ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அசுரவேந்தனின் அஸ்தமனமும் நீ!! உதயமும் நீ!! கதை திரி

T22

Well-known member
Wonderland writer
விதையில் இருந்து விருட்சம் வரை

வணக்கம் தோழிகளே,

அசுரவேந்தனின் அஸ்தமனமும் நீ!! உதயமும் நீ!! கதையின் முதல் அத்தியாயம் பதிவிட்டுள்ளேன்.. மறக்காமல் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌படித்து உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. உங்களுடைய கருத்துக்கள் தான் எங்களுக்கு எழுதுகிற ஆவலை தூண்டும்.. அதனால்‌ மறக்காமல் கருத்துக்களை பகிருங்கள்..
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அசுரவேந்தனின் அஸ்தமனமும் நீ!!
உதயமும் நீ!!

அந்த அறையே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது. அங்கே இருந்த இருக்கையில் கைகள் கட்டப்பட்டு இருந்த பெண்ணோ சட்டென மயக்கத்தில் இருந்து கண்களை விழித்துக் கொண்டாள்…

"யாராவது இருக்கீங்களா??" என‌ அழுதுக்கொண்டிருந்த பெண்ணுக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கலாம்.‌. ஆனால் கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி அவரை கட்டி வைத்திருக்கின்றனர்.. சிறிது நேரம் கத்திப் பார்த்துவிட்டு தலை சாய்ந்து அந்த இருட்டறையில் படுத்தவளை சிசிடிவி கேமராவின் மூலம் ரசித்துக் கொண்டிருந்தான்..

இரண்டு நாட்களாகியும் அவரை இருட்டறையில் அடைத்து வைத்து சித்திரவதை படுத்தியவனின் கண்களில் இன்னும் கொலைவெறி தான் தெரிந்தது ‌..

"சார்.‌ இதுக்கு மேல அடைச்சி வச்சா செத்துடுவாங்க" என்றவனை முறைத்துப் பார்த்தவன்..‌"ம்ம்.. டிஸ்போஸ்" என ஒற்றை வரியில் முகம் இறுக பதில் சொல்லியவனின் போன் அடிக்கும் சத்தத்தில் கலைந்தவன்‌.. எடுத்துப் பார்த்தவனின் முகம் ஒரு நொடி மென்மையை தத்தெடுக்க.. மெல்லிய புன்னகையுடன் தன் கைகளில் இருந்த போனை பார்த்து சிரித்தவாறே அட்டென்ட் பண்ணி காதில் வைக்க..

"என்னங்க" என மெல்லிய கீச்சுக்குரல் அவன்‌ செவிவழி தீண்டி உயிர்வழி சென்றது..

எதிரில் எந்தவித சத்தமும் இல்லாததால், மறுமுறை அதே மெல்லிய குரல், "ஏங்க லைன்ல இருக்கீங்களா?" என்றதும் தான் சுய உணர்வு பெற்றவன்..

"ஹான் இருக்கேன்"

"நான் நீங்க சொன்ன இடத்துக்கு வந்துட்டே இருக்கேன்" என்றவளின் வார்த்தையில் புருவம் சுருக்கி யோசித்தவனுக்கு.. அவளை காலையில் ஆபீஸ் செல்வதற்கு முன்பு..‌ பெங்களூரின் மிகப்பெரிய மலைப்பிரதேசத்திற்கு வரச்சொல்லியிருந்தான்..

அவளிடம் பேசிக்கொண்டே தன் கைகளில் மாட்டியிருந்த வாட்சை திரும்பி பார்த்தவன்.‌ தன் வேக எட்டுக்களுடன் காரை நெருங்கினான். "யா ஐயம் கம்மிங் ‌பேபி.. ஆப்டர் ‌15 மினிட்ஸ்" என இதழ்கள் முணுமுணுக்க ஜெட் வேகத்தில் காரை கிளப்பியிருந்தான்..

அவன் சொன்னது போலவே பதினைந்து நிமிடத்தில் அங்கு வந்து நின்றவன் காரின் அருகில் பதட்டத்துடன்‌ கைகளை பிசைந்தவாறே நின்றவளை தன்‌ விழிகளால் பருகிக்கொண்டே காரின்‌ கதவை திறந்து.. ஒற்றைக்காலை தரையில் வைத்ததும் வேகமாக ‌காரின்‌ அருகே ஓடி‌ வந்து நின்றாள் ப்ரஜா.. அவனின் ‌ஆரூயிர்‌ மனைவி.. திருமணம் நடந்து ஒரு மாதம் கடந்த நிலையிலும் அவனின் மேல் இருந்த பயத்தை விலக்கிக் கொள்ள முடியாமல் போராடுபவள்.. அவளைப் பார்த்துக்கொண்டே இறங்கியவன்.. சில்லென வீசிய தென்றல் காற்றில் சுற்றிவர பார்த்தவன்.. சுத்தமான இயற்கைக் காட்சியினை‌ ரசித்தவாறே தான் அணிந்திருந்த கோட்டை கழட்டினான்..

கோட்டை கழட்டி காரினுள் வீசியவன் கைகள் ரெண்டையும் நெட்டி முறித்தவாறே, அங்கிருந்த மலையை ரசித்துக் கொண்டே மலையின் உச்சிக்கு மெல்ல மெல்ல செல்ல.. முதலில் அவன் இயற்கையை ரசிக்கிறான் என நினைத்து அவனையும் இயற்கையையும் சேர்த்து ரசித்தவளுக்கு, அவன் செய்கை உச்சக்கட்ட பயத்தைக் கொடுத்தது..

"ஏங்க, ஏங்க" என உதடுகள் தந்தியடிக்க.. அவனை நோக்கி அடியெடுத்து வைத்தவள்.. "அங்கேயே நில்லு" என்ற கர்ஜனையில் தானாக கால்கள் அவன் கட்டளைக்கு தலை வணங்கியது..

ஆனாலும் பயம் மனதை கவ்விக் கொள்ள.. இதயம் படபடவென துடிக்கும் சத்தம் அவளுக்கே கேட்டது.. "என்ன பண்றீங்க?? பின்னாடி போகாதிங்க.. கீழே விழுந்துட போறீங்க??" என்றவளின் கதறல் எதுவும் அவனுக்கு கேட்கவில்லை.. கல் போன்று இறுகிய முகத்துடன், மலையின் உச்சிக்கு சென்றவன் ‌தன் இருகைகளையும்‌ விரித்து வைத்தவனின் பார்வையோ?? கழுகின் கூர்மையான கண்களைப் போல் இருந்தது..

இன்னும் ஒரு‌ அடி பின்னால் எடுத்து வைத்தால் அவன் மரணம் அவளின் ‌கண்முன்னால் நடந்தேற வாய்ப்புகள் அதிகம்.. "ஏங்க நகர்ந்துடாதிங்க பின்னாடி‌ பள்ளம் இருக்கு" என்றவளின் பரிதவிப்பையும், பயத்தையும் சிறிதும் பொருட்படுத்தாமல்,

"கொக்குக்கு மீன் ஒன்றே குறி" என்பதைப் போல் அப்படியே நின்றிருந்தான்..

"நான் விழக்கூடாதுன்னு நினைச்சேன்னா?? அப்போ ஐ லவ் யூ சொல்லு" என்றவனின் வார்த்தையில் விக்கித்து நின்றாள்.. அவளும் இந்த ஒரு மாத காலமாக அவனுடன் இணக்கமாக எல்லாரையும்‌ போல் வாழ வேண்டுமென நினைக்கிறாள்.. ஆனால் சூழ்நிலை அவளுக்கு எதிர்மாறாக அமைந்து விடுகிறது..

அவனின் வாழ்க்கை உயரம் அறிந்தவளால் அவனுடன் ‌காதல்‌ பாடத்தை‌ படிக்க முடியவில்லை..

"நான் எப்படிங்க உங்களை காதலிக்க முடியும்?? உங்க வீட்டு டிரைவரோட பொண்ணு நான்‌" என தயங்கி ‌சொன்னவளை கூர்பார்வையில்‌ ஆழமாக பார்த்தவன்.. "நீ டிரைவரோட பொண்ணு மட்டும்தானா??" என் அழுத்தமாக கேட்டவனின் கேள்வியில் ‌தானாக தலை கவிழ்ந்து தன் நெஞ்சில் சரசமாடும் தாலியை பார்த்தவள் அவனை நேராக பார்க்க.. அவனின் குற்றச்சாட்டு பார்வையில் தலை‌ கவிழ்ந்தவளை இமைக்காமல் பார்த்தவன்..

"சொல்லு… நீ‌ டிரைவரோட பொண்ணு மட்டும்தானா" என்றவனின் அழுத்தமான கேள்வியில் தலை தானாக 'இல்லை' என்று‌ ஆடியது..

"அப்புறம்‌ நான் உனக்கு யாரு??"

" மரணத்தை‌ பக்கத்தில் வைத்துக் கொண்டு என்ன பேச்சு பேசுகிறார்??" என எண்ணியவளுக்கு ஏனோ அவன் கேட்கும் வார்த்தையை உதிர்க்க.. முடியவில்லை

"ம்ம்.. சொல்லு.. நீ யாரு எனக்கு" என்றவனின் கர்ஜிக்கும்‌ குரலில் பயத்தில் முகமெல்லாம் வியர்க்க.. "உங்க மனைவி" என்றவளின் பதிலில் இளக்காரமாக பார்த்தவன்..

"கேட்கலை"‌

"ஹான்" என‌ முழித்தவள் மீண்டும் சத்தமாக, "உங்க மனைவி" என்றவளின் பதிலில் உதட்டில் சிறு சிரிப்புடன் அவளை ஆழ்ந்து பார்த்த பார்வையில் மேலும்‌ அவளை திகிலடைய செய்தான்..

"இப்போ சொல்லு" என்றான் கணீரென்ற குரலில் அப்பொழுதும் அவள் அவன் கேட்கும் வார்த்தையை உதிர்க்க போராடினாள்..

அமைதியாக இருந்தவளின் செய்கை இவனுக்கு கோபத்தில்‌ சுத்தியலை கொண்டு உச்சியில் அடித்ததை போல் சுளீரென்று‌ வலிக்க.. தன்‌ மென்மையான பக்கங்களை தொலைத்தான்.. மெது மெதுவாக தன் வன்மையான பக்கத்தை புரட்ட ஆரம்பித்தான்.‌.

"இப்போ சொல்லப் போறீயா இல்லையா??" என்றவன்‌ மலை உச்சியில் நின்று கொண்டு கைகளை விரித்து அப்படியே பின்னாக்கி‌ தன் உடலை ‌சரிக்க.. எங்கே அவன் ‌விழுந்து விடுவானோ??" என்ற அச்சத்தில் கண்களை‌ இறுக முடியவள்.. காதுகளை பொத்தியவாறே,‌ "ஐ‌ லவ்‌ யூ.. ஐ லவ்‌ யூ சூரியா.. ஐ லவ் யூ சோ மச்.. நான்‌ உங்களை மனசார காதலிக்கிறேன்.. என்னை விட்டுப் போயிடாதிங்க ப்ளீஸ்" என கத்தியவளின் உடல் நடுங்கியது‌.‌ சிறு நிமிடத்தில் ‌அவள் முகத்திற்கு நேராக அனல் மூச்சுக்காற்று‌ வீச.. தன்னவன் தன்னருகில் இருக்கிறான் என்பதை அறிந்தவள் அவனை கழுத்தோடு இறுக்கக் கட்டிக் கொண்டாள்..

அவள் அணைத்த விதத்திலே அறிந்துகொண்டான் அவளின் பயத்தை.. "ரிலாக்ஸ் பேபி இதுக்கெல்லாம் பயப்படலாமா?" என்றவனை பயப்பார்வையில் பார்த்தவளை வன்மம் நிறைந்த புன்னகையுடன் பார்த்தான்..

தன்னவளை அணைத்தவாறே காரை நோக்கி வந்தவனின் எண்ணமோ, "அவளை மொத்தமாக அழ வைக்க வேண்டுமென்பது தான்".. அவனுக்குள் இருக்கும் வன்மம் ஒரு போதும் அழியாது.. அவளை வாழவும் விடாது‌..

காருக்குள் ஏறி‌ அமர்ந்தவன்.. "ஓகே. ஐ லவ்‌யூ‌ சொன்னதுக்கு ஸ்வீட் சாப்பிடலாமா??" என்றவனை வித்தியாசமாக பார்த்தாள்..

பின்னே எவ்வளவு பெரிய பேரதிர்ச்சியை கொடுத்தவன் இப்பொழுது ஸ்வீட் சாப்பிடலாம் என்றால் ஏனோ மனமெல்லாம் ஒரு‌ புறம் நடுங்கினாலும் அவனின் செய்கை ஒவ்வொன்றும் இவளுக்கு திகிலூட்டியது.. பயத்தில் ‌எச்சிலை முழுங்கியவாறே கண்களில் பயத்துடன் ஏறிட்டுப் பார்க்க..

காரின் உள்ளே இருந்த சிறு ஃப்ரிட்ஜில் டெய்ரிமில்க் சாக்லேட்டை எடுத்துப் பிரித்தவனின் பார்வையோ தன்னெதிரில் இருந்தவளின் அசைவுகளை ரசித்து தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருந்தது..

அவன் சாக்லேட் எடுத்ததைப் பார்த்தவள் கைகளை நீட்ட.. அவளைப் பார்த்து மென்புன்னகையுடன் பார்த்தவன் சிறு சிரிப்புடன்.. அவளை சட்டென தூக்கி தன் மடியில் உட்கார வைத்தவனை‌ அதிர்ச்சியில் விழி விரித்து பார்த்தாள்..

இதுவரை எந்தவொரு ஆண்மகனின் அருகாமையில் சென்றது கூட‌ இல்லை.. காலேஜில் கூட‌ படிக்கும் தோழிகளுடன்‌ மட்டுமே சுத்துவாள்..‌இப்பொழுது‌ அவனின்‌ அருகாமை பயத்தையும் தாண்டி உள்ளூர ரசிக்க வைத்தது..

அவளை விழுங்கும் பார்வையில் பார்த்தவன்.‌ டெய்ரிமில்க்கில் இருந்த பிங்க் நிற‌ ஹார்ட்டினை வெளியே எடுக்க.. அவனை நோக்கி கையை நீட்டினாள்.. அவனோ அவளை பார்த்துக்கொண்டே தன் பற்களுக்கிடையில் வைத்தான்..‌ அவன் தான் சாப்பிட போகிறான் என நினைத்தவள்.. "ம்க்கும்" என உதட்டை சுழித்தவாறே, அவன் கையிலிருந்த சாக்லேட்டை வாங்க முயன்றவளின் கழுத்தை தன்னை‌ நோக்கி சரித்தவன்.. தன் பற்களுக்கிடையில் வைத்திருந்த சாக்லேட்டை அவளின் இதழில் புகுத்த.. பெண்ணவளின் தேகமோ வெளிப்படையாக நடுங்கியது..

அவளின் இடுப்பில் கைப்போட்டவனின் கரங்களின் வெம்மை அவள் அணிந்திருந்த சேலையை மீறி தகித்தது‌… இதழ்களோடு இதழ்கள் உறவாட‌‌.. சாக்லேட் அவர்களின் இதழ்களிலேயே உருகி நின்றது.. சற்று வன்மையாக அவளின் இதழ்களை கொய்தவனின் கண்களில் காதலை தாண்டி வன்மமே அதிகமாக இருந்தது.. பேதையவள் கண்கள் திறந்து பார்த்திருந்தால் அவனின் பழிவாங்கும் கண்களை பார்த்திருப்பாள். ஆனால் அவன் கொடுத்த இதழமுதில் தன் சுயம் மறந்தவளை உதட்டில் கோணல் புன்னகையுடன் பார்த்தவனின் இதழ்களோ அவளின் செவ்விதழ்களை கொய்யும் வேலையை செய்தது..

பதினைந்து நிமிட இடைவேளைக்குப் பிறகு, அவளின் இதழ்களில் இருந்து பிரித்தவனின் கண்களோ தாபத்தில் அவளை மொய்க்க.. அவனின் பார்வை போகும் திசையில் கண்களை செலுத்தியவள் மெல்ல அதிர்ந்தாள்.. அவன் செய்த லீலையில் சேலை மாராப்பு நன்கு ஒதுங்கியிருந்தது.. சட்டென அவனை விட்டு நகர்ந்து அமர்ந்தவளின் கைகளோ தானாக தன் சேலையை சரி பண்ணியது‌‌..

அவளை பார்த்து சிரித்தவன்.‌ தன் போனை எடுத்து காதில் வைத்தவன்.. "கதிர்.. வெனீஸ்க்கு இரண்டு டிக்கெட் போடு.. ஹனிமூன் கப்பிள் தங்குறதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் பார்க்கச் சொல்லு" என்றவனை திகிலுடன் பார்க்க..

அவளைப் பார்த்துக் கொண்டே அவளின் காதோரம் குனிந்தவன்.. "இனிமேல் எதை ‌என்கிட்ட இருந்து மறைக்கப் போராடுறன்னு நானும் பார்க்கிறேன்" என்றவனின் வார்த்தையில் வெட்கத்தில் முகமோ செவ்வானமாய் சிவந்து போனது..

அவளைப் பார்த்து விசிலடித்தவாறே‌ காரை செலுத்தியவன்.. தன் வீட்டை நோக்கி காரை செலுத்த.. அவர்களின் கார் நகரும் வரை அவர்களை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பத்து பதினைந்து பேரில் தலைவன் ஒருவன் தன் போனை எடுத்து யாருக்கோ டயல் பண்ண.‌ அதுவோ திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் ரிங்க் அடித்தது..

போன் வந்த சவுண்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் கைகள் ஒரு‌ நிமிடம் தன் வேலையை நிறுத்தி போனை எடுத்து ஸ்வைப் பண்ணி காதில் வைத்தவருக்கு.. "ஹலோ" என்பதற்கு முன்பே,

"ஐய்யா.. நம்ம பொண்ணை முழுக்க முழுக்க அவன் கன்ட்ரோல்ல கொண்டு வந்துட்டான் ஐய்யா" என்றவனின் பதிலில் எரிச்சலடைந்தவர்..

"இதை சொல்றதுக்கால நான் பெங்களூர்க்கு டிக்கெட் போட்டு அனுப்பி வைச்சேன்.. செவத்த மூதிங்களா.. நீங்க என்ன பண்ணுவீகளோ?? எனக்குத் தெரியாது.. அவனைக் கொன்னாவது அவளை தூக்கிட்டு வாங்க" என்றவரின் கர்ஜனையில்.‌ இங்கிருந்தே அனைவரும்‌ தலையாட்டினார்கள்..

காருக்குள் அமர்ந்திருந்து வண்டியோட்டுபவனை தன் ஓரப் பார்வையில் பார்த்தவளுக்கு ‌வலிமையான விரல்கள் ஸ்டியரிங்கில் தாளம் போட.. அதை உற்றுப் பார்த்தவளுக்கு.. சில நிமிடங்களுக்கு முன்னால் அவன் கரங்கள் செய்தது எல்லாம்‌ நியாபகம் வர வெட்கப் புன்னகை சிந்தியவள்.. அவனை முழுதாக ரசித்துப் பார்த்தாள்..

அலை அலையாக‌ காற்றில் படர்ந்து தென்றலாய் வீசும் கேசத்தினை ஜெல் போட்டு வாரி வைத்திருந்தான்.. பெண்களை கவர்ந்திழுக்கும் காந்தக்கண்களை உடையவன்.. சற்று நீளமான‌ மூக்கு அது கூட அவன் அழகுக்கு மேலும் மெரூகூட்டியது‌.. இளஞ்சிவப்பு நிற உதடுகள் அவனுக்கு எந்தவித கெட்ட பழக்கமும் இல்லை என அடித்து பறை சாற்றியது.. அவன் போட்டிருந்த கோட்டில் இருந்து அவன் காலில் போட்டிருந்த ஷூ வரை அனைத்துமே பிரான்டட் தான்.. எதையும் பார்த்து பார்த்து தன்னை நேர்த்தியாக செதுக்கிக் கொள்பவன்.. சிறிதாக முடி களைந்தாலும்‌ அவனுக்கு பிடிக்காது.. ரோலக்ஸ் வாட்ச்சில் டைமண்ட் கற்களால் செய்யப்பட்ட ‌விலை உயர்ந்த பொருள் தான் ‌அவனின் முதல் தேர்வாக இருக்கும்.. பிளாட்டின பிரெஸ்லெட் அவனின் வலிமையான உரமேறிய கைகளுக்கு மேலும்‌ அழகை கூட்டியது.. அவன் ‌பேசும்‌ போது, அவனை ‌ரசிப்பதற்கே‌ பெண்களின் கூட்டம் படையெடுக்கும்.. எத்தனை பெண்கள் வந்தாலும்‌ இதுவரை அவன் யாரையும் ‌ரசித்துப் பார்த்ததில்லை..‌

காலையில் இருந்து மாலை வரை வேலை வேலை மட்டுமே பார்ப்பான்.. சிறிது நேரம் புத்தகம் படிப்பான், ஷட்டில் காக் விளையாடுவான்.. நீச்சல், கன் ஷூட் செய்து பார்ப்பான்.... அடிக்கடி ஜிம்மிற்கு செல்வான்.. அவளுக்கு தெரிந்தது இது மட்டுமே.. சில நேரம் கண்களை மூடி தியானம் பண்ணுவான்.. தங்களின் முதல் சந்திப்பே அவன் தியானம் பண்ணும் பொழுது தான் நடந்தது..

ப்ரஜா படித்தது எல்லாம் சாதாரணமான‌ கவர்மெண்ட் ஸ்கூலில் தான்.. நன்றாக படிக்கும் ப்ரஜாவிற்கு கவர்மெண்ட் காலேஜிலேயே சீட் கிடைத்தது.. மூன்று வருடம் படிப்பை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவள்.. நேராக சென்றது வீட்டின் பின்புறமுள்ள கெஸ்ட் ஹவுஸிற்கு தான்.. அங்கு தான் வேலையாட்கள் தங்குவதற்கு சிறு சிறு வீடுகள் கட்டப்பட்டிருந்தது.. ப்ரஜாவும் காலேஜில் இருந்து நேராக அங்கே சென்றவளை பூட்டியிருந்த வீடு தான்‌ வரவேற்றது..

"எங்கே போனாங்க அப்பாவும், அம்மாவும்??" என் சிந்தித்தவாறே வெளியே வந்தவளை எதிர்க்கொண்டது அழகிய இரு முயல்குட்டி.. வெள்ளை நிறத்தில் புஸ்.. புஸ் என இருந்த முயல்குட்டியை பார்த்ததும்‌ தன்னையும் மீறி சிறு பிள்ளை போல் குதுகலித்தவள்.. வேகமாக அதை பிடிக்க செல்ல.. அதுவோ அவளுக்கு போக்கு காட்டிவிட்டு ஓட.. வீட்டிற்குள்ளே தான் ஓடுகிறது என பின்னாடியே ஓடினாள்.. கிச்சன் வழியாக ஓடிய முயல்குட்டி தாவித் தாவி படிக்கட்டிற்கு செல்ல.. இவளும் பின்னாடியே வேகமாக ஓடினாள்.. இரண்டு மாடிகளைத் தாண்டியவள் மொட்டை மாடிக்கே வந்து விட்டாள்.. ஆனால் முயல்குட்டி எங்கே?? என்றே தெரியவில்லை..

அங்குமிங்கும் வைத்திருந்த பூந்தொட்டிகளுக்கு நடுவில் தேடியவள்.. தண்ணீர் ஊற்றுவதற்காக வைத்திருந்த பைப்பை பார்க்காமல் இடறிவிழுந்தவள்.. தியானம் பண்ணிக்கொண்டிருந்தவனின் மடியிலேயே தொப்பென போய் விழுந்தாள்..

அவள் ‌விழுந்த வேகத்தில் கண்களை திறந்தவன்.. ஒரு‌ நிமிடம் உள்ளுக்குள் அதிர்ந்தான்.. மறுநிமிடம் தன்‌ மனதை மறைந்தவர் கோபத்துடன் அவளை பார்க்க.. "ஸாரி.. ஸாரி. தெரியாம விழுந்துட்டேன்" என வேகமாக எழுந்தவள்.. தான்‌ அணிந்திருந்த சுடிதாரை சரிசெய்தபடி அங்கிருந்த ஓடப்போனவளின் காதில் அவன் சொல்லிய வார்த்தையில் அப்படியே நின்று விட்டாள்..


அசுரனின் ஆட்டம் தொடரும்..


 

T22

Well-known member
Wonderland writer
அசுரன் 2 :

அவன் சொல்லிய வார்த்தையில் வேகமாக ஓடிவந்தவளை எதிர்கொண்டது அவளின் தாய் சௌந்தர்யா தான்.. "ப்ரஜாக்குட்டி" என பாசமாக அழைத்தவரை அணைத்தவள் ஏங்கி ஏங்கி அழவே ஆரம்பித்து விட்டாள்..


அவளின் அழுகை ஒரு தாயாய் அவருக்கு பதட்டத்தை தான் கொடுத்தது.‌ "என்னாச்சிடா?? ஏன் அழுகிற??" என்றவரை பயமுறுத்துவதைப் போல் அழுதவளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என‌ அறியாமல் முழித்தவருக்கு பதிலாக, "ப்ரஜா.. ஸ்டாப் இட்" என்ற கர்ஜனைக்குரலில் இதுவரை அழுதக்குரல் சட்டென நிறுத்தியது..



சௌந்தர்யாவிற்கோ பயம் கூடிக் கொண்டே போனது.. "என்னாச்சிடா??" என்றவருக்கு பதில் மேலேயிருந்து ஒலித்தது‌‌..


"உங்க பொண்ணை ‌கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மதம் உங்க பொண்ணுக்கு சம்மதமான்னு கேளுங்க??.. இன்னும் ஆஃப் அன்ட் ஹவர்ல எனக்கு முடிவு தெரிஞ்சாகணும்" என்றவன் பேய் முழி முழித்தபடி நின்றவளை ‌முறைத்துக் கொண்டு‌ செல்லவும்‌ தவறவில்லை ‌..


அவன் முறைத்த முறைப்புக்கே தன் தாயின் பின்னால் பதுங்கியவளை முழுங்கும் பார்வை பார்த்தபடி சென்றான்‌..


சௌந்தர்யாவிற்கு பேரதிர்ச்சி தான்.. சூரியாவே ‌தன் பெண்ணை மணக்க கேட்பது மகிழ்ச்சி தான்.‌ அவருக்குத் தெரிந்து சூரியாவிற்கு எந்தவித கெட்ட பழக்கமும் இல்லல.‌ காலையில் ஆஃபீஸ் செல்பவன் ‌‌ இரவு வரை அங்குதான் இருப்பான்.. பணக்காரர்கள் கெட்டு சீரழிவதற்கு ஆயிரம் இடம் இருந்தாலும் எதிலும்‌ ஈடுபடாமல் ஒதுங்கியே வாழ்ந்துக் கொண்டிருக்கும் நல்லவன் தான் சூரியா..


ப்ரஜாவின் அப்பா சண்முகம் வந்ததும் ‌அனைத்து விசயத்தையும் கூறியவர்.. தனக்கு சம்மதம் என்பதையும் கூறிவிட.. சண்முகம் பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சம்மதித்து விட்டார்..


ப்ரஜாவிற்கு ‌இதில் சுத்தமாக விருப்பமில்லை என்றாலும் பெற்றவர்கள் கைக்காட்டுபவனை கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என அரைமனதுடன் கல்யாணத்திற்கு சம்மதித்தாள்..


அவன் கீழே வரும் பொழுது சம்மதம் சொல்வதற்காக காத்திருந்த குடும்பத்தை ஏளனத்துடன் பார்த்து சிரித்தவாறே கீழே இறங்கினான்..


"என்னாச்சி சண்முகம்??" என்றவனின் குரலில் சற்று திமிராக நடந்து வந்தவரின் பார்வையில் ஆணவமும், திமிரும் கலந்தே இருந்தது‌..


எப்பொழுதும் சூரியாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் பவ்வியமாக பதில் ‌சொல்பவர் இன்று அவன் தன் பெண்ணையே மணக்க கேட்டான் என்பதால் திமிராகவே பார்த்தார்.. "எங்களுக்கு சம்மதம்ங்க" என நிமிடத்தில் தன் முக பாவனைகளை மாற்றியவரை நொடி கூட கவனிக்கத் தவறவில்லை..


"ம்ம்" என ஒற்றை வார்த்தையை மட்டும உதிர்த்தவன்.. சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டை அப்படியே விட்டு எழுந்தான்.. அழுத்தமான காலடியோசையில் டக்.டக் என்ற ஒலியுடன் வெளியே வந்தவனின் பின்னால் ஓடி வந்தார் சண்முகம்..


இவனோ எதிர்படும் யாரையும் கவனிக்காது நேராக கெஸ்ட் ஹவுஸிற்கு உள்ளே சென்றவன் சட்டென கதவை மூடி தாழ்ப்பாள் போட.. வெளியே நின்றிருந்த அனைவரும் அதிர்ந்து விட்டனர்.. உள்ளே ப்ரஜாவை தவிர வேறு யாருமில்லல…


அவளோ பலவித குழப்பங்களுக்கிடையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள்.. அவளுக்கு சூரியாவை பிடிக்கவில்லை என்பது தான் முற்றிலுமான உண்மை.


கண்கள் கலங்க கட்டிலில் படுத்திருந்தவளை பதினைந்து நிமிடங்களாக ஒருவன் நின்று வேடிக்கை பார்க்கிறான்.. என்பது கூட தெரியாமல் அழுது கொண்டிருந்தாள்..


நீண்ட நேரம் அழுதவளுக்கு தாகம் எடுக்க.. தண்ணீர் குடிப்பதற்காக எழுந்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.. எதிரில் நின்றிருந்தவனை பார்த்து.‌ பயத்தில் வேர்த்து ஒழுக, "என்ன வேணும்?? அப்பா அம்மா உங்களைப் பார்க்க தான் வந்தாங்க" என்றவளின் கைகள் நடுங்க பற்றுகோலாய் தலையணையை இறுக்கப் பிடித்தவளின் உள்ளங்கை கூட‌ வேர்த்தது.‌



"என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா??" என்றவனின் கேள்விக்க ஒரு நிமிடத்தில் 'இல்லை' என தலையாட்டி விடலாம் என தோன்றியது.. ஆனால் பெற்றவர்களுக்கு ‌இவனை மிகவும் பிடித்திருக்கிறது என்பதை மட்டும் மனதில் வைத்தவள்.. 'ம்ம்' என தலையை மட்டும் ஆட்ட.. அவளின் தாடையை அழுத்தமாக பற்றியவன். "நான் கேட்டா ‌பதில் மட்டும்தான் வரணும்.. ம்ம்ம்.. ம்ஹூம்.. எல்லாம் வரக்கூடாது.‌ காட்இட்" என கர்ஜித்தவனின் கைகளில் அவளின் ஒரு துளி கண்ணீர் பட்டது..


அவளின் முகத்தை விட்டு கையை எடுத்தவன்… "இப்போ சொல்லு சம்மதமா?? இல்லையா??" என்றான் அதட்டும் குரலில்,


"சம்மதம்" என தலையாட்டியதும் சட்டென கதவை திறந்து வெளியேற, அங்கு நின்றிருந்த வேலைக்காரர்கள் அனைவரும் சந்தேகக்கண்ணோடு தான் பார்த்தனர்.. அவர்களையெல்லாம் ‌துச்சமாக பார்த்தவன் தன் வழியிலேயே ‌செல்ல ஆரம்பித்தான்..


அவள் வாயால் சம்மதம் அறிந்தபின் எல்லாமே மின்னல் வேகத்தில் நடந்தது.. திருமணத்திற்கான பட்டு, நகைகள், அலங்காரங்கள் எல்லாமே அவனே ஏற்பாடு பண்ணிவிட.. வெறும் பொம்மையாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டாள் ப்ரஜா.‌.


கல்யாணம் மிகவும் சிம்பிளாக கோயிலில் நடத்திக் கொள்ளலாம் என சொல்லிவிட்டான்.. அதிகாலையில் ‌எழுந்த ப்ரஜாவிற்கு கல்யாணக்களை என்பது முகத்தில் சிறிதும் இல்லை.. அதற்காக வருத்தப்பட்டு, கண்ணீர் விடும் அளவிற்கு சூரியா கெட்டவனும் இல்லை.. வாழ்க்கையின் ‌போக்கில் நாம் வாழ தான் வேண்டும் என முடிவெடுத்தவள் அவர்கள் சொல்லுவதற்கெல்லாம் பொம்மை போல் தலையாட்டிக் கொண்டிருந்தாள்..


இளஞ்சிவப்பு நிற சேலையில் அனைத்து வித அலங்காரத்துடன் கல்யாணத்திற்கு தயாராகி நின்றவர்கள் எதிரில் வர.‌. அவளின் சேலை கலரில் ஷெர்வானி அணிந்து வந்தான் சூரியா..


அவனின் நிறத்திற்கும், உயரத்திற்கும் ஷெர்வானி பேரழகனாய் காட்டியது.. தன்னை மறந்து ஒரு நிமிடம் அவனை ரசித்தவளை,‌ யாரோ பின்னால் இருந்து தள்ளவும் தான் சுயநினைவுக்கே வந்தாள்..


அருகிலிருந்த கோயிலில் கல்யாணம் சிம்பிளாக நடந்து முடிந்தது.. எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிதாகவே ரிசப்ஷனும் அன்றிரவே நடத்தி முடித்திருந்தான்.. முதலிரவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடக்க ஆரம்பிக்க.. ப்ரஜாவிற்கு பயம் சிறிது சிறிதாக மனதை கவ்வி பூதாகரமாக வளர ஆரம்பித்தது..


அனைவரின் வற்புறுத்தலில் அறைக்குள் நுழைந்தவளுக்கு கட்டிலில் அமர்ந்திருந்தவனை கண்டதும் பயத்தில் ஜுரமே வந்து கையில் வைத்திருந்த பால் சொம்பு கூட நடுக்கத்தில் ‌ஆட ஆரம்பித்தது..


கதவு திறக்கும் ஓசையில் திரும்பியவனுக்கு அங்கு நின்றிருந்தவளை உற்றுப் பார்த்தவனுக்கு அவளின் பயம் அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.. மெல்லிய புன்னகையுடன் அவளை நெருங்க.. அவன் தன்னை நோக்கி வருகிறான் என்ற பயத்திலேயே பால் சொம்பை தவறவிட்டு விட.. அது இருவரின் முகத்திலும் பட்டுத்தெறித்தது..


எதிலும் சுத்தம், நேர்த்தியாக இருப்பவனுக்கு முகத்தில் தெறித்த பால் ‌சட்டென‌ கோபத்தை தூண்டிவிட, "ஹேய்ய்ய்.. அறிவில்ல இடியட்" என்றவனின் கர்ஜனையில் மயங்கியே விழுந்து விட்டாள்..


"லிட்டர்" என‌ தரையில் காலை உதைத்தவன்.. "ப்ரஜா.. ப்ரஜா". என்றவனின் அழைப்புக்கு அவளின் தேகமோ அனலென சுட்டெரித்தது.. கழுத்தில் கை வைத்துப் பார்த்தவனுக்கு பயத்தில் ஜுரம் வந்தது உறுதியாக.. தன்னிடமிருந்த டேப்லெட் ஒன்றை மயக்கத்தில் இருந்தவளுக்கு புகட்டியவன்.‌. அவள் அருகில் ‌படுத்தவனின் எண்ணம் முழுவதும் வன்மம் மட்டுமே‌‌.‌. இன்று அவன் போட்டு வைத்த திட்டமே வேறு.. ஆனால் இவள் ‌பண்ணிய கூத்தில் அதில் ஒன்று கூட நடைபெறவில்லை என்பதே எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதை போல்.. குரோதத்துடன் அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்..


கல்யாணம் முடிந்து இரண்டு வாரங்கள் கடந்த பின்னும் இருவரின் வாழ்க்கையும் தாமரை இலைமேல் ஒட்டாததைப் போல் சென்று கொண்டிருந்தது.


அவன் காலையில் எழுந்து ஆபீஸ் செல்லும்வரை‌ அமைதியாக இருப்பவள்.. அதன் பின் முயல்குட்டியுடன் விளையாட ஆரம்பித்து விடுவாள்.. அதனுடன் ஓடியாடுபவள்.. வீடு முழவதும் அவள் சேட்டைகள் மட்டுமே இருக்கும்.. அவனுக்குத் தெரியாது என அவள் நினைத்துக்கொண்டிருக்க.. அவனோ ஆபீஸிலிருந்து‌ தன் போன் மூலமாக ‌வீட்டில் நடப்பது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பான்..



சிலநேரம் ஆடுவது, ஓடுவது, கீழே விழுவது என அனைத்தையும் ரசிப்பவனின் இதயத்தில் அவனையறியாமல் உள்ளுக்குள் நுழைந்தாள் மனம் பறித்த மங்கையவள்..


அன்றும் ‌முக்கியமான மீட்டிங்கில் ‌இருந்தவன் தன் போன் சவுண்ட் கேட்கும் சத்தத்தில் போனை எடுத்து காதில் வைத்தவனுக்கு ப்ரஜாவின் அழுகுரல் தான் கேட்டது..


"ஹலோ ப்ரஜா என்னாச்சி??" என்றவனுக்கு பதிலாக மேலும் அழுகுரல் தான் கேட்டது.. அதற்கு மேல் ஒரு நிமிடம் மீட்டிங்கில் நிற்க முடியாமல் கிளம்பி விட்டான்.. ஏனோ அவளின் அழுகுரல் இதயத்தில் ஊடுருவும் வலியைக் கொடுத்தது..


காரை மின்னல் வேகத்தில் ஓட்டியவன் ‌‌ வீட்டிற்குள் நுழைந்தவன் அங்குமிங்கும்‌ தேடிப்பார்க்க எங்குமே அவள் இல்லை.. போனை எடுத்து ‌போனில் அழைக்க.. பாட்டுச் சத்தம் எங்கோ கேட்டது.. அவனுக்காக பிரத்யேகயாக ரிங்டோன் வைத்திருந்தாள்‌ போல,

"நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்

அழகாய் தொலைந்தேன்" என்ற பாட்டு வீட்டின் பின்புறமாக கேட்கவும், வேகமாக அங்கு சென்றவனுக்கு அங்கு படுத்தபடி "அம்மாஆஆ.. வலிக்குது" என முணகியபடி அழுது கொண்டிருந்தவளை தான் பார்த்தான்..


"என்னாச்சி ப்ரஜா??" என்றவனுக்கு தன் காலை சுட்டிக்காட்டினாள்.. அவளின் காலைப் பார்த்தவனுக்கு பகீரென இருந்தது.. கால் நன்றாக வீங்கி சிவந்து கன்றிப் போய் இருந்தது.. "ப்ச் எப்படி அடிபட்டிச்சு‌‌.. கால் வேற வீங்க ஆரம்பிச்சிடுச்சி"



"முயல்குட்டியை துரத்திக்கிட்டே‌ விளையாடுனேன் அப்போ தான் கீழே விழுந்துட்டேன்.. அப்பாவும் அம்மாவும் சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போயிருக்காங்க.. அதான் உங்களுக்குப் போன் பண்ணேன்" என்ற தாழ்ந்த குரலில் சொல்லியவளுக்கு சுருக்கென்று வலிக்க.. "அம்மாஆஆஆஆ" என அலறிக்கொண்டே அவனின் புஜத்தை அழுத்தமாக பற்றினாள்.. அவள் பற்றிய வேகத்தில் அவளின் வலி புரிந்தது.‌ அவளை தன் இரு கரங்களில் ஏந்தியவன் காரில் அமர வைக்க.‌ "ரொம்ப வலிக்குதா??" என்றவனின் மெல்லிய குரலில் சட்டென அவளைத் திரும்பி பார்த்தவளுக்கு அவனின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் உர்ரென்று இருந்தாலும் குரலில் மாற்றம் தெரிந்தது..


"ம்ம்" என்றவளை ஹாஸ்பிட்டல் அழைத்துச் சென்றான்.. காலில் சின்ன சுளுக்கு என்பதால் பேண்டேஜ் எல்லாம் போட்டு விட்டனர்.. ஊசி போடுவதற்கு அழுது ஊரையே கூட்டி விட்டாள்.. சூரியாவிற்கு சில நிமிடம் கோபம் வந்தாலும், சில நொடி அவளின் செய்கையெல்லாம் ரசிக்கவும் மனம் விரும்பியது.. ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்பதால் அவளை வீட்டுக்கு அழைத்து வந்தவன்..‌ அறைக்குள் அவளை கட்டிலில் ‌படுக்க வைத்தவன்… அவளின் கீழ் உதட்டை அழுத்தமாக பற்றியவன்.. தன்னிதழில் ஆறுதல் அளிக்க.. அவன் இதழ் செய்த மாயம் அவன் கரங்களின் அத்துமீறலையும் உள்ளம் ரசித்தது‌‌..


அன்றிலிருந்து அவனை விரும்பினாலும், அவனின் ‌தகுதி, பதவி எல்லாமே அவளை‌சில சமயம் மிரட்டவும் செய்தது.‌ அவனுக்குத் தான் இணையா?? என்ற கேள்வியே‌ உள்ளூர கரையானை போல் அரிக்க ஆரம்பித்தது..
 

Attachments

  • 275792415_1034744723798596_3871043781177107836_n.jpg
    275792415_1034744723798596_3871043781177107836_n.jpg
    84.2 KB · Views: 12

T22

Well-known member
Wonderland writer
275792415_1034744723798596_3871043781177107836_n.jpg

இன்றும் அவன் வலுக்கட்டாயத்தில் காதலை சொல்லினாலும் அவள் மனதில் அவன் இருக்கிறான் என்பது நிஜம்..


ஒரு வாரத்திற்கு பிறகு வெனீஷ் நகரத்தில் வந்து இறங்கியவள் அதிர்ச்சியில் ‌வாயைப் பிளந்து தான் ‌நின்றாள்.. இதுவரை டிவி, போனில் மட்டுமே பார்த்த நகரத்தை நேரில் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது.. ஊரைச் சுற்றிலும்‌ வித்தியாசமான மனிதர்கள் என‌ கண்களை சுழற்றியவளுக்கு‌ புதுவித அனுபவம் மனதில் ‌புததுணர்ச்சியை தான்‌ அளித்தது..

தன் மனதுக்கு பிடித்தவுடன் கைகளை கோர்த்தவாறே நடப்பது ஏனோ மகிழ்ச்சியைக் கொடுத்தது.. மனம் முழுவதும் மகிழ்ச்சியில் தத்தளிக்க முகமெல்லாம் பொலிவுடன் அவனுடன் நடந்தவள்.. அவன் ஹோட்டல் அறைக்கு செல்ல முயன்றவனின் கைகளை இறுக்க பற்றியவள்.. "ஏங்க இந்த ஊரை சுத்திப் பார்க்கலாமா??" என்றவளின் ஆர்வத்தை பார்த்தவனுக்கு ஏனோ மறுக்கத் தோன்றவில்லை.. ஹோட்டல் அறையில் தனித்தனியாக குளித்து முடித்து‌ வந்தவர்கள்.. அந்த ஊருக்கு ஏற்றாற் போல் உடையணிந்திருந்தனர்.. நான்கு பக்கமும் தண்ணீர் சூழ்ந்திருநந்ததால் அவர்களின் பயணமெல்லாம்‌ படகில் தான்.. படகு சவாரியே ப்ரஜாவை கட்டியிழுத்தது..

ததும்பாத அலைகளின் நடுவில் தன்னவன் தோளில் சாய்ந்தவாறே சென்றவளுக்கு அங்கு சுற்றிப் பார்ப்பதை விட அந்த ஊரின் அழகை ரசிப்பது மிகவும் பிடித்தது‌.. வெனீஸ் நகரம் 80 சதவீதம் நீரினால் சூழப்பட்ட நகரம்.. நூறு தீவுகளை கொண்ட நகரத்தில் கடற்கரையின் அருகில் ஒரு தீவின் ஹோட்டலில் தான் தங்கினர்..

இருவரும் முதலில் சென்றது ஒரு‌ தேவலாயத்திற்கு.. எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையினை உடைய இருவருக்கும்.. தேவாலயத்தில் ‌நுழையும் போதே கால்களை கழுவிக் கொண்டு உள்ளே நுழைய முயன்றவன் அருகிலிருந்தவளை பார்க்க.. அவளோ கர்மசிரத்தையாக கைக்கூப்பி கடவுளிடம் ஏதோதோ வேண்டிக் கொண்டிருந்தாள். இதழ்கள் முணுமுணுத்தபடி வேண்டுபவளை பார்க்கும் பொழுது சிரிப்புத்தான் வந்தது…

"என்ன வேண்டிக்கிட்ட?"

‌‌"அது‌வெளியில சொன்னா பலிக்காது."

. "ப்ச்.. நான் உன் புருஷன் தானே என்கிட்ட சொல்லலாமே" என்றவனின் மேல் சற்று சாய்ந்த நிலையில்.. "நாம ரெண்டு பேருமே ரொம்ப வருஷம் சந்தோஷமா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்" என்றவளின் பதிலில் முகம் இறுகி நின்றான்..

"சரியான செல்பிஷ்" என‌‌ முணுமுணுத்தவாறே அவளுடன் மியூசியம் சென்றான்.. அங்கு வைக்கப்பட்டிருந்த அரசர்களின் பழைய கால பொருட்கள்.. ஓவியங்கள் அனைத்தும் மனதில் ‌நீங்கா இடம் பெற.. மியூசியத்திற்கு வெளியே செல்ஃபி இருவரும் எடுத்துக் கொண்டனர்..

கிட்டத்தட்ட இரவு 7மணி வரை சுற்றியவர்கள்.. அறைக்குச் செல்ல முயன்றவனின் கைகளைப் பிடித்திழுத்தவள்.. அங்கிருந்த பேக்கரி ஒன்றிற்கு அழைத்துச் சென்றாள்.. "பசிக்குதுங்க" என்றவளுக்கு கேக் ஒன்றை ஆர்டர் கொடுத்தான்.‌ சாப்பிட்டுக்கொண்டே அவளைப் பார்க்க.. ஒருவித பதட்டத்துடன் பயத்துடன்.. கேக்கை ‌மெல்ல மெல்ல எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்.. இரண்டே நிமிடத்தில் சாப்பிட வேண்டிய கேக்கை.. கிட்டத்தட்ட ‌அரைமணி‌ நேரத்திற்கு மேலாக சாப்பிட்டவளின்‌ முகத்தை உற்றுப் பார்த்தவனுக்கு அனைத்தும் புரிந்தது.. நேரத்தை வீணடிப்பதற்காக அங்கேயும் இங்கேயும் இழுத்து திரிகிறாள்" என்பதை ‌உணர்ந்தவன்.. அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்க்க.. "தன் குட்டு வெளியானதை ‌அறிந்தவள் குழந்தையென திருதிருவென முழிக்க ஆரம்பித்தாள்"..

"இன்னும் பியூ மினிட்ஸ்" என்பதற்குள் தன் முன்னால் இருந்த முழு கேக்கையும் வாயில் அடைத்தவள்.. "போலாம்ங்க" என்றவளுக்கு நிமிடம் கடந்து செல்ல.. செல்ல பதட்டமும் பயமும் அதிகமாகியது.. படகில் ஏறி அமர்ந்தவர்கள் தங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்றனர்…

ரூமிற்குள் நுழைந்ததும் தன்னறைக்கு வேகமாக நுழைய முயன்ற வளை "வாணிம்மா" என்ற மெல்லிய குரல் தடுத்து நிறுத்தியது..‌ தலை கவிழ்ந்து ‌திரும்பிப் பார்த்தவளின் கையில் ஒரு பேக்கை ஒப்படைத்தவன்.. "இது உன்னோட அலங்காரத்துக்கு… இதுல இருக்கிற‌ டிரெஸ், காஸ்ட்யூம் எல்லாம் போட்டுட்டு வா" என்றவனின் வார்த்தையை ஏனோ மறுக்கத் தோன்றவில்லை.. மெல்ல தன்னறைக்கு வந்தவள் பேக்கை ‌திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சியாகும் அளவிற்கெல்லாம் ஒன்றுமில்லை.. சாரி, காஸ்மெட்டிக், ஜுவல்ஸ் தான் இருந்தது..

அழகிய இளஞ்சிவப்பு நிற டிசைனர் சாரி இருந்தது.. மெல்லிய இழைகளுடன்‌ கோர்க்கும் பட்டிருந்த சாரீயை அணிந்தவளின்‌ இதயத்தில் இந்நொடி கூட பதட்டம் சிறிதும் குறையவில்லை..

சாரீ மட்டுமே அணிந்தவளால் ‌ஏனோ‌ தன்னை அலங்கரிக்க வேண்டுமென தோன்றவில்லை.. கண்ணாடி வழியாக ஊரின் வெளித்தோற்றத்தை‌ வெறித்துப் பார்த்தவளின் மனதில் இனம் புரியா பயத்துடன், பர்ஸ்ட நைட்டில் நடந்தது போல் இன்றும் நடந்து அவன் கோபத்திற்கு ஆளாகுவோமோ?? என்ற பயமும் சேர்ந்து கொண்டது..

அவள் வரமாட்டான் என்பதை அறிந்தவன்.‌ அவளைத் தேடி வர.. பயத்தை விட பதட்டத்தில் இருந்தவளின் பின்புற தோற்றத்தை ‌ரசித்துப் பார்த்தவனின்‌ கால்கள் ‌அவளை நோக்கி நகர்ந்தது.. இளஞ்சிவப்பு நிற சேலையில் அவன் கொடுத்த ஜுவல்ஸ் எதுவுமே போடாமல் சிந்தனையில் நின்றிருந்தவளை ‌பின்னிருந்து‌ அணைத்தவனின் கரங்களிலேயே உணர்ந்து கொண்டாள்.. அது தன்னவன் என்று..‌

வலிமையான உரமேறிய ‌கரங்கள் அவளின் மெல்லிடையை அழுத்தமாக பற்றியதுடன்.. அங்குமிங்கும் விரல்களால் ஸ்ருதி மீட்ட.. அவனை ‌தடுக்க முயன்றவளை தன்னை நோக்கி திருப்பியவன்.. அவளின் செவ்விதழ்களை அழுத்தமாக கவ்விக் கொண்டான்.‌.

அவளின் இதழ்களை தாண்டி நாவிற்குள் சண்டையிட.. விதிர்விதிர்த்துப் போனாள் பேதையவள்.. பயத்தை தாண்டி அவனின் அருகாமை, இறுக்கமான அணைப்பு அவளை உள்ளூர ரசிக்க வைத்தது..

அவள் மூச்சுக்காற்றுக்கு போராடுவதை உணர்ந்தவன்.‌ சிறிது ‌இடைவெளி விட்டு மீண்டும் கவ்விக்கொள்ள.. அவனின் வன்மையான ‌உதடுகளுக்கிடையில் சிக்கித் தவித்தது‌‌ பெண்மையின் மெல்லின உதடுகள்..

அவள் இதழமுதில் சுரந்த தேனமுதை ‌முழுவதுமாக உறிஞ்சியெடுத்தவன்.. அவளின் அதரங்களுக்கு விடுதலையளிக்க.. லிப்ஸ்டிக் போடாமலே கொவ்வைப்பழமென சிவந்திருந்தது உதடுகள்..

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி நின்றவளுக்கு அவன் முகம் பார்க்கவே ‌வெட்கம்‌ பிடுங்கித் தின்றது.. சட்டென திரும்பியவளின் முன்னால் சென்று நின்றவன்.. அவளின் முன்னால் மண்டியிட்டபடி அமர்ந்தவனின் கைகள் ‌அவளின் வெண்ணிற இடையை மறைத்த சேலையை நகர்த்த.. சட்டென அவன் கைகளை பிடித்துக்கொண்டாள்..

மண்டியிட்டவாறே அவளை நிமிர்ந்து பார்த்தவனின் பார்வையில்‌ மோகம் கலந்த தாபமே ‌இருந்தது.. பெண்ணவளின் ‌அல்லிமலர் விழிகளில் ‌பயம் கலந்த தயக்கமே ‌வீற்றிருந்தது.. தாம்பத்திய ‌வாழ்க்கையின் முதல் பக்கம் ‌அடியெடுத்து வைக்கும் தயக்கம், பயம், அவனின் மேல் கொண்ட ‌காதல்‌ என அனைத்து உணர்வுகளுக்கிடையே சிக்கித் தவித்தாள்..

அவளைப் பார்த்துக் கொண்டே தன் ‌பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு பாக்ஸை எடுத்தான்.. சிறிய வட்ட வடிவிலான அடர்ஊதா நிற வெல்வெட் பாக்ஸில் இருந்து சங்கிலியின் முனையை பற்றியவன்.. மெல்ல பெட்டியில் இருந்து வெளியில் எடுக்க. ஆர்வத்துடன் அதைப் பார்த்தவளுக்கு ‌சட்டென புரிந்தது.. அது பெண்களுக்கான ஹிப் செயின் என்பது.‌ சிறு சிறு நட்சத்திரங்களுக்கிடையே ஏதோ பெயர்கள் எழுதி தொங்கவிடப்பட்டிருந்தது..

பின்புறம் பார்த்தவளுக்கு பெயர்கள் தெரியவில்லை என்றாலும் எதிரில் அமர்ந்திருந்தவன்.. அவளின் கண்களோடு கண்கள் கலந்து தாபப்பார்வை பார்க்க.. கைகளோ அவளின் இடையில் செயினை மாட்டியது..

செயினை மாட்டிவிட்டவனின் முகம் ‌அவளின் பளிங்குமலர் போன்ற வெண்ணிற இடையில் பதிய. அதீத உணர்வுகளின் தாக்கத்தில் இதழ் கடித்து ‌நின்றவளை.. மேலும் அவஸ்தைக்குள்ளாக்க.. அவன் முத்துப்பற்களால் செயினை மாட்டிவிட.. அவன் பற்களின் எச்சில், முகத்தை புரட்டுவதால்‌ இடையில் தோன்றும் குறுகுறுப்பு, அவளின் பயத்தை விரட்டியது..

இப்பொழுது அவள் முகத்தை ஏறிட்டவனுக்கு வெட்கத்தில் சிவந்த முகம், கன்னக்கதுப்பை தாண்டி மலர்ந்த முகமாய் மலர்ந்தவளை தன் இரு கரங்களில் ஏந்தினான்..

திடீரென்று தூக்கியது அதிர்ச்சியாக இருந்தாலும்
அவன் தன்னவன்,
தனக்கானவன்,
தன் பெண்மையின் கள்வனும் அவனே
தன் பெண்மையின் காவலனும் அவனே என்பதை தன் ஆழ்மனதில் பதிய வைத்தாள்..

கட்டிலில் அவளை கிடத்தியவனுக்கு, காதோரம் கேட்டது ‌அழுகுரல் தான்.‌ அவ்வளவு நேரம் மோகத்தின் பிடியில் இருந்தவனுக்கு.. எங்கிருந்தோ கேட்ட அழுகுரல் அவனை மெல்ல மெல்ல ‌மிருகமாக்க.. அவனின் வன்மையான பக்கத்தை புரட்டியவனுக்கு அவள் மேல் கொண்ட தாபம், காதல் மறைந்து நிமிடத்தில் தோன்றியது குரோதமும், ஆத்திரமும் ‌.. அவளின் இதழ்களை அழுத்தமாக, ஆக்ரோஷமாக கவ்விச் சுவைக்க.‌ மூச்சிற்காக ஏங்கித் தவித்தாள்.. உதடுகள் எரிந்து வலியை தான் கொடுத்தது.‌

அவன் மார்பில் கைவைத்து தள்ள முயன்றவளின் இரு கைகளையும் சிறைப் பிடித்தவன்.‌ அவள் கால்களையும் தன் கால்களால் சிறைப்பிடித்தான்..

இதழ்களை விட்டு அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவனின் உடல் பாரமும், இறுக்கமான அணைப்பும் பெண்ணவளை பயமுறுத்தியது..

அவளின் அனுமதியில்லாமலே அவள் ‌ஆடைகளுக்கு விடுதலையளிக்க.. அவனையே தன் ஆடையாக்கினாள் பேதையவள்..

அவள் கழுத்தில் முகம் புதைத்தவனின் பற்கள் தன்‌ தடத்தை ‌அழுத்தமாக‌ பதிக்க.. "ஸ்ஸ்ஸ்" என்றவளின் முகத்தைப் பார்த்தான்..

பயம், பதட்டத்தை ‌மீறி காதலே அவள் முகத்தில் பிரதிபலித்தது.. வலியில் ‌முகத்தை சுருக்கியவளின்‌ பார்க்கும் பொழுதே நெஞ்சில் சுருக்கென ஊசியால் குத்துவதைப் போல் ‌வலித்தது..

"ஸாரிடா" என்றவனின் வார்த்தையில் விழிகளை திறந்தவளுக்கு கண்கள் கலங்கியிருந்தது உண்மை..

அவள் கலங்கிய விழிகள் இவன் இதயத்தை ‌அசைத்துத்தான்‌ பார்த்தது.. "சாரிடி" என்றவனின் இதழ்களை தன்னிதழ்களோடு பொருத்தியவளுக்கு.. முத்தம் என்பதே ‌புதிது.. தெரிந்தும் தெரியாமலும் இதழ்களைப் பொருத்தியவளை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தவன்.. முத்தத்திலே பல‌வகை பாடம் நடத்த.. ‌பெண்ணவள் சற்று சோர்ந்து தான் போனாள்.. முத்த சத்தம் அவ்வறை எங்கிலும் மோகன கீதமாய் இசைக்க.. அவளின் கொலுசுச்சத்தம் மெட்டிசைத்தது‌‌..‌

மென்மையான அவளை ‌தன் ஆளுகையில் கொண்டு வந்தவனின் காதல் இலக்கணத்தில் மன்மதனும் வெட்கப்பட்டுத்தான்‌ போனான்..

அவளுடன் தன்னுயிரை இணைத்தவனுக்கு வன்மத்தை தாண்டி காதலே ஜெயித்தது.. உடல் சோர்வில்‌‌ படுத்தவர்களுக்கு தன்னையும் மீறி கண்கள் சொருகியது..

நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவன் போன் அடிக்கும் சத்தத்தில் போனை எடுத்து காதில் வைத்தது தான் தாமதம், "என்ன பண்ணி வச்சிருக்க மேன்??" என கடுமையான குரலை கேட்டதும் பேசுவது யார் என புரிந்தவன் மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்து,

"கமான் ஆங்கிள்.. ஜில்"

"அந்தப் பொண்ணை எங்கே வச்சிருக்க??"

"நான் அவளை எதுவும் பண்ணலை.. ஹனிமூன்க்காக வெனீஸ் வந்திருக்கோம்.. தப்பா ஆங்கிள்" என்றவனை கழுத்தை நெறித்துக்கொள்ளும் அளவிற்கு ஆவேசம் எழுந்தது..

"அந்தப் பொண்ணை விட்டுடு சூரியா.. அவ அப்பாவிப் பொண்ணு"

"ம்ஹும்.. ஆங்கிள்.. நான் தான் சொன்னேனே‌‌.. அவ என் கண்ணுல மாட்டாத வரைக்கும்.. அவளோட நிம்மதிக்கும், சந்தோஷத்துக்கும்‌ நான் பொறுப்புன்னு.. ஆனா அவ பேட்லக் என் மடியில வந்து விழுந்துட்டா.. ஸ்த்த்.. பாவம் ஆங்கிள்" என நக்கல் பொதிந்த குரலில் சொல்லியவனை,

"சூரியா" என சீறியவர்.‌ "நீ தப்புக்கு மேல தப்பு பண்ற.. விடமாட்டேன் நீ எந்த தப்பும் பண்ண நான்விடமாட்டேன்.. உன்கிட்ட இருந்து அந்தப் பொண்ணை நான் காப்பாத்துறேன்" என்றவருக்கு ‌பதிலாக கீங்...கீங்..கீங். என்ற சத்தம் தான் கேட்டது..

"ஓஹ்..காட் இப்படி பண்ணிட்டீயே" என மனவருத்தத்தில் ‌சொல்லியவருக்கு சூரியாவை வெறுக்கத்தான் தோன்றவில்லை..

போனை கட் பண்ணியவன்.. உடல் அசதியில் நன்றாக உறங்கி கொண்டிருந்தவளை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தவன். "என்கிட்ட இருந்து உன்னை அவர் காப்பாத்த போறாராம்.. அவருக்குத் தெரியலை. என்கிட்டயிருந்து உன்னை யாராலையும் காப்பாத்த முடியாதுன்னு.‌. நான் யூஸ் பண்ணிட்டு தூக்கி எறியுற டிஸ்யூ பேப்பர்டி நீ" என‌ குரோதத்துடன் சொல்லியவனின் விழிகளில் கோபம், பழிவாங்குதல் மட்டுமே இருந்தது.. காதல் துளியளவும் இல்லை..
 

T22

Well-known member
Wonderland writer

அசுரன் 3

பத்து நாட்கள் திகட்ட திகட்ட காதல், காமம் இரண்டையும் அனுபவித்தவளின் ‌உள்ளத்தில் இப்பொழுது முழுமையாக நிறைந்தது சூரியா மட்டுமே.. மகிழ்ச்சியில் தத்தளித்தவள் ‌வீட்டிற்கு நுழையும் போது சிரித்த முகத்துடன் எதிர்கொண்டார் சௌந்தர்யா..

அவரைப் பார்த்ததுமே ‌சிறு வெட்கப் புன்னகையுடன் அவரை அணைத்துக் கொண்டாள்.. "சந்தோஷமா இருந்தீங்கள்ள??" என்றவருக்கு ‌பதிலாக தலையை ஆட்டியவள் வேகமாக ‌அறைக்கு ஓடி விட.. சௌந்தர்யா தான் சிறு சிரிப்புடன் ஓடிச் செல்பவளை பார்த்துக் கொண்டே சென்றார்..

அறைக்கு நுழைந்தவளுக்கு வானத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த சூரியாவை பின்னால் ‌இருந்து அணைக்க.. அதுவரை தன் வாழ்வின் மறக்க முடியா கசப்பான நினைவுகளில் உழன்றவனுக்கு ‌தன் இணையாளின் பூங்கரம் இவ்வுலகத்திற்கு இழுத்துக் கொண்டு வர.. சிறு சிரிப்புடன் அவளை முன்னே கொண்டு வந்து நிறுத்தினான்..

அவனின் வாடிய முகத்தைப் பார்த்தவளுக்கு அனிச்சம் மலரைப் போல் முகமெல்லாம் வாடிவிட.. "என்னாச்சிங்க??" என்றவளின் விழிகளில் தெரிந்த அன்பும் காதலும் இவனுக்கு ‌சிறு வலியைக் கொடுத்தது..

"ஒன்னுமில்லை" என்றவனின் முகம் இறுகியிருந்தது..

அவனின்‌ முகத்தை ‌உற்றுப் பார்த்தவள். "பிசினஸ் டென்சனா இருக்கும்" என தனக்குத் தானே‌ சமாதானப்படுத்தியவள்… அவன் மார்பில் ‌சாய.. அவனும் மென்மையாக அணைத்துக் கொண்டான்..

ப்ரஜா தூங்கும் வரை அமைதியாக இருந்தவன் அவளை விட்டு எழுந்தான் அந்த‌ அறைக்கு‌ இடதுபுறம் இருந்த பட்டனை அழுத்த சட்டென இன்னொரு அறை ஒன்று திறந்தது.. உள்ளே நுழைந்தவனின் கண்களில் கண்ணீர் வழிய, மனமெல்லாம் பாரமாகிய உணர்வு..

அந்த அறையில் ஆறடி உயர கண்ணாடியை தவிர வேறெதுவும் எதுவுமே கிடையாது.. அறைக்குள்ளும் சரி அவனின்றி மனதிற்குள்ளும்‌ சரி இருட்டு மட்டுமே குடியிருந்தது.‌ அங்கிருந்த கண்ணாடி முன்பு வந்து நின்றவன், "நாளைக்கு மறக்க முடியாத நாள்.. இருபத்தியொரு வருடமா நான் கஷ்டப்பட்டதுக்கு பலன் கிடைக்கும்" என்றவனின் கண்கள் சிவந்து, நாளை எப்பொழுது விடியும் என்ற ஆர்வம் மட்டுமே மிகுந்தது.‌ அவனின் செயலால் ஒரு சிறு பெண்ணின் உள்ளம் உயிரோடு மரணவலியை அனுபவிக்கும் என்பதை மறந்தான்..

அன்றிரவு முழுவதும் அந்த அறையை ‌விட்டு ஒரு நொடி கூட பிரியவில்லை.‌..

காலையில் குளித்து முடித்து உணவு சாப்பிட கீழே இறங்கினாள்.. பசி வேறு வாட்டி வதைக்க.. மெல்ல கிச்சனிற்குள் நுழைந்தவள்.. அங்கு ‌என்ன இருக்கிறது ஏன‌ பார்த்தவளுக்கு பதில் பூஜ்ஜியமே..

"ப்ச்.. சமைக்கவே இல்லையா??" என சிந்தனையுடன் ஹாலிற்கு வர. அங்கு கால் மேல் கால் போட்டு அமர்ந்தவாறே யாரிடமோ போனில் கத்திக் கொண்டிருந்தான் சூர்யா ‌..

"யார்க்கிட்ட ‌இவ்ளோ கோவமா பேசுறாங்க??" என‌ சிந்தித்தவாறே அருகில் செல்ல அவள் வருவதை அறிந்தவன்.. அவள் கைகளை பிடித்து தன்னருகில் உட்கார வைத்தான்.. அவள் தோளில் கைப்போட்டபடியே போனை தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்..

அரைமணி நேரம் அவன் போன் பேசுவதையே பார்த்தவளை சிறு சிரிப்புடன் போனை கட் பண்ணியவன்.‌ அவள் புறம்‌ திரும்பி "உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் பேபி" என்றவனின் குரலில் இருந்த பேதைமை மங்கையவளுக்கு புரியவில்லை..

"என்ன சர்ப்ரைஸ்ங்க" என ஆர்வம் மேலோங்க கேட்டவளின் முன்பாக இருந்த டேபிளை காட்ட.. அதில் சில பேப்பர்கள் தான் இருந்தது..

"என்னது இது??" என எடுத்தவளுக்கு, அவள் பெயரில் பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை எழுதி வைத்திருந்தான்.. "எனக்கு எதுக்குங்க இதெல்லாம்.. சொத்து எல்லாம் வேண்டாம்" என்றவளின் காதல் உள்ளத்தை அறிய தவறினான் ‌அசுரன் அவன்..

"ஓஹ்ஹ்.. அப்போ உனக்கு சொத்து ‌எதுவும் தேவையில்லை?" என எள்ளல் மிகுந்த குரலில் கேட்டவனின் அழுத்தமான வார்த்தையில் சற்று நிதானமாக அவனைத் திரும்பிப் பார்க்க.. அவள் ‌பத்து‌ நாட்களாக பார்த்த காதல் முகம் ‌இதுவல்ல என்பது மட்டும் புரிந்தது..

"என்ன சொல்றீங்க??.. நான்தான் எனக்கு சொத்து எதுவும்‌ தேவையில்லைன்னு சொல்றேனே" என்றவளின் தலைமுடியை கொத்தாக பிடித்தவன்.. அவளின் முகத்தை தன் முகம் நோக்கி திருப்பினான் .

"என்னம்மா நடிக்குறடி நீ??.. உனக்கு சொத்து தேவையில்லையா??.. அப்புறம் ஏன்டி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட??" என்றவனின் வார்த்தையில் விலுக்கென நிமிர்ந்தவளுக்கு அவனின் மிரட்டும் முகம்‌ பயத்தை மட்டுமல்ல.. இனம் புரியாத வலியையும் சேர்த்தேக் கொடுத்தது.‌

அவளின் பயந்த முகம் மேலும் மேலும்‌ எரிச்சல் மூட்ட, "சொல்லுடி" என்றவனின் கர்ஜனையில்,

"நீங்க தானே கல்யாணம் ‌பண்ணக் கேட்டீங்க.. அப்பா அம்மாவுக்கும் புடிச்சிருக்கு அதுனால" என்றவளை வெறுப்பாக ஒரு பார்வை பார்த்தவன்..

"ஓஹ்ஹ்ஹ.. கல்யாணம் பண்ண கேட்டா கல்யாணம் ‌பண்ணிப்ப.. படுக்க கூப்பிட்டாலும் வந்திடுவீயா? இது தெரியாம போச்சே?" என்றவனின் வார்த்தையில் கண்கள் கலங்க, கண்ணீருடன் ஏறிட்டவளுக்கு கோபத்தை தாண்டி‌ உயிர் போகும் வலியைக் கொடுத்தான்..

"கல்யாணம்ங்கிறது ஆயிரங்காலத்து‌ பயிர்.. ஊனாய் உயிராய் உருமாறி தங்களோட‌ இணைக்காக வாழுகிற பந்தம்.. அதை அசிங்கப்படுத்தி பேசாதிங்க" என கண்ணீர் மல்க ‌கேட்டவளை,

"ச்சீய்ய்.. வாயை மூடு.. எதுடி ‌ஆயிரங்காலத்துப் பயிர்.. கல்யாணமா??.. கல்யாணம்ங்கிறது இரண்டு மனசும் சேரணும்டி... ம்ஹும்‌‌.. இப்போ எல்லாம்‌ உடம்பு தானே சேருது.. மனசு எங்கே சேருது.. நீ கூட கட்டாயத்துல காதலிக்கிறவன்னு சொன்னவ தானே" என்றவனுக்கு பதில் என்ன சொல்வாள் "இல்லை என்றா?? ஆமா என்றா??" எதை சொன்னாலும்‌ அதை ‌வைத்துப் பிரச்சினை தானே பண்ணுவான் என ஒரு மனம் எண்ணினாலும் அவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் இதயத்தை கூர்ஆயுதத்தால் ஆழமாக கிழித்தது என்பது‌ மட்டுமே உண்மை..

"ப்ளீஸ் இந்த மாதிரி பேசாதிங்க.. ரொம்ப வலிக்குது" என்றவளின் கண்ணீர் சுட்டெரிக்கும் சூரியனாய் வன்மம் என்கின்ற வேள்வித்தீயில் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருக்கும் அவனின் மனதை சிறிதும் அசைத்துப் பார்க்கவில்லை..

"ஓஹ்.. வலிக்குதா?? வலிக்கட்டும்டி நல்லா வலிக்கட்டும்.. வலின்னா என்னன்னு உனக்கு தெரியட்டும்" என ஆத்திரத்தில் கத்தியவனின் கண்களில் அப்படியொரு வலி.. அவன் அனுபவித்த நரகவலிக்கு முன்னால் இவளின் வலியையும், காதலையும்‌ எண்ணத் தவறினான்..

"ஏன் இவ்ளோ கோபமா இருக்கீங்க?? நான் ஏதாவது ‌தப்பு பண்ணிட்டேனா??" என்றவளை அனல் கக்க பார்த்தவன்..

"ஆமா..‌ தப்பு தான்.‌ நீ பண்ணது நீ பொறந்ததே தப்பு.. ******* அந்தாளுக்கு ‌மகளா பொறந்தது நீ செய்த பாவம்டி.‌ இப்போ அனுபவிக்கிற" என‌ ஆக்ரோஷமாக கத்தியவனின் பின்னால் வந்து நின்றார் சண்முகம்.‌

"என்ன தம்பி பேச்செல்லாம் ஒரு மாதிரியாயிருக்கு" என நக்கலாய் கேட்டவரை ‌அழுத்தமாக ஒரு‌ பார்வை பார்த்தவன்.‌ பதில் எதுவுமே பேசவில்லை.. அவன் பார்வைகள் ஆயிரம் தோட்டாக்களை அவருள் செலுத்தியது.. துளைத்தெடுக்கும்‌ பார்வை பார்த்தான்..

அவன் பார்வையே அவருக்கு சற்று பயத்தைக் கொடுத்தது.. "ஏன் இந்த ‌பார்வை??"‌ என நினைத்தவர்.. மெல்ல ப்ரஜாவைப் பார்க்க அவளோ நடக்கும் எதையும் ‌நம்ப‌ முடியாமல் திகைத்து உயிரற்ற சிலையாய் நின்றிருந்தாள்.
கண்களில் விழி கண்ணீருடன் அவனை ஏறிட்டுப் பார்க்க‌‌ "வெளியே போ" என்ற‌ கர்ஜனையில்‌ உடல் ‌நடுங்க‌ உள்ளம் அதிர.. அவனை விட்டு பிரிய முடியாமல் ‌தவித்தாள்..

"ப்ளீஸ்ங்க.. நான் எந்தத் தப்பும்‌ பண்ணியிருந்தாலும் உங்ககூடவே வச்சிருந்து தண்டனை கொடுங்க.. என்னைப் பிரிந்து மட்டும் போக சொல்லாதிங்க" என்றவள் சற்றும்‌ தயங்காமல் காலைப்‌ பிடித்துவிட..

ஒரு‌நிமிடம் காதல் உள்ளம் ‌அதிர்ந்து தான்‌ போனது.. கண்களை ‌ஒரு‌ நிமிடம் மூடியவனுக்கு ஒரு‌ பெண்ணின் ‌அழுகுரல் காதுக்குள் ரீங்காரமாய் கேட்க. அதுவரை மனிதனாக இருந்தவனுக்குள் இருந்த அசுரன் மெல்ல.. தன் இடது காலை அழுத்தமாக தரையில் ஊன்றியவன்.. வலதுகாலை சற்று மேலே தூக்கி மண்டியிட்டவளின் தோள்பட்டையில் வைத்து தன் பலத்தில்‌ ஒரு‌தள்ளு தள்ளிவிட.. தோள்பட்டையே கழன்று விழுவதைப் போல் வலி எடுக்க "அம்மாஆஆஆ" என்ற அலறலுடன் பின்நோக்கி நகர்ந்து ‌மல்லாந்து‌ விழுந்தவளின் அருகில் ஒரு காலை குன்றி அமர்ந்தவனின் கண்களோ செந்தீயாய் எரிந்தது.. அந்தத்தீயில் அவளின் காதலே முதல் பலியானது..

வன்மம் என்னும் வேள்வித்தீயில் சுடர் விட்டு எரிந்தது அவளின் காதல்
மன்னவனுக்கு ‌வலித்ததோ என்னவோ?
மங்கையவளுக்கு மரணம் வரை வலித்தது..

அதுவரை ‌அமைதியாக இருந்த சண்முகம், "நீ வா ‌ப்ரஜா.. நாம ‌போகலாம்.. இந்த ‌வேலையும் வேண்டாம் இவரும் வேண்டாம்" என்றவர் விழுந்து கிடந்தவளின் கையைப் பிடித்து மேலே ‌எழுப்பியவர்.. அவளை இழுக்காத குறையாக இழுத்துச் செல்ல.. அப்பொழுதும் அவனை விட்டு அகல மறுத்தது காதல் உள்ளம்.. மனம் ‌முழுவதும்‌ வலியுடன் அவனைப் பார்த்தவளின் பார்வையில் ஆயிரம் குற்றச்சாட்டுக்கள் இருந்தது. . சண்முகம் இழுத்த இழுப்புக்கு சென்று கொண்டிருந்தவளை " ஒரு நிமிஷம்" என்ற குரல் ‌அப்படியே நிற்க ‌வைத்தது..

மெதுவாக ‌அவளின்‌ அருகில் வந்து நின்றவனின் கண்களில் இப்போழுதும் ‌காதல் உள்ளத்தை தேடித் தேடி சோர்ந்து போனாள்..

"அப்புறம் சொல்ல மறந்துட்டேன்… சினிமாவுல, நீ படிக்கிற புக்குல வர்ற மாதிரி.. ரெண்டு மூணு வருடம் கழிச்சு என்‌ கருவை சுமந்து எனக்காக வாழும் போது நான் குழந்தைக்காக உன்னை ஏத்துப்பேன்னு மட்டும் நினைக்காதே.. ஏன்னா.. என்னோட கரு கூட உனக்குள்ளே வர்றதை நான் அனுமதிக்க ‌மாட்டேன்டி" என ஆத்திரத்தில் வார்த்தைகளை அள்ளித் தெளித்தவனை கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்தவளை நக்கல் புன்னகையுடன் பார்த்தவன்..

"உனக்கு‌ கொடுத்த ஜுஸ்ல எல்லாம்‌ கர்ப்பத்தடை மாத்திரை கலந்து தான் கொடுத்தேன்." என்றவளுக்கு கண்ணீருடன் அவளின் வார்த்தைகளும் தடைப்பட்டது.. அதீத பேரதிர்ச்சி அவளை மௌனமாக்கியது..

"ஹே..‌ன்ன்.. ஏன்" என கேட்க நினைத்தவளின் வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்கித் தவித்தது.. அப்பொழுதும் உணர மறுத்த பேதைப் பெண்ணவள்.. பேச்சு நின்று போனதைக்கூட ‌அறியாமல் பேசத்தவித்த வார்த்தைகள் மறுபடி மறுபடி பேச, கண்களில் கண்ணீரும், கழுத்தின் கீழ் வலிக்க ஆரம்பித்தது.. வலியுடன் தன் கழுத்தைப் பற்றியவள்.. தன்னை வதைப்பவனை ஏறிட்டுப் பார்க்க.. அவன் முகம் முழுவதும் குரோதத்தில் சிவந்து, பகை உணர்வில் அவளை வெறுப்புடன் பார்த்தது..

தன் ‌மனதினை பறித்ததும்‌ அவனே!!
தன் பெண்மையை பறித்ததும் அவனே!!
தன் தாய்மையையும் பறித்ததும் அவனே!!
தன் வாழ்வின் அசுரனும் அவனே!!

"அனாதை நாய் உனக்கு இவ்ளோ திமிரா??" என்ற சண்முகத்தின் வார்த்தையில் துடி துடித்துப் போனாள் ப்ரஜா.. "அப்பாஆஆஆ" என கத்தியவளின் வார்த்தை யார் காதிலும் விழாததும் பரிதாபமே..

ஆனால் அனாதை என்ற வார்த்தையே அவனை மேலும் மேலும் வெறியாக்க.. தன் பின்புறமாக வைத்திருந்த கன்னை ‌எடுத்தவன் நொடி நிமிடத்தில் சண்முகத்தினை சுட்டுத் தள்ளினான்..

அவ்வளவு நேரம் ‌உயிருடன் அவனுடன் சண்டையிட்டவரின் உயிர் நொடி நிமிடத்தில் பிரிந்தே விட்டது...

தொப்பென அவர் விழுவதை பார்த்தவளுக்கு அந்த நிமிடம் அவள் வாழ்நாளில் ‌அனைத்தும்‌ உறைந்து போய் நின்று‌விட்டது..

கண்களில் கண்ணீர் இருந்தும் சொல்லி அழமுடியவில்லை..
நாவில் வார்த்தைகள் இருந்தும் சொல்ல வார்த்தைகள் இல்லல.. பிரம்மை பிடித்தாற் போல நின்றிருந்தவளின் கண்களில் கண்ணீர் மட்டுமல்ல.. அவள் வாழ்க்கையினை ஒட்டுமொத்தமாக அஸ்தமனமாக்கினான் அசுரனின் வேந்தன் அவனே சூரியவேந்தன்.. ‌‌

கண்களில் கண்ணீருடன் வீட்டை விட்டு வெளியே செல்ல அடியெடுத்து வைத்தவளின் முழு பார்வையும் அவன் மீது மட்டுமே இருந்தது..

வீட்டை விட்டு வெளியே செல்பவளும் அறியவில்லை.. அவளை வதைப்பவனும் அறியவில்லை.. அவள் கருவில் விதை விதைக்கப்பட்டு விருட்சமாய் வளர காத்திருக்கிறதென்பதை..

அப்பொழுது தான்‌ வீட்டிற்குள் நுழைந்த சௌந்தர்யா அனைத்தையும் பார்த்தவருக்கு திக்கென இருந்தது.. தன் தாயின் கைகளைப் பிடித்தவாறே மெல்ல அந்த வீட்டை விட்டு வெளியேற அடியெடுத்து வைத்தவளின் காதில் விழுந்த வார்த்தைகள் அவளை ஒரு கணம் தடுமாற வைத்தது‌..

மெல்ல அவனை நோக்கி திரும்பியவளை இதழில் உறைந்த புன்னகையுடன் பார்த்தவன்.. "வாணிம்மா" என்ற வார்த்தை‌ உடல் தீண்டி உயிர் சென்ற தருணங்களில் அவன் கூப்பிடும் ஆசை வார்த்தை தான் அது.. உச்சக்கட்ட மயக்கத்திலும், தீரா ஆசையிலும்‌ உச்சரிக்கும் வார்த்தை அன்று காதல் மயக்கத்தை கொடுத்தது.. இன்று இனம் புரியா பயத்தை கொடுத்தது..

"வாணிம்மா" என அழுத்தமாக கூப்பிட்டவன்.. "உனக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்.. வேண்டாமா??" என போதை ஏற்றும் குரலில் கூப்பிட்டவன் நொடி நேரத்தில் சௌந்தர்யாவையும் சுட்டுக் தள்ளினான்..

தன் கண் முன்னால் நிகழ்ந்த இரு சம்பவங்களில் திகைத்தவள் தன் தாயின்‌ சடலத்தை பார்த்தவளுக்கு கண்களில் கண்ணீருடன் மயக்கமும் சேர்ந்தே வர, தொப்பென மயங்கி விழுந்தாள்..

மயங்கி விழுந்தவளை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தவனின் கண்களுக்கு ப்ரஜாவின் பூமுகம் தெரியவில்லை.. கண்களில் கண்ணீரும் ஏக்கமும் தவிப்புமாய் இரத்தம் சிந்திய உதடுகள் உதிர்க்க நினைத்த வார்த்தைகளை தனக்குள் புதைத்தபடி இறந்துப் போன அப்பழுக்கில்லாத பெண்ணின் முகம் தான் தோன்றியது..

அதை நினைக்க நினைக்க உடல் முழுவதும் எரிய கண்களோ செவ்வானமாய் சிவக்க, மயங்கி விழுந்தவளின் வலது கையை பற்றியவன் பெண் என்னும் பாராமல் கைகளை பிடித்து இழுத்தபடி வெளியே கேட் வரை இழுத்தவன்.. சரிவாக இருந்த கேட்டின் வாசலில் உருட்டி விட‌‌ நடுரோட்டில் போய் விழுந்தாள்.‌

நேற்று வரை காதலை மட்டுமே சுவாசித்தவள்
அவனுடன் மஞ்சத்தை பகிர்ந்தவள்
தேகம் உருகி உயிர்க்காற்றாய் அவன் மூச்சுக்காற்றினை தனக்குள் நிறைத்து வைத்தவள்
அடைக்கலமாய் அவன் மார்பை எண்ணியவள்
அன்பென்றும் மழையில் நனைந்திருக்க வேண்டியவள்
இன்று அனாதையாய் நடுரோட்டில் கிடக்கிறாள்..
அவளைக் காப்பவன் யாரோ?? அவனே இவளின் சகலமானவன்!!..
 
Top