றார்.
"அடுத்த மாசமா? அந்த பிள்ளை படிக்க வேணாமா?" என்று கோதாவரி கேட்க, "அவள் படிக்கட்டுமே, கல்யாணம் கட்டிட்டு படிக்கட்டும்" என்று சொல்லி விட்டு, அவன் வேலையை பார்க்க கிளம்பி விட்டான்.
குளித்து விட்டு, கண்ணாடி முன்னே அமர்ந்து இருந்த நாராணிக்கு மனம் எல்லாம் அழுத்தமாக இருந்தது...
புருஷோத்தமன் மேல் இருந்த கோபத்திலும், இனி நிர்மலா மனதை கஷ்டப்படுத்த கூடாது என்கின்ற எண்ணத்திலும் திருமணத்துக்கு சரி என்று சொல்லி விட்டாள்.
ஆனால் அவனுடன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியவே இல்லை...
புருஷோத்தமன் தயவில் வாழ அவளுக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்லை... நிர்மலாவின் மனநிலையை ஒரு பெண்ணாக அவளுக்கு உணரக் கூடியதாக இருந்தது.
புருஷோத்தமனை விட ஜனார்த்தனன் பரவாயில்லை என்று தான் அவளுக்கு தோன்றியது...
அவன் வார்த்தைகள் தாறுமாறாக இருந்தாலும், உறவுகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றானே... நிர்மலாவை ஏமாற்றிய ஒரே காரணத்துக்காக இன்று வரை புருஷோத்தமனுடன் சரியான உறவை அவன் கொண்டு சொல்லவில்லையே... இதனை விட என்ன தகுதி அவனுக்கு இருந்து விட போகின்றது?
அதுவே அவளுக்கு பெரிய நிம்மதி தான்...
ஆனாலும் அவசரப்பட்டு முடிவு சொல்லி விட்டோமோ என்கின்ற நெருடல் வேறு...
படித்து முடிய தானே திருமணம், அதற்குள் எது வேண்டும் என்றாலும் மாறலாம் என்கின்ற நம்பிக்கை அவளுக்குள் இருக்க, 'இப்ப இத நினச்சு மண்டையை குழப்ப வேணாம்' என்று முடிவெடுத்தவள் அப்போது அறியவில்லை, அவன் திருமண வேலைகளை அக்கணமே பார்க்கவே தொடங்கி விட்டான் என்று...
அவன் வேகம் எப்படி இருந்தது என்றால், பவித்ரனுக்கு அழைத்து, "இந்த சனிக்கிழமை பேங்க் ல இருப்பா தானே" என்று கேட்டான்.
"ஓம், ஹாஃப் டே தானே" என்று அவன் சொல்ல, "ஃபிக்ஸ்ட் ல இருக்கிற காசு எடுக்கணும், நகை வாங்கணும்" என்று சொன்னான்...
பவித்ரனுக்கு புரிந்து விட்டது...
"என்னடா இவ்வளவு அவசரமா?" என்று கேட்க, "இங்க பாரு அவள் ஏதோ உன்ட அப்பா மேல இருக்கிற கோபத்தில் சரி எண்டு சொல்லி இருக்காள், முடிவு எப்ப வேணும் எண்டாலும் மாறலாம், அதுக்குள்ள நான் அவளுக்கு தாலி கட்ட நினச்சு இருக்கேன்" என்று அவள் மனதை அவன் சரியாக கணித்து சொல்ல, "நீ சரியான கில்லாடி" என்று சொல்லி இருந்தான் பவித்ரன்...
இதே சமயம், வீட்டுக்கு வந்த புருஷோத்தமன் அறைக்குள் நுழைய, அவரது சோர்ந்த முகத்தை கவனித்த நிர்மலாவோ, "என்ன பிரச்சனை?" என்று பவித்ரனிடம் கேட்டார்...
"நாராயணிய ஜனார்த்தனன் வீட்டுக்கு கூட்டி போனான் எல்லா" என்று அவன் கேட்க, "ஓம், காலைல தான் மச்சாள் சொன்னாவு" என்றார் அவர்...
"கல்யாணம் கட்ட போறானாம்" என்று பவித்ரன் சொல்ல, அவரோ, "அவனுக்கு திடீரெண்டு என்ன நடந்தது?" என்று அவர் அதிர்ந்தார்.
"அத அவன்ட்ட தான் கேட்கோணும், அப்பாவுக்கு விருப்பம் இல்லை, அதான் அவனோட சண்டையா இருக்கு" என்று சொன்னான்...
நிர்மலாவோ பெருமூச்சுடன், "உன்ட அப்பா அந்த பிள்ளைக்கு எங்க கல்யாணம் பேச போறாராம்? எவன் வந்து முடிப்பான்?" என்று கடுப்பாக கேட்டு விட்டு நகர, "அந்த பிள்ளைல உங்களுக்கு கோபம் இல்லையாம்மா?" என்று மனதில் பட்டதை கேட்டு விட்டான்...
அவரிடம் மௌனம்...
"ஜனா கல்யாணம் கட்டுறது உங்களுக்கு ஒரு மாதிரி இல்லையா?" என்று கேட்க, அவன் கலங்கிய விழிகளுடன் பார்த்தவர், "அந்த பிள்ளை ல உன்ட அப்பா உரிமை கொண்டாட கூடாது, அது மட்டும் தான் என்ட பிரச்சனை, ஜனாட பொஞ்சாதியை நான் ஒண்டும் சொல்ல போறது இல்ல" என்றார் தெளிவாக...
தாயின் தெளிவு அவனுக்கே ஆச்சரியம் தான்...
அவர் அருகே வந்து அவரை அணைத்துக் கொண்டவனோ, "நீங்க சரியான தெளிவான ஆள்" என்று அவர் விழிகளை பார்த்துக் கொண்டே சொல்ல, சட்டென கண்ணில் வழிந்த தனது கண்ணீரை துடைத்துக் கொண்டவரோ, மென் சிரிப்புடன் அவனை கடந்து சென்றார்...
அந்த புன்னகையின் வலியை அவனும் அறிவான்...