அத்தியாயம் 10
அன்னலக்ஷ்மி பதறி எழ, பூங்கோடிக்கு அதிர்ச்சியும் அழுகையும்...அவள் நம்பிக்கையே பொய்த்து விட்டதே...
'முட்டாள் ஜனங்கள்' என்று அவள் வாயாலேயே சொல்லி விட்டாளே.
பதறி எழுந்த அன்னலஷ்மியின் முடியை பிடித்து ஆட்ட வேறு தொடங்க, "விடும்மா" என்று தினேஷ் தான் அவளை இழுத்து பிடித்தான்...
"என்ன விடுங்க, இவளை கொன்னுட்டு ஜெயிலுக்கு போறேன்... நான் முட்டாளா? இவளை நம்பி காலுல எல்லாம் விழுந்தேனே" என்று புலம்பிக் கொண்டே மீண்டும் அடிக்க தாவ, 'இவளை சாஃப்ட்ன்னு நினச்சா பயங்கரமா இருப்பா போல' என்று நினைத்துக் கொண்டே, "பிழைச்சு போகட்டும் விடு" என்றான்...
"இல்ல அவ இங்க இருக்கவே கூடாது" என்று பூங்கோடி கத்த, "சரிம்மா இங்க இருந்து கிளம்பிடுறேன், சத்தம் போட்டு அடி வாங்கி எல்லாம் தராதே" என்று அன்னலக்ஷ்மி கெஞ்ச ஆரம்பித்து விட, பூங்கோடிக்கு மனமே ஆறவில்லை...
தன்னை பற்றி இருந்த தினேஷை உதறி தள்ளியவள், அருகே இருந்த கொள்ளி கட்டையை தூக்கிக் கொண்டே அடிக்க செல்ல, "தினேஷு என்னை காப்பாத்து டா" என்று சொல்லிக் கொண்டே, அவன் பின்னே பதுங்கிக் கொண்டாள் அன்னலக்ஷ்மி...
பூங்கோடியோ, "தள்ளுங்க, அவ தலைலயே போடுறேன்" என்று சொன்னபடி கொள்ளிக் கட்டையை ஓங்க, "கொஞ்சம் சும்மா இரு" என்று சொல்லி, அதனை பறித்து எடுத்த தினேஷ், "நீ முதல் வெளிய வா" என்றபடி பூங்கோடியை இழுத்து சென்றான்.
"உன்னை சும்மா விட மாட்டேன் டி, என்னையே காலுல விழ வச்ச தானே" என்று திட்டிக் கொண்டு தான் பூங்கோடி செல்ல, "அப்பா, ஜஸ்டு மிஸ்" என்று தன்னை சுதாரித்துக் கொண்டாள் அன்னலக்ஷ்மி.
பூங்கோடிக்கு அழுகையும் ஆத்திரமும்...
அவளை இப்படி முட்டாள் ஆக்கி இருக்கின்றாள் என்கின்ற வெறி வேறு...
காரை கூட ஓட்ட முடியவில்லை.
"நான் ட்ரைவ் பண்ணுறேன், கீயை கொடு" என்று சொல்லிக் கொண்டே, தினேஷ் தான் காரை ஓட்டினான்...
அவளை அழைத்துக் கொண்டு கடற்கரை ஓரமாக வந்து காரை நிறுத்தினான்...
பெரிதாக சன நடமாட்டம் இருக்கவில்லை.
பூங்கோடி முகத்தை மூடி அழ ஆரம்பித்து விட்டாள்.
"இப்போ எதுக்கு அழுற?" என்று கேட்டான்.
"முட்டாள் ஆகி இருக்கேனே, அது தான் அழுறேன்" என்றாள்.
"சரி அவ பின்னாடி எதுக்கு போக ஆரம்பிச்ச?" என்று கேட்க, "எனக்கு காலேஜ் ல எக்ஸாம் இருந்திச்சு... பெருசா படிக்கல, ஃபெயில் ஆயிடுவேன்னு பயந்துட்டே இருந்த என்னை அவ கிட்ட என் ஃபிரென்ட் தான் அழைச்சுட்டு போனா, எக்ஸாம் போக முதல் போய் அவளை கும்பிட்டுட்டு போனேன், எக்ஸாம் ல எல்லாமே எனக்கு தெரிஞ்ச கேள்வி வந்து பாஸ் ஆயிட்டேன்... அதுல இருந்து ஒரு நம்பிக்கை வந்திச்சு... அவ பேசி பேசியே, என்னை பைத்தியக்காரி போல சுத்த விட்டுட்டா, இன்னைக்கு அவ வாயாலேயே கேட்கும் போது எவ்ளோ கோபம் வந்துச்சு தெரியுமா?" என்று கேட்டாள்.
தினேஷோ, "ஏதோ ஒரு லக் ல பாஸ் பண்ணி இருக்க, உடனே அவ கிட்ட க்ரெடிட் கொடுக்கலாமா? எல்லாத்துக்கும் மேல இவ்ளோ படிச்ச உன்னையே ஏமாத்தி இருக்கா, அப்போ மத்தவங்கள யோசி" என்றான்...
"ம்ம், அம்மாவும் அண்ணாவும் எப்போவும் சொல்வாங்க, நான் தான் கேட்கல, எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும், அவ க்ரூப் ல சேருறதுக்கு நான் தவம் லாம் பண்ணுனேன்... கல்யாணம் வேணாம்னு முடிவெல்லாம் எடுத்தேன்" என்றாள்.
"ஆஹ், அவளே மூணு நாலு கல்யாணம் பண்ணி இருக்காளே" என்றான்.
"ஆத்தா பண்ணும், பக்தை பண்ண கூடாதுனு லூசு தனமா இருந்தேன்" என்று சொல்ல, அவன் சத்தமாக சிரிக்க ஆரம்பித்து விட்டான்.
"இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க?" என்று சிணுங்களாக அவள் கேட்க, அவனோ, "உன் வாழ்க்கையையே ஆத்தாவுக்கு அர்ப்பணிக்கலாம்னு இருந்து இருக்க" என்றான்.
"ம்ம்" என்றாள் முகத்தை சோர்வாக வைத்துக் கொண்டு.
"சரி விடு, இனி சரியா வாழ்ந்திடலாம்" என்று அவன் சொல்ல, "அது சரி, அவ ஏன் உங்க கால் ல விழுந்தா?" என்று கேட்டாள்.
கொஞ்சம் திணறி விட்டான்.
"அது வந்து" என்று தடுமாறியவனுக்கு மறைக்க மனம் இல்லை.
ஷாருக்கானை அடுத்து இவனும் உளற ஆரம்பித்து விட்டான்...
பூங்கோடி அதிர்ந்து வாயில் கையை வைக்க, "உன் அம்மா கிட்ட சொல்லிடாதே ப்ளீஸ்" என்றான்.
"அடப்பாவிகளா?" என்று அவள் சொல்ல, "பேசிக் ஆஹ் நான் லாம் ரொம்ப நல்ல பையன்" என்றான்...
"ம்ம் தெரியுது தெரியுது, அண்ணாவுக்காக சும்மா இருக்கேன்" என்றாள் அவனை முறைத்துக் கொண்டே.
"தேங்க்ஸ்" என்று அவன் சொல்ல, "இது எங்க போய் முடிய போகுதோ?" என்று புலம்பி இருந்தாள்.
அதனை தொடர்ந்து வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள்...
வீட்டுக்கு வந்ததும் வராததுமாக அவள் செய்த முதல் வேலை, மாட்டி இருந்த அன்னலஷ்மியின் புகைப்படங்களை தூக்கி குப்பையில் போட்டது தான்...
'இவளுக்கு என்ன புதுசா ஞானம் பிறந்து இருக்கு' என்று வித்யா நினைத்துக் கொண்டாள்.
இவர்கள் நிலை இப்படி இருக்க, அலுவலகத்தில் அமர்ந்து இருந்தான் சிம்மரசபாண்டியன்...
ராகினி வீட்டுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகப் போகின்றன...
அவள் இப்படி தாக்கு பிடிப்பாள் என்று அவன் நினைத்து கூட பார்க்கவில்லை...
சில சொதப்பல்கள் செய்தாலும் நின்று பிடித்தது பெரிய விஷயம் என்று தோன்றியது.
அவள் மீது காதலும் அவனுக்கு துளிர்விட்டு இருக்க, ஆறு மாதங்களில் தன்னை விட்டு போய் விடுவாளோ என்று பதட்டம் இப்போதே உருவாக ஆரம்பித்து இருந்தது.
இன்டெர்காமை எடுத்து, தீபனை அழைத்தான்.
அவனும் அறைக்குள் வர, "ராகினி கிட்ட நிறைய சைன் வாங்குனோம் ல" என்றான்.
"ம்ம், சில ப்ளாங் பேப்பர்ஸ் ல கூட வாங்குனோம்" என்று சொல்ல, "நான் சொல்றத பண்ணனும்" என்றான் சிம்மன்.
"என்ன சார் பண்ணனும்?" என்று தீபன் கேட்க, "எனக்கும் அவளுக்கும் லீகல் ரெஜிஸ்ட்ரேஷன் டாகுமெண்ட் பிரிபெயார் பண்ணனும், எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை" என்றான்.
தீபன் அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டே, "ஆறு மாசத்துல துரத்தி விடுறேன்னு சொன்னீங்க" என்றான்.
"இப்போ வாழ்க்கை முழுக்க கூடவே வச்சு இருக்க தோணுது" என்றான்...
தீபனும் மென் சிரிப்புடன், "அப்போ திருட்டு கல்யாணமா?" என்று கேட்க, "ம்ம், பெண்ணுக்கே தெரியாத ஒரு திருட்டு கல்யாணம்" என்றான் கண்களை சிமிட்டி.
"நீங்க பலே கில்லாடி தான் சார்" என்று அவன் சொல்ல, "பிடிச்சதை அடையுறது தப்பில்லேயே" என்றான் சிரித்துக் கொண்டே...
அவளுக்கு சிம்மரசபாண்டியனுடன் திருமணம் ஆக போகின்ற விஷயம் அவளுக்கே தெரியாமல், காய்கறிகளை வெட்டிக் கொண்டு இருந்தாள் ராகினி...
அவளை தேடி வந்த முருகனோ, "முழு மருமகளாவே மாறிட்டியே அக்கா" என்று சொல்ல, அவனை முறைத்தவள், "வாங்க போற காசுக்கு வேலை பாக்கிறேன் டா" என்றாள்.
"சரி தான்" என்று அவன் சலிக்க, "எங்க உன் புருஷன்?" என்று ராகினி கேட்க, "அவன் இப்போ லாம் என் கூட இருக்கிறதே இல்லை, அந்த காந்தினி பொண்ணு கூடவே சுத்திட்டு இருக்கிறான்" என்றான்.
"சுத்துறதோட நிறுத்திக்க சொல்லு, ஏதாவது எடக்கு முடக்கா உளறி வச்சான், சாவடிச்சிடுவேன்" என்று சொன்னவள் அறியவில்லை, அவன் உளறி மட்டும் அல்ல, எடக்கு முடக்காக நிறையவே செய்து இருக்கின்றான் என்று.
ராகினியுடன் பேசி விட்டு வந்த முருகனோ, கொடியில் காயப்போட்ட தனது உடைகளை தேடினான்...
காணவே இல்லை...
அந்த வழியால் சென்ற பெண்ணிடம் சைகையில் கேட்க, அவளோ, "ஆஹ் ட்ரெஸை கேக்கிறீங்களா? அது உங்களோடதா? நான் தான் வனிதா அம்மவோடதுன்னு நினச்சு அவங்க ரூம் ல போட்டுட்டு வந்துட்டேன், ரெண்டு பேரும் பென்சில் போல இருந்ததால் வந்த கன்ஃபியூஷன்" என்றாள்.
'பென்சிலா? பேச்சை பாரு' என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே, வனிதாவின் அறையை தேடி சென்றான்...
கதவு மேலோட்டமாக மூடி இருந்தது...
தட்டிப் பார்த்தான், சட்டென திறந்து கொண்டது...
கட்டிலில் அவன் அணியும் பெண்களுக்கான உள்ளாடைகள் கிடந்தன...
'அட இங்க இருக்கு, எடுத்துட்டு ஓடிடுவோம்' என்று நினைத்தவன் உடையில் கையை வைக்க, குளியலறை திறக்கப்பட்டது... வனிதா தான் தலையை நீட்டி வெளியே எட்டிப் பார்க்க, 'ஐயோ' என்று நினைத்தபடி அவளை பார்த்து வலுக்கட்டயமாக சிரித்துக் கொண்டான்.
"நீங்க எங்க இங்க?" என்று அவள் கேட்க, அவனோ உடையை காட்டினான்...
"உங்க ட்ரெஸ் ஆஹ்?" என்று கேட்டாள்.
அவனும் ஆம் என்று தலையாட்ட, "சரி வந்ததும் தான் வந்துட்டீங்க, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறீங்களா?" என்று கேட்டாள்.
அவன் புரியாமல் பார்க்க, "சோப் போட்டு விடுங்களேன், முதுகு அரிச்சுட்டே இருக்கு, இந்த காந்தினி எங்க போய் தொலைஞ்சான்னு தெரியல" என்று சொல்ல, 'சோப்பா' என்று அவன் மனதுக்குள் அதிர, "ஹெல்ப் தானே பண்ணிட்டு போங்க" என்றாள்.
'இவ வேற நிலைமை புரியாம' என்று நினைத்தபடி குளியலறைக்குள் சென்றவன், திரும்பி வந்தது என்னவோ, 'கடவுளே, கடவுளே' மோட் இல் தான்.
அவன் அப்படியே அறைக்குள் சென்று படுத்துக் கொண்டே கனவு காண ஆரம்பித்து விட்டான்...
இதே சமயம், வீட்டின் பின் புறம் நின்று இருந்த ஷாருக்கானோ இடி விழுந்த போல தனக்கு முன்னே நின்ற காந்தினியை அதிர்ந்து பார்த்தான்.
"என்னது கர்ப்பமா இருக்கியா?" என்று கேட்க, "ஆமா மாமா, இப்போ என்ன பண்ணுறது?" என்று கேட்டாள்.
வாய்ப்பு இல்லை என்று சொல்லவும் முடியாது...
நிறையவே வாய்ப்புகள் இருந்தன.
"என்னடி சொல்ற? அக்காவுக்கு தெரிஞ்சா என்னை கொன்னுடுவாங்க" என்றான்...
"நீங்க இதெல்லாம் அப்போ யோசிச்சு இருக்கனும்" என்று சொல்ல, வயிற்றை பொத்தியவன், "எனக்கு வயித்தை கலக்குது, இத பத்தி அப்புறம் பேசிக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் ஓடி வந்து கழிப்பறைக்குள் புகுந்து கொள்ள, காந்தினியோ, "இத நம்ம தனியா டீல் பண்ண முடியாது. வனிதா கிட்ட சொல்லிட வேண்டியது தான்" என்று அவளை தேடி சென்றாள்.
அவளோ அப்போது தான் குளித்து உடை மாற்றி முடித்து விட்டு தலையை வாரிக் கொண்டு அறைக்குள் நின்று இருந்தாள்.
வனிதாவிடம் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தாள் காந்தினி...
"வனி வனி பெரிய பிரச்சனை ஆயிடுச்சு" என்று சொல்ல, "என்னடி??" என்றாள் அவள்.
"ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கேன்னு நினைக்கிறன்" என்றாள்...
"என்னது?" என்று அவள் நெஞ்சில் கையை வைத்தபடி எழுந்து கொள்ள, "ம்ம்" என்றாள் தயக்கமாக.
"யாருடி காரணம்??" என்று அவள் அதட்ட, "ராகினியோட அப்பா" என்று முடிக்கவில்லை, "அந்த கிழட்டு பயலோடவா? நீ என்ன அங்கிள் லவ்வர் ஆஹ்?? அதுவும் கல்யாணம் பண்ணுன ஒருத்தர் கூட ச்ச" என்று பொறிந்து தள்ள ஆரம்பித்து விட, "கொஞ்சம் முழுசா சொல்றேன் கேளுடி, அவர் அங்கிள் எல்லாம் இல்ல... அங்கிள் வேஷம் போட்டா வாலிபன்" என்றாள் வெட்கத்துடன்.
"அட ச்ச நிறுத்து... இந்த வெட்கத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல... அதென்ன வாலிபன்?? டீடெய்ல் ஆஹ் சொல்லு" என்று கேட்க ஷாருக்கான் உளறியது எல்லாம் காந்தினி வனிதாவிடம் உளறி வைத்தாள்.
"என்னடி சொல்ற?? அப்போ அந்த அம்மா ஆம்பிளையா??" என்று கேட்க, "ம்ம்" என்றாள் காந்தினி.
"ஐயோ ஐயோ ஐயோ" என்று வனிதா சுவரில் தலையை மோத, "என்னடி என்னாச்சு?" என்றாள் காந்தினி.
"இது தெரியாம காலைல தான் அந்தம்மாவை கூப்பிட்டு குளிக்கும் போது சோப் போட வச்சேன்" என்று சொல்ல , காந்தினி வாயில் கையை வைத்துக் கொண்டாள்.
இதே சமயம் முருகனோ, "சோப் னா சோப் தான்.. என்ன வாசனை??" என்று ஒரு பக்கம் கனவு காண, ஷாருக்கானோ பத்தாவது தடவை கழிப்பறைக்குள் சென்று வந்து விட்டான்.
அவனுக்கோ உயிர் உடலில் இல்லை.
'இந்த கர்ப்பமான மேட்டரை நான் எப்படி அக்கா கிட்ட சொல்லுவேன்... குனிய வச்சு கும்முமே... முதலில முருகன் கிட்ட சொல்லலாம்' என்றபடி வெளியே வந்தவன், "முருகா" என்றபடி அவன் அருகே அமர்ந்தான்.
அவனும், "சொல்லு மச்சான்" என்க, "நான் அப்பா ஆக போறேன்" என்றான்.
"ஆமா நீ அப்பா, நான் அம்மா" என்றான் அவன்...
"நிஜமாவே அப்பா ஆக போறேன்" என்றான்.
பதறி எழுந்து அமர்ந்த முருகனோ, "நான் ஆம்பிளை டா... நமக்குள்ள அப்படி எதுவும் நடக்கலையே... கனவு கினவு கண்டியா??" என்று கேட்க, "ஐயோ இல்லடா காந்தினியும் நானும் லவ்வர்ஸ்" என்றான் வெட்கத்துடன்.
"டேய் என்னடா புதுசு புதுசா சொல்ற... இது எப்போ?? பார்க்க அம்மாஞ்சி போல இருந்துட்டு என்ன வேலை டா பார்த்து இருக்க? எனக்கு நெஞ்சே வலிக்குது மச்சி" என்று நெஞ்சை பிடித்தபடி அமர்ந்து விட்டான்.