அத்தியாயம் 1
கண்களை மெதுவாக திறந்தான் சிம்மன்... அவன் கைகள் கட்டப்பட்டு இருக்க, அந்த அறையை சுற்றி கண்களை சுழல விட்டவனுக்கு தென்பட்டது என்னவோ அங்கே அவனையே பார்த்துக் கொண்டு இருந்த ராகினி தான்..."எதிர்பார்க்கலை ல" என்றாள்.
அவன் புருவம் சுருங்க இல்லை என்று தலையாட்டினான்...
அவனை நோக்கி வந்தவள், "உன் அப்பா பண்ணுன வேலைக்கு உன்னை கதற கதற" என்று ஆரம்பிக்க, "கதற கதற??" என்று ஆர்வமாக கேட்டான்.
"கொல்லுவேன்னு சொல்ல வந்தேன்" என்று அவனை மார்க்கமாக பார்த்துக் கொண்டே சொல்ல, "ஓஹ் அவ்ளோ தானா??" என்று கேட்டான்.
அவனை மேலிருந்து கீழ் பார்த்தவளோ, "உன் அப்பாவுக்கு எடுத்து இப்போ வைக்கிறேன் ஆப்பு" என்றாள்.
அவன் மனமோ, "பழி வாங்குற அளவுக்கு அந்த ஆள் வேர்த்து இல்லையே... குடிச்சிட்டு கையை பிடிச்சு இழுத்து இருக்கும் போல" என்று முணுமுணுக்க, அவனை முறைத்துக் கொண்டே, "ஏய் இவன் அப்பாவுக்கு ஃபோனை போடு" என்றாள் அவளது கையாளிடம்...
அவள் கையால் தினேஷோ, "நம்பர் மேம்?" என்று கேட்க, "ஆஹ் எல்லாம் என் கிட்டயே கேளு... நீ எதுக்கு செக்ரீட்டரின்னு தண்டத்துக்கு இருக்கு... அவன் ஃபோன்ல இருக்கும்... அதுல இருந்தே ஃபோன் போடு" என்று சொல்ல, அவனும் சிம்மனின் பாக்கெட்டில் கையை விட்டு அலைபேசியை எடுத்தவன் சிம்மனின் அப்பாவுக்கு அழைத்தான்.
சிம்மனின் அப்பா தண்டாயுதமோ, "ஹெலோ" என்றார்.
லவுட் ஸ்பீக்கரில் போட்ட தினேஷோ, "உங்க பையனை கடத்தி வச்சு இருக்கோம்... பத்து கோடி கொடுத்தா விடுறோம்" என்றான்.
"இல்லன்னா" என்று கேள்வி வந்தது...
"கொன்னிடுவோம்... அவன் பிணத்தை தான் நீங்க பார்க்கணும்" என்று சொன்னான்.
தண்டாயுதமோ, "சரி நான் பிணத்தையே பார்த்துகிறேன்" என்று சொல்ல, ராகினிக்கு அதிர்ச்சி... சிம்மனுக்கு சிரிப்பு...
"தெருகோடில நிக்கிற மனுஷன் கிட்ட போய் பத்து கோடி கேட்டா அந்த ஆள் என்ன பண்ணுவார்?" என்று சொல்ல, "ஷ்ஷ்... உன் அம்மா கிட்ட பேசுறேன்" என்று சொல்லிக் கொண்டே அலைபேசியை கட் செய்தவள் எடுத்து அவன் 'அம்மா' என்று சேமித்து வைத்து இருக்கும் எண்ணுக்கு தான்.
"உங்க பையனை கடத்தி வச்சு இருக்கோம்" என்றாள்.
"சரி" என்றார் மறுமுனையில் இருந்த வள்ளி இழுவையாக...
"பத்து கோடி வேணும்" என்றாள்.
"இங்க பாரும்மா நான் இருபது கோடியா கொடுக்கிறேன்... உன் கூடவே வச்சுக்கோ... சரியான சாவு கிராக்கி அவன்..." என்று சொல்லி விட்டு வைத்து விட , ராகினிக்கு அதிர்ச்சி...
"என்னடா பெரிய மில்லியர்ன்னு சொன்னாங்க... பிச்சைக்கார குடும்பமா இருக்கு?" என்று கேட்டாள்...
"பிச்சைக்காரன் அது இதுன்னு பேசுனா எனக்கு காண்டாவும்... டீசென்ட் ஆஹ் பெக்கர்ன்னு சொல்லு" என்றான் சிம்மன்...
அப்போது தான் அங்கே ஓடி வந்த அவளது கையாள், "மேம் ஆள் மாத்தி தூக்கிட்டோம் போல" என்று சொல்ல , சிம்மனோ, "மேம் மேம் நான் போக மாட்டேன்... இங்கேயே இருந்திடுறேனே ப்ளீஸ்" என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டான்.
"ஷாட் அப்" என்று அவனுக்கு திட்டிய ராகினியோ தனது அலைபேசியை எடுத்து, அதில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்த புகைப்படத்தை பார்த்தான்...
சிம்மனின் தோற்றத்திலேயே கோர்ட் ஷூட் என்று ஒருவன் நின்று இருந்தான்...
"டேய் இவனை போல தானே இருக்கான்" என்று தினேஷிடம் காட்ட, அவனும், "அதே போல தான் இருக்கான்... ஆனா இவன் குடும்பத்தை எந்த ஆங்கில் ல பார்த்தாலும் மில்லியனரா தெரியலயே" என்று சொன்னான்.
"எனக்கும் தான் டா, அந்த இன்ஃபோர்மருக்கு செருப்பால அடிக்கணும், பெரிய மில்லியனர் பிசினஸ் மீட்டிங்குக்கு வர்றான்னு ஆசை காட்டி மோசம் பண்ணிட்டான்" என்று சொன்னபடி தனது அலைபேசியை சிம்மனை நோக்கி நீட்டியவள், "இது நீ இல்லையா?" என்று கேட்டாள்.
"யாரு மேம் இது? பார்க்க என்னை போலவே இருக்கு, கோவணம் கூட வாங்க வழி இல்லாத என்னை போய் இவன் கூட ஒப்பிடுறீங்களே" என்று சொல்ல, அவனை மேலிருந்து கீழ் பார்த்துக் கொண்டே, நெற்றியை வருடியவள், "தப்பா தூக்கிட்டோம் தினேஷ்" என்றாள்.
"இப்போ என்ன மேம் பண்ணுறது?" என்று தினேஷ் கேட்க, "அவிழ்த்து விடு, போகட்டும்" என்றாள்.
தினேஷும் சிம்மனை அவிழ்த்து விட, அவனோ ஓடி வந்து சாஷ்டாங்கமாக விழுந்தது என்னவோ ராகினியின் காலில் தான்...
"நாய்க்குட்டி போல இங்கேயே இருந்திடுறேன் மேம்" என்றான்...
"டேய் எந்திரி டா" என்று ராகினி சீற, "நீங்க சரின்னு சொன்னா தான் எந்திரிப்பேன்" என்று அவள் காலை பிடித்து விட்டான்...
"தண்டமா வச்சு சாப்பாடு போட முடியாது... சொன்னா கேளு டா... கம்பெனிக்கு இப்போ வருமானமும் இல்ல, ஏற்கனவே ஷாருக்கானுக்கு சாப்பாடு போட்டு நாங்க நட்டத்துல போய்கிட்டு இருக்கோம்..." என்று சொன்னாள் அவள்...
'பெரிய மன்னாரன் கம்பெனி முதலாளி போல பேச்சை பாரு' என்று நினைத்த சிம்மனோ, "மேம் ப்ளீஸ், என்னையும் சேர்த்துக்கோங்க, என்னை வீட்லயும் சேர்த்துக்க மாட்டேங்குறாங்க, எனக்கு எவனும் வேலையும் கொடுக்க மாட்டேங்குறான்... செத்திடுவேன்னு பயமா இருக்கு" என்று சொல்ல, அவனை மேலிருந்து கீழ் பார்த்த ராகினியோ, "என்னடா இவன்?" என்றான் தினேஷிடம்...
"சேர்த்துக்கலாம் மேம், கக்கூஸ் கழுவ ஆள் இல்ல" என்று தினேஷ் சொல்ல, அவனை முறைத்த சிம்மனோ, 'இருடா உனக்கு வைக்கிறேன் ஆப்பு' என்று நினைத்துக் கொண்டான்.
"ம்ம் இங்க எடு பிடிக்கு ஆள் கம்மியா தான் இருக்கு" என்று சொன்ன ராகினியும் சிம்மனிடம், "இங்க பாரு, உனக்கு பணம் எல்லாம் கொடுக்க முடியாது, மூணு நேரம் சாப்பாடு போடுவோம்" என்று சொன்னாள்.
"ம்ம்" என்றான்...
"இங்க எல்லா எடுபிடி வேலையும் பார்க்கணும் புரியுதா?" என்று கேட்க, அதற்கும், "ம்ம்" என்றான்...
"எங்க கம்பெனி ஆட்களுக்கு சமைச்சு போடணும்" என்றாள்.
'கம்பெனி கம்பெனின்னு கடுப்பேத்துறாளே' என்று நினைத்த சிம்மனும் சுற்றிப் பார்த்தான்.
அவனுடன் சேர்த்து அங்கே நின்றதே ஐந்து பேர் தான்...
ட்ரைவர் என்னும் பெயரில் ஒருவன்...
அவனுக்கு இனி மெலிய இடமே இல்லை...
ஒற்றைக் கையால் தூக்கி வீசி விடும் தோற்றம்...
மீசை மட்டும் தான் பெரிதாக இருந்தது... அவன் பெயரோ மீசைக்கார முருகன்...
அதனை முறுக்கி விட்டு, தன்னை வீரனாக காட்டிக் கொள்ள முயன்று கொண்டு இருந்தான்...
அவனை பார்த்து விட்டு, அடுத்து ஒருவனை பார்த்தான்...
பெரிய உருவம் தான்... சாப்பிட்டுக் கொண்டே இருந்தான்... நடக்க கூட அவனுக்கு இஷ்டம் இல்லாத அளவு சோம்பேறி வேறு... சாணியை தட்டி வைத்த போல ஒரே இடத்தில் தான் காலை ஆட்டிக் கொண்டே உட்கார்ந்து இருந்தான்...
'இவன் தான் அந்த ஷாருக்கான் போல' என்று நினைத்துக் கொண்டே தினேஷப் பார்த்தான்.
ஓரளவு திடமான தோற்றம் தான்...
அவனை வேண்டும் என்றால் அடியாள் என்று ஏற்றுக் கொள்ளலாம்...
அடுத்து இந்த கம்பெனியின் முதலாளி ராகினி...
அவள் தோற்றம் வித்தியாசமாக இருந்தது...
கார்கோ ஜீன்ஸ் அணிந்து இருந்தாள்.
டீ ஷேர்ட் அவள் உடலுடன் ஒட்டி இருந்தது...
கன கச்சிதமான உடல் அமைப்பு...
ஆங்காங்கே டாட்டூகள் இருந்தன...
முடியை கழுத்து வரை வெட்டி, விரித்து விட்டு இருந்தாள்.
மூக்கில் வளையம் போட்டு இருந்தாள்.
கழுத்தில் பெரிய பெரிய நாயை கட்டி போடும் சங்கிலிகள் தொங்கிக் கொண்டு இருந்தன...
கையில் வரிசையாக காப்பு இருந்தது...
ரவுடி தோற்றமாம்.
அனைவரையும் பார்த்து விட்டு, "சரி மேம், எல்லாமே பண்ணுறேன்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அந்த இடத்தை பெரிய சத்தம் நிரப்பியது...
எல்லோரும் ஒன்றாக மூக்கை மூடிக் கொள்ள ராகினியோ, "ஷாருக்கானுக்கு வேர்க்கடலை கொடுக்க வேணாம்னு எத்தனை தடவை டா சொல்றது?" என்று திட்ட, சிம்மனோ, "சைக், என்ன ஸ்மெல் இது, வாந்தி வர்ற அளவுக்கு இருக்கு..." என்றபடி மூக்கை மூடிக் கொண்டான்.
"என்ன மேம் பண்ணுறது? வருதே, விட்டு தானே ஆகணும்" என்றான் ஷாருக்கான்...
சொல்லும் போதே அடுத்த சத்தம்...
"சைக், இவன் ஸ்டார்ட் பண்ணிட்டான், இங்க நிற்க முடியாது, வா வெளியே போய் பேசலாம்" என்று சொல்லிக் கொண்டே செல்ல, மூக்கை மூடிக் கொண்டே, அவளை எல்லோரும் பின் தொடர்ந்தார்கள் சிம்மன் உட்பட...
வெளியே வந்ததுமே, "எனக்கு ஒரு சந்தேகம் மேம்" என்றான்.
"என்ன?" என்று அவள் கேட்க, "அப்பா பண்ணுன வேலைக்கு என்னை கடத்துனீங்களா? இல்ல பணத்துக்காக கடத்துனீங்களா?" என்று கேட்க, "ஆஹ் ஸ்டார்ட் ல சொன்ன டயலாக்கையா சொல்ற? அது சும்மா சொன்னது... பணத்துக்காக தான் கடத்துனோம், உன் அப்பா யாருன்னே தெரியல" என்றாள் தோள்களை உலுக்கி...
'அடப்பாவிகளா' என்று நினைத்தவனோ மேலும், "நம்ம டெய்லி என்ன மேம் பண்ணுவோம்?" என்று கேட்டான் சிம்மன்...
ராகினியோ, "நமக்கு ப்ராஜெக்ட்ஸ் வரும்... செஞ்சு கொடுத்தா பணம் வரும்... இப்போ பணம் வர்றது குறைஞ்சிடுச்சு... அதனால சில நாட்கள் ல பக்கத்து பேக்கரி ல ரொட்டி திருடிட்டு வர வேண்டி இருக்கும்" என்றாள்.
'நாசமா போச்சு' என்று சிம்மன் முணுமுணுக்க, "அப்புறம், சரக்கும் திருடனும்" என்றாள்.
"நீங்க சரக்கு அடிப்பீங்களா என்ன?" என்று சிம்மன் கேட்க, "நான் அடிச்சா சரக்கு அடி படாதா என்ன? ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆஹ் இருந்தா அடிப்பேன்" என்றாள்.
சிம்மன் நான்கு பக்கமும் தலையாட்ட, "அப்புறம், இந்த ஷாருக்கான் போய் போய் டாய்லெட் எல்லாம் செம்ம ஸ்மெல், அதுல ஸ்மெல் வராம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு" என்றாள்.
"எப்படி மேம் பார்த்துக்க முடியும்? போனா ஸ்மெல் வரும் தானே..." என்று கேட்க, "கழுவி வை டா... நீ என்ன குழந்தையா எல்லாம் விளக்கம் கொடுக்க?" என்று திட்டியவள், "முருகன் வண்டியை எடு, பக்கத்து ஊருக்கு போய் பெற்றோல் திருடிட்டு வந்திடலாம்" என்றாள்.
அவனும், "சரி மேம்" என்று சொல்லிக் கொண்டே வண்டி அருகே சென்றான்...
அது ஒரு இறந்து போன ஜீப் ஒன்று...
பேரீச்சம்பழ கடைக்காரன் கூட வாங்க யோசிக்கும் அளவுக்கு இருந்தது...
'இந்த ஜீப்ல கடத்தும் போதே நினச்சேன், இதுங்க நிலைமை ரொம்ப பரிதாபம்ன்னு' என்று சிம்மன் நினைத்துக் கொண்டே வண்டியில் ஏறியவன், "ஷாருக்கான் வரலையா?" என்று கேட்டான்...
"அவன் வந்தா பாம் போட்டே உன்னை சாவடிப்பான், பரவாலையா?" என்று தினேஷ் கேட்க, "இல்ல இல்ல அவன் இங்கேயே இருக்கட்டும்" என்று சொல்லிக் கொண்டே, அமர்ந்து இருக்க வண்டியும் புறப்பட்டது.
"பெட்ரோல் திருடுற அளவுக்கா நம்ம நிலைமை இருக்கு?" என்று சிம்மன் கேட்க, "ரொட்டி திருடுற அளவுக்கு இருக்கு மேன்" என்றான் தினேஷ்...
வண்டியும் புறப்பட, மீண்டும் அவன் ராகினியை ஆராய்ச்சியாக பார்க்க தொடங்கி விட்டான்.
கருப்பு நிற கார்கோ பேன்ட் அணிந்து டீ ஷேர்ட் அணிந்து தலையில் தொப்பியுடன் அலைபேசியில் யாருக்கோ திட்டிக் கொண்டு இருந்த ராகினியை ஜீப்பின் பின் சீட்டில் அமர்ந்து இருந்தாள் ராகினி...
'பொம்பிளை பொறுக்கி கேள்விப்பட்டு இருக்கேன்.. பொறுக்கியே பொம்பிளையா இன்னைக்கு தான் பார்க்கிறேன், சரக்கு எல்லாம் அடிப்பாளாமே, பண்ணுறது சில்லறை திருட்டு, இதுக்குள்ள மாஃபியா அளவுக்கு பேசிட்டு இருக்கா' என்று நினைத்த கணம், "நிறுத்து" என்றாள் ராகினி.
வண்டியும் அந்த வைன் ஷாப் முன்னே நின்றது..
வண்டியை அவளே திறந்து கொண்டு இறங்க, "மேம்" என்றான் சிம்மன் அருகே அமர்ந்து இருந்த தினேஷ்.
தொப்பியை கழட்டி ஜீப்பின் உள்ளே போட்ட ராகினியோ, "நீ போனா ரொம்ப லேட் ஆகும். நானே ஆட்டைய போட்டுட்டு வந்திடுறேன்" என்று சொல்லிக் கொண்டு , அணிந்து இருந்த டி ஷேர்ட்டை உயர்த்தி அவளது பளிங்கு போன்ற வெற்றிடை தெரியும் வண்ணம் கட்டிக் கொண்டே முடியை கையால் கோதியபடி வைன் ஷாப்பை நோக்கி நடக்க , அவளையே பார்த்து இருந்த சிம்மனோ எச்சிலை கூட்டி விழுங்கியபடி, 'ப்பா என்ன இவ இப்படி இருக்கா' என்று நினைத்துக் கொண்டான். .
கண்களை மூடி திறந்து விட்டு அவளையே பார்த்து இருக்க, அவளோ வைன் ஷாப் வாசலில் நின்ற பெரிய லைனை பார்த்தாள்.
எல்லாருமே அவளை தான் அசடு வழிய பார்த்துக் கொண்டு நிற்க , அவர்களை வசீகரிக்கும் விழிகளால் நோக்கிக் கொண்டே இடையே புகுந்து கொள்ள சட்டென எல்லாருமே விலகி வழி விட்டார்கள்...
போன வேகத்திலேயே, "ஒரு ஃபுல்" என்றாள்.
கடைக்காரனும் அவளை யோசனையாக பார்த்த படி பாட்டிலை நீட்ட, " டேய் குடுடா " என்றாள் அதட்டலாக.. அவனும் சட்டென அதனை நீட்ட அதனை வாங்கியவள், நடக்க, "மேம், பணம்" என்றான் கடையில் நின்றவன்.
"ராகினின்னு சொல்லு, உன் முதலாளி கடையையே எழுதி தருவான்" என்று சொல்லி விட்டு அவள் ஜீப்பை நோக்கி சென்றாள்.
'பார்ட்டி பெரிய பார்ட்டி போல' என்று நினைத்துக் கொண்டே, அவனும் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்,
"அவ்வா உங்க மேம் இடுப்பை காட்டி அழுக்குணி ஆட்டம் ஆடுறாங்க... இந்த ஆம்பிளைங்களும் நம்ம மானத்தை வாங்குறானுங்க.. லைன் ல நின்ன ஒருத்தன் கேள்வி கேட்டானான்னு பாரு... இடுப்பை பார்த்து தடுக்கி விழுந்திட்டானுங்க... காஜி பயலுங்க..." என்றான் சிம்மன்.
"ரொம்ப பேசுனா வாயிலேயே சொருகிடுவேன். லைன் ல எல்லாம் நின்னு வாங்குனா நாளைக்கு தான் கிளம்ப வேண்டி இருக்கும்... எவெரிதிங் இஸ் ஃபெயார் இன் சரக்கு" என்றான்.
'ரொட்டி திருடுற பயலுங்களுக்கு பேச்சை பாரு' என்று சிம்மன் நினைத்துக் கொண்டே வாயை இறுக மூடிக் கொண்டான்.
அவனை சிம்மன் ஒரு மார்க்கமாக பார்க்கவும் ஜீப்பில் ராகினி ஏறிக் கொள்ளவும் நேரம் சரியாக இருந்தது...
"என்னவாம் இந்த வீணா போன தண்டம்" என்று சிம்மனை கண்களால் காட்டியபடி தினேஷிடம் கேட்க அவனோ, "நீங்க செம்ம கட்டயாம் ... அப்புறம் இன்னும் கொஞ்சம் ஆபாசமா பேசுனான்" என்று வாய்க்கு வந்ததை சொல்ல சிம்மனோ, "டேய் நான் எங்கடா அப்படி சொன்னேன்" என்று கேட்டு முடிக்க முதல் அவன் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. ராகினியோ கையை உதறி விட்டு, "வண்டியை எடு" என்றபடி முன்னே திரும்ப , தினேஷோ அடக்கப்பட்ட சிரிப்புடன் சிம்மனை பார்க்க , அவனை முறைத்த சிம்மனோ, 'அடேய் கிராதகா நீ நினைச்சது எல்லாம் சொல்லி என்னை பழி வாங்குற தானே. உனக்கு பெருசா ஆப்பு ஒன்னு வைக்கிறேன்' என்று மனதுக்குள் கறுவிக் கொண்டான்.
இதே சமயம் மதுபான கடையின் முதலாளி விக்னேஷ் தனது மனைவி சாரதாவுடன் வந்து இறங்க, கடையில் வேலை செய்த பையனோ, "அண்ணன், ராகினி சரக்கு வாங்கிட்டு போனாங்க" என்று சொன்னான்.
"யாருடா ராகினி?" என்று விக்னேஷ் கேட்க, "நீங்க அவங்க பெயரை சொன்னா கடையையே எழுதி கொடுப்பீங்கன்னு சொன்னாங்களே, பணம் கூட கொடுக்கல" என்று அவன் சொல்ல, "யாருங்க அந்த ராகினி" என்று கேட்டாள் சாரதா கடுப்பாக...
"யாருன்னு தெரியலடி" என்று விக்னேஷ் மனைவியை நினைத்து பதற, அங்கே வரிசையில் நின்ற ஒருவனோ, "செம்ம கட்டை தலைவரே, கொடுத்து வச்சவர் தான் நீங்க" என்றான்...
"டேய் யாருன்னே தெரியல டா" என்று விக்னேஷ் பதட்டமாக பற்களை கடித்துக் கொண்டே சொல்ல, "யாரந்த ராகினி?" என்று கேட்டுக் கொண்டே சாரதா விக்னேஷை முறைத்து பார்க்க, "இந்த மாடியூலேஷன் ல பேசாதடி, பக்கு பக்குன்னு இருக்கு" என்று சொன்ன விக்னேஷோ, "யாருடா அவ? அவளை நான் பார்க்கணும்" என்றான்...
"ஓஹோ அவளை பார்க்க அவ்ளோ ஆசையா?" என்று சாரதா கேட்க, "இவ ஒருத்தி" என்று முணுமுணுத்த விக்னேஷ், "செல்லம் அவர் யாருன்னே தெரியல செல்லம்" என்று மனைவியிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டான்...
இப்படி ஒரு குடும்பத்தை குலைத்து விட்டு, பார்க்கிங் ஏரியா ஒன்றில் வந்து நின்று இருந்தார்கள் ராகினியின் கம்பெனி காரர்கள் பெட்ரோல் திருடுவதற்காக...
Last edited: