ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 10

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 10

அறைக்குள் இருந்து நீண்ட நேரம் யோசித்தான்...

யாதவ் கிருஷ்ணா வரும் வரை காத்திருந்தான்...

யாதவ் கிருஷ்ணாவும் ஸ்கூலில் இருந்து வந்து விட்டான்...

அவனுடன் வம்சி கிருஷ்ணாவுக்கு தனியாக பேச வேண்டும்...

சந்தர்ப்பத்துக்காக காத்துக் கொண்டு இருக்க யாதவ் கிருஷ்ணாவும் சாப்பிட்டு விட்டு இளைப்பாறுவதற்காக தனது அறைக்குள் நுழைந்தவன், அப்படியே கட்டிலில் விழுந்து படுத்த நேரம் அறைக் கதவு திறக்கப்பட்டது...

யாதவ் கிருஷ்ணாவுக்கு எதுவும் கேட்காதே, அவன் அப்படியே குப்பற படுத்து இருக்க, அவன் தோளில் கையை வைத்தான் வம்சி கிருஷ்ணா...

பதறி எழுந்து விட்டான்.

"நான் தான்" என்று வம்சி கிருஷ்ணா அவனை பார்த்துக் கொண்டே சொல்ல, "என்ன?" என்று சைகையில் கேட்டான்...

அவனோ அருகே இருந்த நோட் புக்கை எடுத்து, "தேன்மொழி டீச்சர் நம்பர்" என்று எழுதினான்...

அவனுக்கு அவள் எண் மனப்பாடமாக இருந்தது...

டியூஷனுக்கு வருவது பற்றி தாயின் தொலைபேசியில் இருந்து மெசேஜ் அனுப்பி இருக்கின்றான்...

அடுத்த கணமே, அவளது தொலைபேசி எண்ணை எழுதி கொடுத்து விட, "ஓகே, நீ தூங்கு" என்று சொல்லிக் கொண்டே, நோட் புக்கில் அந்த பக்கத்தை கிழித்து எடுத்தவன் தனது அறைக்குள் நுழைந்து விட்டான்...

அறைக்குள் நுழைந்ததுமே அவள் எண்ணை தனது அலைபேசியில் பதிந்து கொண்டான்...

அவன் தலைக்குள் நிறைய விடயங்கள் ஓடிக் கொண்டு இருந்தன...

தான் செய்ய போகும் செயல் சரியா தவறா என்று தெரியவில்லை...

ஆனால் செய்ய துணிந்து விட்டான்...

தேன்மொழிக்கு மெசேஜ் எப்படி அனுப்புவது என்று தடுமாற்றம் அவனுக்கு...

மெசேஜ் பார்த்து அவள் தவறாக நினைத்து யாரிடமும் சொல்லி விடுவாளோ என்று யோசனையாகவும் இருந்தது...

மெசேஜ் அனுப்புவதா? இல்லையா? என்று யோசித்து அவன் "ஹாய், திஸ் இஸ் வம்சி கிருஷ்ணா" என்று மெசேஜ் அனுப்பவே இரண்டு மணி நேரங்கள் கடந்து விட்டன...

தேன்மொழி அந்த நேரம் சோகமாக கட்டிலில் படுத்து இருந்தாள்.

மனம் அவளுக்கு எதிலுமே லயிக்கவில்லை...

தனது அலைபேசியில் மெசேஜ் டோனை கேட்டவளோ, அதனை எடுத்து பார்த்தாள்.

வாசித்த மெசேஜை அவள் நம்பவில்லை...

கண்களை கசக்கி பார்த்தாள்...

ஆம் வம்சி கிருஷ்ணா தான் அனுப்பி இருக்கின்றான்...

அவன் தான் அனுப்பினானா? என்று அவளுக்கு சந்தேகம்...

பதில் அனுப்புவதா வேண்டாமா? என்று தயக்கம்...

பத்து நிமிடங்களை அந்த மெசேஜையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவனும் அவள் பதிலை எதிர்பார்த்து களைத்து போனான்...

அவள் நம்பவில்லையோ என்று அவனுக்கு இப்போது தோன்ற ஆரம்பித்தது...

அடுத்த கணமே அவளுக்கு அழைத்து இருந்தான்...

அவளால் பேச முடியாது... ஆனால் கேட்க முடியும் தானே...

அவளுக்கோ இதயம் வேகமாக துடித்தது...

அவன் தானா என்று ஒரு தடுமாற்றம்...

அலைபேசியை எடுத்து காதில் வைத்தாள்.

"ஹெலோ நான் தான் வம்சி... கொஞ்சம் ரிப்லை பண்ணு, நிறைய பேசணும்" என்று சொன்னவன் வைத்து விட்டான்...

அவளுக்கோ அவன் கொடுத்த அதிர்ச்சியில் மூச்செடுக்க சிரமமாக இருந்தது...

ஆழ்ந்து மூச்சை எடுத்துக் கொண்டவளுக்கு என்ன உணர்வு என்று தெரியவில்லை...

பரவசம், நெகிழ்வு, பயம் என்று பல்வேறு உணர்வுகள்...

அவன் குரலை கேட்டதுமே உடல் எல்லாம் மின்சாரம் பாய்ந்த போல உணர்ந்தாள்...

தன்னை கஷ்டப்பட்டு நிலைப்படுத்திக் கொண்டே, "சொல்லுங்க" என்று பதில் அனுப்பினாள்...

"உன் கூட தனியா கொஞ்சம் நேர்ல பேசணும்" என்றான்...

அவள் மறுப்பாளா? இது எல்லாம் அவள் கனவில் நினைத்தவை தானே... நிஜத்தில் நடந்து கொண்டு இருக்கின்றது...

அவன் என்ன சொன்னாலும் தலையாட்டும் நிலையில் தான் இருந்தாள்.

ஆனால் இப்போது எப்படி சந்திப்பது என்று தவிப்பு அவளுக்கு...

"அம்மா வீட்ல இருக்காங்க" என்று பதில் அனுப்பினாள்...

"வெளிய போக மாட்டாங்களா?" என்று அவன் கேட்டான்...

நேரத்தைப் பார்த்தாள், நான்கு அரை மணியை சுவர் கடிகாரம் காட்டியது...

திருமண பத்திரிகை கொடுக்க வெளியே செல்ல வேண்டும் என்று அவர் சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது...

எழுந்து முன்னறைக்கு சென்று பார்த்தாள்.

மகாலக்ஷ்மி வெளியே செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்...

அங்கே நின்ற தேன்மொழியை பார்த்தவர், "நான் கார்ட் கொடுத்துட்டு வந்திடுறேன்... பத்திரமா இருந்துக்கோ" என்று சொல்லி விட்டே செல்ல, இவளும் தலையை சம்மதமாக ஆட்டி விட்டு தனது அறைக்குள் நுழைந்தவள் அலைபேசியை எடுத்து, "அம்மா இப்போ தான் வெளிய போனாங்க" என்றாள்.

அவனும், "ஓகே, அப்போ நான் ஒரு பத்து நிமிஷத்துல உங்க வீட்டு ஜங்க்ஷன் ல இருக்கிற மரத்துக்கு கீழ கார்ல நிற்பேன்... வந்துடு" என்று மெசேஜ் அனுப்பி விட்டு தொலைபேசியை பாக்கெட்டில் வைத்தவன், கார் கீயை எடுத்துக் கொண்டே அவளை சந்திக்க புறப்பட்டு விட்டான்...

அவளோ அலைபேசியை வெறித்துப் பார்த்து விட்டு, தனக்கு முன்னே இருந்த கண்ணாடியை பார்த்தாள்.

இதுவே வேறு யாரும் அழைத்து இருந்தால் சென்று இருப்பாளா? என்று கேட்டால் நிச்சயமாக பதில் இல்லை தான்... அவன் அழைத்ததும் எங்கே இருந்து இந்த தைரியம் வருகின்றது என்று அவளுக்கு தெரியவே இல்லை...

இன்னும் கொஞ்ச நாளில் திருமணத்தை வைத்துக் கொண்டே, இன்று மனம் கவர்ந்தவனை பார்க்க செல்கின்றாள்... தவறு என்று தெரிந்தாலும் தவிர்க்க முடியவில்லை...

அவள் காதல் அவனை நோக்கி இழுத்து சென்றது...

நான்கைந்து சுடிதார்களின் நடுவே ஒரு சுடிதாரை தெரிந்து எடுத்தாள்... புடவை அணிய அவளுக்கு நேரம் இல்லை... பத்து நிமிடத்தில் வந்து விடுவதாக சொல்லி இருக்கின்றான்... அதனால் அவசரமாக ஆயத்தமானாள்...

தலையை அழகாக பின்னி வட்டமான பொட்டையும் நெற்றியில் வைத்தவள், தன்னை ஒரு தடவை கண்ணாடியில் பார்த்து விட்டு கைப்பையுடன் வெளியேறி சென்றாள்.

அவள் வாசலுக்கு சென்ற சமயம், அந்த வழியால் வந்த பக்கத்துக்கு வீட்டு பெண்ணோ, "தேன்மொழி எங்கம்மா போற?" என்று கேட்டார்...

அவளுக்கு பதட்டமாகி விட்டது...

சட்டென வியர்த்தது...

"கடைக்கு" என்று சைகையில் சொல்ல, "கல்யாணத்தை வச்சிட்டு வெளியே அலையாதே... சீக்கிரம் வா..." என்று அவரும் அறிவுரை சொல்லி விட்டு கடந்து சென்றதும் தான் அவளுக்கு மூச்சே வந்தது...

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு விறு விறுவென நடந்து சென்றாள்.

தெரு முனைக்கும் வந்து விட்டாள்.

அங்கே இருக்கும் மர நிழலில் வம்சி கிருஷ்ணாவின் கார் நின்றது...

வம்சி கிருஷ்ணாவோ காருக்குள் அமர்ந்து கொண்டே, பக்கவாட்டு கண்ணாடியூடு அவள் நடந்து வருவதை பார்த்தவன், கார் கண்ணாடியை இறக்கினான்...

அவளும் கார் அருகே வந்து அவனை உள்ளே எட்டிப் பார்க்க, அவனோ உள்ளே ஏறு என்றான்...

சற்றும் யோசிக்கவில்லை அவள்...

ஏறி அமர்ந்து விட்டாள்.

அவன் மேல் கொண்டிருக்கும் பைத்தியகார தனமான காதலின் வெளிப்பாடு அது...

தான் செய்வது சரி தவறு என்பதை தாண்டி அவன் சொன்னதும் செய்து விட வேண்டும் என்கின்ற முனைப்பு அவளிடம்...

பக்கவாட்டாக திரும்பி அவனை பார்த்தாள்.

முதல் முறை இவ்வளவு நெருக்கத்தில் பார்க்கிறாள்.

அவன் அருகாமையில் அடி வயிற்றில் ஏதோ உருள்வது போன்ற உணர்வு அவளுக்கு...

அவனோ அவளை பார்க்காமல், முன்னால் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தான்...

அவளிடம் எப்படி பேச ஆரம்பிப்பது என்ற தயக்கம் அவனுக்கு...

தன்னை தயார்படுத்திக் கொண்டு இருந்தான்...

அவளுக்கோ அவனை ரசிக்க கிடைத்த அரிய வாய்ப்பு இது...

சற்று தாடி மீசை அதிகமாகவே வளர்ந்து இருந்தது...

அவன் தன்னை கண்ணாடியில் பார்த்தால் தானே மெருகேற்றிக் கொள்வதற்கு...

தலையும் சற்று கலைந்து இருந்தது...

அவன் தோற்றமே ஏதோ அழுத்தத்தில் இருக்கின்றான் என்று உணர்த்தியது...

'ஏன் இவர் முகம் இவ்ளோ சோகமா இருக்கு' என்று நினைத்தவளுக்கு அப்போது தெரியவில்லை அவன் சோகத்துக்கே அவள் தான் காரணம் என்று...

அவனோ பெருமூச்சு எடுத்துக் கொண்டே, தலையை ஒற்றைக் கையால் கோதியபடி அவளை திரும்பி பார்த்தான்...

அதையும் ரசித்தாள் அவள்... அவன் சின்ன சின்ன அசைவுகள் எல்லாம் ரசித்தாள்...

அவன் மூச்சு காற்றை கூட ரசித்தாள்...

வம்சி கிருஷ்ணாவோ இப்போது நோக்கியது என்னவோ அவள் விழிகளை தான்...

அவளும் அவனை தான் இமைக்காமல் பார்த்து இருந்தாள்...

"நான் கேக்கிறது தப்புன்னு தெரியும்... ஆனாலும் கேட்க வேண்டிய சூழ்நிலைல இருக்கேன்... என்னை கல்யாணம் பண்ணிக்க முடியுமா?" என்று கேட்டான்...

அவளுக்கு அவன் கேட்டதை நம்பவே முடியவில்லை...

கனவாக இருக்குமோ என்று தோன்றியது...

அதிர்ச்சியில் கண்களை அகல விரித்துக் கொண்டாள்.

ஒற்றைக் கையால் அடுத்த கையில் மெதுவாக கிள்ளிப் பார்த்தாள்...

கனவில்லை நிஜம் தான்...

அவனும் அதனை கண்டு கொண்டான்...

அவள் விரல்களை பார்த்து விட்டு இப்போது அவள் முகத்தைப் பார்த்தவன், "நிஜமா தான் கேக்கிறேன்" என்றான்...

அவளுக்கு புரியவில்லை...

அது அவள் பார்வையிலேயே அவனுக்கு புரிந்தது...

"ஓகே ஓபன் ஆஹ் சொல்றேன்... என் தம்பி யாதவ் கிருஷ்ணா நீ போனதுல இருந்து ரொம்ப டிஸ்டர்ப்ட் ஆஹ் இருக்கான்... சொல்லி கொடுக்க வந்த மாஸ்டர் தப்பா பேசிட்டாருன்னு தண்ணி க்ளாஸ் எடுத்து அவர் தலையை உடைச்சுட்டான்" என்று சொல்ல, அவளோ அதிர்ந்து வாயில் கையை வைத்துக் கொண்டாள்.

"இதுவரைக்கும் அவன் என் கிட்ட எதுவும் கேட்டது இல்லை... அவன் என் கிட்ட முதன் முதலில் கேட்டது நீ திரும்ப க்ளாஸுக்கு வரணும்னு தான்... உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லியும் அவன் சொன்னான்... நீ அண்ணியா வரணும்னு அவன் ஆசைப்படுறான்... அப்போ அவன் புரியாம பேசுறான்னு நினச்சேன்... உன் அம்மா கிட்ட பேசி மறுபடி டியூஷனுக்கு உன்னை அழைச்சா ஓகேன்னு யோசிச்சேன்... ஆனா உன் அம்மா சம்மதிக்கல... நீ கல்யாணம் பண்ணிக்க போற ரஞ்சன் கிட்டயும் பேசுனேன்... அவனும் சம்மதிக்கல... கடைசியா யாதவ் கேட்டதையே பண்ணிடலாம்னு முடிவெடுத்து இருக்கேன்... நான் என்னோட சுயநலத்துக்காக தான் இந்த கல்யாணம் பண்ணிக்க போறேன்... அத இப்போவே சொல்லிடுறேன்" என்று அவன் பேச, அவனை இமைக்காமல் பார்த்து இருந்தவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவே இல்லை...

அவள் மௌனத்தை அவன் பிடிக்கவில்லை என்று நினைத்து விட்டான் போலும்...

"இதுல உனக்கும் பெனிஃபிட் இருக்கு... நீ எனக்கு ரெண்டாம் தாரம் எல்லாம் இல்லை... உன் இஷ்டப்படி நீ வேலைக்கு போகலாம், அதுக்கு நான் தடை சொல்ல மாட்டேன்... உன் வாழ்க்கையை நீ வாழுறதுக்கான எந்த கட்டுப்பாடும் என் கிட்ட இருந்து வராது" என்றான்...

அவன் இவ்வளவு கஷ்டப்பட்டு விளக்கம் கொடுத்து இருக்கவே தேவை இல்லை என்று அவனுக்கு அப்போது புரியவில்லை...

மேலும் தொடர்ந்தவனோ, "இதுல நெகட்டீவ்ஸ் உம் இருக்கு... எல்லாத்தையும் வெளிப்படையாவே சொல்லிடுறேன்... உன் கிட்ட எதுவும் மறைக்க நான் விரும்பல... நான் யாதவ்வுக்காக தான் இப்போ கல்யாணம் பண்ணுறேன்... எனக்காக பண்ணிக்கல... என் மனசுல ஒருத்தி இருக்கா... அவளை எப்போவும் நான் மறக்க போறது இல்லை... ஆனா உன் கூட நான் வாழ தொடங்கும் போது அவ நினைவு நம்ம வாழ்க்கையை பாதிக்காத போல இருக்கணும்... சோ உன் கூட லைஃப் ஸ்டார்ட் பண்ண எனக்கு டைம் வேணும்... நாம பண்ணிக்க போறது திருட்டு கல்யாணம்... சோ என் வீட்ல நிறைய கெடுபிடி இருக்கும்... அத நீ தான் ஹாண்டில் பண்ணிக்கணும்... ஒவ்வொரு முறையும் உன் பின்னாடி வந்து என்னால உனக்காக பேசிட்டு இருக்க முடியாது... இதெல்லாம் சொல்லாம உன்னை ஏமாத்தி எனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை... அது தான் எல்லாமே சொல்லிட்டேன்... இப்போ சொல்லு, கல்யாணம் பண்ணிக்கலாமா? முடியாதுன்னா இறங்கி போயிடு... நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்... உனக்கு இஷ்டம் இல்லாம நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பல" என்று அவள் விழிகளை பார்த்துக் கொண்டே சொன்னான்...

அவளுக்கோ கண்கள் சட்டென்று கலங்கி விட்டன...

என்ன சொல்வது என்று தெரியவில்லை... தடுமாறி போனாள்...

அவன் மேல் காதல் கொண்ட மனமோ சம்மதம் சொல்வதற்கு அவளை உந்தியது...

ஆனால் இத்தனை பேரை மீறி திருமணம் செய்வதால் பின்னாளில் உண்டாக போகும் மனக்கசப்பை நினைத்து ஒரு பக்கம் பயம் உண்டானது...

எந்த பக்கம் போவது என்று தெரியவில்லை...

அவளால் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வழிந்தது...

அவனோ அவள் கண்ணீரை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "ஏதாவது சொல்லு தேன்மொழி" என்றான்...

கண்ணீரை துடைத்தவளோ அடுத்த கணமே கார் கதவை திறந்து கொண்டே இறங்கினாள்...

அவனுக்கோ ஏமாற்றம்...

பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டே, தலையை அழுந்த கோதியவன் இருக்கையில் கண் மூடி சாய்ந்து அமர்ந்தான்...

அவன் காரை விட்டு அவள் நான்கு அடிகள் விலகி நடந்து இருப்பாள்...

மனம் கேட்கவில்லை...

அவள் காதல் அவளை தேடி வந்து இருக்கின்றது...

அவள் பொக்கிஷம் அவளிடத்தில் அவளே எதிர்பாராமல் கையில் கிடைத்து இருக்கின்றது... உதறி விட்டு செல்கின்றாள்...

வலிக்கின்றது... அடுத்த பாத சுவட்டை நிலைத்தில் வைக்க முடியவில்லை...

இனி அவன் பாடலை கேட்க முடியாது என்று நினைத்து வருந்தி இருக்கின்றாள்... இனி அவன் அருகே இருந்து அவன் பாடலை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்து இருக்கின்றது...

அவளே நழுவ விட்டு செல்கின்றாள்...

இது போன்ற சந்தர்ப்பம் அவளுக்கு கிடைக்குமா? என்று கேட்டால் கண்டிப்பா இல்லை என்று தான் பதில் வரும்...

வாழ்க்கையில் ஆசைப்பட்ட எத்தனையோ விஷயங்களை இழந்து இருக்கின்றாள்... அனைத்துக்கும் ஈடு கட்டும் முகமாக அவள் காதல் அவளுக்கு காலடியில் வந்து இருக்கிறது... எட்ட முடியாத உயரத்தில் இருப்பவன் அவனாக வந்து அவள் கரம் பற்ற கேட்டு கையை நீட்டி இருக்கின்றான்...

நிராகரிப்பது முட்டாள் தனம் என்று தோன்றியது...

இந்த காதல் சுயநலமானது தானே...

ஆம் அவளும் முதல் முறை சுயநலமாக யோசித்தாள்...

தன் காதலுக்காக யோசித்தாள்...

எத்தனை நாட்கள் தான் அடுத்தவர்களுக்காக வாழ்வது? அவளுக்கென்று ஆசைகள் இல்லையா? விருப்பங்கள் இல்லையா? இன்று அவளுக்காக யோசித்தாள்...

கையில் கிடைத்தவனை தொலைக்க அவளுக்கு இஷ்டம் இல்லை...

அவள் தொலைத்த உயிர் மீண்டும் தேடி வரும் போது மறுக்க முடியுமா என்ன?

அடுத்த பாத சுவட்டை வைத்தாள், ஆனால் முன்னோக்கி அல்ல, பின்னோக்கி...

வேகமாக அவன் கார் அருகே வந்து கண்ணாடி ஜன்னலை தட்டினாள்...

கண் மூடி கார் சீட்டில் சாய்ந்து இருந்தவன், சட்டென கண்களை விரித்து கார் கண்ணாடியை இறக்கினான்...

அவளோ அவனை பார்த்துக் கொண்டே, தாலி கட்டுவது போல சைகை செய்தவள், கை முஷ்டியை மடக்கி அசைத்துக் காட்டி, அவனுக்கு புரிவதற்காக தலையையும் அசைத்தாள்...

அவன் புரிந்து கொண்டான்... ஆனாலும் நம்ப முடியவில்லை...

"நிஜமா தான் சொல்றியா? கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று கேட்டான்... அவளோ மீண்டும் அழுத்தமாக ஆம் என்று தலையாட்டினாள்...

"தேங்க் காட்" என்று சொன்னவனோ, ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டபடி, "டீடெய்ல்ஸ் மெசேஜ் ல அனுப்புறேன்... நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம்... உன் அம்மா வெளிய போற நேரமா பார்த்து எனக்கு அப்டேட் பண்ணு" என்றான்...

அவளும் சம்மதமாக தலையாட்ட, அவனோ அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "தேங்க்ஸ்" என்றான்... அதற்கு அவள் என்ன தான் பதில் சொல்வாள்... மௌனமாக தலையை அசைத்து விட்டு, நடக்க ஆரம்பிக்க, அவளை பக்கவாட்டு கண்ணாடியூடு பார்த்தவனுக்கு சின்ன ஏமாற்றம்...

ஆம் அவள் சம்மதம் சொன்னதால் சின்ன ஏமாற்றமும் உண்டாகி இருந்தது...

அவளுக்கு தன் மேல் காதல் இல்லை என்பது அவன் யூகம்...

'பணம் மற்றும் புகழுக்காக சம்மதம் சொல்லி இருப்பாளோ?' என்று முதலில் யோசித்து மனதை குழப்பியவனோ, 'எதுவா இருந்தா என்ன? எனக்கு ஒரு சுயநலம் இருக்கிற போல, அவளுக்கும் இருக்கும்... அத குற்றம் சொல்ல எனக்கு தகுதி இல்ல' என்று நினைத்து அந்த குழப்பத்தை தள்ளி வைத்து விட்டு காரை கிளப்பினான்...

அவளை பொறுத்தவரை அவள் காதலின் வெற்றி இந்த திருமணம்...

அவனை பொறுத்தவரை அவன் காதலின் தோல்வி இந்த திருமணம்...
 
வம்சி ஏன் தப்பா யோசிக்குற தேன்மொழி அப்படி பணத்துக்கு ஆச படுற பொண்ணா இருந்தா யாதவ்க்கு சொல்லி குடுக்குறதுக்கு நெறைய பணம் வாங்கிருக்கலாம் ஆனா வாங்கல இதுல இருந்து தெரிய வேணாம் அவ பணத்துக்கு ஆச படுற பொண்ணு இல்லனு 😇
 
Top