ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 1

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 1

கருப்பு நிற டொயோட்டா லான்ட் க்ரூசர் மட்டக்களப்பை நோக்கி விரைந்து கொண்டு இருந்தது...

வண்டியின் பின் பக்க இருக்கையில் ஒரு ஓரத்தில் நீல வர்ண புடவையில் அமர்ந்து இருந்தாள் ராதிகா...

தலையை ஜன்னல் கண்ணாடியில் சாய்த்து இருந்தவளது விழிகள் வெளியே அடித்துப் பெய்து கொண்டு இருந்த மழையில் படிந்து இருந்தன...

கண்ணில் இருந்து கண்ணீர் இப்போதும் வழிந்து கொண்டு இருந்தது.

வாழ்க்கையில் தான் எடுத்து இருக்கும் முடிவு சரியா தவறா என்று தெரியவே இல்லை.

ஆனால் இதனை தவிர எந்த முடிவும் எடுக்கும் நிலையிலும் அவள் இல்லை...

மன வலி ஒரு பக்கம் என்றால் உடல் வலி இன்னொரு பக்கம்.

குமட்டிக் கொண்டே வந்தது...

தன்னைக் கட்டுப்படுத்த நினைத்தாலும் முடியவில்லை...

"சுட்டக் நவதன்ன" (கொஞ்சம் நிற்பாட்டுங்க) என்று சொன்னாள்.

சட்டென வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்த சாரதி, திரும்பிப் பார்த்தது ராதிகாவை அல்ல, அவள் அருகே ஒரு இடைவெளி விட்டு அமர்ந்து இருந்த பிரியந்தவை தான்...

அவன் முகம் இறுக்கமாக இருந்தது...

புன்னகை மருந்துக்கும் இல்லை...

ஆழ்ந்த மூச்சுக்களை விட்டு கோபத்தை கட்டுப்படுத்த முயன்று கொண்டு இருக்கின்றான் என்று அப்பட்டமாக தெரிந்தது...

அவள் பேச்சு அவனை மீறி என்றும் எங்கேயும் சபை ஏறியது இல்லை.

இப்போது கூட அவன் அனுமதிக்காக வேண்டி நின்றான் சாரதி...

"ம்ம்" என்று சொல்லி நிறுத்த சொன்னான்.

வண்டி ஓரமாக நின்று விட்டது...

அடித்துப் பெய்யும் மழையையும் பொருட்படுத்தாமல் வண்டியில் இருந்து அவள் இறங்க முற்பட, சட்டென எட்டி அவள் கையை பற்றி இருந்தான்...

அவன் குளிர்ந்த கரம், பட்டதுமே கொஞ்சம் பதறி விட்டாள்...

அவனை அதிர்ந்து திரும்பிப் பார்க்க, அவள் அதிர்ச்சியை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே, "தொடவும் கூடாதா?" என்று கேட்டபடி கையை விட, அவளோ, "ஐயோ இல்லை" என்று சொல்ல வந்த வார்த்தைகளை கேட்காமல் அங்கே இருந்த குடையை எடுத்துக் கொண்டே இறங்கியவன், சுற்றி வந்து, வண்டியை திறந்து விட்டான்.

அவளும் அவனைப் பார்க்காமல் இறங்கிக் கொண்டவள், பாதையின் ஓரத்துக்கு வந்து, அதுவரை அடக்கி வைத்து இருந்த வாந்தியை எடுத்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்.

பார்வையில், அத்தனை ஏக்கங்களும் கேள்விகளும் உரிமையுள்ள கோபங்களும்...

வாந்தி எடுத்து முடிந்தவள், வாயை புடவை முந்தானையால் துடைத்தாள்.

அவனோ நீர் பாட்டிலை சாரதியிடம் எட்டி வாங்கி நீட்டினான்...

அவனைப் பார்க்காமலே, அதனை வாங்கி வாயை சுத்தம் செய்து விட்டு, நீரை அருந்தியவள், அதனை அவனிடம் நீட்ட, அதனை வாங்கி சாரதியிடம் நீட்டி விட்டு அவளைப் பார்த்துக் கொண்டே, எச்சிலை கூட்டி வார்த்தைகளையும் சேர்த்து விழுங்கிக் கொண்டான்.

அவளுக்கும் மனம் கேட்கவில்லை...

மெதுவாக ஏறிட்டு அவனைப் பார்த்தாள்...

அவள் நனைந்து விட கூடாது என்று அவளுக்கு மொத்தமாக குடையை பிடித்தவனின் பாதி மேனி மழையில் நனைந்து கொண்டு தான் இருந்தது...

அதனைக் கவனித்த பெண்ணவளோ, "நனையுறீங்க" என்றாள்...

"நனைய கூடாது எண்டா பக்கத்துல வா" என்றான்...

இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியை அவள் நினைத்தால் நிரப்பலாம்...

நானும் நிரப்ப மாட்டேன், நீயும் நிரப்ப கூடாது என்று பிடிவாதமாக விலகி நிற்கின்றாளே.

"உள்ளுக்குள்ள ஏறுவமே" என்றாள்...

பேச்சை மாற்றுகின்றாள் என்று அவனுக்குமே தெரியும்...

"போறதுக்கு என்ன அவசரம்?" என்று கேட்டான்...

கேட்ட கேள்வியில் எத்தனையோ அர்த்தங்கள்...

அவனைப் பார்த்துக் கொண்டே, அவன் குடையை பற்றி இருந்த கையின் மேல் கையை வைத்தவள், நெருங்கி நின்றாள்.

அவன் இப்போது மழையில் நனையாமல் குடைக்குள் வந்து இருந்தான்.

இருவரும் நின்றது என்னவோ ஒட்டியும் ஒட்டாமலும் தான்.

இருவரின் மூச்சு காற்றுகளும் கலந்து வெளியேறின...

அவள் மீது அவனுக்கு கோபம் எல்லை கடந்து இருக்கின்றது. ஆனாலும் இந்த நெருக்கத்தை அவன் இழக்க விரும்பவில்லை...

திரும்ப கிடைக்குமா என்று தெரியாத நெருக்கம்...

"ராது" என்றான் கிசுகிசுப்பாக...

ஏறிட்டுப் பார்த்தாள்...

"ஐ வான்ட் டு கிஸ் யூ" என்றான்.

தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு...

விழிகளை சுழற்றிப் பார்த்தாள்...

நடு வீதி தான்... ஆனாலும் காட்டுப் பகுதி...

வாகன நடமாட்டங்கள் பெரிதாக இல்லை...

அவள் விழிகள் ஜீப்பில் இருந்து தங்களையே பார்த்துக் கொண்டு இருந்த சாரதியில் படிந்து மீள, அவனும் தலையை திருப்பி சாரதியை பார்த்தவன், "விமலவீர மெத்தன பலன்ன எப்பா"(விமலவீர இங்க பார்க்க வேணாம்) என்றான்.

சட்டென அவன் பார்வையை திருப்பிக் கொண்டான்.

அவளுக்கோ இன்னுமே சங்கடம்...

இல்லை என்கின்ற ரீதியில் தலையாட்டினாள்...

"இதுக்கு பிறகு நான் உன்னட்ட எதுவும் கேட்க மாட்டேன், என் பிள்ளையை கூட" என்றான்...

அவன் குரல் நெகிழ்ந்து விட்டது.

சுருக்கென்று தைத்தது அவளுக்கு...

இதற்கு பிறகு எங்கனம் மறுப்பாள்?

விழிகளும் அவளுக்கு கலங்கி விட்டன...

அவனையே பார்த்துக் கொண்டே, "ம்ம்" என்று சொன்னாள்.

அவன் விழிகள் அவளில் தான் படிந்தன...

மை பூசிய விழிகள்...

புருவங்கள் நடுவே, வட்டமான சிவப்பு பொட்டு.

மூக்குத்தி குத்திய கூரிய நாசி...

இயற்கையாகவே சிவந்த இதழ்கள்...

எல்லாவற்றையும் ரசனையாகப் பார்த்தான்.

அவள் விழிகளும் அவனையே பார்த்து இருந்தன...

வெண்ணிற ஷேர்ட் அணிந்து முட்டி வரை மடித்து விட்டு இருந்தான்.

மேலிரு பட்டன்கள் திறந்து கிடந்தன...

அடர்ந்த சிகை, தாடி மீசை என்று ஆட்களை கவரும் தோற்றம் அவனுக்கு...

கிட்டத்தட்ட ஆறடி உயரம் இருப்பான்...

அவன் உயரத்துக்கு ஏற்ற திடகாத்திரமான மேனி அவனுக்கு...

நனைந்ததில் மழைத்துளிகள் அவன் முகத்தில் தெறித்து இருந்தன...

ஒற்றைக் கையால் அவள் கழுத்தைப் பற்றிக் கொண்டான்.

"ரோட் ல போறவங்க பார்த்துட்டாங்க எண்டா" என்றாள்.

"குடை எதுக்கு இருக்கு?" என்று கேட்டான். அவர்கள் நின்றதும் வாகனத்துக்கு மறைவாக தான்...

அவன் பதிலை கேட்டு மெல்லிய புன்னகை... சிரிக்க முடியவில்லை என்றாலும் சிரித்தாள்.

அவள் இதழ்களை பார்த்துக் கொண்டே குனிந்தவன், அவள் இதழ்களை நெருங்கி, "உன்னட்ட கதைக்க நிறைய இருக்கு ராது, ஆனா வார்த்தை வரல" என்றான்.

அவனுக்கா வார்த்தைகள் வரவில்லை என்று அதிர்ச்சி...

அரசியல் செய்பவன் ஆயிற்றே... பேச சொல்லிக் கொடுக்கவா வேண்டும்?

இப்போது வார்த்தைகள் வராமல் தடுமாறுகின்றானாமே. அவனையே பார்த்துக் கொண்டு இருந்த பெண்ணவளின் ஒற்றைக் கண்ணில் இருந்து சட்டென கண்ணீர் வழிய, அவனோ அவள் கன்னத்தை தாங்கி இருந்த கைப் பெருவிரலினால் அவள் கண்ணீரை துடைத்து விட்டு, அப்படியே குனிந்து அவள் இதழில் இதழ் பொருத்திக் கொண்ட சமயம், அவர்கள் இருவரும் பற்றி இருந்த குடை, மெதுவாக் சரிந்து, அவர்களை மறைத்தது...

அவளோ கரத்தினை உயர்த்தி, அவன் சிகைக்குள் கை கோர்த்து நெரிக்க, அவர்களை ரியர் வியூ மிர்ரர் ஊடாக பார்த்த சாரதிக்கு தெரிந்தது என்னவோ, இருவரின் பாதங்களும் தான்... குடை தான் அவர்களின் முத்தத்தை மறைத்துக் கொண்டு இருக்கின்றதே. தட்டையான செருப்பை அணிந்து இருந்தவளின் பாதம் பெருவிரலில் எம்பி நின்றது...

எவ்வளவு நேரம் தொடர்ந்தது அந்த முத்தம் என்று இருவருக்குமே தெரியவில்லை...

கொட்டும் மழையில் குடைக்குள் ஒரு முத்த மழை.

முத்தத்தின் நடுவே, ஒரு பாரிய இடி சத்தம்... சற்று அவள் மேனியில் ஒரு நடுக்கம்...

அதுவரை அவள் கழுத்தை பற்றி இருந்த அவன் கரமோ இடையை பற்றி தன்னுடன் நெருக்கிக் கொண்டாலும் முத்தத்துக்கு அவன் இன்னுமே முடிவுரை எழுதவில்லை... எழுத விரும்பவில்லை.

விமலவீர, நேரத்தைப் பார்த்தான்...

முத்தம் முடிவுக்கு வரும் தோரணையே இல்லை.

பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டே, வேறு பக்கங்களில் பார்வையை செலுத்தினான்.

இதழ்கள் கலந்து, எச்சில்கள் பரிமாற்றம் கொண்டு நீண்ட முத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிரியந்தவோ, "நான் வேணாமா ராது?" என்று கேட்டான் அவள் காதினுள்.

முத்தத்தில் கிறங்கி விழிகளை மூடி நின்றவளோ மெதுவாக விழிகளை திறந்து அவன் விழிகளை நோக்கியவள் என்ன சொல்லி விட முடியும்?

அவன் வேண்டுமே... வாழ்க்கை முழுக்க வேண்டும்...

ஆனால் உரிமை இருந்தும் சொந்தம் கொண்டாட முடியாத நிலையில் தவித்துக் கொண்டே இருக்கின்றாள்...

"இப்படி ஒரு வடிவான பொடியன் வேணாமா?" என்று மென் சிரிப்புடனேயே கேட்டான்...

வலித்தது தான்...

ஆனால் அவளை கேள்வி கேட்டு வலிக்க வைக்கவும் மனம் இல்லை.

அவன் கேட்ட தோரணையில் சிரிப்பு வந்து விட, "வடிவான பொடியன் தான், ஒத்து கொள்ளுறேன்" என்றாள் அவனை ரசனையாக பார்த்துக் கொண்டே...

சட்டேன அவன் இதழில் இருந்த புன்னகை மறைய, "நான் கேட்டதுக்கு இது விடை இல்லையே" என்றான்...

"விடை உங்களுக்கே தெரியுமே" என்றாள்...

ஒரு அழுத்தமான பார்வையுடன் விலகி நின்றவன், "உன் முடிவுல மாற்றம் இல்லை, அப்பிடி தானே" என்று கேட்க, "பிரியூ நான் சொல்றத" என்று அவள் ஆரம்பிக்க, "அத்தி" (போதும்) என்று ஒற்றைக் கையை நீட்டி சொன்னவன், குடையை அவள் கையிலேயே கொடுத்து விட்டு, மழைக்குள் நனைந்தே சென்று ஜீப்பில் ஏறிக் கொண்டான்.

பேசிப் புரிய வைக்க முடியாது அவனுக்கு...

பேசினாலும் அவன் புரிந்து கொள்ள போவதும் இல்லை...

வயிற்றில் அவன் குழந்தையை வைத்துக் கொண்டு என்ன தான் அவனுக்கு விளக்கம் சொன்னாலும் அது நீரில் எழுதிய எழுத்து போல என்று அவளுக்கும் தெரியும்...

பெருமூச்சுடன் ஜீப்பில் ஏறிக் கொண்டவள், அவனைப் பார்த்தாள்...

கோபத்தின் உச்சத்தில் இருக்கின்றான் என்று தெரிந்தது...

மூக்கு விடைத்துக் கிளம்பி இருந்தது...

வெளியே பார்த்துக் கொண்டே இருந்தான்...

ஒற்றைக் காலை கோபத்தில் ஆட்டியபடி இருந்தான்.

மொத்தமாக நனைந்து விட்டும் இருந்தான்...

மனம் கேட்காமல், தனது புடவை முந்தானையை எடுத்து அவன் தலையை எட்டி துவட்ட, அவள் கையை பற்றி கார் சீட்டுடன் அழுத்தியபடி அவளை உறுத்து விழித்தான்.

அவன் அழுத்தியதில் அவள் கை வலித்தது...

முகம் சுருங்கியது...

அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் சட்டென அவள் கையை விட்டான்.

அவளும் கையை எடுத்து, மணிக்கட்டை வலியுடன் வருடிக் கொள்ள, கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை நிலைபடுத்தியவனோ, "அப்பி யமு" (நாம போவம்) என்றான் விமலவீரவிடம்...

வண்டியும் அடுத்த கணமே புறப்பட, அவளை திரும்பிப் பார்த்தான்...

மனம் கேட்டவில்லை...

சட்டென அவள் கையை எட்டி பற்றி மணிக்கட்டை வருடி விட்டான்..

இப்போது, அவனை ஏறிட்டுப் பார்க்க, "நோகுதா? சொறி" என்றான்...

அவள் இல்லை என்று அவனை பார்த்துக் கொண்டே தலையாட்டியவள், "தலையை துடைங்களேன்" என்றாள்...

"துடைக்கல எண்டா ஒண்டும் செத்து போக மாட்டேன்" என்றான்...

அவளுக்கு அவன் பேச்சு கடுப்பை தான் கிளப்பியது.

"இப்ப எதுக்கு இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்க?" என்று திட்டினாள்.

அவளை முறைத்தவன், "என்னோட கதைகக்காதே, ஏதாவது ஏசிப் போட்ருவேன்" என்று சொல்லி விட்டு பார்வையை முன்னே திருப்ப, அவளும் அவனை ஒரு கணம் பார்த்து விட்டு பார்வையை ஜன்னலுக்கு வெளியே செலுத்தினாள்.

சற்று நேரத்தில் தூக்கம் கண்களை சுழற்றியது அவளுக்கு.

பக்கவட்டாக திரும்பி அவனைப் பார்த்தாள்...

அப்படியே இருவருக்கும் நடுவே இருந்த சீட்டில் அவன் வைத்து இருந்த அவன் கை மீது கையை வைத்தாள்.

திரும்பிப் பார்த்து, 'என்ன' என்கின்ற தோரணையில் தலையை அசைத்தான்.

"நித்திரை வருது" என்றாள்...

"அதுக்கு?" என்றான் கேள்வியாக...

"படுக்க போறேன்" என்றாள்...

"படு" என்று சொல்ல, அவளோ, "அவ்வளவு தூரம் தள்ளி இருந்த எப்பிடி?" என்று கேட்டாள்...

"எனக்கு ஏலாது" என்று சொல்லிக் கொண்டே தலையை திருப்பிக் கொண்டான்.

அவளும் ஜன்னலில் தனது தலையை சாய்த்துப் படுக்க, சற்று நேரத்தில், அவளை இழுத்து, அணைத்து, தனது தோள்களில் படுக்க வைத்து இருந்தான்...

மென் புன்னகை அவள் இதழ்களுக்குள்...

மெதுவாக ஏறிட்டு அவனைப் பார்க்க, "உன்னட்ட என்னால கோபத்தை காட்டவும் முடியல, காட்டாம இருக்கவும் முடியல" என்று வெளியே பார்த்துக் கொண்டே சொன்னவன் இதழ்களோ, "மகே லஸ்ஸன யக்சய" (என்னுடைய அழகான ராட்சஷி) என்று முணுமுணுத்துக் கொண்டான்.

அவள் இதழ்களுக்குள் மெல்லிய புன்னகை... எப்போதுமே அப்படி தான் அவளை அழைப்பான்... மென் சிரிப்புடன் கண்களை மூடி, அவன் வாசத்தை நுகர்ந்தபடி தூங்க முயன்றவளுக்கு பழைய நினைவுகள்...

அவனுக்குமே அதே நினைவுகள்...

இரு வருடங்களுக்கு முன்னர் இந்த அழகிய தமிழ்ப் பைங்கிளி தான் அவனை ஆட்டி வைக்க போகின்றாள் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்து இருந்தால் கூட நம்பி இருக்க மாட்டான்.

அவளை இப்படி விழுந்து விழுந்து காதலிப்பான், திணற திணற முத்தமிடுவான், அகமும் புறமும் கலந்து விடுவான் என்று அப்போது எல்லாம் தோன்றியதே இல்லை...

ஆனால் எல்லாமே நடந்து விட்டது...

இப்போது அவர்கள் காதலுக்கு அவள் முற்றுப் புள்ளியும் வைக்க தயாராகி விட்டாள்... அவன் காதலியாக மட்டும் முற்றுப் புள்ளி வைத்து இருந்தால் அவளுக்கு வலித்து இருக்காதோ என்னோவோ...

இப்போது அவள் முற்றுப் புள்ளி வைக்க முயல்வது, அவன் மனைவியாகவும், அவன் குழந்தைக்கு தாயாகவும் அல்லவா?

இன்னுமே அவனுக்கு முதல் சந்திப்பு நினைவு இருக்கின்றது...

ஒரே கல்லூரியில் படித்தாலும் அவன் கவனத்தை அவள் என்றும் ஈர்த்தது இல்லை... பார்த்த நினைவு கூட அவனுக்கு இல்லை...

ஆனால் அவன் வேலை செய்து கொண்டு இருந்த கொழும்பு நீர்பாசன திணைக்களத்தில், அவளுக்கு கீழ் வேலை செய்ய வந்து இருந்தாள் ராதிகா...

"பிரியந்த அய்யே" என்று ஆரம்பித்து, திக்கி திணறி அவள் பேசும் அரைகுறை சிங்களத்தை இப்போது நினைத்தாலும் அவனுக்கு சிரிப்பு வரும்...

அவன் மனமும் அந்த நினைவுகளில் லயித்துப் போனது...
 

CRVS2797

Member
மகே காதலே...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 1)

இந்த பிரியந்த் & ராதிகாக்கு இடையே என்ன பிரச்சினைன்னே தெரியலையே. ரெண்டு பேரும், முதல்ல அலட்சியமா இருந்தாலும், இப்ப ஒருத்தரையொருத்தர் உயிருக்கு உயிரா நேசிக்கிறதும் நிசம், கல்யாணம் கட்டிக்கிட்டதும் நிசம், இப்ப புள்ளை உண்டாகி இருப்பதும் நிசம், இப்ப பிரியவேக்கூடாதுன்னு நினைக்கிறதும் நிசம்.

ஆனா, ரெண்டு பேருக்குள்ள இப்ப என்ன விரிசல்ன்னு தெரியலை, பிரியவே மனசில்லை, பிரியாத வரம் வேண்டும்ன்னு கேட்டுக்கிட்டே
ராதிகா ஏன் பிரியந்தை பிரிய நினைக்கிறான்னும் தெரியலை..?
ஓ மை காட்..! அப்படி பிரச்சினை இவங்க ரெண்டுபேருக்குள்ளன்னு
தெரியலையே..???
😄😄😄
CRVS (or) CRVS 2797
 
Top